Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குர்ஆன் உங்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியதா?

Posted on April 1, 2013 by admin

 

M U S T    R E A D

குர்ஆன் உங்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியதா?

உலகில் தாம் வாழும் காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்ட நபித் தோழர்கள் இஸ்லாத்திற்காக பல சோதனைகளை கடந்து ஈற்றில் உயிரை விடவும் துணிச்சல் பெற்றார்கள் என்றால் அதற்குறிய முக்கிய காரணம் குர்ஆன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய அபார மாற்றமேயாகும். ஸஹாபாக்கள் குர்ஆனை படித்ததுடன் மாத்திரம் நின்று விடாமல், அதனை செயல் வடிவிலும் கொண்டுவர எந்தளவுக்கு ஆர்வம் காட்டினால்கள் என்றால் பத்து வசனங்களை படித்து அதனை தம் வாழ்வில் நடை முறைப்படுத்திய பின்னரே மற்ற வசனங்களை அறிந்து கொண்டார்கள்.

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனை கற்றோம். நபியவர்களிடம் இருந்து பத்து வசனங்களை கற்றுக் கொள்வோம், அதிலுள்ளதை கற்றுக் கொண்டு செயல்படுத்திய பின்னர் தான் பத்து வசனங்களை கடந்து செல்வோம். என்று நபித் தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். “நாங்கள் திருக் குர்ஆனையும், அதன் செயல்பாட்டையும் சேர்த்தே (நபித் தோழர்களிடம்) கற்று வந்தோம்.” (அறிவிப்பவர்: அபு அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமிய்யு. நூல் தப்சீர் முஜாஹித் பாகம் 01 பக்கம் 02)

பொதுவாக முஸ்லிம்கள் அனைவரின் வீட்டிலும் குர்ஆன் கட்டாயம் இருந்தே தீரும். ஒருவன் தொழுகின்றானோ இல்லையோ குர்ஆன் ஓதுவதற்கு தவறமாட்டான். குறைந்த பட்சம் வியாழன் முடிந்து மஃரிப் ஆனதும் வீட்டிற்கு பரக்கத் கிடைக்கும் என்ற போலி நம்பிக்கை நிமித்தமாகவாவது ஓதுவான்.

நரக விளிம்பினில் இருந்த ஸஹாபாக்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றியமைத்த குர்ஆனைத்தான். நாமும் அன்றாடம் ஓதி வருகின்றோம். இருப்பினும் குர்ஆனால் நமக்குள் இதுவரைக்கும் வளர்கப்பட்ட பண்புகள் என்ன? எத்தனை தீய பண்புகளை குர்ஆனால் நாம் விட்டு விலகி வாழ்கின்றோம்? எம் உள்ளத்தை மாற்றியமைத்த வசனங்கள் தான் எத்தனை? குர்ஆன் வசனங்களினால் நாம் அழுது சந்தப்பங்கள் எத்தனை? என்பதை என்றாவது சிந்தித்ததுண்டா?

வீட்டின் பரக்கத்திற்காகவும், நோய் பாதுகாப்பிற்காகவும் (இஸ்மு தட்டிலும், தகடிலும், குப்பி போத்தல்களிலும்) மரண வீட்டிலும் முப்பது ஜுஸ்உக்களை முழுமைப்படுத்தி விட வேண்டும் என்ற தன்மானப் பிரச்சினைக்காகவும், இன்ன பிற சம்பிரதாயங்களுக்காகவுமே குர்ஆன் ஓதப்பட்டால் எங்கனம் குர்ஆன் மனித உள்ளங்களை மாற்றியமைக்கும்?

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் 08 : 02)

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்று மறுமைக்காக தன் வாழ்கையை தயார் செய்து கொண்டிருக்கும் ஒரு முஃமினுக்குத் தான் அல்லாஹ்வைப் பற்றி நினைப்பதினால் உள்ளம் நடு நடுங்குவதுடன் அவனுடைய ஈமானும் அதிகரிக்கும்.

”அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதை சகித்துக் கொள்வர்.” (அல்குர்ஆன் 22:35)

ஒருவன் பாவத்தின் வாசலில் நுழையாமல் இருப்பதற்கும் பொருமையைக் கடைப்பிடிப்பதற்கும் ஏழைகளுக்கு உதவுவதற்கும் ஒருவன் முன்வர வேண்டும் என்றால் அவன் அல்லாஹ்வைப் பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இத்தகைய அறிவையும், உள்ளம் பக்குவப்படக் கூடிய வழிமுறைகளையும் குர்ஆன் நமக்கு எடுத்தியம்புகின்றது.

அல்லாஹ்வின் வசனங்கள் கையில் இருக்கும் போதிலும் சீரியலுக்காகவும், சினிமாக்களுக்காகவும் நம் சமுதாயத்தவர்கள் அழுத வரலாறுகள் ஏராளம். ஒருவரின் ஈமானின் அடையாளம் குர்ஆன் ஓதும் போது (அதன் கருத்தாக்க புரிதலினால்) கண்ணீர் வடிப்பதாகும்.

”இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர்! “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களை பதிவு செய்வாயாக! என அவர்கள் கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் : 5:83)

”அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகின்றது.” (அல்குர்ஆன் 17 : 109)

ஏனைய புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படாத உள்ளுணர்வு ஏன் குர்ஆனுக்கு மட்டும் ஏற்படுகின்றது என்றால் அல்லாஹ்வின் வசனங்கள் நரகத்தின் அச்சுறுத்தல்களையும், அழிக்கப்பட்ட சமுதாய வரலாறுகளையும், நபிமார்கள் மற்றும் நபித் தோழர்கள் மார்க்கத்திற்காக பட்ட துன்பங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் மற்றும் நபித் தோழர்கள் ஆகியோர் அல்லாஹ்வின் வசனங்களுக்காக அழுத சந்தர்பங்களை ஏராளமாக நாம் ஹதீஸ்களின் மூலம் அறிய முடிகின்றது.

(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிஸா’ அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். “ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியி ருக்கும்?” எனும் (4:41 ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4582)

தன் சமுதாயத்திற்கு எதிராக மறுமை நாளில் தன்னையே அல்லாஹ் சாட்சியாளனாக்குவான் என்ற திருமறையின் வசனத்தைக் கேட்டதும் நபியவர்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். தான் வழிகாட்டிச் சென்ற தனது உம்மத் (சமூகம்) தனது வழிகாட்டளை பின்பற்றாத காரணத்தினால் நாளை மறுமையில் நஷ்டவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தே நபியவர்கள் அழுகின்றார்கள். நபியவர்களைப் போல் இது போன்ற வசனங்களை பார்க்கும் போது நமக்கு என்றைக்காவது அழுகை வந்ததுண்டா?

தொழுகையில் அழுத அபுபக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் :

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயிலிருந்தபோது, “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்யமுடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று சொன்னேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (மக்களிடம்) கூறினார்கள்.

நான் (உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், “அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்கு தொழுகை நடத்தட்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறச் சொன்னேன்.

அவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நிறுத்து! (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது ஹஃப்ஸா என்னிடம், “உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை” என்று கூறினார். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். நூல் புகாரி : 716)

அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவதற்கு தயாரானால் திருமறைக் குர்ஆனில் வார்த்தைகளை உச்சரிக்கும் போதும், கேட்க்கும் போதும் அழுது விடுவார்கள். இப்படிப்பட்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்காக இமாமத் செய்தால் குர்ஆன் ஓதும் போது அழுதுவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தொழுகை நடத்தும் இமாமாக நியமிக்கும் படி அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.

சினிமா சீரியலில் அடுத்த கட்டத்தை பார்ப்பதற்காக வேண்டி தொழுகையை அரைகுறையாக தொழுபவனும், தொழுகையின் இறுதி ரக்அத்தை அவசரமாக எதிர்பார்க்கும் அலட்சியவாதிகளும் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தொழுகையைப் பற்றி சற்று சிந்திக்கட்டும்!

சில நேரங்களில் நமது தொழுகையானது நமக்கே திருப்தியளிக்காமல் ஒரு பிடிப்பில்லாமல் இருக்கின்ற அளவுக்கு நாம் பொடு போக்காக இருக்கின்றோம். தொழுகையில் அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஓதும் போது அதைக் கேட்க்கும் ஒவ்வொருவரையும் குர்ஆனின் பக்கம் ஈர்க்க வைக்கும். அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே குர்ஆனின் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு அழுதுவிடுவார்கள்.

அல்லாஹ்வின் வசனத்திற்காக அழுத உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில்,

அல்லாஹ் உங்களுக்கு, “வேதம் அருளப்பட்டவர்களிலும் இணை வைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை…” என்னும் (திருக்குர்ஆனின் 98ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று சொன்னார்கள்.

அதற்கு உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் அவர்கள் அழுதார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி – 3809)

98 வது அத்தியாயத்தை நபியவர்கள் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் ஓதிக் காட்ட சொன்னதாக சொல்லி, ஓதியும் காட்டுகின்றார்கள். இந்த அத்தியாயத்தை தனக்கே ஓதிக்காட்டும் படி அல்லாஹ் சொன்னான் என்பதை அறிந்த நபித் தோழர் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதுவிடுகின்றார்கள்.

98வது அத்தியாயமானது அல்லாஹ்வை மறுப்பவர்களின் தங்குமிடத்தைப் பற்றி விபரிக்கின்றது. இதை உணர்ந்து ஓதும் எந்தவொரு முஃமினும் கட்டாயம் கண்ணீர் சிந்தவே செய்வான். இந்த அத்தியாயத்தை நமது வாழ்நாளில் பல முறை ஓதியிருப்போம், தொழுயைில் செவிமடுத்திருப்போம். எப்போதாவது இவ்வத்தியாயத்தின் கருத்தை படித்தோமா? சிந்தித்தோமா?

இவ்வாறு அல்லாஹ்வை நினைப்பதினாலும், அவனுடைய வசனங்களை படித்து அதன் படி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டு, அல்லாஹ்வின் பயத்தினால் அழுவதினால் மறுமையில் அல்லாஹ்வின் நிழல் அவனுக்குக் கிடைக்கும் என்பது உறுதி. (புகாரி – 6806)

ஆக அன்பின் சகோதர, சகோதரிகளே! திருமறைக் குர்ஆனைப் படிப்பதினால் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிவதினால் உலகம் முழுவதிலும் இருந்து நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களாக பிறந்து வளர்ந்த நாம் குர்ஆனின் வார்த்தைகளைப் படித்துப் பார்த்தோமா? அதன் அர்த்தத்தினால் கவரப்பட்டு குர்ஆனின் வார்த்தைகளினால் உந்தப்பட்டு நமது கண்கள் கண்ணீர் சிந்தியுள்ளனவா? இறைவனின் மார்கத்துடனான நமது தொடர்பு எந்த அளவில் உள்ளது என்பதைப் பற்றி சிந்திப்போமாக! அல்லாஹ்வின் பக்கம் விரைவோமாக!

source: http://rasminmisc.com/quran-ungalai-matriyatha/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

90 − 82 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb