வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும் (2)
அரை நூற்றாண்டுக்கு மேலாக உலக விவகாரங்களிலே கிஞ்சிற்றும் அக்கறை செலுத்தாத பள்ளிவாசலுக்குள் உலக விவகாரங்களைப் பேசினாலே நாற்பது நாள் செய்த அமல் போய்விடும் என்று கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டு செயல்வாதிகளாக இருந்த தப்லீக் இயக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னால் உலமா சபையை கைப்பற்றுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை.
இதுவும் கூட வரலாற்றுப் போக்கில் வஹாபியம் கொடுத்த அழுத்தம் காரணமாக தன்னைத் தக்கவைப்பதற்கு தப்லீக் தேடிக்கொண்ட புகலிடமாக உலமாசபை மாறுகின்றது. அப்போதுதான் அவர்கள் தம்முடைய நிகழ்ச்சி நிரலில் இல்லாத இலங்கை முஸ்லிம்கள் அரசியல், பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு முகம்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். அதற்குரிய முதிர்ச்சியும் அதனிடம் இருக்கவில்லை.
பொதுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநித்துவப்படுத்தும் உலமா சபைக்கு அத்தகைய புலமைச் சாகித்தியம் கொண்ட தலைமையே பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் பல்பண்பாட்டை புரிந்து கொண்ட ஆலிம்சாக்களை கணிசமாகக் கொண்டிருந்த ஒரு சூழலில் தெளிவில்லாத ஆலிம்கள் வந்தமரக்கூடிய இடமாக உலமா சபை மாறியமை இஸ்லாமிய புலமைத்துவத்தின் கையறு நிலையையும் நீண்டகாலமாக முஸ்லிம்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வஹாபிய பித்தலாட்டமுமே காரணம் என்பதை வரலாறு நிறூபித்துக் கொண்டிருக்கிறது.
ஆழமான இஸ்லாமிய புலமைத்துவவாதிகள் உலமா சபைக்கு வெளியே இருப்பது மட்டுமல்ல இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கும் வெளியேதான் இருக்கிறார்கள். இலங்கை அனுபவத்தில் பெரிய இஸ்லாமிய புலமைத்துவவாதிகளை திட்டமிட்டு உருவாக்கிய வரலாறுகளும் இல்லை. அவர்களாக சுயமாக வாசித்து பல்வேறு அனுபவ பட்டறிவுகளுடன் உருவாகிக் கொண்டால்தான். இறுக்கமான இயக்க கட்டமைப்புகளும் ஆழமான இஸ்லாமிய புத்திஜீவிகளை உள்வாங்கிக் கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மைகளும் இல்லாதிருப்பதே இதற்கான காரணமாகும்.
கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக தொடங்கப்பட்ட முஸ்லிம் அரசியல் இயக்கம் எவ்வாறு மேற்கில் பெருந்தேசிய வாதங்களுடன் அல்லது முஸ்லிம் மேட்டுக்குடி வர்த்தக சமூகங்களுடன் சராணகதி அடைந்ததோ அதே போன்றுதான் இலங்கை முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக் கட்டுக்கோப்பையும் பல்பாண்டுகளுக்கு மத்தியில் சகவாழ்வை மேற்கொள்வதற்கான காலத்துக்கேற்ற சமய சிந்தனைகளையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய இலங்கை உலமா சபை தொடர்ந்தும் மேற்குப் பகுதி ஆலிம்களாலேயே இதுவரை வழிநடாத்தப்படுகின்றது. இஸ்லாமிய யுத்த தர்மங்களையே ஒட்டுமொத்தமாக மறந்து கிழக்கில் என்னதான் இழப்புக்கள் இருந்தாலும் தொப்புள்கொடி உறவாக இருந்த தமிழ்-முஸ்லிம் உறவை அறுத்தெறியும் நடவடிக்கையாகவே உலமா சபை ஜெனீவா சென்று வக்காலத்து வாங்கியதையும் அதற்குப் பின்னால் இருக்கும் சமய சந்தர்ப்பவாத அரசியலையும் ஒதுக்கிவிட்டு எவ்வாறு பார்க்க முடியும்? இலங்கை முஸ்லிம்களின் மற்ற சமூகங்களின் எல்லா விடயங்களிலும் தொடர்ச்சியான ஊடாட்டம் இருந்து ஒரு முடிவை எடுப்பதற்கும் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநித்துவம் செய்கின்ற உலமாசபை போன்ற அமைப்பு திடீரென ஒரு தரப்புக்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
இன்று உலக அளவில் நடைபெற்று வரும் மாற்றங்களை விளங்கிக் கொள்வதிலும் உலமா சபை பின்னுக்குத்தான் நிற்கின்றது. இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசு சக்திகளுக்கு மத்தியில் ஒரு அதிகாரப் போட்டிக்குரிய களமாக எவ்வாறு மாறிவருகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை. சீனப் பொருளாதாரம், சீன-இலங்கை சமயத் தொடர்புகள், பௌத்த சமூகங்களுக்கு மத்தியில் அது உருவாக்கி வரும் சமயவாதங்கள் குறித்த விரிவான புரிதலுக்குரிய தளங்களையோ, வாதவிவாதங்களையோ, அவற்றுக்குரிய புத்திஜீவித்துவ மட்டங்களையோ இதுவரை உலமா சபை உருவாக்கிக் கொள்ளவுமில்லை.
இலங்கையின் மத்ரஸா வரலாறு கூட குறிப்பிட்ட இயக்கங்களின் சிந்தனைகளை விரிவாக்கம் செய்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மை புரியப்பட்டு பொதுத் தளத்திற்கான இஸ்லாமிய மத்ரஸா கலைத்திட்டத்தை உருவாக்கும் பணியிலோ அவற்றைப் பயில்நிலைக்கு கொண்டுவரும் நிலையிலோ இதுவரை உலமா சபை இயங்கவில்லை. உலமா சபையின் தலைமை மட்டுமல்ல, அதன் நிருவாகக் கட்டமைப்பு இலங்கையின் பல பாகங்களையும் உள்ளடக்கியதாக தகைமை, தலைமைக் காலம் வரையறுக்கப்பட்டு ஆலிம்களின் வாக்கெடுப்புக்கள் பரிந்துரைகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்படும் நிலையும் இதுவரை காணப்படவில்லை. உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் மிகவும் பொறுப்புவாய்ந்த சிவில் சமூகக் கட்டமைப்பு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அல்லது நகர்ப்புற மேட்டுக்குடி வலதுசாரி உலமாக்களின் ஆடுகளமாக மாறிவிடக்கூடாது.
இந்த ஹலால் கருத்தியலைக்கூட இதுவரை மிகச்சரியாக முன்வைத்து உரையாடவில்லை என்பதுதான் உண்மை. மனித ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய கோட்பாடுதான் ஹலால் என்பது. அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற ஒரு கும்பலை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்குவது நீண்டகாலத்தில் எத்தகைய துஸ்பிரயோகங்களை உருவாக்கிக் கொடுக்கும் என்பது ஒருபுறமிருந்தாலும் போர் முடிவுற்று நான்காண்டுகளுக்குப் பிறகும் அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்களை கருவறுக்க காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில் நாம் அறியாமல் உள்வாங்கி இருக்கும் வஹாபியத் தூய்மைவாதம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் காவுகொள்கின்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதே தற்போதைய இலங்கை நிலவரமாகும். நிருவாகக் கட்டமைப்பில், ராணுவத்தில், ஊடகத்துறையில், கல்வியில் உறுதியாக கால்பதித்திருக்கும் பெருந்தேசியவாத வர்க்கங்கள் அடுத்து முன்னேற துடியாய்த் துடிப்பது பொருளாதாரமே. அந்தப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் ஹலால் தூய்மைவாதத்தை தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள்.
ஒரு குறித்த காலத்தில் ஆட்சியிலிருக்கும் அரசையோ அரசியல்வாதிகளையோ மட்டும் உலமா சபை இன்னும் நம்பி ஹலால் தொடர்பான கணக்கறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்க முடியாது. அது நீண்டகாலத்தில் சாதகமான முடிவையே தரும் என எதிர்பார்க்கவும் முடியாது. பொதுவாக போர் முடிந்துவிட்டாலும் இனத்துவ அரசியலும் பௌத்தமயமாக்கலும் காணப்படுவதால் ஹலால் தூய்மை வாதத்தை ஒரு நிறுவன முறையாக தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான சாத்தியமான வழிகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. ஹலால் விவகாரம் முடிவதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்பதல்ல. அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தூய்மைவாத இலக்குகள் குறித்தும் அழுத்தங்கள் வரலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
நூற்றாண்டு காலமாக பல்பண்பாடுகளுடன் புளங்கிய சோனக முஸ்லிம் பண்பாட்டு வெளியின் முகம் திடீரென மாற்றமடைவதையும் இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. உடல் மொழி, தொப்பி, நீண்ட தாடி, நீண்ட அங்கி, கறுப்பு ஹிஜாப், முகத்திரை, கையுறை, புதிய பள்ளிவாயல் என தடாலடியாக மாற்றியமைக்கப்பட்டு வரும் முஸ்லிம் பண்பாட்டு வெளி பெரும்பான்மை சமூகங்களின் மனத்தில் பேரச்சத்தை உருவாக்கி வருகிறது. அடையாளத்தையும் தூய்மைவாதத்தையும் அளவுக்கதிகமாக தூக்கிப்பிடிக்கும் போது மற்றமைகள் வெறுக்கப்படுவதும் மிரள்வதும் இயல்பே. இது பெருந்தேசிய குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதற்கு ஏதுவாகவும் அமைந்துவிடுகிறது.
எந்தவொரு செயல்திட்டத்திலும் மக்கள் பங்கேற்பும் அரச ஆதரவும் இருப்பதே விவேகமானது. இல்லாவிட்டால் அது ஒரு குழுசார்பானதாக மாறிவிடும். உணர்ச்சிகரமான நிலையில் வஹாபியத் தூய்மைவாதத்திற்குச் செல்லாமல் மற்றமைகளையும் கருத்திற்கொண்டு செயற்படுவதே பொருத்தமானது. மேலும் மேலும் முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்துவதற்கான தூய்மைவாத இலக்குகளைப் பற்றி ஆராயாமல் மற்றமைகளுடன் கலந்து ஊடாடி பண்பாட்டு புரிதலை உருவாக்குவதே எதிர்காலத்தில் ஆரோக்கியமானது.
source:http://idrees.lk/?p=2405