அல்லாஹ்வின் நேசம் பெறாதவர்
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
5:64. “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களைநேசிக்க மாட்டான்.
5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும்,அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் – நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
28:76. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
28:77. “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும்கூறினார்கள்).
30:45. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.