o ஒரு மனிதர் ‘கஃபாவின் மேல் ஆணையாக’ என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செவியுற்றவுடன் ‘அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது’ என்று கூறினார்கள். மேலும், “யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்’ எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: திர்மிதீ 1455)
o “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிந்தாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5709)
o “அதிகமாக அருவருப்பாகப் பேசுகின்ற ஒழுங்கீனன்”, நரகவாசிகளில் ஒருவன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5498)
o “‘தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2480)
o “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!, ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,” நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 225)
o ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஈர்வலி சீப்பு ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்” என்று கூறி விட்டு, “(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தால் தான்” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4358)
o “யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த்தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3870)
o (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உரையின் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்ப புகழ்ந்து விட்டு,
“அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை.
அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை.
செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும்.
வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும்.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும்.
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689)
o “நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “முகஸ்துதி” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 22528)