ஊடக விபச்சாரம்: ஒழிப்பது அவசியம்!
எஸ்.ஹமீத்
எத்தனை விதமாகத்தான் இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்..! பாழாய்ப் போன பணத்துக்காகத் தன்னைப் பெற்றவளையும், தான் பெற்றவளையும் தன்னோடு கூடப் பிறந்தவளையும் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படாது எப்படி எப்படியெல்லாம் விபச்சாரம் புரிகிறார்கள். இப்படி விபச்சாரம் புரிய எப்படி இவர்களால் முடிகிறது..?
இவர்களெல்லாம் மனிதர்கள்தானா…? அல்லது கடவுளால் சபிக்கப்பட்ட, மனிதத் தோல் போர்த்திய மிருகங்களா…?
அட.. உழைத்து வாழ உடம்பில் தெம்பு இன்றியும் உரிய தொழில் இன்றியும் ஒருவேளைச் சோற்றுக்கு உதவுவார் யாருமின்றியும் வாடுகின்ற ஓர் உத்தமப் பெண் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் கூட விபசாரத்துக்கு உடன்பட மாட்டாள். ‘மானங் கெட்டு மண்ணில் வாழ்வதைவிட மானம் காத்து மரணம் அணைப்பேன்’ என்று அந்தப் பத்தினிப் பெண் செத்துப் போவாளே தவிர, பணத்துக்காகப் பரத்தையாகிச் சீரழிய மாட்டாள். இதுதான் தமிழ்ப் பெண்களின் பண்பாடு.
ஆனால், பணமொன்றே குறியாகப் படித்த ‘மேதைகள்’ இன்று செய்யும் விபச்சாரம் இருக்கின்றதே, அது கொடுமையிலும் கொடுமையானது; தமிழ்க் கலாசாரத்தின் ஆணி வேரையே அறுத்து வீசுகின்ற அநியாயம் அது; நாளைய சந்ததியினரை நாசக் குழிக்குள் புதைத்து விடுகின்ற பொல்லாத அக்கிரமம் அது.
பத்திரிகைகள் என்றும் சஞ்சிகைகள் என்றும் தொலைக்காட்சிகள் என்றும் இணையத் தளங்கள் என்றும் இந்த விபச்சார விற்பனை இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. விற்பவர்களுக்குப் பெயர் ஊடகவியலாளர்கள்; வேசிக்குப் பெயர் கண்ணகி என்பது போல!
‘வயது வந்தோர்க்கு மட்டும்’ என்ற அறிவிப்புடன் இன்று எத்தனை தமிழ் விபச்சார பத்திரிகைகள்-இணையத்தளங்கள் இருக்கின்றன..! தமது வக்கிர புத்தியைத் தணிப்பதற்கு இவனுகளுக்கெல்லாம் தமிழ் மொழி தானா கிடைத்தது?
சரி..இத்தகு பத்திரிக்கை-இணையத் தளம் நடாத்துபவன் எவனாவது அதைப் பார்த்து இரசிக்கும்படித் தன் தாய்க்கு-சகோதரிக்குச் சொல்வானா…? சொல்ல மாட்டான்…சொன்னால் அவன் தாயும் சகோதரிகளும் ‘கெட்டுப்’ போய் விடுவார்களே! ஆக, இவர்களின் குறிக்கோள், மற்றைய குடும்பங்கள் நாசமாகிப் போனாலும் பரவாயில்லை, நமக்குப் பணம் வந்து சேர்ந்தால் போதும் என்பதுதானே…!
இத்தகைய இழி செயலில் ஈடுபடுபவனின் பிறப்பையே சந்தேகப்பட வேண்டி இருக்கிறது.
ஒரு கற்புள்ள தாய்க்குப் பிறந்தவன் இப்படிக் காமத்தைப் பகிரங்கமாகக் கடை விரித்துக் காசு பண்ண மாட்டான்!
ஆகட்டும்..சேற்றில் புரளும் பன்றிகளுக்கு நாற்றம்தானே நறுமணம்…? இத்தகைய ஈன நாய்களை நாம் ஊடகவியலாளர்கள் என்று சொல்லப் போவதுமில்லை; அப்படிச் சொல்லும்படி அந்தச் சீழ் பிடித்த சொறி நாய்கள் கேட்கப் போவதுமில்லை. ஒரு சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டிருக்கும் அந்தக் கேடு கெட்ட மிருகங்களுக்குக் கடவுள் தக்க தண்டனைகளைக் கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்வோம்.
ஆனால்… இன்னொரு சாரார் இருக்கிறார்கள்… பகிரங்கமாக விபச்சாரத்தை விற்பனை செய்வோரைவிட இவர்கள் ஆபத்தானவர்கள். தம்மை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டு, மறைமுகமாக காம வியாபாரம் செய்பவர்கள் இவர்கள். இன்று ஊடக உலகில் இவர்களிற் சிலர் கொடிகட்டிப் பறக்கிறார்கள். பணத்தோடு புகழையும் செல்வாக்கையும் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பற்றிய பரந்தளவிலான அவதானமும் எச்சரிக்கையும் அவசியம். காமத்தனத்தைக் கபடத்தனமாக அரங்கேற்றும் இவர்களுக்கெதிராக உண்மையான ஊடக உலகம் பொங்கி எழ வேண்டும்…!
யார் இவர்கள்..? எப்படிச் செயற்படுகிறார்கள்…??
பிரபலமான நாளிதழ்கள், வார இதழ்கள் தொடக்கம் பிரபல சஞ்சிகைகள் வரை பாலியல் சார்ந்த செய்திகளையும் படங்களையும் தாராளமாகவே பிரசுரம் செய்து மட்டரக வாசகர்களைக் கவர்ந்திழுக்க முயற்சி செய்வதனை நாம் கண்கூடாகக் காணக் கூடியதாகவுள்ளது. இத்தகு பத்திரிகைகளுக்குப் பாலியல் தீனி போடும் வேலையை சினிமாக்கள் தாராளமாக வழங்குகின்றன.(தமிழ்ச் சினிமாக்கள் அள்ளி வழங்கும் ஆபாசங்களைப் பற்றியும் அருவருப்புகளைப் பற்றியும் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவெழுத எண்ணியுள்ளேன்.)
அதிகமான பத்திரிகைகள் நடிகைகளின் அரை நிர்வாணப் படங்களை நடுப்பக்கத்தில் பிரசுரம் செய்து கீழ்த்தர இரசனை கொண்ட வாசகர்களைச் சுண்டி இழுக்கின்றன.
‘சினிமாவும் ஒரு கலைதானே..அந்தக் கலை சம்பந்தப்பட்ட படங்களைப் பிரசுரிப்பதில் தவறேதுமில்லைத்தானே..’ என்று தமது செயல்களுக்கு இவை நியாயம் வேறு கற்பிக்கின்றன.
அதென்ன.. இரண்டரை மணித்தியாலம் காண்பிக்கப்படும் சினிமாவில் எத்தனையோ காட்சிகள் இருக்க, கட்டிப்பிடித்தல் காட்சிகளையும், இடை-தொப்புள் எனக் காட்டிக் கொண்டு நடிகைகள் நிற்கும் காட்சிகளையும் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து இந்தப் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன…?
இதுவா ஊடக ஒழுக்கம்…? இதுவா பத்திரிக்கை தர்மம்…?
‘சகல தரப்பு வாசகர்களையும் கவர்ந்திழுக்கும்’ வியாபார உத்தியில், விழிகளிலும் எண்ணத்திலும் காமப் பசியோடு அலையும் கடைத் தர வாசகனையும் சேர்த்துத் திருப்திப்படுத்திக் காலங் காலமாகக் ‘கல்லாவை’ நிரப்பும் இப்படிப்பட்ட பத்திரிகைகளின் சொந்தக்காரர்களும் பங்குதாரர்களும் கட்டி வைத்திருக்கும் மாளிகைகள் கறை படிந்தவை. அவர்கள் அணியும் உடையில் கூட- அவர்தம் பிள்ளைகள் உண்ணுகின்ற உணவில் கூட- இந்தக் காமத்தை விற்று ஈட்டிய பணம் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
படங்கள் மட்டுமல்ல…இந்தப் பத்திரிகைகள் பிரசுரம் செய்யும் கதைகளிலும் கூடக் காமம் நிறைந்து வழிகிறது. வாழைப்பழத்துக்குள் விஷம் வைத்துக் கொடுப்பது போலக் கதைகளுக்குள் காமத்தை வைத்துக் கொடுக்கிறார்கள். இத்தகைய கதைகளை எழுதுபவனுக்கு ‘எழுத்தாளர்’ என்ற பெயர் வேறு. சமுதாயத்தின் அழுக்குகளை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டிய பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் பணத்துக்கும் புகழுக்கும் அடிமைப்பட்டு ஆபாசம் என்னும் நஞ்சை விற்பனை செய்வதை நினைக்கையில் நெஞ்சம் நோகிறது.
இதைவிட ஒரு படி மேலே சென்று பல இணையத் தளங்கள் தமிழில் விபசாரம் செய்கின்றன. செய்திகளை-தகவல்களை வழங்குவதாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, இவை செய்யும் அட்டகாசங்களுக்குக் கணக்கில்லை.’மனைவியை உச்ச நிலை அடைய வைப்பது எப்படி..?’ என்று பாடம் பாடமாய்ச் சொல்லிக் கொடுக்கின்றன. ‘பெண்ணுடம்பில் எங்கே உணர்ச்சி நரம்புகள் அதிகமாக உள்ளன..?’ என்று படங்களோடு வியாக்கியானம் செய்கின்றன. ‘சன்னி லியோனின் லேட்டஸ்ட் வீடியோ’ என்று காம வீடியோக்களை இணைக்கின்றன. அத்தோடு,’தமிழ் மக்கள் விடுதலை நோக்கிய பயணம்..’ என்று கட்டுரைகளையும்,செய்திகளையும் வேறு வெளியிடுகின்றன.
காமத் தளங்களைவிட மோசமான செய்தித் தளங்கள்!
செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள், தமிழ் உரிமைக்கான குரல்கள் சார்ந்த ஆக்கங்கள் எனத் தரமான விடயங்களைத் தருகின்ற இந்த இணையத் தளங்களிற் சில, ஆபாசம் மிக்கதும் அருவருப்பானதுமான பின்னூட்டங்களை வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியதாகும்.
வாசகர்களின் பின்னூட்டங்களைத் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிடும் இந்த இணையத் தளங்கள் அதன் தரமான நல்ல வாசகர்களையும் தான் சார்ந்த தமிழ்ச் சமூகத்தையும் வெட்கித் தலை குனிய வைப்பதை முதலில் உணர வேண்டும்.
தரமான ஒரு செய்திக்கு வழங்கப்படும் தரங்கெட்ட விமர்சனங்களை வாசகர் உரிமை என்ற வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆண்-பெண் அந்தரங்க உறுப்புகளின் பெயர்களை அப்பட்டமாகக் கூறியும்- அம்மா, அக்கா, தங்கையென இழுத்து ஆபாசம் நிறைந்த கேவலமான சொற்றொடர்களைப் பாவித்தும்-இதற்கு மேலதிகமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைக் கூறியும்-எழுதப்படுகின்ற பின்னூட்டங்களை அப்படியே வெளியிடுகின்ற இந்த இணையத் தளங்கள் தமது நோக்கங்களைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் மீள் பரிசீலனை செய்வது அவசியம்.
தமிழ் வாசகர்களை முஸ்லிம் வாசகர்கள் சகிக்க முடியாத வார்த்தைகளால் வர்ணிப்பதும், அவ்வாறே முஸ்லிம் வாசகர்களைத் தமிழ் வாசகர்கள் தூஷிப்பதும் உடனடியாக நிறுத்தப் படவேண்டுமென்பதே சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையை விரும்பும் நல்ல வாசகர்களினதும் புத்திஜீவிகளினதும் விருப்பமாகும்.
இது தவிர பின்னூட்டங்களை பெண்கள், ஆண்கள், ஏன்… சிறுவர் சிறுமியர்கள் கூடப் பார்வையிடுகிறார்கள். காமத்திலும் இனத் துவேஷத்திலும் முங்கியெடுத்து வழங்கப்படும் அவ்வாறான பின்னூட்டங்கள் இத்தகு பெண்கள், சிறுவர், சிறுமியர் மீது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சமூக அக்கறையோடு எண்ணிப் பார்த்து, அவற்றை வெளியிடுவதினின்றும் உடனடியாக இந்த இணையத் தளங்கள் விலகிக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஆபாசத்தை அப்பாவிகளிடம் விதைத்துப் பணத்தையும் புகழையும் அறுவடை செய்து கொண்டிருக்கும் பத்திரிகைகள்-இணையத் தளங்கள் அத்தனையையும் வெறுத்துப் புறமொதுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இத்தகு ஊடகங்களை நாடுவோர் குற்ற உணர்வுக்குள்ளாக வேண்டும். ‘இனிமேல் இந்தப் பத்திரிகையை வாங்க மாட்டேன்..இந்த இணையத் தளத்தைப் பார்க்க மாட்டேன்..’ என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்!
துணிவு மிக்க எழுத்தாளர்கள்-ஊடகவியலாளர்கள்-பதிவர்கள்-புத்திஜீவிகள் என எல்லோரும் இவற்றுக்கெதிராகத் தமது கருத்துக்களை ஓங்கி முழங்க வேண்டும். இன்னும் துணிவு மிக்கோர் ஆபாச பத்திரிகைகள்-தொலைக்காட்சிகள்- இணையத் தளங்களை நிர்வகிப்போர்க்குத் தமது ஆட்சேபனைகளை அடிக்கடி எழுத வேண்டும்.
நமது சகோதரர்கள், பெண்கள், சிறுவர்களுக்கு இப்படியான பத்திரிகைகள்-தொலைக்காட்சிகள்-இணையத் தளங்கள் பற்றியும், அவை ஏற்படுத்தும் சமூகச் சீர்கேட்டையும் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றைப் படிப்பதிலிருந்தும் பார்ப்பதிலிருந்தும் அவர்களைத் தடை செய்ய வேண்டும்.
அக்கறையுடனும் துணிவுடனும் மேற்கொள்ளப்படும் நமது நடவடிக்கைகள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிப்போமா…?