மாதரைக் காப்போம்
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியும் தப்பிக்கலாம் என்பதே பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாகும்.
பாலியல் வன்செயல்களை அகற்ற சமூகம், சட்டம், காவல்துறை, நீதித்துறை ஆகிய அனைத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற வாதத்தில் நியாயமிருந்தாலும் இருக்கின்ற சட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே குற்றங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகளில் 26.4 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறுகின்றனர் என்கிறது என்சிஆர்பி.
ஆபாச உணர்வுகளைக் கிளறிவிடும் திரைப்படங்கள், புத்தகங்கள், இதழ்கள், விடியோ விளையாட்டுகள் ஆகியவையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை எல்லோரும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.
பாலியல் குற்றங்கள் குறைய பெண்களைப் பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
பெண்களைச் சுமையாகவும் இழிவாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மனநிலை மாறவேண்டும்.
பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான பெண்களை அருவருப்பாகப் பார்க்காமல் அநீதிகளை எதிர்த்துப் போராடிய வீரமங்கைகளாகப் பார்க்கவேண்டும்.
மாதரைக் காப்போம்
நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.
பாலியல் வன்செயலை சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பாகும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதால் மட்டுமே வன்செயல்கள் நின்றுவிடப்போவதில்லை. தில்லியில் நடைபெற்ற சம்பவம், ஆழ்ந்து விரிந்து கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பனிமலையின் ஒரு நுனியை மட்டுமே நமக்குக் காட்டியுள்ளது. எனவே ஆழமான பிரச்னைகளுக்கு ஆழமாகச் சிந்திக்காமல் மேற்போக்காக சில தீர்வுகளைக் கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பாலியல் வன்செயல்களை அகற்ற சமூகம், சட்டம், காவல்துறை, நீதித்துறை ஆகிய அனைத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
தேசிய குற்றவியல் பதிவுத் துறை (என்சிஆர்பி) தரும் தகவல்படி ஆண்டுக்கு 24,206 பாலியல் வன்செயல்கள் பற்றிய புகார்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஒவ்வொரு 22 நிமிஷங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இத்தகைய சம்பவங்களில் 94.2 விழுக்காடு அந்தப் பெண்ணுக்குப் பரிச்சயமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன என்று கூறுகிறது தேசிய குற்றப்பதிவுத் துறை. மொத்தப் பாலியல் வன்கொடுமைகளில் பெற்றோர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் நிகழ்த்தப்பட்டவை 1.2 விழுக்காடு. அக்கம்பக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டவை 34.7 விழுக்காடு. உறவினர்கள், நண்பர்களால் நிகழ்த்தப்பட்டவை 6.9 விழுக்காடு.
பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். காவல் நிலையம், மருத்துவமனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் தம்மிடமுள்ள பதவியையும் தம்மிடத்தில் அடைக்கலமாக உள்ள பெண்களின் பலவீனத்தையும் பயன்படுத்தி வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். தெருவிலும் பேருந்திலும் ரயிலிலும் நடைபெற்ற பலாத்காரங்களைவிட நான்கு சுவர்களுக்குள் நடைபெறும் வன்செயல்களின் எண்ணிக்கை அதிகம்.
பதிவு செய்யப்பட்ட குற்றங்களைவிடப் பதிவு செய்யப்படாதவை பலமடங்காகும். சமூகத்திற்கு அஞ்சியும் நீதிமன்ற அலைக்கழிப்பிலிருந்து விடுபடவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்மைப் பழிவாங்கிவிடுவர் என்பதை எண்ணியும் பலர் குற்றங்களைப் பதிவு செய்ய முன்வருவதில்லை. மேலும், விசாரணையின்போது நீதிபதி, வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் முன்பு கேட்கப்படும் கேள்விகள் பாலியல் வன்புணர்ச்சியைவிடக் கொடுமையானவைதாமே? இதன் காரணமாகப் பல பெண்கள் குற்றங்களைப் பதிவு செய்வதில்லை.
சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியும் தப்பிக்கலாம் என்பதே பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாகும்.
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற வாதத்தில் நியாயமிருந்தாலும் இருக்கின்ற சட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே குற்றங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகளில் 26.4 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறுகின்றனர் என்கிறது என்சிஆர்பி.
காவல்துறையினரின் உணர்ச்சியற்றதனம், மெத்தனம், அலட்சியம், பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றின் காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் போதிய ஆதாரமின்மையால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்யும்போது தேவையான தடயவியல் சான்றுகளைச் சேகரித்துக்கொள்ளாமையும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடங்கள் இல்லாமையும் முக்கியக் காரணமாகும்.
தில்லியிலுள்ள 80,000 காவல்துறையினரில் கணிசமானோர் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். 20,000 முதல் 25,000 காவலர்கள் மட்டுமே தெருக்களில் காணப்படுகின்றனர். பணிச்சுமைகளின் அழுத்தம், காவல் துறையினருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படாததினால் குற்ற விசாரணையில் போதிய கவனத்தை அவர்களால் செலுத்த முடியவில்லை.
நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுகின்ற வேகம் குற்றவாளிகளுக்குத் தெம்பைத் தருகின்றது. விரைவான நீதியே குற்றவாளிக்கு அச்சத்தைத் தரும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல், நீதிபதிகளை அதிகப்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி நவீனப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதோடு, வாய்தா வாங்குவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவராத வரை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கவே செய்யும். வழக்கறிஞர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது அரசு இதில் ஒரு துணிவான முடிவை எடுக்க வேண்டும். விரைவாக நீதி வழங்கப்படுகின்ற நாடுகளில் குற்றங்கள் குறைவாக நிகழ்கின்றன என்பது கவனத்திற்குரியது.
ஆறாக ஓடும் மதுவும் குற்றங்கள் பெருகக் காரணமாகிறது. பாலியல் வன்செயல்கள் மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை கலவரங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோர் மது அருந்திய நிலையிலேயே அவற்றைச் செய்கின்றனர். மதுவுக்குக் கால் முளைத்தால் அது மாதுவிடம்தான் செல்லும். தில்லியில் பாலியல் வன்புணர்ச்சியைச் செய்தவர்களும் மது அருந்திய நிலையிலேயே இருந்தனர். ஆனால் போராட்டம் நடத்தும் எவரும் மதுவை ஒழிக்கவேண்டும் என்று முழக்கம் எழுப்பியதாகத் தெரியவில்லை.
ஆபாச உணர்வுகளைக் கிளறிவிடும் திரைப்படங்கள், புத்தகங்கள், இதழ்கள், விடியோ விளையாட்டுகள் ஆகியவையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை எல்லோரும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.
சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற முழக்கம் அதிகமாக ஒலிக்கின்றது. இப்போது நடைமுறையிலுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376 பாலியல் வன்புணர்ச்சிக்கு ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை நீடிக்கக்கூடிய தண்டனை கொடுக்கலாம் என்கிறது. இதை மரண தண்டனையாக மாற்றவேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மரணதண்டனை எனச் சட்டதிருத்தம் கொண்டுவந்தால் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண், குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துவிடுவாள் என்ற பயத்தில் குற்றவாளிகள் அப்பெண்ணைக் கொன்றுவிடுவார்கள் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. குற்றத்தின் கொடுமைதான் தண்டனையின் அளவை நிர்ணயிக்க வேண்டும். அத்தோடு தண்டனையின் அளவு குற்றங்கள் செய்யாதவாறு மக்களைத் தடுப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கவேண்டும்.
சட்டங்களைக் கடுமையாக்குவதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது. சட்டங்களை அக்கறையோடும் முறையாகவும் விரைவாகவும் குற்றவாளிகள் தப்பிக்காதவண்ணம் செயல்படுத்தும்போது குற்றங்கள் குறையும்.
கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தண்டனைக் குறைப்பு செய்வது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற உணர்வையே குற்றவாளிகளிடம் ஏற்படுத்தும்.
சமீபத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலையும் செய்த நால்வருக்கு மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஓய்வுபெறுவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் எல்லாத் துறைகளிலும் காணப்படும் அலட்சியம், அக்கறையின்மை, தாமதம், ஊழல், சிவப்புநாடா முறை, பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றைப் போக்கும் முகமாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் அளிக்கப்படவேண்டும். பணிகள் எளிதாகவும் விரைவாகவும் முறையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க ஜி.பி.எஸ். கண்காணிப்பு கேமராக்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தவேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்டவர்மீது நியாயம் இருந்தால் வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாடலாம். ஆனால் குற்றவாளிகள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்பும் அவர்களுக்காக வாதாடுவது எந்த வகையிலும் தர்மம் ஆகாது.
பாலியல் குற்றங்கள் குறைய பெண்களைப் பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
பெண்களைச் சுமையாகவும் இழிவாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மனநிலை மாறவேண்டும்.
பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான பெண்களை அருவருப்பாகப் பார்க்காமல் அநீதிகளை எதிர்த்துப் போராடிய வீரமங்கைகளாகப் பார்க்கவேண்டும்.
இச்சைகளைத் தூண்டும் விதத்தில் ஆபாசமாக ஆடைகள் அணிவதும், பூங்காக்கள், பேருந்துகள், கடற்கரை, வணிக மால்கள் போன்ற பொது இடங்களில் நாணமின்றி நடந்துகொள்வதும் குற்றவாளிகளைக் கூவி அழைப்பதுபோல் உள்ளன. இதைப் பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது தெரிந்ததே. இச்செயல்கள்தாம் பாலியல் வன்கொடுமைகளுக்கு மூலகாரணம் என்று சொல்வதற்கில்லை; இதுவும் ஒருவகையில் காரணம் என்பதை ஏற்றே ஆகவேண்டும்.
அதிகம்பேசப்படாத, பேசத் தயங்கும் ஒரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒழுக்க மாண்புகள் மிக்க, விழுமங்களைப் பின்பற்றுகின்ற சமூகத்தை உருவாக்குவதில் நமது முழு கவனமும் இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் ஒழுக்க வீழ்ச்சி அந்தச் சமூகத்தின் எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது. விழுமங்களைக் கற்றுத்தரும் ஏற்பாடுகளைப் பெற்றோர், ஆசிரியர்கள், ஆன்மிகத் தலைவர்கள், மனிதநேயர்கள், தேச பக்தர்கள் ஆகியோர் தொடர்ந்து செய்து வரவேண்டும். பாடதிட்டங்களிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
கொடூரமான நிகழ்வுகளின்போது மக்கள் ஆத்திரமுற்று வீதிக்கு வருவது இயற்கையே. ஆனால் போராட்டங்கள் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு ஆகாது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த இந்திய அளவில் அமைப்புகளை உருவாக்கி முறையாகத் தொடர்ந்து செயல்படவேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆளும் வர்க்கத்தைத் தட்டிக்கேட்டல், நீதிமன்றங்களில் வழக்குதொடர்தல், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தருதல் எனும் வகையில் தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மாற்றங்களைக் காணலாம்.
– நன்றி தினமணி