இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், ரஹிமஹுல்லாஹ் (3)
ஹதீஸ் துறை
இமாம் அவர்களுக்கு இல்முல் றிவாயா எனும் ஹதீஸ் அறிவுப்புக் கலையில் அற்புதமான அறிவு இருந்தது. அது போலவே ஸஹாபாக்களின் தீர்ப்புக்களையும் அதிகம் அறிந்து வைத்திருந்தார். மேலும் தாபிஊன்களின் கருத்துக்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எனவே, சட்டத் தீர்ப்புகளின்போது சட்ட வசனங்களையும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளையும் துணையாகக் கொள்வது அவருக்கு இலகுவானதாக இருந்தது.
பொதுவாக இமாம் அஹ்மத் தனது தீர்ப்புகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவையே முதலில் நாடுவார் அடுத்த நிலையில் ஸஹாபாக்களின் தீர்ப்புக்களை அணுகுவார். இதற்கு அடுத்த நிலையில் தாபிஊன்களின் கருத்துக்களைக் கவனத்திற் கொள்வார். சிலபோது பிற்பட்ட கால மாலிக், அவ்ஸாயி போன்ற பிரபல புகஹாக்களின் கருத்துக்களையும் நோக்குவதுண்டு.
சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இமாம் அவர்கள் கைக்கொண்ட குறித்த அணுகுமுறையானது, அவர் தான் சுயமாக முடிவுகளைச் சொல்வதைத் தவிர்த்து தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழியில் நிற்பதில் எவ்வளவு தூரம் கண்டிப்பாக இருந்தார் என்பதைக் காட்டுகின்றது.
தனது ஃபிக்ஹானது சன்மார்க்கத்தில் பித்ஆக்கள் தோன்றுவதற்கு எவ்வகையிலும் துணை நிற்கக் கூடாது என்பதனை உத்தரவாதப்படுத்துவதற்காக ஷஅல் ஃபிக்ஹுத் தக்தீரி| எனும் சட்டப் பிரச்சினைகளை ஊகித்து கற்பனை செய்து அவற்றுக்கு சன்மார்க்கத் தீர்ப்புகளைக் கூறும் அமைப்பைத் தவிர்த்தார். இதனால் அதுவரை நடக்காத ஒரு பிரச்சினைக்கோ நடைமுறையில் இல்லாத பிரச்சினைக்கோ தீர்ப்புச் சொல்ல இமாம் அஹ்மத் தயாராக இருக்கவில்லை.
இமாம் அஹ்மத் தனது ஃபிக்ஹை சட்ட வசனங்களுடனும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களுடனும் சுருக்கிக் கொண்டமையை வைத்து அவரது பிக்ஹை தேக்கமுற்ற ஒன்றாகவும் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பற்ற ஒன்றாகவும் கருதுவது பிழையானதாகும். ஏனெனில், அவர் இபாதத்துகளிலேயே (வணக்க வழிபாடுகள்) ஷநஸ்| எனும் சட்ட வசனங்களிலும் ஸஹாபாக்களின் முன்மாதிரிகளிலும் சார்ந்து நிற்கின்றார்.
இபாதத்துகளில் சொந்த ஆய்வுகளுக்கோ ஒப்புவமைகளுக்கோ இடமில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். ஆயினும், முஆமலாத் எனும் கொடுக்கல்வாங்கல் முதலான லௌகிக விவகாரங்களில் இமாம் அஹ்மதின் நிலைப்பாடு மிகவும் பரந்ததாகவும் நெகிழ்வு கொண்டதாகவும் அமைந்தது. அடிப்படையில் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையும் செல்லுபடியானவையுமாகும். ஒன்றை விலக்குவதாயின் அதற்கு உறுதியான ஷநஸ்| ஆதாரம் தேவை என்பது அவரின் கொள்கையாக அமைந்தது. இந்த வகையில் ஷரஃய்| எனும் சுய ஆய்வையும் கியாஸ் எனும் ஒப்புவமை காணலையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த பிற மத்ஹபுகளைவிட முன்னோர் வழிமுறையில், பாரம்பரிய அமைப்பில் நின்று உருவான ஹன்பலி மத்ஹப் மிகவும் விரிந்ததாகவும் தாராளத்தன்மை பெற்றதாகவும் விளங்கியது.
‘நஸ்ஸோ’, ‘அஸரோ’ கிடைக்காதபோது ‘மஸ்லஹா’ எனும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு இமாம் அஹ்மத் தீர்ப்புகள் வழங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஷமஸ்லஹா|வை சட்டத் தீர்ப்புகளின்போது கவனத்திற் கொள்ள முடியும் என்பதற்கு ஷரீஆ ஆதாரங்கள் இருப்பதை இமாம் அஹ்மத் நன்கு புரிந்து வைத்திருந்தார். ஆயினும், இமாம் மாலிக் மஸ்லஹாவுக்குக் கொடுத்த அழுத்தத்தை இவர் அதற்கு வழங்கவில்லை. நஸ்ஸுக்கு முன்னால் அவற்றுக்கு சரிசமமாக மஸ்லஹாவைக் கருதுவதை இமாம் அஹ்மத் சரிகாணவில்லை.ஹன்பலி பிக்ஹானது அஷ்ஷராஇஃ என்ற மூலாதாரத்தையும் கூடியளவு கவனத்திற் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது இலக்குகள், முடிவுகளுக்கு வழங்கும் தீர்ப்பை அவற்றை அடைவதற்கான வழிகள், முறைகள், காரணிகள் ஆகியவற்றுக்கும் வழங்கும் நிலைப்பாட்டை ஹன்பலி மத்ஹப் கொண்டுள்ளது. இது இம்மத்ஹப் வளமிக்கதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் விளங்க பெரிதும் துணை புரிந்துள்ளது.
எனவே, ஹன்பலி ஃபிக்ஹு என்பது பாரம்பரிய முன்னோர் வழிமுறை சார்புடைய ஒரு சிந்தனை மரபாக இருப்பினும் அதற்கு அடிப்படையாக அமைந்த வேறுபட்ட மூலாதாரங்களின் காரணமாக ஒரு பக்கத்தில் தன் முதற்தன்மை வாய்ந்ததாக அமைந்தாலும் மறுபக்கத்தில் உடனிகழ்வுத் தன்மையுடையதாகவும் விளங்குகின்றது என்ற முடிவு பெறப்படுகின்றது.
ஹன்பலி பிக்ஹின் சட்ட மூலாதாரங்கள்
ஹன்பலி பிக்ஹின் பொதுக் கண்ணோட்டங்களும் சட்ட அணுகுமுறைகளும் மேலே விளக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட விளக்கத்தின் ஒளியில் இமாம் அஹ்மத் சட்ட மூலாதாரங்களாகக் கொண்டவை எவை என்பது கீழே நோக்கப்படுகின்றது.
இமாம் அஹ்மத் தனது சன்மார்க்கத் தீர்ப்புகளுக்கு ஐந்து மூலாதாரங்களை துணையாகக் கொண்டார் என இமாம் இப்னுல் கையிம் குறிப்பிடுகின்றார். அவையாவன:
01. நஸ்ஸுகள்: இவை குர்ஆன், ஸுன்னா சட்ட வசனங்களைக் குறிக்கும். ஷநஸ்| இருக்கும்போது அதனை அடிப்படையாகக் கொண்டே இமாம் அஹ்மத் தீர்ப்புகளை வழங்குவார். நஸ்ஸுக்கு முன்னால் ஸஹாபாக்களின் (நபித் தோழர்கள்) தீர்ப்புகளை அவர் பொருட்படுத்துவதில்லை.
02. ஸஹாபாக்கள் (நபித் தோழர்களது) தீர்ப்புகள்: ஒரு விடயத்தில் ஸஹாபாக்களில் ஒருவருடைய தீர்ப்பு காணப்படும்போது அதற்கு முன்னால் மற்றொருவரின் ரஃயையோ, விளக்கத்தையோ இமாம் அஹ்மத் அலட்டிக் கொள்வதில்லை.
03. ஒரு சட்டப் பிரச்சினை தொடர்பாக ஸஹாபாக்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவி முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டால் அவற்றுள் குர்ஆன், ஸுன்னாவுக்கு மிக நெருக்கமான கருத்தை இமாம் அஹ்மத் தெரிவு செய்வார்.
04. மேற்குறித்த சட்ட மூலாதாரங்களில் ஒரு பிரச்சினைக்கான தீர்வு காணப்படாதபோது முர்ஸல், ழஈப் வகை ஹதீஸ்களை நாடுவது இமாம் அஹ்மதின் நிலைப்பாடாகும். இத்தகைய பலவீனமான ஹதீஸ்களை கியாஸை விட பலமானதாக அவர் கருதினார். பலவீனமான (ழஈப்) ஹதீஸ்கள் எனும்போது நிராகரிக்கத்தக்க கடும் பலவீனமான ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் கொண்டார் என்று கொள்ளலாகாது. ஏனெனில், அவர் ழஈப் ஆன ஹதீஸ்களில் கடும் பலவீனத்தைக் கொண்ட ஹதீஸ்களை நிராகரித்தார் என்பதே உண்மையாகும்.
05. கியாஸ்: நஸ்ஸு, ஸஹாபாக்களின் தீர்ப்பு, முர்ஸல், ழஈப் ஆகிய எதுவுமே காணப்படாத வேளையில் இமாம் அஹ்மத் கியாஸை (ஒப்புவமை காணல்) அணுகி ஒரு பிரச்சினைக்கான சட்டத் தீர்ப்பைக் காண்பதற்கு முயல்வார். இது பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:
“நான் கியாஸைப் பற்றி இமாம் ஷாஃபியிடம் வினவினேன். அதற்கு அவர் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலேயே அது நாடப்படும்” என்றார்.
இவ்வாறு கியாஸுக்கு குறைந்த முக்கியத்துவத்தை இவர் வழங்கியமைக்கு இரு பிரதான காரணங்கள் கூறப்படுகின்றன:
• இவர் இஜ்திஹாதில் தூய இஸ்லாமிய வழிமுறையைப் பேணுபவராக இருந்தமை. இதனால் முடியுமானவரை நஸ்ஸுடன் நின்றுவிட இவர் முயன்றார். நிர்ப்பந்தங்களின்போதே கியாஸை நாடினார்.
• இவரிடம் போதுமானளவு நஸ்ஸுகள் இருந்தமை. ஹதீஸ் துறையில் புலமை பெற்றவராக இவர் இருந்ததனால் பெருந்தொகையான ஹதீஸ்களை இவர் அறிந்து வைத்திருந்தார்.
இவற்றுடன் மேலே விளக்கப்பட்டவாறு மஸ்லஹா (நலன்), ஷராஇஃ (இலக்குகளுக்கு இட்டுச் செல்லும் வழிகள்) ஆகியவற்றையும் இமாம் அஹ்மத் தேவைகளின்போது தனது சட்ட ஆய்வுகளுக்கு துணையாகக் கொண்டுள்ளார்.
இஜ்மாஃ (ஏகோபித்த முடிவு)வைப் பொறுத்தவரை இமாம் அஹ்மத் ஸஹாபிகளின் இஜ்மாவை மட்டுமே ஏற்றுக் கொண்டமை அவதானிக்கப்படுகின்றது.
ஸஹாபாக்களை அடுத்து வந்த காலங்களில் இஜ்மாஃ அடிப்படையிலான முடிவுகள் பெறப்படுவது சாத்தியமில்லை என்று அவர் கண்டமையே இந்நிலைப்பாட்டுக்குக் காரணமாகும்.
இஜ்மாஃ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்து உலமாக்கள் ஒரு மார்க்க விடயத்தில் ஏகோபித்த நிலைப்பாட்டைக் கொள்வதாகும். இந்த வகையில் ஒரு காலத்து உலமாக்கள் அனைவரையும் இனங்காண்பதும் குறித்த விடயம் தொடர்பாக அவர்கள் அனைவரது கருத்துக்களையும் அறிவதும் சாத்தியமற்றது என அவர் கருதினார்.
பொதுவாக இமாம் அஹ்மத் தனது ஃபிக்ஹுக்கு அடிப்படையாகக் கொண்ட சட்ட மூலாதாரங்களை நோக்கும்போது அவை அனைத்தும் பெயரளவில் வேறுபட்டாலும் இறுதியில் ஸுன்னாவில் போய் நிற்பதைக் காண முடியும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நஸ்ஸின் ஆதிக்கமே இவரது பிக்ஹில் காணப்படுகின்றது.
இந்த வகையில் இவரது ஃபிக்ஹானது தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. நேரடியாக இஜ்திஹாதில் ஈடுபட்ட விடயத்திலும் சரி, பிறரிடமிருந்து பெற்றுக் கூறிய தீர்ப்புகளிலும் சரி தூய இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கின் ஒளியே அவை அனைத்திலும் பளிச்சிட்டன. அவரின் இவ்வணுகுமுறை அவரது பிக்ஹை தேக்கமிக்கதாக ஆக்கவில்லை. மாறாக, அதனை வளம்மிக்கதாகவும் ஒளிமிக்கதாகவுமே அமைத்தது.
முடிவாக, இமாம் அஹ்மதின் அகீதா வழிமுறையும் பிக்ஹு சிந்தனையும் தொடர்ந்து வந்த தூய இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளுக்கும் சிறந்த முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தன என்பது ஒரு பேருண்மையாகும்.
இமாம் அஹ்மத் – வாழ்க்கைச் சுருக்கம்
அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் அஷ்ஷைபானி என்பது இவரது முழுப் பெயராகும். இவர் ஹிஜ்ரி 164ல் (கி.பி.780) பக்தாதில் பிறந்தார். இமாம் அஹ்மத் அரபுப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது கோத்திரமான ஷைபானி வீரத்திற்கும் தியாகத்திற்கும் பேர்போனதாகும். பிரபல இஸ்லாமியத் தளபதி அல்முஸன்னா பின் ஹாரிதா இக்கோத்திரத்தைச் சேர்ந்தவராவர். இவரது குடும்பம் ஆரம்பத்தில் பஸராவிலும் பின்னர் குராஸானிலும் குடியேறி வாழ்ந்தபோதிலும் அஹ்மத் இப்னு ஹன்பல் பிறக்கும்போது பக்தாதில் வந்து குடியேறியிருந்தது. இமாம் அஹ்மத் இளமையிலேயே தந்தையை இழந்ததால் தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார்.
அன்று பக்தாத் உலகின் அறிவுத்துறை கேந்திரமாக விளங்கியது. அங்கு இக்காலத்தில் பல்துறை சார்ந்த மேதைகள் இருந்தார்கள். இமாம் அஹ்மதுக்கு ஷரீஆத் துறையிலேயே நாட்டம் ஏற்பட்டது. அன்று ஈராக்கில் ஷரீஆ சார்ந்த கலைகளைக் கற்பதற்கு இரு வழிமுறைகள் இருந்தன. ஹதீஸ் அறிவிப்பை விட சட்டத் தீர்ப்புகளைக் கண்டறிவதில் கூடிய ஈடுபாடு காட்டிய அஹ்லுர் ரஃயி என்றழைக்கப்பட்ட சட்டத்துறை அறிஞர்கள் புகஹாக்களின் வழிமுறை, சட்டத் தீர்ப்புகளைக் கண்டறிவதில் காட்டிய ஆர்வத்தை விட ஹதீஸ் அறிவிப்பு, மனனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த முஹத்திஸீன்களின் (அஹ்லுல் ஹதீஸ்) வழிமுறை ஆகிய இரண்டுமே அவையாகும்.
இமாம் அஹ்மத் இரண்டாம் வழிமுறையைத் தெரிவுசெய்து கொண்டார். ஆரம்பத்தில் சுமார் ஏழு வருடங்கள் பக்தாத் வாழ் உலமாக்களிடம் ஹதீஸ் கலையைக் கற்றுக் கொண்ட அவர் பின்னர் பஸரா, கூபா, மக்கா, மதீனா, ஷாம், யமன் முதலான பிரதேசங்களுக்கும் சென்று அங்கிருந்த உலமாக்களிடம் கல்வி கற்றார். இமாம் ஷாஃபிஈ ஹிஜாஸிலிருந்து பக்தாதுக்குச் சென்றபோது அவரும் அங்கு சென்று அன்னாரின் அறிவினால் பயன் பெற்றார்.
இமாம் அஹ்மத் தனது நாற்பதாவது வயதில் ஹதீஸ், ஃபிக்ஹுக் கலைகளைப் போதிப்பதில் ஈடுபடலானார். இக்காலத்தில் ஹதீஸ் கலையின் தலைமைத்துவம் இவரது கரங்களில் இருந்தது என்பர். இவரது புகழ் பக்தாதில் மட்டுமன்றி உலகின் ஏனைய பாகங்களுக்கும் பரவியது. உலகின் பல பிரதேசங்களிலிருந்தும் இவரிடம் கல்வி கற்பதற்காக மாணவர்கள் பெருந் தொகையில் வந்தனர். இவரது வகுப்புகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களது தொகை சுமார் ஐயாயிரமாக இருந்தது என சில அறிவிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் அஹ்மதை முன்னோடியாகக் கொண்டு உருவான ஹன்பலி மத்ஹப் சிரியா, பலஸ்தீனம், பாரசீகக் குடாப் பிரதேசங்கள் முதலான இடங்களில் ஆரம்பத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆயினும், நாளடைவில் அதன் வளர்ச்சி குன்றி விட்டது. இந்நிலையில் 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபின் இயக்கம் பரவியதைத் தொடர்ந்து அதனால் கவரப்பட்ட ஸஊதி நாட்டவர்கள் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றத் தொடங்கினர்.
இப்னு தைமியா, அப்துல் காதிர் ஜீலானி முதலான மேதைகளும் ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் அஹ்மத் முஃதஸிலாக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும் அதற்கெதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டதாலும் கலீபா மஃமூனின் காலத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். கலீபா முதவக்கில் பதவியேற்கும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குறிப்பாக, கலீபா முஃதஸிமின் ஆட்சியின்போது கடுமையாக இம்சிக்கப்பட்டார். இருபத்தெட்டு மாதங்கள் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டு கசையடியும் கொடுக்கப்பட்டார். கலீபா முதவக்கிலின் காலத்தில் இமாம் அவர்களை கலீபா கண்ணியப்படுத்தியதோடு அவர்களது வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்கினார். முஃதஸிலாக்களுக்கு மறுப்பளிப்பதற்கு கலீபாவினால் தெரிவு செய்யப்பட்ட உலமா குழுவிலும் அங்கம் பெற்றார்.
ஹிஜ்ரி 241ஆம் ஆண்டு (கி.பி. 855) இமாம் அஹ்மத் வபாத்தானார். இவரது ஜனாஸா நல்லடக்கத்தில் எட்டு இலட்சம் ஆண்களும் அறுபதாயிரம் பெண்களும் கலந்து கொண்டதாக வரலாறு கூறுகின்ளது. ஜாஹிலிய்யாக் காலத்திலோ அல்லது இஸ்லாத்தின்போதோ இத்தகையதொரு பெருங்கூட்டம் எச்சந்தர்ப்பத்திலாவது கூடியதாக நாம் அறிந்ததில்லை என இமாமவர்களின் ஜனாஸா ஊர்வலத்தைப் பற்றி அப்துல் வஹ்ஹாப் அல்வஸ்ஸாம் கூறுகின்றார்.
இமாம் அஹ்மத் எழுதிய நூல்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
01. அல்முஸ்னத்
02. கிதாப் அஸ்ஸுஹ்த்
03. கிதாப் அஸ்ஸலாத்
04. கிதாப் அல்மனாஸிக் அல்கபீர்
05. கிதாப் அல்மனாஸிக் அஸ்ஸகீர்
06. அத்தாரக்
07. அந்நாஸிஹ் வல்மன்ஸூஹ்
08. அல்முகத்தம் வல்முஅஹ்ஹர் பீ கிதாபில்லாஹ்
09. பழாஇலுஸ் ஸஹாபா
10. அர்ரத்து அலா ஸனாதிகா வல்ஜஹமிய்யா பீமா ஷக்கத் பீஹி மின் முதஷாபிஹில் குர்ஆன்
பொதுவாக இமாம் அஹ்மத் எழுத்தை விரும்பவில்லை. தனது ஃபத்வாக்கள்கூட தொகுக்கப்படுவதையோ பரவலாக நகர்த்தப்படுவதையோ விரும்பவில்லை. ஆயினும், ஹதீஸ்களை எழுதிக் கொள்வதை மட்டும் அவர் விரும்பவே செய்தார். அவரின் இந்நிலைப்பாட்டின் காரணமாக அவர் எழுதிய நூல்கள் மிகவும் குறைவானவையாகும். எழுதப்பட்டுள்ள நூல்களும் ஹதீஸ்களுடன் தொடர்பானவையாகவே பெரும்பாலும் அமைந்துள்ளன.
ஃபிக்ஹுத் துறையில் இவர் கைபட எழுதிய நூல்கள் எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். இவரது சட்டத் தீர்ப்புகளும் சன்மார்க்க நிலைப்பாடுகளும் பிற்பட்ட காலத்தில் இவரது பிள்ளைகளான ஸாலிஹ், அப்துல்லாஹ் உட்பட மற்றும் பல மாணவர்களால் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அதனாலேயே ஹன்பலி பிக்ஹை தொகுத்தவர்களின் பட்டியல் நீண்டதாகும். இவர்களுள் அபூ பக்ர் அல்கல்லால் என்பவர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்.
source: http://www.sheikhagar.org/articles/2-allarticles/331-ahmed-bin-hambal