M U S T R E A D
எங்க அப்பன் யானை வளர்த்தார்!
தம்முடைய மூதாதையர் குறித்த பெருமையாடல் கதை, ”எங்க அப்பன் யானை வளர்த்தார்” கூறுபவரின் தந்தை யானை வளர்த்தார், வல்லமையாளர். மகன் தனது வலிமையைக் காட்ட ஒரு ஒட்டகமாவது வளர்த்திருக்க வேண்டாமா? எல்லோரும் தொடுக்கக்கூடிய வினா!
அப்பன் பெருமை, யானை வளர்த்த கதையைக் கூறி மதிப்பு பெற முனைவது. அப்பன், யானைப் பெருமையில் நடமாடுவது போன்று சமூகத்தினர், இறைத்தூதர் ரசூலுல்லாஹ்வின் தியாகம், உழைப்பு, புகழில் குளிர் காய்கின்றனர்.
”எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தியாகத்தைப் பாருங்கள்!” உங்கள் தியாகம் என்ன (B)பாய் கேட்கப்படுகிறது. பதில்… இல்லை!
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமண எளிமையை நோக்குங்கள்.!” கூறப்படுகிறது. சமூகத்தில் எளிமைத் திருமணங்கள் நடக்கின்றனவா. பூசணிக்காயை அல்ல. அண்டாவையே சோற்றுக்குள் மறைக்கும் அவல நடைமுறையையும், நபிவழி முறையையும் துளியளாவாவது ஒப்பீடு செய்யவியலுமா? மாற்று சமூக மக்களின் மௌனக்கேள்வியிது. நபியவர்களின் வியர்வைக் கடலுக்குள் மூழ்கி மறைந்து கொண்டு கள்ளத்தனம், கபடத்தனம் அரங்கேற்றப்படுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகழ்போரில் பட்டினி பொறுத்தார்கள். 2 கல்லை வயிற்றில் கட்டினார்கள். சில நாட்கள் அவர்கள் வீட்டில் அடுப்பெரியவில்லை கூறுகிறோம். வருடத்தில் 30 நாள் நோன்பு. 30,000ம் பேர் வாழக்கூடிய பகுதியில், 3,000ம் பேர் தொழக்கூடிய பள்ளியில் 3ஆம் நோன்புக்கு 150 பேரை மட்டுமே தொழுகைக்கு காணமுடிகிறது.
நோன்பு திறப்பு இஃப்தார் நேரம் மாலை 6 மணி 36 நிமிடம். 5 மணிக்கே மஸ்ஜித் சென்று கஞ்சி கொட்றா முன்பு அமர்ந்து கொள்கின்றனர். 13 மணிநேரம் பசி பொறுக்க முடியாத நிலையில், கல்லு கட்டிய கதை பேசப்படுகிறது.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவிலிருந்து விடியும் வரை தொழுதார்கள் கால் வீங்கியது.” பேசுகிறோம். 99 சதம் பேர் தஹஜத் தொழுவதில்லை. சுபுஹு, இஷாவுக்கு வருவதில்லை. கால்வீங்கிய கதை பேசுகிறோம். நாம் கால் கடுக்கத் தொழுதோமா? கால் வீங்கியதா? பதிலில்லைஸ!”40 வயது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அன்னையாரை எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்தார்கள்.” நாம் மணமுடித்தோமா? பெண்ணுக்கு 5 வயது கூடுதலாக இருந்தால் ஒவ்வாமையுடன் ஓடுகிறோம். தவறுதலாக நிறைவேறிவிட்டால் தரையில் வீழ்ந்து புரண்டு தலாக் கூறுகிறோம். எல்லா அட்டூழியங்களும் புரிந்து சவகாசமாக நபியவர்கள் தியாகத்தை மற்றவர்களிடம் எடுத்துரைத்து நாடகமாடுகிறோம்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலதார மணம் செய்தார்கள்”. சமூகத்தில் நடக்கவில்லையே! கணவனது சொத்தில் பங்கீடு தரவேண்டுமென்று ”ஜனா பனா”வுக்குக் கூட அனுமதிக்கின்றனர். பலதார மணம், 2ஆம் திருமணத்திற்கு ஒப்புவதில்லை. மீறிச் செய்ய ஆண்களுக்குத் தைரியமில்லை.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு சகிப்புத்தன்மை காட்டினார்கள்.” யூதர் கடன் கதை ஒப்புவிக்கப்படுகிறது. சமூகத்தினரிடம் சகிப்புத்தன்மையில்லையே? 100 பேர் வாழும் ஊரில், 300 பேர் தொழக்கூடிய அளவில் பள்ளிவாசல் இருக்கின்றது. பிறகு 100 அடி தூரத்தில் 2 பள்ளிவாசல்கள் கட்டப்படுகின்றன. சகிப்புத்தன்மை…?
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு வந்த அனைத்தையும் சமமாகப் பங்கீட்டுத் தந்தார்கள்.” நாம் உடன் பிறந்தவர்களுக்கும், வறுமையிலிருக்கும் உற்றார் உறவினருக்கும் சதக்கா, ஜகாத் கூட தருவதில்லை.
வருடத்துக்குகொருமுறை புற்றீசலாகக் கிளம்பி புதுப்புதுத் தலைப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்த உரைகளும், பதிவுகளும் மெத்த நாடகத்தனம்.
மக்களை கனவுலகில் மிதக்க வைத்து ஏமாற்றும் வஞ்சகத்தனம். முஸ்லிம்களுடைய கேரக்டர். வாழ்வியல். சொல். செயல் நடைமுறையில் முற்றிலும் வேறாகவிருக்கிறது.
அண்ணலாரின் வாழ்வு. வழிமுறை சமூகத்தில் காண்பது அரிதாகவிருக்கிறது.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. குலஃபாயே ராஷீதீன்கள் வாழ்வு குறித்துப் பேச தகுதியில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ‘அஹ்லே பைத்’ தார் குறித்தும் பேசுதல், காசாக்குதல் நிறுத்தப்படவேண்டும்.
குர்ஆன் எச்சரிப்பதுபோல் அற்ப விலைக்கு இறைவேதத்தை விற்கக்கூடாது. இறைத்தூதரையும் விலை கூறக்கூடாது.
நபியவர்கள் குறித்து மாற்று மதத்தாருக்கும் தெரியும். அவ்வளவு பேசியாகிவிட்டது.
பதிவுகளிலிருக்கிறது. இனி வாழ்வின் எதார்த்தத்துக்குள் உண்மை, உறுதிக்குள் நபி வாழ்வை நடைமுறைக்கு ஏற்பவர்களே மூமீனாக இருக்க முடியும்.
நபி வெளிச்சத்தில் நாம் தமது இருள்களை மறைத்தலாகாது.
சமூக அந்தஸ்துக்கு வழியமைக்காது.
-ஜெ. ஜஹாங்கீர்
Source: http://jahangeer.in/?paged=6