நுகர்வோரா..? தனியாரா..? -தொலைக்காட்சி!
[ இந்தியாவில் செயல்படும் சேனல்கள் அனைத்தையும் வகைப்படுத்த வேண்டும்.
தொலைக்காட்சி ஊடகம் ஏறத்தாழ தனியார்மயமாகிவிட்ட நிலையில் டிராய் மேலும் சில கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் தனியார் சேனல்களுக்கு விதித்தாக வேண்டும்.
பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்காத சேனல்கள் மட்டுமே விளம்பரங்கள் மூலம் வருவாய் காணலாம். பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் சேனல்கள், விளம்பரங்கள் ஒளிபரப்பக்கூடாது அல்லது இந்த விளம்பரங்களை ஒளிபரப்பும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இதுதான் உலக நடைமுறை.
உலகிலேயே கட்டணச் சேனலில் விளம்பரம் ஒளிபரப்பும் நாடு இந்தியாவாக மட்டுமே இருக்கும்.
ஒரு நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் வரும்போது, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நிகழ்ச்சியின் சப்தத்தைவிட கூடுதலான சப்தத்துடன் ஒளிபரப்பாகின்றன. இதுவும்கூட டிராய் நிபந்தனைக்கு எதிரானது.
மக்கள் நலனுக்காக அரசு வெளியிடும் அறிவிப்புகள் அனைத்துத் தனியார் சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்பப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.]
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) மார்ச் 22-ஆம் தேதி அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை.
“ஒரு மணி நேரத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும். 2 நிமிடங்களுக்கு மட்டுமே அந்த சேனல் ஒளிபரப்பும் பிற நிகழ்ச்சிகள் பற்றிய சுயவிளம்பரங்கள் இடம்பெற வேண்டும். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திலும் எந்தெந்த நேரத்தில் விளம்பரங்கள் இடம்பெற்றன என்கின்ற விவரத்தை 15 நாள்களுக்கு ஒரு முறை டிராய் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்’.
ஆனால், இந்த சுற்றறிக்கையால் கொதிப்படைந்த இந்திய ஒளிபரப்பு சம்மேளனம் மற்றும் செய்தி ஒளிபரப்பு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரியை மார்ச் 28-ஆம் தேதி சந்தித்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். டிவி பார்ப்போருக்கும் பாதிப்பில்லாமல், டிவி ஒளிபரப்புவோருக்கும் பாதிப்பு இல்லாமல் ஒரு வழியைக் காண்போம் என்று அவர் உறுதி கூறிய பிறகுதான் அவர்களது கோபம் தணிந்தது.
ஆனால், மணிஷ் திவாரி உறுதி கூறியதாலேயே, டிராய் விதித்துள்ள நிபந்தனை விலக்கிக் கொண்டதாக அர்த்தமில்லை. அந்த நிபந்தனை தொடர்கிறது. ஆனால், அமைச்சரை முன்வைத்து இவர்கள் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்பது மட்டும் வெளிப்படை.
தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர்கள் மீது உளவியல் ரீதியாக “திணிப்புகள்’ செய்யக்கூடாது என்ற நோக்கில்தான் இத்தகைய நிபந்தனையை டிராய் விதித்துள்ளது. இதுதான் உலக அளவிலான நடைமுறையும்கூட. இது உலக அளவிலான நடைமுறைதான் என்று ஒப்புக்கொள்ளும் தனியார் சேனல் அதிபர்கள், இதெல்லாம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று கூறுவதோடு, 10 நிமிடம் மட்டுமே வணிக விளம்பரத்தை ஒளிபரப்புவது என்றால், பல தனியார் சேனல்கள் தொழில் நடத்த முடியாது என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.
இவர்கள் ஒரு உண்மையை வசதியாக மறைத்து விடுகிறார்கள். மத்திய அமைச்சரும் இதுபற்றி கேள்வி கேட்கத் தவறுகிறார். பார்வையாளர்களிடம் கட்டணம் பெறும் சேனல்கள், கட்டணமில்லா சேனல்கள் என இருவகையாக தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் இருக்கின்றன. பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்காத சேனல்கள் மட்டுமே விளம்பரங்கள் மூலம் வருவாய் காணலாம். பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் சேனல்கள், விளம்பரங்கள் ஒளிபரப்பக்கூடாது அல்லது இந்த விளம்பரங்களை ஒளிபரப்பும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இதுதான் உலக நடைமுறை. உலகிலேயே கட்டணச் சேனலில் விளம்பரம் ஒளிபரப்பும் நாடு இந்தியாவாக மட்டுமே இருக்கும்.
ஆனால், எந்த நடைமுறைக்கும் கட்டுப்படாமல் பணம் சம்பாதிக்கும் ஒரு துறையாக தனியார் தொலைக்காட்சி சேனல்கள் செயல்படுவதால், முன்னணியில் உள்ள தனியார் டிவி சேனல்கள் ஒரு மணி நேரத்தில் 24 நிமிடங்கள் வரையிலும்கூட விளம்பரங்களைக் காட்டுகின்றன.
இதுமட்டுமல்ல, ஒளிபரப்பின்போது நிகழ்ச்சியை வழங்கும் நிறுவனத்தின் வணிக இலச்சினையை ஒரு ஓரத்தில் நிலையாக இருத்தி வைக்கிறார்கள். இதுவும் ஒருவகை விளம்பர உத்தி. சிலர் கீழே விளம்பரத்தை ஓடவிடுகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் வரும்போது, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நிகழ்ச்சியின் சப்தத்தைவிட கூடுதலான சப்தத்துடன் ஒளிபரப்பாகின்றன. இதுவும்கூட டிராய் நிபந்தனைக்கு எதிரானது.
டிராய் குறிப்பிடும் விதிமுறைகள் அனைத்தும் டிவி பார்ப்போர், அதாவது நுகர்வோரின் நலன் கருதும் விதிமுறைகள். ஆனால், இத்தகைய விதிமுறைகள் இருப்பதையே நுகர்வோர் அறிவதில்லை. ஒரு நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்தில் 12 நிமிடங்களுக்கும் அதிகமாக (10 நிமிட விளம்பரம், 2 நிமிட சுயவிளம்பரம்) ஒளிபரப்பிய டிவி நிறுவனத்தின் மீது, தேவையில்லாமல் விளம்பரத்தை ஒளிபரப்பி என்னை இம்சை செய்தார்கள் என்று எந்த பார்வையாளரும், வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் அத்தகைய விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள், தொடர் நாடகங்கள் பார்ப்போரிடம் இல்லவே இல்லை.
இந்தியாவில் செயல்படும் சேனல்கள் அனைத்தையும் வகைப்படுத்த வேண்டும். செய்தி சேனல்கள், கேளிக்கை சேனல்கள், கல்வி சேனல்கள் எனப் பிரித்து, இவற்றில் கேளிக்கை சேனல்களில், கட்டணம் வசூலிப்பவை, கட்டணமில்லாதவை என்று பிரிக்க வேண்டும். கேளிக்கை சேனல்களில் அவர்கள் விளம்பரங்களுக்கு நிர்ணயிக்கும் கட்டணத்தின் அடிப்படையில் ஏ, பி, சி என தரம் பிரிக்க வேண்டும். இவ்வாறு வகைப்படுத்தி, உண்மையாகவே லாபம் இல்லாமல் தள்ளாடும் சேனல்களுக்கு மட்டும் விளம்பர மணித்துளிகளை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கலாம்.
தொலைக்காட்சி ஊடகம் ஏறத்தாழ தனியார்மயமாகிவிட்ட நிலையில் டிராய் மேலும் சில கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் தனியார் சேனல்களுக்கு விதித்தாக வேண்டும். மக்கள் நலனுக்காக அரசு வெளியிடும் அறிவிப்புகள் அனைத்துத் தனியார் சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்பப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஒவ்வொரு சேனல்களும் அரசுக்காக எத்தனை மணித்துளிகளை இலவச விளம்பரங்களாக அளிக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தையும் உருவாக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்கும்கூட அரசாங்கம் இந்த சேனல்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும் என்றால் அது எப்படி சரியாகும்? அதேபோல நுகர்வோருக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்பதையும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தினசரி குறைந்தபட்சம் மூன்று தடவையாவது ஒளிபரப்ப வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட வேண்டும்.
-தினமணி