இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், ரஹிமஹுல்லாஹ் (2)
இமாம் அஹ்மதின் நிலைப்பாடுகள்
இமாம் அஹ்மதின் காலத்தில் முஃதஸிலாக்கள் உட்பட மற்றும் பல இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகள் பல்வேறு சன்மார்க்கப் பிரச்சினைகளை எழுப்பி அவை தொடர்பான வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன. ஈமானின் உண்மை நிலை, கழா கத்ரும் மனிதனது சிந்தனை செயல் சுதந்திரமும், பாவங்களும் ஈமானில் அவை ஏற்படுத்தும் தாக்கமும், பெரும் பாவி பற்றிய நிலைப்பாடு, அல்குர்ஆன் படைக்கப்பட்டமை, மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணுதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் உட்பட அல்லாஹ்வின் பண்புகளுடன் தொடர்பான கருத்துக்கள் முதலியனவும் இக்காலத்தில் அலசப்பட்ட பிரதான, நம்பிக்கை சார்ந்த சன்மார்க்கப் பிரச்சினைகளாகும்.
இப்பிரச்சினைகள் பற்றி இமாம் அஹ்மத் குர்ஆன், ஸுன்னா, தூய இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்கள் ஆகியவற்றின் ஒளியில் தூய இஸ்லாமிய நிலைப்பாடுகளை முன்வைத்தார். தற்கால தூய இஸ்லாமிய சிந்தனையின் பின்னணியைப் புரிந்து கொள்வதற்கு அதன் முன்னோடிகளில் ஒருவரான இமாம் அஹ்மதின் இந்நிலைப்பாடுகளை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும். எனவே, அந்நிலைப்பாடுகள் கீழே சுருக்கமாக விளக்கப்படுகின்றன.
ஈமானின் உண்மை நிலை
இமாம் அஹ்மத் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகள் மத்தியில் பெரும் சர்ச்சைக்கு உற்பட்ட விடயங்களில் ஒன்றாக ஈமானின் உண்மை நிலை பற்றிய பிரச்சினை அமைந்திருந்தது. ஜஹ்மியாக்கள் ஈமான் என்பது அறிவாகும். செயலும் கட்டுப்பாடும் ஈமானுக்கு நிபந்தனையாக அமைவதில்லை என்று கருதினர்.
முஃதஸிலாக்கள் செயல்களை ஈமானின் ஓர் அங்கமாகக் கருதியதுடன் பெரும் பாவங்களில் ஈடுபடுபவர் கலிமாவை மொழிந்தவராக இருப்பினும் அவர் முஃமினாக இருக்க மாட்டார் அதேவேளையில் காபிராகவும் இருக்க மாட்டார். மாறாக இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட மூன்றாவது ஒரு நிலையில் இருப்பார் என்று கூறினர்.
கவாரிஜ்களோ செயல் ஈமானின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருப்பதோடு பாவங்களில் ஈடுபடுபவர் ஈமானை இழந்து காஃபிராகி விடுவார் என்று கூறினர்.
ஈமான் தொடர்பான மேற்குறித்த நிலைப்பாடுகள் அனைத்தும் குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறைக்கு முரணானவையாக இருப்பதாக இமாம் அஹ்மத் கண்டார்.
ஈமானின் யதார்த்தம் பற்றிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் நிலைப்பாட்டை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில விளக்கினார். “ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது கூடக்கூடியதும் குறையக் கூடியதுமாகும்” என்பது இமாம் அஹ்மதின் விளக்கமாக இருந்தது.
ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது கூடக் கூடியதும் குறையக் கூடியதும் ஆகும். எல்லா நன்மைகளும் ஈமான்பாற்பட்டதாகும். பாவங்கள் ஈமானில் குறைவை ஏற்படுத்தக் கூடியனவாகும். ஈமான் என்பது சொல்லும் செயலும் ஆகும். அது கூடக் கூடியதும் குறையக் கூடியதும் ஆகும். நன்மை செய்தால் அது கூடும். பாவம் செய்கின்றபோது அது குறையும்.
இந்நிலையில் ஒருவர் ஈமானிலிருந்து இஸ்லாத்திற்குச் செல்கின்றார். தௌபா செய்கின்றபோது மீண்டும் ஈமானுக்குத் திரும்புவார். ஷிர்க் வைத்தல், அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் ஒன்றை நிராகரித்தல் ஆகியவையே ஒருவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும். ஒருவர் ஒரு சன்மார்க்கக் கடமையை பொடுபோக்கினால் அல்லது சோம்பலினால் நிறைவேற்றாது விட்டு விட்டால் அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் விடப்பட்டவராவார். அவன் நாடினால் அவனைத் தண்டிப்பான் நாடினால் மன்னிப்பான்.
இமாம் அஹ்மதின் கருத்துப்படி ஈமான், இஸ்லாம், குஃப்ர் ஆகிய மூன்று உண்மைகள் இருக்கின்றன. இஸ்லாம் என்பது ஈமானுக்கும் குப்ருக்கும் இடைப்பட்டதாகும். பாவம் செய்தவர் முஃமினாக இருக்க மாட்டார். ஆனால், முஸ்லிமாக இருப்பார். இங்கு இமாம் அஹ்மத் முஃதஸிலாக்களின் நிலைப்பாட்டிற்கு அண்மித்த போதும் மீண்டும் செய்த நிலையில் மரணிப்பவர் நரகில் நிலையாக இருந்து வேதனை செய்யப்படுவார் என்று கூற, இமாம் அஹ்மத், அவ்வாறன்று இத்தகையோரை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான் என்று விளக்குகின்றார்.
பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்
பெரும்பாவத்தில் ஈடுபட்டவர் பற்றிய தீர்ப்பிலும் இக்காலத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவின. கவாரிஜ்கள் அவர்களை காபிர் எனக் கருதினர். முஃதஸிலாக்கள் காபிரும் முஃமினும் அல்லாத மூன்றாம் நிலையில் வைத்து நோக்கினர். பாவங்கள் ஈமானில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முர்ஜியாக்கள் கருதினர். இந்நிலையில் இமாம் அஹ்மத் இது பற்றிய இஸ்லாமியக் கொள்கையை முன்வைத்தார்.
ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எவரையும் அவர்கள் பெரும்பாவங்களில் ஈடுபட்டாலும் காபிர் எனக் கூற முடியாது. கலிமாவை மொழிந்து அதனை ஏற்று நம்பியோர் பாவங்களின் காரணமாக நரகில் நிலையாக வேதனை செய்யப்பட மாட்டார்கள். மாறாக, அவர்கள் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான் நாடினால் வேதனை செய்வான் என்பது இமாம் அஹ்மதின் நிலைப்பாடாக இருந்தது.
முன்னேற்பாடும் நிர்ணயமும்
கதரியாக்கள் மனிதன் பூரண சிந்தனைச் சுதந்திரத்தையும் செயற் சுதந்திரத்தையும் பெற்றவன் அவன் எல்லாச் செயல்களிலும் தனது சுய சக்தியால் ஈடுபடுகின்றானே அன்றி இறை சக்தியால் அல்ல. அல்லாஹ் பாவங்களை நாடமாட்டான். எனவே, அவன் நாடாத எதனையும் ஏவவும் மாட்டான் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இவர்களின் நோக்கில் நாட்டமும் ஏவலும் ஒன்றறோடொன்று பின்னிப் பிணைந்தவையாகும். ஒன்றில்லாத இடத்தில் மற்றையது இருக்காது.கதரிய்யாக்களின் கழா கத்ர் தொடர்பான மேற்குறித்த கருத்து இஸ்லாமிய அகீதாவுக்கு முரணானது என இமாம் அஹ்மத் கண்டார். அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவன். பிரபஞ்சத்தில் அல்லாஹ் நாடாத எதுவும் நடப்பதில்லை எல்லாம் அவனது நாட்டத்தினாலும் சக்தியினாலுமே நடைபெறுகின்றன என்ற அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கருத்தை இமாம் அஹ்மத் வலியுறுத்தினார்.
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்நாள் முடியும் வரை கொண்டிருந்த நிலைப்பாடு யாதெனில், அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்று அதற்குக் கட்டுப்பட்டு அவனது முடிவை பொறுமையுடன் அங்கீகரித்து அல்லாஹ் ஏவியதை ஏற்று விலக்கியதை விட்டும் தூரமாகி அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் செயற்பட்டு நன்மை தீமை எல்லாம் அவனது ஏற்பாட்டின்படியே நடைபெறுகின்றன என்பதை நம்பி சன்மார்க்க விடயங்களில் தர்க்க குதர்க்கங்களையும் வாதப் பிரதிவாதங்களையும் தவிர்த்து நடந்து கொள்ளல் வேண்டும் என்பது தாபிஊன்கள், இமாம்கள், புகஹாக்களை உள்ளடக்கிய எழுபது பேரின் ஏகோபித்த முடிவாகும்.
இமாம் அஹ்மதின் மேற்குறிப்பிட்ட கருத்து, கழா கத்ர் பற்றிய அவரது நிலைப்பாட்டை விளக்குகின்றது. கழா கத்ர் விடயத்தில் அதனைப் பூரணமாக ஏற்று நம்புதல் வேண்டும். இது விடயத்தில் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது கூடாது என்பது மேற்குறித்த கருத்திலிருந்து புலப்படுகின்றது.
அல்லாஹ்வின் பண்புகள்
அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் எல்லாப் பண்புகளையும் ஏற்று நம்பும் நிலைப்பாட்டில் இமாம் அஹ்மத் இருந்தார். நாடுபவன் யாவற்றையும் அறிந்தவன் ஞானமுள்ளவன் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கமுள்ளவன். அவனைப் போல் எதுவும் இல்லை என்பது அவரின் நம்பிக்கையாக அமைந்தது.
அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றிய இமாம் அஹ்மதின் கொள்கையை, ஸிபாத் பற்றிய ஹதீஸ்கள் தொடர்பாக அவர் கூறும் பின்வரும் கருத்து நன்கு விளக்குகின்றது:
“இந்த ஹதீஸ்களை நாம் வந்துள்ளபடி அறிவிப்போம். அதாவது, அல்லாஹ்வின் ஸிபாத்களை உள்ளதை உள்ளவாறு ஏற்று நம்புதல் வேண்டும். அவற்றின் யதார்த்தத்தை ஆராய்தல் ஆகாது. அவற்றுக்கு விளக்கம் கொடுப்பது ஸுன்னாவுக்கு முரணானதாகும்” என்பது இமாம் அஹ்மத் அவர்களின் நிலைப்பாடாகும்.
மேலும் அல்லாஹ் ஆரம்பமற்ற பூர்வீகமானவனாக இருப்பது போலவே அவனது பண்புகளும் பூர்வீகமானவையாகும். அவனது பேச்சு (கலாம்) என்ற பண்பும் அத்தகையதே என்பதை அவர் வலியுறுத்தினார்.
அல்லாஹ்வுடைய பேச்சு என்ற பண்புடன் தொடர்பானதே அல்குர்ஆன் படைக்கப்பட்டது சம்பந்தமான சர்ச்சையுமாகும். குறித்த சர்ச்சையைக் கிளப்பியவர்கள் முஃதஸிலாக்களாவர். இவர்கள் “அல்லாஹ் மட்டுமே பூர்வீகமானவன் (கதீம்) அவனல்லாத அனைத்தும் புதிதாக உருவானவையும் படைக்கப்பட்டவையுமாகும். இந்த வகையில் அல்குர்ஆனும் அல்லாஹ்வின் படைப்பிலேயே அடங்கும்” என்ற வாதத்தினை முன்வைத்தனர்.
ஆனால், இமாம் அஹ்மத் இந்த புதுமையான விளக்கத்தை கடுமையாக ஆட்சேபித்தார். அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாகும் அது படைக்கப்பட்டதென்று படைக்கப்படாததென்று கூறலாகாது. இத்தகையதொரு பிரச்சினையைக் கிளறுதல் பித்அத் (புதுமை) ஆகும். ஏனெனில், நபியோ அவர்களின் தோழர்களோ இது பற்றி எதுவும் பேசவில்லை என்ற நிலைப்பாட்டில் ஆரம்பத்தில் இருந்த இமாம் அஹ்மத், முஃதஸிலாக்கள் அல்குர்ஆன் படைக்கப்பட்டதே என்ற கொள்கையை தீவிரமாக வலியுறுத்தவே இது பற்றி ஒரு தெளிவான கருத்தை முன்வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்காளானார். இந்நிலையில் அல்லாஹ் பூர்வீகமானவனாக இருப்பது போலவே அவனது பண்புகளும் பூர்வீகமானவையாகும். இந்தவகையில் அவனது பண்புகளில் ஒன்றான பேச்சும் பூர்வீகமானதேயன்றி படைக்கப்பட்டதல்ல என்ற கருத்தை இமாம் அஹ்மத் முன்வைத்தார்.
மறுமையில் அல்லாஹ்வைக் காணுதல்
இமாம் அஹ்மதின் காலத்தில் அலசப்பட்ட மற்றொரு சன்மார்க்கப் பிரச்சினை, மறுமையில் அல்லாஹ்வை அடியார்கள் காணுவதுடன் தொடர்புடையதாகும். முஃதஸிலாக்கள் மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்ற கருத்தை முன்வைத்தனர். பார்ப்பதற்கு ஸ்தூலம் தேவைப்படுகின்றது அல்லாஹ்வுக்கு ஸ்தூலம் இருப்பதாகக் கொள்வது அவனை சிருஷ்டிகளுக்கு ஒப்பிடுவதாக அமையும் என்று கூறினர். மேலும் அல்லாஹ்வை மறுமையில் காண்பது தொடர்பான அல்குர்ஆன் வசனங்களுக்கு அவர்கள் வேறு விளக்கங்களைக் கொடுத்தனர்.ஆனால், இமாம் அஹ்மதோ குர்ஆன், ஸுன்னா சட்ட வசனங்களை ஆரம்ப கால தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழியில் அப்படியே எதுவித விளக்கமும் கூறாமல் ஏற்று நம்புதல் வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் அல்லாஹ்வை மறுமையில் காணும் விடயத்தை முழுமையாக விசுவாசித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அவர் பின்வருமாறு விளக்குகின்றார்:
“மறுமையில் அல்லாஹ்வைக் காண்பதை நம்புவது ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ரப்பைக் கண்டார்கள் என்பதும் நம்பகமான ஹதீஸ்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை அதன் வெளிப்படையான கருத்தில் நாம் நோக்குவோம். அது பற்றி விவாதிப்பது பித்அத் ஆகும். எனவே, இது விடயமாக எவரிடமும் நாம் விவாதிக்கப் போவதில்லை.”
அல்லாஹ்வைக் காண்பதை இமாம் அஹ்மத் உறுதி செய்த போதிலும் அதன் அமைப்பு பற்றியோ உண்மை நிலை பற்றியோ எதுவும் குறிப்பிடாதது மாத்திரமன்றி அத்தகைய ஆய்வில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டதாகும் என்றும் விளக்குகின்றார். இங்கு அவர் அல்லாஹ்வை மறுமையில் காண்பதை முற்றாக மறுக்கும் முஃதஸிலாக்களுக்கும் அல்லாஹ்வுக்கு ஓர் உருவத்தையும் இடத்தையும் கற்பிக்கும் அளவுக்கு படைப்புகளை நாம் காண்பது போல அவனைக் காணலாம் என்று கூறிய முஜஸ்ஸிமாக்களுக்கும் மத்தியில் இமாம் அஹ்மத் ஓர் இடைப்பட்ட மூன்றாம் நிலைப்பாட்டை எடுத்தமையைக் காண முடிகின்றது.
இக்காலப் பிரிவில் மெய்யியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்ட பிரதான சன்மார்க்க, நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் பற்றி இமாம் அஹ்மதின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதே இதுவரை நோக்கப்பட்டன. இவை இமாம் அஹ்மதின் சன்மார்க்க அணுகுமுறையை எடுத்துக்காட்டப் போதுமானவையாகும்.
இவர் இரண்டு பிரதான அடிப்படைகளில் தனது கொள்கைகளை வகுத்துக் கொண்டார் என்பது தெளிவாகின்றது. அவையாவன:
• ஏக மூலாதாரமாக சட்ட வசனங்களைக் கொள்ளுதல், அவற்றுக்கு வலிந்து எத்தகைய விளக்கமும் கொடுக்காமல் அவற்றை வெளிப்படையான கருத்தில் நேரடியாக விளங்குதல்.
• குர்ஆன், ஸுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வுக்குரிய ஸிபாத்துக்களை அப்படியே ஏற்று நம்புதல், அல்லாஹ் அவனது படைப்புகளில் ஒன்றுக்கு ஒப்பாகும் நிலையைத் தவிர்த்தல்.
இமாம் அஹ்மதின் பிக்ஹு கண்ணோட்டம்
பிற்பட்ட கால தூய இஸ்லாமிய சிந்தனையைப் புரிந்து கொள்வதற்கு அதன் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இமாம் அஹ்மதின் அகீதா தொடர்பான நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது அவசியமானது போலவே அவரின் பிக்ஹுக் கண்ணோட்டத்தையும் விளங்கிக் கொள்வது முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இமாம் அஹ்மத் அகீதாவைப் போலவே பிக்ஹுத் துறையிலும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையையே கடைபிடித்தார். இதனாலேயே பிற்பட்ட காலத்தில் தூய இஸ்லாமிய அகீதாவுக்கு புத்துயிர் அளித்தவர்களான இப்னு தைமியா, இப்னுல் கையிம், முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் முதலானோர் இமாம் அஹ்மதின் அகீதா சார்ந்த நிலைப்பாடுகளுடன் பிக்ஹுக் கண்ணோட்டங்களையும் ஏற்றுப் பின்பற்றினர். இதன் காரணமாகவே இவர்கள் மத்ஹபைப் பொறுத்த வரையில் ஹன்பலிகளாகக் கருதப்படுகின்றனர்.
இமாம் அஹ்மத் ஒரு முஹத்திஸேயன்றி ஒரு பகீஹ் அல்ல என்ற கருத்து சில ஆய்வாளர்களால் வலியுறுத்தப்பட்ட போதிலும் அவர் ஏக காலத்தில் ஒரு முஹத்திஸாகவும் பகீஹாகவும் இருந்தார் என்பதே உண்மையாகும்.
அப்துல் வஹ்ஹாப் அல்வர்ராக் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“நான் அஹ்மத் இப்னு ஹன்பலைப் போன்று எவரையும் கண்டதில்லை. அவரிடம் அறுபதாயிரம் சட்டப் பிரச்சினைகள் கேட்கப்பட்டன. அவை அனைத்துக்கும் ஷஹத்தஸனா | (எங்களுக்குக் கூறினார்,) ஷஅஹ்பரனா| (எங்களுக்கு அறிவித்தார்) என்றே பதிலளித்தார்.”இக்கருத்திலிருந்து இமாம் அஹ்மதின் பிக்ஹைப் பற்றி இரு பெரும் உண்மைகள் தெரிய வருகின்றன. அவையாவன:
• இமாம் அவர்கள் பெருந்தொகையான சட்டப் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளித்துள்ளமை அவை அறுபதாயிரம் எனக் கூறப்பட்டிருப்பது சிலவேளை மிகைப்படக் கூறப்பட்டதாக இருப்பினும், இமாம் அஹ்மத் தன் காலத்து மக்களால் மிகவும் நம்பப்பட்டு, மதிக்கப்பட்ட காரணத்தினால் உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்காண மக்கள் அவரை அணுகி பெருந்தொகையான பிரச்சினைகளை முன்வைத்து அன்னாரிடமிருந்து சட்டத் தீர்ப்புகளை பெற்றுச் சென்றமை ஒரு வரலாற்று உண்மையாகும்.
• இமாமவர்களின் பிக்ஹு சட்டத் தீர்ப்புக்கள் ஹதீஸ்களையும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்தமை. இதனால்தான் இமாம் அஹ்மத் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கும்போது ஷஹத்தஸனா | அல்லது ஷஅஹ்பரனா| என்று ஆரம்பிப்பார் என அப்துல் வஹ்ஹாப் அல் வர்ராக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.