இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், ரஹிமஹுல்லாஹ் (1)
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி),
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியும் மூன்றாம் நூற்றாண்டின் முதலாம் அரைப் பகுதியுமாகும்.
இக்காலப் பிரிவு ஃபிக்ஹு இமாம்களின் இறுதிப் பகுதியாகும்.
மேலும் இது இஸ்லாமிய அறிவு, கலை, கலாசார வரலாற்றில் மிக வளமான காலமுமாகும்.
மறுபக்கத்தில் அந்நிய கலாசார நாகரிகங்களின் அறிவுக் கருவூலங்களை முஸ்லிம்கள் உள்வாங்கிய காலப் பிரிவும் இதுவாகும்.
குறிப்பாக, கிரேக்க தத்துவம் வியக்கத்தக்க விதத்தில் முஸ்லிம் தத்துவவியலாளரிடம் செல்வாக்குச் செலுத்திய காலமாக இது விளங்கியது.
மதத்திற்கும் தத்துவத்திற்குமிடையே இணக்கம் காணும் சிந்தனை முஸ்லிம் தத்துவ மேதைகளிடம் வளர்ந்திருந்தது கதரிய்யாக்கள் தோன்றியிருந்தனர்.
முஃதஸிலாக்கள் உருவாகி முதிர்ச்சி பெற்றிருந்தனர்.
அதுவரை தூய இஸ்லாத்தின் காவலராக இருந்து வந்த ஆட்சியாளர்களிடமும் புதுக் கோட்பாடுகளின் தாக்கம் எதிரொலிக்கலாயிற்று.
கலீபா அல்மஃமூனும் முஃதஸிலா கொள்கையினால் கவரப்பட்டிருந்தார்.
அல்லாஹ்வின் பண்புகளில் சிலவற்றை இல்லாமல் செய்யும் -குர்ஆன் படைக்கப்பட்டது| என்ற கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.
இக்கருத்துடன் முரண்பட்ட அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவைச் சேர்ந்தோர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் உள்ளாகும் நிலை உருவாகியிருந்தது.
உண்மையில் இஸ்லாமிய வரலாற்றில் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உலமாக்கள் அரசியல் பீடத்திலிருந்து எதிர்நோக்கிய முதல் அறைகூவலாக இது கருதப்படுகின்றது.
முஃதஸிலாக்களின் குறித்த கொள் கையை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை அரச பதவியொன்றில் அமர்த்துவதோ அவரின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதோ கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது.
முஃதஸிலாக்களின் கொள்கைகளும் அவை சார்ந்த நிலைப்பாடுகளும் குர்ஆன், ஸுன்னாவையும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த தூய இஸ்லாத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததைக் கண்ட இமாம் அஹ்மத், முஃதஸிலாக்களுக்கெதிராக மிகவும் துணிச்சலாக செயற்படலானார். இது இமாம் அவர்கள் மேற்கொண்ட ஷதூய இஸ்லாமியப் போராட்டம்| என வர்ணிக்கப்படுகின்றது.இமாம் அஹ்மதின் இந்நிலைப்பாடு அன்றைய சூழல் வேண்டி நின்றதொன்றாகும்.
தூய இஸ்லாமியக் கோட்பாடானது ஏக காலத்தில் தன் முதற் தன்மையையும் உடனிகழ்வுத் தன்மையையும் பெற்றதாகும் என்பதை இது காட்டுகின்றது. இமாம் அஹ்மதின் தூய இஸ்லாமியப் போராட்டத்தை விளங்கிக் கொள்வதற்கு முஃதஸிலாக்கள், அவர்களின் கொள்கை பற்றிய தெளிவு அவசியமானதாகும்.
கிரேக்க, ஸுர்யானிய அறிவியற் கலைகளின் தாக்கத்தினால் தோன்றிய முஃதஸிலாக்கள் பரந்த அறிவையும் சிறந்த விளக்கத்தையும் பெற்றிருந்தபோதிலும் அறிவில் ஆழத்தையோ நுணுக்கத்தையோ பெற்றிருந்தனர் எனக் கூறுவதற்கில்லை.
இவர்களில் பலர் தீனின் உண்மை நிலையை விளங்கிக் கொள்ளத் தவறி விட்ட னர். பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் மனித அறிவின் எல்லையையும் நிர்ணயிப்பதில் இவர்கள் அத்துமீறி விட்டனர். மார்க்கம் பற்றியும் இயற்கைக்கு அப்பாலுள்ள விடயங்கள் பற்றியும் இவர்கள் மேற்கொண்ட ஆய்வு களும் முன்வைத்த கோட்பாடுகளும் முதிர்ச்சியடைந் தவையாக இருக்கவில்லை. மாறாக, நுணுக்கத்தை இழந்த அவசர முடிவுகளாகவே அவை அமைந்தன.
முஃதஸிலாக்களை நியாயப்படுத்தும் சிந்தனைப் போக்கைக் கொண்ட கலாநிதி அஹ்மத் அமீன், பகுத்தறிவைப் பூஜிப்பதிலும் அதன் பலத்தையும் வலுவையும் விசுவாசிப்பதிலும் முஃதஸிலாக்கள் அத்துமீறி விட்டனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றார். அவர் முஃதஸிலாக்களுக்கும் (இமாம் அஹ்மதின் தலைமையிலான) அன்றைய முஹத்திஸீன்களுக்கும் இடையில் நிலவிய கருத்து வேறுபாட்டைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றார்:
“இவர்களுக்கும் முஃதஸிலாக்களுக்குமிடையில் நிலவிய அடிப்படைக் கருத்து வேறுபாடு பகுத்தறிவின் ஆதிக்கம், அதன் பரப்பு, எல்லை பற்றியதாகும். முஃத ஸிலாக்கள், மனித அறிவானது அல்லாஹ்வுடன் தொடர் புடைய விடயங்களில் கூட ஆதாரங்களை முன்வைத்து நிறுவும் அளவுக்கு பலமும் பரப்பும் கொண் டது. பகுத்த றிவுக்கு அதன் ஆதாரங்களைத் தவிர வேறு எல்லைகள் இல்லை.
சான்றாதாரம் கிடைத்து விட்டால் தவறுக்கோ பிழைக்கோ இடமில்லை என்று கருதினர். எனவே, மிக நுணுக்கமானதும் சிரமமானதும் சிக்கலானதுமான விடயங்களிலும் அவர்கள் சான்றாதாரங்களைப் பிரயோகித்தனர். அத்தகைய விடயங்களிலும் சத்தியத்தைக் கண்டறியும் ஆற்றல் பகுத்தறிவுக்குண்டு எனக் கண்டனர். முஃதஸிலாக்களின் இச்சிந்தனைப் பாங்கு அவர்களின் அனைத்து ஆய்வுகளிலும் பிரதிபலித்தது. (பகுத்தறிவின்) சான்றாதாரத்தின் எல்லைக்கே அவர்கள் சென்றனர். மிகவும் சிரமமானதும் சிக்கலானதுமான பிரச்சினைகளைக் கிளறி அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய முற்பட்டனர். அவ்வாறு தீர்வைக் கண்டு விட்டால் அல்லது தீர்வு பெறப்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினால் அதற் கேற்ப அல்குர்ஆன் வசனங்களை விளக்க முற்பட்டனர். ஆனால், அடுத்த தரப்பினரோ (அதாவது முஹத்திஸீன்கள்) இதற்கு நேர்மாற்றமாக நடந்து கொண்டனர். பகுத்தறிவு பலவீனமானது அல்லாஹ் தொடர்பான விட யங்களைப் புரிந்து கொள்வதில் அதன் சக்தி வரையறைக்குட்பட்டதாகும்.
அல்லாஹ்வின் இருப்பு, நுபுவ்வத், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கே அதற்குச் சக்தியுண்டு. அல்லாஹ்வின் யதார்த்தத்தையோ, பண்புகளையோ அடையும் ஆற்றல் அதற்கு வழங்கப்படவில்லை. எனவே, அதைப் பற்றி அவனது தூதர்கள் கொண்டு வந்து கூறி யதை நம்புவோம் அவர்கள் கூறிய விடயங்களுடன் நின்று விடுவோம் நபிமார்கள் பேசாத பேச்சுக்களை கிளறாமல் இருப்போம் அவ்வாறு சர்ச்சைகளைக் கிளப்புகின் றவர்களுக்கு முன்னால் பாதையை மூடி விடுவோம் அவர்களோடு நாம் ஏதாவது ஒரு விடயமாக விவாதித்தால் அவர்களின் பிழைகளையும் அவர்களது வழிமுறையின் பிழைகளையும் விளக்கவே விவாதிப்போம்” என்றனர்.
கட்புலனாவதுடன் கட்புலனாகாததை ஒப்புநோக்கும் முஃதஸிலாக்களின் போக்கை மற்றறோர் இடத்தில் அஹ்மத் அமீன் பின்வருமாறு விளக்குகின்றார்:
“அவர்களிடம் காணப்பட்ட பிரதான குறைபாடு யாதெனில், அவர்கள் கற்புலனாவதுடன் கட்புலனாகா ததை, மனிதனுடன் அல்லாஹ்வை ஒப்பு நோக்குவதில் அளவு கடந்து சென்றமையாகும் எனலாம். அவர்கள் இவ்வுலக நியதிகளுக்குள் அல்லாஹ்வைக் கொண்டு வந்தனர்.
பகுத்தறிவை பூஜித்து அதற்கு தெய்வீக அந்தஸ்தை வழங்குகின்ற, நம்பிக்கைகளையும் மற்றும் பல உண்மை களையும் கொண்ட சமய ஒழுங்கை இறைவனது தாத், ஸிபாத், அஃப்ஆல்களைக் கூட பகுத்தறிவின் ஆளுகைக்கு உட்படுத்துகின்ற, கட்புலனாகாததை கட்புலனாவதுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற முஃதஸிலாக்களின் சிந்தனைப் போக்கானது இஸ்லாத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகவே அமைந்தது. இஸ்லாமிய சமூகத்தில் பெரும் சீர்குலைவின் வாயிலையும் திறந்து விட்டது. மேலும் இது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த எளிமையானதும் செயலுடன் கூடிய துமான சன்மார்க் கத்தை மனித அறிவை வைத்து, அறிவும் விவேகமும் பெற்றவர்களால்கூட புரிந்து கொள்ள முடியாத நுணுக்கமான, வெறும் சித்தாந்த வடிவிலான தத்துவமாக மாற்றியது. மேலும் இச்சிந்தனைப் போக்கு உணர்வுக்கெதிராக பகுத்தறிவை வளர்த்தெடுப்பதாகவும் ஈமானை பலவீனப் படுத்துவதாகவும் சந்தேகங்களையும் ஐயங்களையும் உரு வாக்குவதாகவும் அமைந்தது. அதேபோன்று, அறிவால் நியாயம் கற்பிக்க முடியாத சான்றாதாரத்தை முன்வைக்க முடியாத, நபி கொண்டு வந்த விடயங்களிலும் அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.
முஃதஸிலாக்கள் கலீபா மஃமூன் ஆட்சிபீடம் ஏறும் வரை பல முஸ்லிம் சிந்தனைப் பிரிவுகளில் ஒரு பிரிவாகவே இருந்து வந்தனர். அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக இருக்கவில்லை. கலீபா மஃமூன் ஆட்சிபீடம் ஏறியதையடுத்து நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. மஃமூன் இயல்பாகவே தத்துவ சிந்தனைப் பாங்குடையவராகவும் மார்க்க அடிப்படைகளைப் பேணிய நிலையில் சுதந்திர சிந்தனையை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இதனால் கூடிய சுதந்திர சிந்தனைப் போக்கைக் கொண்ட, அதிகம் பகுத்தறிவில் தங்கி நின்ற முஃதஸிலா சிந்தனை இவருக்கு மிகவும் ஏற்புடையதாக அமைந்தது. எனவே இவர் முஃதஸிலாக்களைப் படிப்படியாக நெருங்கலானார். காலப்போக்கில் அவர்கள் அரச மாளிகையில் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர்…”
இவ்வாறுதான் முஃதஸிலாக்கள் அப்பாஸிய ஆட்சி யில் பலமும் செல்வாக்கும் பெற்றார்கள். முஃதஸிலா சிந்தனை பிரதம நீதியரசர் உட்பட மேலதிகாரிகள் அனைவரதும் நம்பிக்கையாக மாறி உத்தியோகபூர்வ கொள்கையின் அந்தஸ்தைப் பெற்றது. முஃதஸிலாக்களின் இயல்பானது நாட்டில் இரு வேறுபட்ட சிந்தனை இருப்பதை நியாயம் காண விரும்பவில்லை.
அவர்களிடம் ஒரு வகை விசித்திரமான இயல்பு காணப்பட்டது. ஏக காலத்தில் அவர்கள் பிடிவாதப் போக்கையும் தீவிர சுதந்திர சிந்தனைப் போக்கையும் கொண்டிருந்தனர். வரலாற்றில் ஒரு பக்கத்தில் தீவிர சிந்தனைச் சுதந்திரத்தை வலியுறுத்தியவர்களிடத்தில் மறுபக்கத்தில் கடும் பிடிவாதப் போக்கு மிகைத்து நின்றதையும் காண முடிகின்றது. இவர்கள் சிந்தனைச் சுதந்திரத்தை தமது ஏகபோக உரிமையாகக் கருதியதுடன் பிறருக்கு அதனை மறுக்கும் மனப்பாங்குடையோராகவும் இருந்தனர். முஃதஸிலாக்கள் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கான ஏக வியாக்கியானமாக முஃதஸிலா சிந்தனையே அமைதல் வேண்டும் எனக் கருதினர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் அரசோச்சும் ஏக கொள்கையாக அவர்களது கொள்கையே இருத்தல் வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அல்குர்ஆன் படைக்கப்பட்டமை தொடர்பான சட்டப் பிரச்சினை இவர்களது கொள்கையை கணிப்பிடுவதற்கான சிறந்த அளவுகோலாக அமைந்தது. எனவே, அவர்கள் குறித்த சட்டப் பிரச்சினைக்கு அழுத்தம் கொடுத்து அதனை ஈமானுக்கும் குப்ருக்கும் இடையிலான பிரி கோடாகவும் தௌஹீதின் பிரகடனமாகவும் அகீதாவின் சீர்மைக்கான நிபந்தனை (ஷர்த்)யாகவும் ஆக்கினர்.
இவர்களின் நிலைப்பாட்டின்படி அல்லாஹ் மட்டுமே பூர்வீகமானவன் (கதீம்) அவனல்லாத அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டவையும் படைக்கப்பட்டவையு மாகும். ஆனால், முஹத்திஸீன்களோ, இந்நூதன விளக் கத்தை கடுமையாக ஆட்சேபித்தனர்.
“அல்குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாமாகும். அது படைக்கப்பட்டது என்றறோ, படைக்கப்படாதது என்றறோ நாம் கூற மாட்டோம். இத்தகையதொரு பிரச்சினையை கிளப்புவது பித்ஆவாகும். இதுபற்றி நபியோ அவர்களது தோழர்களோ பேசவில்லை. அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாகும் என்று கூறுவதுடன் நாம் நிறுத்திக் கொள்வோம். இதை மட்டுமே அல்லாஹ் தனது குர்ஆனில் கூறியுள்ளான்” என்று வாதிட்டனர். ஆனால், முஃதஸிலாக்களோ அவர்கள் உருவாக்கிய பகுத்தறிவுப் பின்னணியில் இந்நம்பிக்கையை வலியுறுத்துவது கட்டாயக் கடமை என்று கருதினர். இதில் இஸ்லாமிய அரசு விட்டுக் கொடுக்கவோ, சகிப்புத்தன் மையுடன் நடந்து கொள்ளவோ, பாராமுகமாக இருக்கவோ முடியாது என்று கண்டனர். இந்த வகையில் அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையிலேயே இஸ்லாம் தங்கியுள்ளது என்று கருதியே இவர்கள் இஸ்லாமிய அரசின் அன்றைய கலீபாவான மஃமூனை இக்கொள் கையை மக்கள் ஏற்கச் செய்யுமாறு வற்புறுத்தினர்.
ஹிஜ்ரி 218ஆம் ஆண்டு மஃமூனும் நாட்டு மக்கள் (முஸ்லிம்கள்) அனைவரும் குறித்த கொள்கையை ஏற்கு மாறு பணிப்புரை வழங்கினார். இதுபற்றி முதலாவதாக பக்தாத் கவர்னராக இருந்த இஸ்ஹாக் இப்னு இப்றாஹீ முக்கு ஒரு விசேட நிரூபம் அனுப்பினார். அதில் பின்வரு மாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“சன்மார்க்கத்தைப் பாதுகாப்பதும் அதனை நிலைநாட் டுவதும் பிரஜைகள் மத்தியில் சத்தியத்தின் அடிப்படையில் செயற்படுவதும் முஸ்லிம்களின் கலீபாவின் கடமையா கும்.” மேலும் இந்நிருபத்தில் அவர் “அல்குர்ஆன் பூர்வீக மானது என்று கூறுபவர்களும் அது படைக்கப்பட்டது என்பதை நிராகரிப்பவர்களும் உம்மத்தின் மிகவும் கெட்ட வர்களும் தௌஹீதில் குறைபாடுள்ள வழிகேட்டின் தலைவர்களும் ஆவர். வாய்மையையிட்டு குற்றம் சாட்டப்படுவதற்கும் சாட்சி நிராகரிக்கப்படுவதற்கும் சொல்லையோ செயலையோ நம்பாமல் இருப்பதற்கும் மிகவும் தகுதியுடையோருமாவர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கவர்னர் மக்களை ஒன்றுகூட்டி, குறித்த விடயத்தில் அவர்களின் நம்பிக்கையைப் பரீட்சிக்க வேண்டும். இந் நம்பிக்கையை ஏற்காதவர்களை அரச பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இவ்வாறுதான் வரலாற்றின் சோதனை (அல்மிஹ்னா) என வழங்கப்படும் இப்பிரச்சினை தோற்றம் பெற்றது. கலீ பாவின் பணிப்புரையின் கீழ் மக்களின் நம்பிக்கை பரீட் சிக்கப்பட்டது பலர் அரச பதவிகளிலிருந்து நீக்கப்பட் டனர். குறித்த தத்துவப் பிரச்சினை அரசு, கலீபா உட்பட நாட்டு மக்கள் அனைவரதும் ஏகப் பிரச்சினையாக மாறி யது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களால் இப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பெரும் சிந்தனைச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். இக்கொள்கையை ஏற்பதா, மறுப்பதா என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
இந்நிலையில் மக்களுக்கு ஒரு பெரும் வழிகாட்டல் தேவைப்பட்டது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் தூய இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக அரசுடனும் அதிகாரிகளுடனும் துணிச்சலுடன் போராடி சத்தியத்தை நிலைநாட்டும் ஆற்றலும் ஆளு மையும் பெற்ற ஒரு சன்மார்க்கத் தலைமைத்துவம் தேவைப்பட்டது. இப்பின்னணியிலேயே காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இமாம் அஹ்மதின் களப் பிரவேசம் இடம்பெற்றது.
கட்டுரையாசிரியர்: அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி), பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.