சமூகத்தின் கலவை மார்க்கமா? குர்ஆனின் தூய மார்க்கமா? மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பது எது?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
நான் பிறந்தேன். பத்து மாதம் இருட்டறையில் இருந்ததால் சிரமப்பட்டுக் கண் திறந்தேன். பின்னர் ஒருவாறு எழுந்து நின்றேன். ஒரு சமூகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். நானும் இயங்கினேன்.
அவர்கள் பள்ளிக்குப் போனார்கள், நானும் போனேன். வாரத்தில் ஒரு நாள் சீரியஸாகவும் ஏனைய நாட்களில் சீரியஸ் இல்லாமலும் போனார்கள், நானும் அவ்வாறே சென்றேன். அவர்கள் கந்தூரி கொடுத்தார்கள், நானும் கொடுத்தேன். பெண்கள் ஆண்களுக்கு மஹர் கொடுத்து பெண் வீட்டில் வலீமாவும் வைத்து களேபரமாக கலியாணம் செய்தார்கள்.
நானும் அவ்வாறே கலியாணம் செய்தேன். மனைவியையும் பிள்ளைகளையும் அவர்களது போக்கில் விட்டு விட்டு வியாபாரம், தொழில் என அனைவரும் சுழன்று கொண்டிருந்தார்கள். நானும் சுழன்றேன். அவ்வப்போது ரமழான் வந்தது. சமூகத்தில் திடீரென ஒரு பக்திப் பரவசம் ஏற்பட்டது. அது எனக்கும் வந்தது. ஏன் வந்தது என்று புரியவில்லை. ஷவ்வாலில் சமூகத்தின் பக்தி மறைந்து போனது. என்னிலும் அது மறைந்து விட்டது.
ஒரு முஸ்லிம் இவ்வாறுதான் இன்று பிறந்து வாழ்கிறான். சமூகத்தைப் பார்த்துப் பார்த்தே வணக்கத்தையும் பழக்கத்தையும் கற்றுக் கொள்கிறான். இஸ்லாத்தைக் கற்றுணர்ந்து, விளங்கி வாழும் வாழ்க்கை முஸ்லிம்களிடம் குறைவாகவே காணப்படுகிறது.
இடையில் இப்படியும் ஒரு வினா எழுகிறது.
தற்செயலாக நான் மற்றொரு சமுகத்தில் பிறந்திருந்தால்…?!
இங்கு பிறந்ததனால் பள்ளிக்குப் போனேன். ஏன் போக வேண்டும் என்று சிந்திக்கவில்லை. கந்தூரி கொடுத்தேன். ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அங்கு பிறந்திருந்தாலும் அப்படித்தானே, ஆலயமொன்றுக்குப் போயிருப்பேன். ஏன் போக வேண்டும் என்று கேட்டிருக்க மாட்டேன்.
உண்மையில் நாம் சமூகத்தைப் பார்த்துப் பார்த்து வாழ்ந்தது தான் அதிகம். சமூகம் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியாமல் செய்து வைத்திருக்கின்ற ஒரு கலவை மார்க்கத்தைத்தான் இன்று நம்மில் அதிகமானவர்கள் பின்பற்றுகின்றார்கள். குர்ஆனையும் ஸுன்னாவையும் கற்று அவையிரண்டும் வழங்கும் கலப்படம் இல்லாத தூய மார்க்கத்தைப் பின்பற்றும் நிலை எம்மத்தியில் குறைவாகவே இருக்கிறது.
எந்த மார்க்கம் எங்களை நேரான வழியில் இட்டுச் செல்லும்? சமூகத்தின் கலவை மார்க்கமா? குர்ஆனின் தூய மார்க்கமா? எந்த மார்க்கம் எங்களை சுவனத்தில் கொண்டு போய் சேர்க்கும்? எந்த மார்க்கம் அல்லாஹ்வின் திருப்தியை எங்களுக்குப் பெற்றுத் தரும்?
முஸ்லிம் சமூகத்திற்கு அறைகூவல் விடுத்து… உரத்துச் சப்தமிட்டு எழுப்ப வேண்டிய ஒரு வினா இது. இந்த வினாவின் சப்தம் எவ்வளவு தூரம் கேட்கும் என்பது தெரியவில்லை. என்றாலும் இவ்வாக்கம் அவ்வினாவுக்கே.
மார்க்கத்தை பக்தி சிரத்தையோடு பின்பற்றுவோர் கூட சமூகத்தைப் பார்த்துத்தான் அதிகமானவற்றை செய்கிறார்களே தவிர, குர்ஆன், ஸுன்னாவைப் பார்த்து அல்ல என்று கூறினால் அது மிகையல்ல. சமூக நடப்புகள் சிலவற்றை நோக்கினால் இந்த உண்மை நன்கு புலனாகும்.
1. லைலதுல் கத்ர் இரவு, இறுதிப் பத்து இரவுகளில் ஓர் இரவு என்று குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. சமூகம் 27ம் இரவு தான் அந்த இரவு என்பதில் உறுதியாக இருக்கிறது. அதிகமானவர்கள் எந்த இரவை உயிர்ப் பிக்கின்றார்கள்? குர்ஆன் சொன்னதையா, சமூகம் சொன்னதையா?
2. அவரவரது பாவங்களுக்கு அவரவர் கேட்பதுதான் தவ்பாவும் இஸ்திஃபாரும் என்று குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. இல்லை, ஒருவர் சொல்லிக் கொடுக்க பொருளறியாமல் திருப்பிக் கூறுவதுதான் தவ்பாவும் இஸ்திஃபாரும் என்று சமூகம் சொல்கிறது. மக்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்?
3. பெருநாள் தொழுகையை ஆண்களும் பெண்களும் திரையில்லாத ஒரு மைதானத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. இல்லை, ஆண்களுக்குப் பல தடவை பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு குத்பா இல்லாமல் வீடு வீடாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று சமூகம் சொல்கிறது. மக்கள் எதைச் செய்துவிட்டுப் போகிறார்கள்?
4. பெண்கள் ஐங்காலத் தொழுகை முதல் ஜிஹாத் வரை சன்மார்க்கக் கடமைகளில் இஸ்லாமிய வரையறைகளோடு பங்கெடுக்க அனுமதிக்கலாம் என்று குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. இல்லை, பெண்கள் தொழுகையோடும் நோன்போடும் வீட்டில் இருந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு கல்வி அவசியமே இல்லை என்று சமூகம் சொல்கிறது. மக்கள் எதற்குத் தலைசாய்க்கிறார்கள்?
5. முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களுக்கு சான்று பகரும் சமூகமாக இருக்க வேண்டும் என குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. இல்லை, ஓர் இனவாத சமூகமாக, வியாபார சமூகமாக, இருந்து விட்டால் போதுமானது என்று சமூகம் சொல்கிறது. மக்கள் எதை நடைமுறைப் படுத்துகின்றார்கள்?
6.வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் தலைமைத்துவம் இல்லாமல் சமூகம் ஒரு கணப்பொழுதும் இருக்கக் கூடாது அல்லது அதனை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு வாழும் சமூகமொன்றை உருவாக்க இந்தத் தலைமைத்துவம் இன்றியமையாதது என குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. சமூகமோ தலைமைத்துவத்தைக் கூறு போட்டுப் பங்கு வைத்து உனக்கா, எனக்கா? என சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எந்தத் திசையில் போகிறார்கள்?!
7. அல்லாஹ்வுக்கு நிகராக எந்த ஒரு சக்தியையும் நினைத்து, அழைத்து, வேண்டுதல் முன்வைத்து, நம்பி, ஆதரவு வைக்கக் கூடாது என குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. சமூகமோ தர்காக்களையும் அவ்லியாக்களையும் ஆதரவு வைத்து அழைத்து, வேண்டுதல் முன்வைத்து பலாய் முஸீபத்துகளை நீக்கக் கோரி அழுது மன்றாடுகிறது. மக்கள் எதை பக்தி சிரத்தையோடு ஏற்றிருக்கிறார்கள்?
8. வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, வாழ்க்கைதான் வணக்கம். இதன்படி முழு வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்கான வணக்கமாக மாற்ற வேண்டும். வாழ்வின் ஒரு பகுதியால் அல்லாஹ்வை வணங்கி மற்றொரு பகுதியால் மற்றுமொரு தெய்வத்தை வணங்கலாகாது என்று குர்ஆனும் ஸுன்னாவும் விரிவான விளக்கங்கள் தந்திருக்கின்றன. சமூகமோ தொழுகையும் நோன்பும் தான் வணக்கங்கள் ஏனையவை பழக்கங்கள் என்ற ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் வணக்கத்தில் இருக்கின்றார்களா? பழக்கத்தில் இருக்கின்றார்களா?
9. மனித வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் முக்கியமானதும் தீர்க்கமானதுமான பகுதி உலக வாழ்வு என்று குர்ஆனும் ஸுன்னாவும் கூறுகின்றன. அத்தகைய உலக வாழ்வை தனிமனிதன் முதல் சர்வதேசம் வரை ஒழுங்குபடுத்தி உள்ளங்களையும் உலகத்தையும் அமைதி பெறச்செய்ய வந்ததே இஸ்லாம். சுருக்கமாகச் சொன்னால், முஸ்லிம்கள் உலகை ஒரு மினி சுவர்க்கமாக மாற்ற வேண்டும்.
உலகிலிருக்கின்ற அநீதிகள், அக்கிரமங்கள், அடக்கு முறைகள், அடிமைத்தளைகள் அத்தனையிலிருந்தும் மனித சமூகத்தை மீட்க வேண்டும் என்று குர்ஆனும் ஸுன்னாவும் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றன. ஆனால், சமூகமோ உலகம் அற்பமானது, நீர்க்குமிழி போன்றது. செத்த பிணம் போன்றது. அதனைத் தேடுபவர்கள் நாய்களைப் போன்றவர்கள் என்று ஒரு பக்கத்தில் தத்துவம் பேசிக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் செல்வத்தை சுளை சுளையாகத் தேடி அனுபவித்துக் கொண்டும் இன்னுமொரு பக்கத்தில் ஏழைகளையும் யாசிப்போரையும் வளர்த்துக் கொண்டுமிருக்கிறது.
சமூகத்தின் குழப்பமான இந்த நிலைப்பாட்டுக்குள் மக்கள் சிக்கியிருக்கிறார்களா? அல்லது உலகத்தை ஓர் உன்னதமான இலட்சியத்திற்காகப் பயன்படுத்துமாறு கூறும் குர்ஆன் ஸுன்னாவினது தெளிவான நிலைப்பாட்டை மக்கள் ஏற்றிருக்கின்றார்களா?
10. ஈமான் கொண்டவர்கள் சகோதரர்கள். ஒருவருக் கொருவர் அன்பு பாராட்டும் நேசர்கள். அவர்களுக்கு மத்தியில் பிணக்குகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிம் ஏசலாகாது. துன்புறுத்தலாகாது. முஸ்லிமின் உயிர், உடல், இரத்தம், மானம், செல்வம் அனைத்தும் அடுத்த முஸ்லிமுக்கு ஹராம். முஸ்லிமின் குறையை மறைக்க வேண்டும். துருவித் துருவி ஆராயலாகாது. புறம் பேசலாகாது. அவதூறு கூற முடியாது. முஸ்லிமை காட்டிக் கொடுக்க முடியாது, அவனுக்கு உதவி செய்ய வேண்டும். ஸலாம் கூறவேண்டும். அவன் விருந்துக்கு அழைத்தால் புறக்கணிக்க முடியாது.
இவ்வாறு இவ்வாறெல்லாம் முஸ்லிம்களுக்கிடையிலான உறவுகளை குர்ஆனும் ஸுன்னாவும் விலாவாரியாக விளக்கிக் கொண்டே செல்கின்றன. எனினும், முஸ்லிம் சமூகமோ இந்தப் போதனைகள் அத்தனையையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு…
பிரதேசவாதம், ஊர்வாதம், இயக்கவாதம், கட்சி வாதம் என்பவற்றால் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தியிருக்கிறது. இந்தப் பிளவுகளால் பகை, குரோதம், வெறுப்பு, பொறாமை, காட்டிக் கொடுத்தல், பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல், அடாவடித்தனம், வன்முறை… ஏன் கொலை வரைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் சீர்கேடுகள் பரவியிருக்கின்றன.
முஸ்லிம்கள் குர்ஆன், ஸுன்னாவைப் பார்த்து ‘அமல்’ செய்கிறார்களா? சமூகத்தைப் பார்த்து ‘அமல்’ செய்கிறார்களா?!
குர்ஆனையும் ஸுன்னாவையும் பேசலாம், படிக்கலாம், ஆராயலாம் உபதேசங்களும் சரமாரியாகப் பொழியலாம். இன்று உலமாக்கள், ஷைகுமார்கள் அதிகரித்திருக்கின்ற காலம். தரீக்காக்கள், இயக்கங்கள், மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகள் தாராளம். மஸ்ஜிதுகள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழுகின்றவர்கள், ஹஜ் உம்ராவுக்குப் போகின்றவர்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றார்கள். இவ்வாறு அதிகரித்துக் கொண்டு செல்லும் சில விடயங்களை மகிழ்வுடன் பட்டியலிட்டாலும், வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் பட்டியலும் குறைந்த பாடில்லை.
சமூகத்தின் கட்டுக்கோப்பும் கட்டுப்பாடும் சரிந்து கொண்டு செல்கின்றன. பண்பாடுகள், நற்குணங்கள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. தீய குணங்கள் வளர்ந்து செல்கின்றன. ஒழுக்க வீழ்ச்சி தவிர்க்க முடியாததொன்றாக மாறிவருகின்றது. குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கின்ற கட்டுப்பாடற்ற, கல்வி தொழில் வாய்ப்பில்லாத வாலிபர்களது பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போதைவஸ்துப் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்துச் செல்கிறது. கலாசார சீர்கேடுகள் மலிந்திருக்கின்றன. வியாபாரம், கொடுக்கல் வாங்கல்கள், கடன், சொத்து விவகாரங்களில் நம்பிக்கை நாணயம் குறைந்து மோசடிகளும் தந்திரங்களும் குத்து வெட்டுக்களும் நிறைந்திருக்கின்றன. தலாக் (மணமுறிவு), குடும்பப் பிரச்சினைகள் (திருமணம் செய்த ஆரம்ப காலத்திலேயே) அதிகரித்திருக்கின்றன.
ஒரு பக்கத்தில் வளர்ச்சியையும் மறுபக்கத்தில் வீழ்ச்சியையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இல்லையா? இதற்குக் காரணம் என்ன?
சீர்திருத்தம் செய்ய நினைத்தவர்களும் குர்ஆன், ஸுன்னாவைப் பார்த்து சீர்திருத்தம் செய்யவில்லை. சமூகத்தைப் பார்த்துத்தான் அதனையும் செய்யத் துவங்கினார்கள். சமூகத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு சில பணிகளைக் கண்டார்கள். எல்லோரும் அவற்றையே செய்தார்கள். அதனால், ஒரு சில பகுதிகள் வளர்ந்துள்ளன. சமூகத்தில் சீர்த்திருத்தம் துவக்கப்படாத பகுதிகளை ஒருவரும் கண்டுகொள்ளவுமில்லை ஆரம்பிக்கவுமில்லை. அதனால் அப்பகுதிகள் தொடர்ந்தும் வீழ்ச்சியிலேயே இருக்கின்றன.
எனவே, இஸ்லாமியப் பணியும் குர்ஆன், ஸுன்னாவைப் பார்த்து துவக்கப்படவில்லை. சமூகத்தைப் பார்த்தே அதுவும் நடைபெற்றிருக்கின்றது.
இவ்வாறு சமூகத்தைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் இந்தப் போக்கினால் ஏற்பட்டிருக்கின்ற விளைவுகளும் விபரீதங்களும் கொஞ்சமல்ல. அவற்றுள் முதன்மையானது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினையாகும்.
அல்லாஹ்வின் தூதருக்கு கலப்படமில்லாத ஒரு தூய மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. எமக்கோ கிரந்தங்களில் அந்தத் தூய மார்க்கம் கிடைத்திருக்கிறது. எனினும், கிரந்தங்களிலுள்ள மார்க்கத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சமூகம் கூட்டியும் குறைத்தும் கழித்தும் சேர்த்தும் வைத்திருக்கின்ற ஒரு கலப்படமான மார்க்கமே சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது. எனவே, மனிதர்களைத் தூய்மைப்படுத்துவது போல் மார்க்கத்தையும் கலப்படங்களகற்றித் தூய்மைப்படுத்தும் ஒரு பாரிய பொறுப்பு இன்றைய பணியாளர்களுக்கு முன்னால் காத்திருக்கிறது.
”அல்லாஹ் இறக்கியருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இல்லை எமது பிதாக்கள் எதிலிருக்கக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம் என அவர்கள் கூறுகிறார்கள்…” (2 : 170)
என்ற வசனம் அல்லாஹ் இறக்கியதை விட வேறு ஒன்று சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துவதனைப் படம் பிடித்துக் காட்டுகிறதல்லவா?
இந்த நிலையில் மனிதர்களைத் தூய்மைப்படுத்துவதைப் போல மார்க்கத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும் என சிலர் களத்துக்கு வந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று பார்த்தால் அது இன்னுமொரு சோகம்.
அவர்கள் குர்ஆன், ஸுன்னாவைப் பார்த்தார்கள், படித்தார்கள் என்பது உண்மைதான். எனினும், சமூகத்திலுள்ள குறைகளுக்குப் பதில் சொல்வதற்காகக் குர்ஆன், ஸுன்னாவினது ஆராய்ச்சியில் ஈடுபட்டார்களே தவிர, சமூகத்தில் அறவே இல்லாதிருந்த இஸ்லாத்தின் பகுதிகளை குர்ஆன், ஸுன்னாவில் அவர்கள் தேடவில்லை ஆராயவுமில்லை. அவ்வாறானதொரு பகுதி குர்ஆன், ஸுன்னாவில் இருப்பது அவர்களுக்கு விளங்கவுமில்லை.
உதாரணமாக, தொழுகை சமூகத்தில் ஏற்கனவே இருக்கிறது. தொழுகையின் முன்னாலும் பின்னாலும் சமூகம் கலந்துவிட்ட கைச்சரக்குகளும் இருக்கின்றன. சமூகம் கலந்துவிட்டவற்றைக் களைவதற்கு குர்ஆன், ஸுன்னா படிக்கப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.
அதே நேரம் குர்ஆன், ஸுன்னா கூறும் மற்றொரு விடயமான தலைமைத்துவம், கட்டுப்பாடு, கூட்டமைப்பு, ஐக்கியம், சகோதரத்தும் என்பன குர்ஆன் ஸுன்னாவில் இருப்பது பலருக்குப் புரியவில்லை. காரணம், தொழுகை சமூகத்தில் ஏற்கனவே இருந்தது போல இஸ்லாமியத் தலைமைத்துவம் ஒன்று சமூகத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் அதிலுள்ள குறைகள் நிவர்த்திக்கப்படுவதற்காக குர்ஆன், ஸுன்னா படிக்கப் பட்டிருக்கும். இல்லாததனால் குர்ஆன், ஸுன்னாவின் அப்பகுதிகள் சிந்தனைக்கோ பேச்சுக்கோ செயற்பாட்டுக்கோ வரவேயில்லை. அது மட்டுமல்ல. தலைமைத்துவமும் கூட்டமைப்பும் இன்றைய சூழலில் அவசியமே இல்லை என்று கூட வலியுறுத்தப்படுகிறது. இதுவும் ஒருவகையில் சமூகத்தைப் பார்த்ததனால் வந்தவிளைவே தவிர வேறில்லை.
ஆக, மீண்டும் மீண்டும் சமூகத்தைப் பார்த்துப் பார்த்தே அனைத்தையும் தீர்மானிக்கும் நிலை தொடருகிறது. குர்ஆன், ஸுன்னாவைப் பார்த்து பணியையோ சீர்த்திருத்தத்தையோ சிந்திக்கும் நிலை தோன்றுவது கடினமாகவே இருக்கிறது.
சமூகத்தில் ஏற்கனவே இல்லாத விடயங்கள் தொடர்ந்து கிடப்பிலேயே போடப்பட்டிருக்கின்றன. அதனால் அவற்றைப் பேசுகின்ற வலியுறுத்துகின்ற பல்லாயிரம் குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் கிடப்பிலேயே இருக்கின்றன. ஆய்வுரைகளுக்காகவும் ஆய்வுக் கட்டுரைகளுக்காகவும் அவை சிலபோது படிக்கப்படுகின்றன. இவை தவிர நடைமுறை வாழ்க்கைக்காக அவை படிக்கப்படுவதுமில்லை பார்க்கப்படுவதுமில்லை. நடைமுறை என்று வந்துவிட்டால் ”எங்களது பிதாக்கள் எதிலிருக்கக் கண்டோமோ…” அது போதும் என்ற மனநிலைதான் களத்தை ஆக்கிரமித்திருக்கிறது.
பிதாக்கள் நல்லவர்களாக இருக்கலாம் கெட்டவர்களாக இருக்கலாம். நல்லவர்கள் ஒரு சில அம்சங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருப்பார்கள். ஏனையவற்றை அவர்கள் தங்களது கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்காதிருந்திருப்பார்கள். அதற்காக குர்ஆன், ஸுன்னாவை விட்டுவிட்டு அவர்கள் சொன்னவற்றை வேத வரிகளாக ஆக்கிக் கொள்வதா? அல்லது அந்த நல்லவர்களின் சிந்தனைகளுக்கெட்டாத குர்ஆன், ஸுன்னாவின் பகுதிகள் இருந்தால் அவற்றைப் புறக்கணிப்பதா?
குர்ஆன், ஸுன்னாவினூடாக வாழ்க்கை நெறியைப் பார்ப்பது வேறு இன்றைய வாழ்க்கை முறைகளிலிருக்கின்ற கோளாறுகளினுடாக குர்ஆன், ஸுன்னாவைப் பார்ப்பது வேறு. இரண்டாவது அணுகுமுறையே இன்றைய முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகிறது. இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாட்டையும் தூரத்தையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றி ஒரு சமூக மாற்றத்தை நாம் செய்யலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பணியை பூச்சியத்திலிருந்து துவங்கினார்கள் 100 வரை உயர்த்திச் சென்றார்கள். ஓர் உன்னதமான சமூகம் உருவாகியது. அந்த சமூகம் 1400 வருடங்கள் வாழ்ந்து… தேய்ந்து… இழந்தவை அனைத்தையும் இழந்து… உலக நீரோட்டத்திலிருந்து ஓரம் தள்ளப்பட்ட ஒரு நிலைக்கு இன்று வந்திருக்கிறது. இத்தகையதொரு சமூகத்தில் சென்றன சென்று எஞ்சிய ஒரு சிலவற்றின் சீர்த்திருத்தத்திற்காக குர்ஆன், ஸுன்னாவைப் பார்ப்பதா? அல்லது குர்ஆனும் ஸுன்னாவும் சமூகத்தை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றனவோ அங்கு அழைத்துச் செல்வதற்கான வழிகாட்டல்களை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் படிப்பதா? எந்த அணுகுமுறை களத்தில் காணப்படுகிறது? எதில் சமுதாய மறுமலர்ச்சி தங்கியிருக்கிறது?
தாஇகள் சிந்திப்பார்களா?
– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி