சத்தியத்தை மறைக்க முடியுமா?
சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமூகத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும், பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளைகள் நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே இறைவனின் விருப்பம்.
மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சத்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இவர்களே வெற்றி பெற்றவர்கள்.
“நன்மைகளை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்” (அல்குர்ஆன் 3:104)
எனவே இறைக்கட்டளைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் எதுவித தயவு தாட்சண்யமும் காட்டக் கூடாது என்பது இறைக்கட்டளை. சமுதாயமே ஒன்றுதிரண்டு எதிர்த்து நின்றாலும் துயரங்கள் தொடர்ந்தாலும் யாருக்கும் அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே இறைவன் இடும் கட்டளையாகும்.
“உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!” (அல்குர்ஆன் 15:74)
அசத்தியத்தில் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத்தான் செய்யும். பாவமான காரியங்களைக் கண்டும் காணாமல் இருக்கும்படி இஸ்லாம் என்றுமே கூறவில்லை. அசத்தியத்தை எதிர்ப்பதனால் பிரிவினை ஏற்படும் என்றால், அந்தப்பிரிவினை தவிர்க்க முடியாதது. எனினும் அது தற்காலிகமானதெனலாம். நமக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இங்கே எமக்குப் படிப்பினைகள் நிறைய உள்ளன.
ஒரு கிராமத்தில் வட்டித் தொழில் மும்முரமாக ஒற்றுமையாக நடைபெறும் போது அவர்களுக்கு மத்தியில் வட்டி கூடாது எனக் காரசாரமாக பிரசாரம் செய்தால் அவர்களுக்கிடையில் இரு பிரிவுகள் ஏற்படுவது இயல்பு. ஒற்றுமை குலைந்து சமூகம் பிளவுபடும் என அஞ்சி அவர்கள் மத்தியில் வட்டியை ஊக்குவிப்பதா? அதற்காக மெளனம் சாதிப்பது சரிதானா? இது இஸ்லாமிய நெறிமுறை ஆகாது.
சீதனக் கொடுமையால் பெண்கள் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கும் ஓர் ஊரில் மஹரின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சீதனம் எடுப்பது கூடாது எனப் பகிரங்கமாக பிரசாரம் செய்யும் போது சீதனம் வாங்குபவர்கள் இதனை எதிர்க்கத்தான் செய்வார்கள். பிளவுகள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக சீதனத்துக்கெதிரான போராட்டத்தைக் கைவிடுவதா?
லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலச் சமுதாயத்தினர் மத்தியில் ஓரினச் சேர்க்கை பிரபல்யமடைந்திருந்தது. மக்கள் ஒற்றுமையாக அதில் ஈடுபட்டு வந்தனர். இதற்கெதிராக லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரசாரம் செய்ததினால் லூத் நபிக்கும் மக்களுக்குமிடையில் பிரச்சினைகள் எழுந்தன. சமூகம் பிளவுபட்டது. அதற்காக லூத் நபியை யாரும் குறை காணவில்லை. லூத் நபியை யாரும் பிரிவினைவாதி என்றோ ஒற்றுமையைக் குலைக்கிறார் என்றோ குற்றம் சுமத்தவில்லை.
தமது மக்கள் ஒற்றுமையாக இணைவைப்பில் எடுபட்டுவந்ததைக் கண்ணுற்ற ஸாலிஹ் நபி அவர்கள் சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு அவரைக் கடுமையாக எதிர்த்தது. ஸாலிஹ் நபியை ஒரு பிரிவினைவாதி என்றா கூறுவது? இல்லவே இல்லை, அவரின் சத்தியப் போராட்டம் தொடர்ந்தது.
தமது வாழ்வில் அளவு நிறுவையில் மோசடி செய்வதில் ஒற்றுமையாக செயல்பட்டுவந்த மதியன் நகரவாசிகளிடம் நபி சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது அந்தச் சமூகம் பிளவுபட்டு அவரை எதிர்த்த போதும், இஸ்லாம் அவர் மீது பழி சுமத்தவில்லை. பிரிவினைவாதி எனக் கூறி அவரை ஓரம் கட்டிவிடவும் இல்லை.
மேலும் இணைவைப்புக் காரியங்களில் சிக்குண்டு மூழ்கிக் கிடந்த சமூகத்தினரை நோக்கி உங்களைவிட்டும் நாங்கள் பிரிந்துவிட்டோம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் என்றென்றும் பகைமைதான் எனக் கூறிவந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பிரிவினைவாதி என்று இஸ்லாம் கூறவில்லை.
இந்தச் சம்பவங்கள் உணர்த்துவதென்ன? ஒற்றுமைதான் முக்கியம் எனக்கூறி சத்தியத்தை மறைக்கச் சொல்கின்றதா? அல்லது தீமைகளோடு இணங்கிப் போய் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கச் சொல்கின்றதா? சிந்தனை செய்து பாருங்கள். நபிமார்கள் சத்தியத்தைச் சொன்னார்கள். சமூகம் பிரிந்தது. உண்மை தெளிந்தது. அசத்தியம் தோல்விகண்டது. இது வரலாறு.
அசத்தியத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த குரைஷிக்காபிர்கள் மத்தியில் நபியவர்கள் ஏக தெய்வக் கொள்கையை சன்மார்க்கத்தை எடுத்தியம்பிய போது மக்கத்துக் காபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கி என்ன கூறினார்கள்? முஹம்மது எமது சமூகத்தைத் திட்டுகிறார். எமது வழிமுறைகளில் குறைகாண்கிறார். ஜமாஅத்தைப் பிரித்துவிட்டார். இவ்வாறு பல குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகிய நபியவர்களை ஒரு குழப்பவாதி என்றோ பிரிவினைவாதியென்றோ கூறினால் நாங்கள் ஏற்போமா? அவர் வழியில் நாமும் ஒற்றுமையாகச் செயற்பட்டு சத்தியத்தை நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டும். இதனையே அல்லாஹ்வும் எம்மிடம் எதிர்பார்கிறான்.
பிரச்சினைகளுக்கு அஞ்சிப் பாவமான காரியங்களுக்கு இடமளித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக இறைவன் தனது அல்குர்ஆனில் வலியுறுத்திக் கூறுகிறான்.
“அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்” (அல் குர் ஆன் 3:103)
அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழியும்தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழி ஆகிய இரண்டையும் பற்றிப்பிடியுங்கள் என்ற போதனையையே இத்திருவசனம் எமக்கு வலியுறுத்துகின்றது. மாறாக இதனை தவறாக விளக்க ஒற்றுமையெனும், கயிறு என விளக்கம் கொடுத்து சமூகத்தை வழி கெடுக்கக் கூடாது.
குர்ஆன் சுன்னாவை விளங்கி வாழ்ந்தால் ஒற்றுமைகெட எந்த வழியும் இல்லை. எனவே அல்லாஹ்வின் வேதமாகிய கயிற்றைப் பிடிக்கும் போது மற்றவர்களும் அதனைப் பிடிக்க முன்வர வேண்டும். வராவிட்டால் நாம் பிடியை விட்டுவிடக் கூடாது. எந்தப் பாடுபட்டாவது அவர்களைப் பிடிக்குமாறு அழைப்பதுதான் எம்மீதுள்ள கடமையாகும். பொறுப்பும் கூட. இதனையே அல்லாஹ் விரும்புகிறான்.
source: http://ipcblogger.net/mjabir/?p=1242