செய்ததை அப்படியே செய்வதா, நோக்கமறிந்து செய்வதா? எது சுன்னா? (1)
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கருமத்தை எப்படிச் செய்தார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஸுன்னா. அதனை மாற்றிச் செய்தால் சுன்னா புறக்கணிக்கப்படுகின்றது. மாற்றிச் செய்பவர் நபியையே புறக்கணிக்கிறார். எனவே, நபிகளாரின் சுன்னாக்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.”
இந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இவ்வாக்கம். இந்தக் கூற்றை விளங்குவதற்கு முதலில் பின்வரும் வினாவை எடுத்துக் கொள்வோம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அனைத்துக் கருமங்களையும் அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டுமா?
சில செயல்களை நபிகளார் செய்தது போலவே செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் வரிசையில் முதல் இடம்பெறுவது வணக்க வழிபாடுகளாகும்.
வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களில் நபிகளார் எதை, எப்படிச் செய்தார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும். சில அமல்களை அவர்கள் இரண்டு விதமாகச் செய்திருந்தால் நாமும் இரண்டு விதமாகச் செய்யலாம். சிலதை மூன்று விதமாகச் செய் திருந்தால் நாமும் மூன்று விதமாகச் செய்யலாம். அவற்றுள் ஒன்று ஆதார பலம் கூடியதாக அல்லது குறைந்ததாக இருக்கலாம். எனினும், நபிகளார் செய்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவது ஆகுமானதே.
தொழுகை நேரங்கள், தொழு கையின் ரக்அத்துகள், தக்பீர் முதல் ஸலாம் வரையிலான ஒழுங்குகள், நோன்பு, ஹஜ் என்பவற்றிலுள்ள நடைமுறைகள் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரயாணத்தில் தொழுகையை சேர்த்து சுருக்கித் தொழுவதும் நபிகளாரின் சுன்னாதான். சிலர் அவ்வாறு செய்வதில்லை. காரணம், அவ்வாறு செய்யாமலிருப்பது ஈமானுக்கும் தக்வாவுக்கும் சிறந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இவற்றில் பர்ளுகளை செய்யும் போதும் சுன்னத்துகளை செய்யும் போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டும். இவற்றுள் ஒரு செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு, மூன்று விதமாகச் செய்திருக்கிறார்கள் என்பது ஹதீஸ்கள் வாயிலாகத் தெரிய வந்தால் அவற்றில் ஒன்றைச் செய்வது சுன்னாவாகவே கொள்ளப்படும். உதாரணமாக, தக்பீரின்போது கையைப் பலவிதமாகக் கட்டியிருக்கிறார்கள் என ஹதீஸ்களில் காண்கிறோம். அவற்றில் ஒரு முறையைப் பின்பற்றலாம். மற்றொரு முறையை இன்னு மொருவர் பின்பற்றினால் அது சுன்னாவல்ல என்று கூறுவதற்கு எமக்கு அதிகாரமில்லை.
ஸகாத் நடைமுறைகளைப் பொறுத்தவரை ஸகாத் விதியாகும் பொருட்கள், அவற்றின் அளவுகள் போன்ற விடயங்களில் விரிவான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இல்லாத உற்பத்திப் பொருட்கள், விளைச்சல்கள், வியாபாரப் பொருட்கள் பிற்காலத்தில் மலிந்து விட்டன. அவற்றின் ஸகாத் நடைமுறைகள் பற்றியே இத்தகைய ஆய்வுகளும் கருத்து வேறுபாடுகளும் தோற்றம் பெற்றன. எனினும், இத்தகைய கருத்து வேறுபாடு கள் நபிகளாரின் சுன்னாவையே பிரதி பலிக்கின்றன. தொழுகை, நோன்பு, ஹஜ் என்பவற்றில் காலத்தால் மாறும் நடைமுறைகள் இல்லை.
அதேபோன்று காலத்தால் மாறாத ஒழுக்கங்கள் சிலவும் இந்த வரிசையில் இடம்பெறுகின்றன. வலது கால், வலது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள், இடது கால், இடது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள். ஆடை அணியும் முறை, உணவு உட்கொள்ளும் ஒழுங்குகள், நித்திரை ஒழுங்குகள், குழந்தை பிறந்தால் செய்ய வேண்டியவை, மனிதன் இறந்தால் செய்ய வேண்டியவை, திருமண ஒழுங்குகள் போன்ற இன்னோரன்ன வாழ்வு ஒழுங்குகள் விடயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றுவோராக நாம் மாறலாம்.
இவற்றோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போல் செய்ய வேண்டிய மற்றுமொரு நடைமுறையும் இருக்கிறது. அதுவே நற்குணங்களாகும். பணிவு, நாவடக்கம், பயனற்ற வேலைகளில் ஈடுபடாமை, பிறரது குறைகளை அறிந்து கொள்வதிலும் பேசுவதிலும் அக்கறையின்மை, அலட்டலும் முறையீடுகளும் இன்மை, கடுமை, முரட்டு சுபாவங்கள், பிடிவாதம், முரண்படும் குணம், விரைந்து உணர்ச்சிவசப்படுதல், பகை பாராட்டுதல், அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுதல், தற்புகழ்ச்சி போன்ற இழிவான குணங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அனைத்துத் தீய குணங்களும் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியிருக்கின்றன. நற்குணங்கள் விடயத்திலும் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முற்றிலும் பின்பற்றி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த செயல்களில் இன்னும் சில இருக்கின்றன. அவற்றை அவர்கள் செய்ததுபோல அப்படியே செய்ய முடியாது செய்வதும் அவசியமில்லை. மாறாக, எந்த நோக்கத்திற்காக அவர்கள் அவற்றை செய்தார்களோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நாம் அவற்றைச் செய்ய வேண்டும்.
உதாரணமாக, ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்திருக்கிறார்கள் என்பதனால் உலக முஸ் லிம்கள் அனைவரும் அந்தளவு சிறிய பாத்திர நீரில்தான் குளிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. அங்கு செயலைவிட செயலின் நோக்கம்தான் முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது. சுத்தம் அல்லது பெருந்துடக்கை நீக்குதல் போன்ற நோக்கங்களே இங்கு முன்மாதிரியாகும். அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒருவர் ஒரு சிறிய பாத்திரமளவு நீரையும் பயன்படுத்தலாம். ஆற்றிலும் குளிக்கலாம் கடலிலும் குளிக்கலாம். அனைத்தும் சுன்னாக்கள்தாம்.
இதற்கு மற்றுமோர் உதாரணம் நாம் அணியும் ஆடைகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு ஆடைகள் அணிந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்துள்ளது. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அவர்கள் அணிந்தது போன்ற ஆடைகளை அணிவது தான் சுன்னத்தா என்றால் பதில் “இல்லை” என்பதே.
காரணம், ஆடைகள் சுன்னத்தல்ல. ஆடை அணியும் நோக்கம்தான் இங்கு சுன்னத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்ரத்தை மறைத்தல், கண்ணியத்தைப் பாதுகாத்தல், அழகாக இருத்தல் போன்ற நோக்கங்களுக்காகவே ஆடை அணியப்படுகிறது. அவ்ரத்தில் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி, மேலதிகமாக மறைக்க வேண்டிய பகுதி எனும் விளக்கங்கள் உண்டு. அவற்றோடு ஆண்கள், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளுக்கான வரையறைகள் தரப்பட்டிருக்கின்றனவே அன்றி, ஆடையின் வடிவங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை.
இந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் வாழ்பவர்கள் அந்தந்த நாட்டின் சீதோஷ்ஷண நிலைக்கேற்ற ஆடைகளை இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அணிவார்கள் என்றால் அவர்கள் பின்பற்றுவது சுன்னாவைத்தான்.
இவ்வாறு நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. நோக்கங்களை அறிந்தோ அறியாமலோ செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. இந்த இரு சுன்னாக்களுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத தன் காரணமாக, எது சுன்னா, எது இல்லை என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்கள் விடயத்தில் நோக்கங்களை விட்டுவிட்டு செயல்களை நாம் முக்கியத்துவப்படுத்தினால் இந்தக் குழப்பம் மேலும் அதிகரிக்கும்.
அதேபோன்று நபிகளார் செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களுக்கு நாம் நோக்கம் கற்பிக்க முற்படவும் கூடாது. அவற்றை அப்படியே செய்து விட்டுச் செல்வதுதான் முறை. அவற்றுக்கு நாங்கள் நோக்கம் கற்பித்தால் அங்கும் சமூகத்தில் தெளிவின்மையும் குழப்பமுமே அதிகரிக்கும்.
வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செய்தார்களோ நாமும் அப்படியே செய்ய வேண்டும் என்று பார்த்தோம். தொழுகையோடு சம்பந்தப்பட்ட அதானும் அப்படிப்பட்ட ஒரு வணக்கம்தான். அதானை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அதனை அப்படியே சொல்ல வேண்டும். அதானுக்கு முன்னால் ஸலவாத்தை நாம் சேர்த்துவிட்டு நபியின் மீதிருக்கின்ற அன்பினால் நாம் அப்படிச் செய் கின்றோம் என்று எமது செயலுக்கு நாங்கள் நோக்கம் கற்பிக்க முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது சுன்னாவை மறுக்கும் செயலாகும்.
செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு நோக்கம் கற்பிப்பதற்கு மற்றுமோர் உதாரணம், அறபா தினத்தின் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையை விளங்குவதற்கு பின்வரும் வினா முக்கியமானது:
பிறை ஒன்பதாம் நாள் அறபா தினமா? அல்லது “அறபா” தினம் என ஒரு தினம் இருக்கிறது. அத்தினத்தில் பிறை எட்டாகவும் இருக்கலாம் அல்லது பத்தாகவும் இருக்கலாமா?
உண்மையில் ஒன்பதாம் பிறையன்று அறபாவுக்குச் செல்லுங்கள் என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதாவது, ஹஜ்ஜில் அறபா தினமன்று அறபாவுக்குச் செல்லும் நடைமுறையொன்று இல்லை. ஒன்பதாம் நாள் அறபா செல்லும் நடைமுறையே இருக்கிறது.
ஆக, உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் இருக்குமிடத்தில் ஒன்பதாம் தினமே அவர்களுக்கு அறபா தினமாகும். அவர்களது ஒன்பதாம் தினத்தை பத்தாம் தினமாக மாற்றிவிட்டு எட்டாம் தினத்தை ஒன்பதாம் தினமாக்கி அதை அறபா தினம் என்று நோக்கம் கற்பிக்கும் உரிமை எமக்கில்லை. எட்டாம் நாள் எப்படி அறபா தினமாக மாறும்? இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு, ஏன் மக்காவில் இன்று அறபாவல்லவா? என நோக்கம் அல்லது காரணம் கற்பிக்க முற்படுவது சுன்னாவுக்கு முரணான செயலாகும்.
எதை அப்படியே செய்வது எதை நோக்கமறிந்து செய்வது என்ற வேறுபாடு தெரியாமல் செய்யும்போது தான் இத்தகைய குழப்பங்கள் தோன்றுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றுமொரு சுன்னா இருக்கிறது. அங்கும் செய்ததை அப்படியே செய்ய வேண்டும் என்பதில்லை. அங்கு ஷரீஆ விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படுவதே சுன்னாவாகும். வியாபாரம், சொத்துப் பங்கீடு போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்கும் எமது காலத்துக்குமிடையில் வியாபார நடைமுறைகள் எவ்வளவோ மாறிவிட்டன. நிதி, நிர்வாகத் துறை நடைமுறைகள் மாறிவிட்டன. பொது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடை முறைகளில் விதிகள், சட்டங்கள் என்பவற்றையே நாம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றியவர்களாவோம்.
நிர்வாகத்துறையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் மஸ்ஜிதிலிருந்துதான் பரிபாலனம் செய்திருப்பதைக் காண்கிறோம். அலுவலக முறைகள் இன்றைய ஒரு நவீன அலுவலகத்தில் இருப்பது போன்று நபியவர்களது நிர்வாக முறைமைகளில் இருந்திருக்காது.
நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கனைப் போன்று மஸ்ஜித்களில் இருந்த வண்ணம்தான் அனைத்து விவகாரங்களையும் நிர்வகிக்க வேண்டும் என்று கூறினால் நாங்கள் சுன்னாவை விளங்கவில்லை என்பது பொருள். இங்கு பொறுப்புணர்வு, தகைமை, அமானிதம், சேவை மனப்பான்மை போன்றவற்றை நிர்வாகத்தில் கடை பிடிப்பதுதான் சுன்னாவாகும். மஸ்ஜிதில் இருந்து நிர்வாகம் செய்வதல்ல.
இன்றைய வியாபார நடைமுறைகளை எடுத்துக் கொண்டாலும், நிலைமை அதே போன்றதுதான். அங்கு வியாபாரத்திற்கான விதிகளையும் சட்டங்களையும் கற்று அந்த சட்டங்களுக்கேற்ப தமது வியாபாரத்தை நடத்திச் செல்வதே சுன்னாவாகும். இன்றைய இஸ்லாமிய வங்கிகள் நபிகளாரின் ஒரு சுன்னாவை (வியாபாரத்தில்) உயிர்ப்பித்திருப்பதை இங்கு குறிப்பிடலாம்.
இவ்வாறு நபிகளாரின் சுன்னாக்களை விடயத்திற்கு விடயம் வேறுபடுத்தி எந்த விடயத்தில் எது சுன்னாவாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விளக்கம் இல்லாமல் சமூகத்தை வழிநடத்த முற்படும்போதுதான் குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன. “இஸ்லாத்தைக் தேடிக் கற்பது ஒவ் வொரு முஸ்லிமினதும் கடமை” என்ற நபிமொழியின் அர்த்தத்தை இங்கு நாம் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.