நேர்வழி பெற்ற மனிதன்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
சமூகம் இந்த மாயையில் சிக்காமல் நேர்வழி எது, வழிகேடு எது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஓர் அணுகுமுறையை இவ்வாக்கத்தினூடாக வழங்க விரும்பும். நேர்வழி பெற்ற மனிதன், நேர்வழி பெற்ற இயக்கம், நேர்வழி பெற்ற சமூகம், என்பவற்றுக்குரிய பண்புகளை விளங்கிக் கொள்வதன் மூலம் ஒருவர் நேர்வழி பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம்.
முதலில் தனிமனிதனை எடுத்துக் கொள்வோம்.
நேர்வழி பெற்ற மனிதன்
இஸ்லாம் ஐயங்களுக்கு இடம் தராத மார்க்கம் என்ற வகையில் ஒரு மனிதன் நேர்வழியில் இருக்கிறான் என்பதற்கான அடையாளங்களும் இஸ்லாத்தில் தெளிவாக இருக்கின்றன. அவற்றை நான்காக வகுக்கலாம். ஐந்தாவதொன்றும் பின்னால் இருக்கிறது. அதன் விரிவான விளக்கத்தை “நேர்வழி பெற்ற இயக்கம்” என்ற தலைப்போடு இணைத்துள்ளோம். அதை இங்கு தனியாகக் குறிப்பிடவில்லை.
இஸ்லாம் பற்றிய தெளிவான விளக்கம்
வழிகேடர்களாக இருந்தோரை நேர் வழிக்கு அழைத்துவர அல்லாஹ்வின் தூதர் செய்த பணியைக் குறிப்பிடும் அல்குர்ஆன், அன்னார் “வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்…” எனப் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. பார்க்க: (அல்குர்ஆன் 2:129, 03:164, 62:02)
அதேபோன்று, “அறிவைத் தேடி ஒரு பாதையில் புறப்படுவனுக்கு சுவனம் செல்லும் பாதையை அல்லாஹ் இலகுபடுத்துகிறான்” என இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
கண்ணிருந்தும் பார்க்காத… காதிருந்தும் செவிமடுக்காத… உள்ளமிருந்தும் அறிவு பெறாதவர்களை நரகத்திற்கென்றே அல்லாஹ் படைத்துள்ளான் (அல்குர்ஆன் 7: 179) என்றும் அல்குர்ஆன் விளக்கம் பெறாதவர்களை நோக்கி எச்சரிக்கை விடுகிறது.
ஆக, இஸ்லாம் பற்றிய விளக்கமின்றி ஒருவர் நேர்வழியில் செல்ல முடியாது என்பது தெளிவாகிறது. இதன் பொருள் ஒவ்வொரு முஸ்லிமும் ஓர் இஸ்லாமிய அறிஞனாக வேண்டும் என்பதல்ல. எனினும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் அஞ்ஞான சிந்தனைகள், மூட நம்பிக்கைகள் என்பவற்றுக்குமிடையிலுள்ள வேறுபாடு என்ன? இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் ஜாஹிலிய்ய நடைமுறைகளுக்குமிடையில் உள்ள வேறுபாடு என்ன? தான் சம்பந்தப்படும் வாழ்க்கை விவகாரம் ஒவ்வொன்றிற்கும் இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டல்கள் எவை? என்ற அளவிலாவது குறைந்தபட்சம் ஒருவர் இஸ்லாம் பற்றி அறிந்திருக்காமல் அவர் நேர்வழியில் நடைபோட முடியாது. பிறருக்கு நேர்வழியைக் காட்டவும் முடியாது.
இத்தகைய சாதாரண மக்களைவிட ஆற்றல் உடையோர் அதிகமாக இஸ்லாத்தைக் கற்று விளக்கம் பெறுதல் வேண்டும். உலமாக்களோ இஸ்லாத்தின் வழிகாட்டலை வழங்கும் வெளிச்ச வீடுகளாகத் திகழ வேண்டும்.
தூய்மையான உள்ளம்
நேர்வழி பெற்ற மனிதனின் இரண்டாவது அடையாளம் அவன் ஒரு தூய்மையான உள்ளத்தைப் பெற்றிருப்பதாகும். தூய்மையான உள்ளம் இரண்டு தன்மைகளைக் கொண்டதாக இருக்கும்.
ஈமான்
அழகிய நற்குணங்கள்
ஈமான் என்பதன் பொருள், கற்றுக் கொண்டவற்றில் ஆசையும் ஆர்வமும் பற்றுறுதியும் ஏற்படுவதாகும். மேலும் கற்றுக் கொண்டவற்றை செயற்படுத்த வேண்டும் என்ற அவாவும் உள்ளத்தில் நிறைந்து காணப்படுவதாகும். கற்றுக் கொண்ட விடயங்களில் அலட்சியமும் புறக்கணிப்பும் பொடுபோக்கும் மறதியும் காணப்பட்டால் அங்கு ஈமான் இல்லை என்றே அர்த்தமாகும்.
தூய்மையான உள்ளத்தின் இரண்டாவது அடையாளம் நற்குணங்களாகும். வெறுப்பு, காழ்ப்புணர்வு, குரோதம், பகை, பெருமை, பொறாமை, நயவஞ்சகம், வெறுப்பு, மோசடி, தன்னலம், குரூர மனப்பான்மை, பிடிவாதம், பிறரைத் தரக்குறைவாக எண்ணுதல், தப்பெண்ணம், சந்தேகம், புறம், அவதூறு போன்ற அனைத்து மோசமான குணங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாத்து இவற்றுக்கெதிரான நற்குணங்களால் ஒரு மனிதன் தன்னை அலங்கரித்துக் கொள்ளும்போது அவனது உள்ளம் தூய்மை பெறுகிறது.
“தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றியடைந்தான் தனது உள்ளத்தை மாசடையச் செய்தவன் தோல்வியடைந்தான்” (அல்குர்ஆன் 91: 9-10) என அல்குர்ஆன் இதனைக் குறிப்பிடுகிறது.
முன்மாதிரியான நடத்தை
கோட்பாட்டிலும் நடைமுறையிலும் எவற்றையெல்லாம் அசத்தியம் என்று ஒருவர் கற்று விளங்கிக் கொண்டாரோ அவற்றிலிருந்து அவர் முழுமையாக விலகியிருக்க வேண்டும். எவற்றை உண்மையானது, சத்தியமானது என்று கற்றுக் கொண்டாரோ அவற்றை அவர் தனது வாழ்வில் ஏற்றுப் பின்பற்றி நடக்க வேண்டும்.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள், ஹலால்-ஹராம் வரையறைகள், உறவுகளைப் பேணுதல், குடும்ப வாழ்க்கை, வியாபாரம், சொத்துப் பங்கீடு, அரசியல் போன்ற இன்னோரன்ன விவகாரங்கள் அனைத்திலும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தி சான்று பகருவதில் முனைப்புடன் இருத்தல் வேண்டும்.
அல்லாஹ்வின் அன்பும் திருப்தியுமல்லாது வேறு எந்தக் காரணியும் அவரை இவ்வாறு செயல்படத் தூண்டும் நிலை உருவாகக் கூடாது. விருப்பிலும் வெறுப்பிலும் சாதகமான சூழலிலும் பாதகமான சூழலிலும் அல்லாஹ்வின் மார்க்கத்துக்கமைவாக அவர் தனது செயல்களையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில்தான் கற்றுக் கொண்ட மார்க்கத்தின் முதல் எடுத்துக்காட்டாக அவர் திகழ வேண்டும்.
“மனிதர்கள் (ஈமான் கொண்ட மாத்திரத்தில்) ஈமான் கொண்டோம் என்று கூறிவிடுவதனால் மட்டும் சோதனைகளுக்குட்படுத்தப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று நினைக்கிறார்களா? நாங்கள் முன்பிருந்தவர்(களது நடத்தைகள், செயல்)களையும் சோதித்திருக்கிறோம்…” (அல்குர்ஆன் 29: 02)
இவ்வாறு ஒரு மனிதன் தான் கற்றவற்றை செயற்படுத்துவதன் மூலம் நேர்வழி செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறான். ஆக, கற்றதை நடைமுறைப்படுத்திக் காட்டாமல் தப்ப முடியாது.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக உழைத்தல்
ஒரு மனிதன் நேர்வழியில் இருக்கிறான் என்பதற்கான நான்காவது அடையாளம் அவனது வாழ்வின் இலட்சியமாகவும் குறிக்கோளாகவும் தீன் பணி அமைவதாகும். உலகில் இறைவாக்கை மேலோங்கச் செய்யும் பணியிலிருந்து ஒதுங்கி தனது சொந்த வாழ்க்கையை மேலோங்கச் செய்வதற்காக தனது நேரம், பணம், உழைப்பு என்பவற்றை செலவிட்டுக் கொண்டிருப்பவன், ஜாஹிலிய்யத் வளர்ந்து செல்வதையும் இஸ்லாம் செத்து மடிவதையும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று பொருளாகும். இத்தகைய மனிதனுடைய உள்ளத்தில் ஈமானும் இறையச்சமும் எங்கனம் குடிகொள்ள முடியும்?
ஒரு தீமையைக் காணும் ஒருவன் தனது உள்ளத்தினால்கூட அதனை மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை எடுக்காதபோது அதற்கப்பால் கடுகளவு ஈமானையும் அவனிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்..
“(தீனை நிலைநாட்டுவதற்காக உழைத்த) உங்களது முன்னோர்களது உதாரணம் உங்களிடமும் வராதவரை நீங்கள் சுவனம் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களை (இந்தப் பாதையில்) துன்பங்களும் துயரங்களும் பீடித்தன. அவர்கள் (அத்துன்பங்களால்) ஆட்டி வைக்கப்பட்டார்கள்…” (அல்குர்ஆன் 2: 214) என இப்பணியைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்களை அல்லாஹ் பாராட்டுகின்றான். அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றி நடக்காதவரை எவரும் சுவனம் நுழைய முடியாது என்பதையும் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
ஆக, சுவனம் செல்ல முடியாத வழி நேர்வழியாக இருக்க முடியாது.
இவ்வாறு நேர்வழி செல்லும் ஒரு மனிதனின் அடையாளங்கள் இஸ்லாத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன், ஐந்தாவது ஒரு காரணியும் இருக்கின்றது. அவன் கட்டுப்பாடு இன்றி ஒரு தனிமனிதனாக வாழ முடியாது என்பதே அக்காரணியாகும். அதாவது, சுவனம் செல்ல விரும்பும் மனிதன் கூட்டமைப்பில் இருக்க வேண்டும் “தனித்திருப்பவன் ஷைத்தானுடன் இருக்கிறான்”, “சுவனத்தின் வாசத்தை நுகர விரும்பும் ஒருவன் கூட்டமைப்பைப் பற்றிப் பிடிக்கட்டும்”, கூட்டமைப்பின்றி மரணிப்பவன் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றான்” முதலான நபிமொழிகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.
“…முஃமின்கள் செல்லும் பாதையைத் தவிர்த்து வேறு ஒரு பாதையில் செல்லும் ஒருவனை அவன் திரும்பிய திசையிலேயே நகர்த்திச் சென்று நரகில் நுழைவிப்போம்” (அல்குர்ஆன் 4: 115) என்பது போன்ற குர்ஆன் வசனங்களும் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.
ஆக, ஒரு முஸ்லிம் ஏற்கனவே கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் தனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வதோடு நேர்வழியில் பயணம் செய்வதற்கு உதவும் வகையில் கூட்டு வாழ்க்கை முறைமையொன்றுக்குள் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் கூறப்படும் கூட்டு வாழ்க்கை ஓர் இயக்கத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தழுவி நிற்கும் கூட்டு வாழ்க்கையாகும்.
எனினும், அத்தகையதொரு நேர்வழி பெற்ற சமூக அமைப்பு முறைமையொன்று இன்று அதன் தூய வடிவத்தில் இல்லை. ‘நேர்வழி பெற்ற சமூகம்’ என்ற தலைப்பில் அந்த உண்மையை விளக்க இருக்கிறோம். இப்போதிருப்பதெல்லாம் அத்தகையதொரு சமூக அமைப்பொன்றை உருவாக்கும் பாதையில் செயல்படும் இயக்கங்களே. இந்த இயக்கங்கள் மீது சவாரி செய்தே ஒருவர் ‘நேர்வழி பெற்ற சமூகம்’ என்ற இலக்கை அடைய வேண்டும்.
ஆக, நேர்வழி செல்ல விரும்பும் மனிதன் ‘இஸ்லாமிய சமூகம்’ என்ற கூட்டமைப்பில் இணைவதற்காக ஓர் இடைக்காலப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த இடைக்காலப் பயணத்துக்கான வாகனம்தான் இயக்கங்கள். ‘முஸ்லிம் சமூகம்’ என்ற கூட்டமைப்பு அதன் தூய வடிவில் உருவாக்கப்பட்டு விட்டால் அப்போது முஸ்லிம் சமூகம் இயக்கங்களாகப் பிரிந்திருக்க வேண்டியதில்லை. அந்த இலக்கை அடையும் வரைதான் இயக்கங்கள் என்ற தோற்றப்பாட்டைப் புறக்கணிக்க முடியாதிருக்கிறது. காரணம், இந்த இயக்கங்கள் மூலமாகவே நாளைய அந்த இஸ்லாமிய சமூக அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும்.
இந்த இடத்தில் பின்வருமாறு ஒரு வினா எழவும் வாய்ப்பிருக்கிறது.
“இஸ்லாமிய சமூக அமைப்பு உருவாகி அதில் இணைந்து வாழும் பாக்கியம் பெறாமலே ஒருவர் இந்த இடைக்காலப் பணத்தின்போது மரணித்து விட்டால் நேர்வழிக்கான ஐந்தாவது காரணி பூர்த்தி செய்யப்பட்டதாகக் கொள்ளலாமா?”
ஒரு முஸ்லிம் ஆரம்பத்தில் கூறப்பட்ட நேர்வழிக்கான நான்கு காரணிகளையும் பூர்த்தி செய்து ஐந்தாவது இலக்காகிய ‘முஸ்லிம் சமூகம்’ எனும் கூட்டமைப்பு நோக்கிப் பயணிக்கும் வேளையில் மரணித்து விட்டால் அவர் நிச்சயம் சுவனம் செல்லும் பாக்கியத்தைப் பெறுவார். காரணம், அவரது நிய்யத்தும் தணியாததாக முமாக கூட்டமைப்பு நோக்கிய அவரது பயணம் இருந்திருக்கிறது. அதற்காக அவர் உழைத்திருக்கிறார் அர்ப்பணித்திருக்கிறார். எனவே, அந்தக் கூட்டமைப்பில் வாழ்ந்த பாக்கியத்தை அல்லாஹ் அவருக்கு நிச்சயம் வழங்கி நேர்வழி கிடைப்பதற்கான ஐந்தாவது நிபந்தனையையும் அவர் பூர்த்தி செய்ததாகக் கருதுவான் சுவனத்தையும் வழங்குவான்.
எனினும், நேர்வழியில் செல்ல வேண்டும் என்ற உணர்வே இல்லாது அதற்குரிய ஐந்து நிபந்தனைகளையும் புறக்கணித்து வாழ்ந்த ஒருவர் தனது நிலை குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அவர் தௌபா செய்து உரிய நிபந்தனைகளின்பால் மீண்டு வராவிட்டால் அவர் செல்லும் பாதை ஆபத்தானதே.
நேர்வழி செல்ல விரும்பும் மனிதன் நிறைவேற்ற வேண்டிய ஐந்தாவது நிபந்தனையைப் பற்றிப் பேசும் போதே இயக்கங்கள் பற்றிய பேச்சு தவிர்க்க முடியாததாக மாறிவிடுகின்றது. இடைக்காலப் பயணத்தின் வாகனங்கள்தான் இயக்கங்கள் என்ற வகையில் இயக்கங்கள் நேர்வழியில் இருக்கின்றனவா என்பது பற்றித் தெளிவாகப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
எனினும், ஒரு சில வாசகர்கள் எதிர்பார்ப்பது போல் இயக்கங்களது பெயர்ப் பட்டியலும் ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் இந்த இயக்கம் நேர்வழியில் இருக்கிறதா, இல்லையா? என்ற அடையாளக் குறியீடும் போட்டுக் காட்டுவதல்ல இந்த முயற்சி.
நேர்வழி செல்ல விரும்பும் ஒருவர் ஒரு கூட்டமைப்பைத் தெரிவு செய்வதற்கு வழிகாட்டும் விதமாக ஓர் இயக்கம் நேர்வழியில் இருப்பதற்கான அடையாளங்களைக் கீழே கோடிட்டுக் காட்டுகிறோம். இயக்கங்களும் இந்த வழிகாட்டல்களால் நன்மை பெறலாம். கூட்டமைப்பு ஒன்றைத் தெரிவு செய்து தீனை நிலை நாட்டும் பணியில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கும் இந்த வழிகாட்டல்கள் உதவியாக அமையலாம், இன்ஷா அல்லாஹ்.
source: http://usthazhajjulakbar.org/