செய்ததை அப்படியே செய்வதா, நோக்கமறிந்து செய்வதா? எது சுன்னா? (2)
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
களத்தில் சிலர் சில சுன்னாக்களைக் கற்றிருக்கிறார்கள் சிலதைக் கற்கவில்லை. மற்றும் சிலர் வேறு சிலதைக் கற்றிருக்கிறார்கள். முன்னையவர்கள் கற்றதைக் கற்கவில்லை. இவ்வாறு சிலர் சிலதைக் கற்றாலும் பலர் கற்காமலே இருக்கும் ஒரு சுன்னா இருக்கிறது. அந்த சுன்னா விடயத்தில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி யுக யுகமாகப் பின்தள்ளப்பட்டுக் கொண்டே செல்கிறது. அதுதான் இஸ்லாமியப் பணி அல்லது தஃவா விடயத்தில் நபிகளாரின் சுன்னா எது என்பதாகும்.
இஸ்லாமியப் பணி விடயத்தில் எது சுன்னாவல்ல என்பதை சமூகம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனினும், எது சுன்னா என்பதைத்தான் புரியாமல் இருக்கிறது. உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராவிலிருந்து தனது பணியைத் துவங்கினார்கள். மனைவியிடம் வந்தார்கள். வரகத் இப்னு நவ்பல் என்பவரிடம் சென்றார்கள். உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். தாருல் அர்கமில் இரகசியமாகப் பிரசாரம் செய்தார்கள். தோழர்களை ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் அனுப்பினார்கள். தாயிபுக்கு ஹிஜ்ரத் போனார்கள்…
இந்த ஒழுங்கைப் பின்பற்றித்தான் தஃவா பணி செய்ய வேண்டும் அதுதான் சுன்னா என்று சமூகத்தில் ஒருவர் கூடச் சொல்வதில்லை. எனவே, எது சுன்னாவல்ல என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள். எனினும், எது சுன்னா என்பது விளங்காதிருக்கின்றது.
தஃவா பணியில் சுன்னா என்பது நபியவர்கள் அந்தப் பணி மூலம் அடைந்து கொண்ட இலக்குகளை அடைவதாகும். அந்த இலக்குகளை ஒருவரோ ஒரு சமூகமோ ஓர் இயக்கமோ தவறவிட்டால் அவர்கள் தஃவா பணியில் நபிகளாரின் சுன்னாவைப் புறக்கணித்தவர்களாகவே கருதப்படுவர். அது மட்டுமல்ல, தஃவா விடயத்தில் நபியவர்களின் இந்த சுன்னாவைப் புறக்கணிக்கும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சுன்னாக்கள் சமூகத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி எட்டாக்கனியாகவே இருக்கும்.
தஃவா பணியில் நபிகளாரின் இலக்குகள் எவை?
தஃவா பணி என்பது அழைப்புப் பணி. “அழைப்பு” என்றாலே எதை நோக்கி? எங்கு செல்வதற்காக? என்ற வினாக்கள் எழும். அல்லாஹ்விடம் செல்வதற்காக என்று நாம் கூறுவோம். அதாவது, அவனது திருப்தியை… திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக. இதுதான் தஃவா பணியின் இலக்கு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தைப் பரிசாக வழங்குவான். ஆக “சுவனம்” தஃவாப் பணியின் அடுத்த இலக்கு. சுருக்கமாகச் சொன்னால் அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தியும் சுவனமும் என்பதாகும். இந்த இலக்குகள் விடயத்திலும் முஸ்லிம் சமூகத்தில் ஒத்த கருத்திருக்கிறது. குழப்பமில்லை.
எனினும், குழப்பம் அதற்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறது. அல்லாஹ்விடம் அழைத்துச் சென்று சுவனம் வாங்கிக் கொடுப்பது எப்படி? அழைப்புப் பணி மூலம் இதனை வெளிப்படையாக சாதித்து விடலாமா? யார் அழைக்கும் அழைப்புக்குப் பின்னால் போனால் சுவர்க்கம் கிடைக்கும்? சுவனமா, நாங்கள் பெற்றுத் தருகிறோம் எங்களுக்குப் பின்னால் வாருங்கள் என்று வெளிப்படை யாகச் சொன்னாலும் சரி, மறைமுகமாகச் சொன்னாலும் சரி யார் சொல்வதை நம்புவது?
இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதற்குக் காரணம், தஃவா பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகள் பற்றி நாம் தெளிவற்றிருப்பதே. அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தி, சுவனம் என்பதோடு முடிவதில்லை. அவை இறுதி இலக்குகள். அந்த இறுதி இலக்குகளை அடைய வேண்டுமானால் அதற்கு முன் சில இலக்குகளை உலகில் அடைந்தாக வேண்டும். அந்த உலக இலக்குகளை அடைய முடியுமாக இருந்தால் யார் பின்னால் போனாலும் சுவனம் கிடைக்கும். அது மட்டுமல்ல, அழைப்புப் பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதாகவும் இருக்கும். காரணம், அழைப்புப் பணியில் சுன்னா நபியவர்கள் அடைந்த இலக்குகளை அடைவதாகும். ஹிரா மலையிலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதல்ல சுன்னா.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புப் பணியின் மூலம் உலகில் சில இலக்குகளை அல்லது சில அடைவுகளை அடைந்தார்கள். அந்த அடைவுகள் இஸ்லாம் என்ற அமைதியை உள்ளத்துக்கும் உலகத்திற்கும் கொடுத்ததாகும். வேறு விதமாகக் கூறினால், இஸ்லாத்தின் மூலம் அமைதியான உள்ளங்களையும் அமைதியான உலகமொன்றையும் கட்டி யெழுப்பினார்கள் நபியவர்கள். ஆக, “அமைதியான உள்ளம்” “அமைதியான உலகம்” என்பவையே நபியவர்களது அழைப்புப் பணியின் உலக இலக்குகளாகும். இந்த இலக்குகளில் அமைதியான உள்ளம் எனும் இலக்கை ஒவ்வொரு மனிதனும் அவசியம் அடைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்க வேண்டும்… நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது அவர் செய்யும் அழைப்புப் பணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவை செயல்படுத்துவதாக இருக்கும். சுவனம் என்ற இறுதி இலக்கின்பாலும் அது அவரை இட்டுச் செல்லும்.
அமைதியடைந்த ஆரோக்கியமான உள்ளங்களுக்கே சுவனம் கிடைக்கும் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (பார்க்க 89:27, 26:87 – 89)
அதேபோன்று அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நபிகளாரோடு அகபாவில் உடன்படிக்கை செய்த மதீனாவாசிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்தை வாக்களித்தார்கள். அந்த மதீனாவாசிகளோடு இணைந்து அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு உதவ முன் வராமல் மக்காவில் இருக்க விரும்புகின்ற முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன் எச்சரிக்கை விடுத்தது. அவர்களை அநியாயக்காரர்கள் என்றும் குறிப்பிட்டது. அவர்களது உயிர்களை அநியாயக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றுவதுபோல மலக்குகள் கைப்பற்றுவார்கள் என்று சுட்டிக்காட்டியது. (பார்க்க 4:97)
அது மட்டுமல்ல, அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து அமைதியான உலகைக் கட்டியெழுப்பும் பணியில் பங்கு கொள்ளும்வரை அவர்களுடன் எந்த உறவும் வேண்டாம் என்று மதீனாவாசிகளைத் தடுத்தது அல்குர்ஆன். (பார்க்க 8:72)
இந்தப் பணியைச் செய்கின்றவர்களுக்கு அமைதியான உலகமொன்றை ஏற்படுத்தித் தருவதாக அல்லாஹ் வாக்களித்துமிருந்தான். அத்தகைய உலகமொன்றில் தான் இணைவைத்தல் முற்றாக நீக்கப்பட்டு மக்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுகின்ற நிலை உருவாகும். (பார்க்க: 24:55)
இவ்வாறானதோர் இலக்கை அடையும் போராட்டத்திலும் பயணத்திலும் பங்குபற்றாமல் ஒதுங்கியிருக்க விரும்புபவர்களையே மதீனா சமூகத்தின் முனாபிக்குகளாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். ஆக, அமைதியான உலக மொன்றைக் கட்டியெழுப்பும் பணியிலிருந்து ஒதுங்கியிருக்கும் மதீனாவாசிகள் முனாபிக்குகள் என்றும் ஒதுங்கியிருக்கும் மக்காவாசிகள் அநியாயக்காரர்கள் என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் இந்த இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்காதவர்கள் எப்படி சுவனம் என்ற இறுதி இலக்கை அடைய முடியும்?
எனவே, தஃவா பணியின் சுன்னா நபிகளார் அடைந்த இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டு வேலை செய்வதாகும்.
ஆனால், இன்று மேற்கொள்ளப்படுகின்ற இஸ்லாமிய அழைப்புப் பணிகள் உள்ளங்களில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமலாக்கி (உலகம் எப்படிப் போனாலும்) ஊர் அளவில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமல் செய்கின்றன. அவ்வாறு அமைதியை சீர் குலைக்கின்ற சக்திகள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றன தெரியுமா?
“குழப்பவாதிகள் வந்தார்கள் நாங்கள் விடவில்லை. ஊரின் அமைதியைப் பாதுகாத்தோம்.”
இப்படிக் கூறும் இவர்கள் யார்? இவர்கள்தாம் ஊரிலுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் பின்னாலிருந்து எண்ணெய் ஊற்றுபவர்கள். அல்லாஹ் சரியாகச் சொன்னான்.
“நீங்கள் பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நாங்கள்தான் சீர்திருத்தவாதிகள் என அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள்தான் குழப்பவாதிகள். ஆனால், அவர்கள் அதனை உணர்வதில்லை.” (2:11-12)
இன்றைய பணிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகளை முற்றாக அடையவில்லை என்று நான் கூற மாட்டேன். உள்ளங்கள் சிலவற்றை அமைதியடைந்த உள்ளங்களாக ஆக்குவதில் அவை வெற்றி கண்டிருக்கின்றன. எனினும், சமூகத்தை அமைதியடைந்த ஒரு சமூகமாக ஓர் ஊர் மட்டத்தில் மாற்றுகின்ற அளவுக்காவது முன்னேற்ற வில்லை. முன்னேறும் முயற்சிகளையும் இஸ்லாம் என்ற பெயராலேயே தடுக்கும் வேலைகள்தான் முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்லாமியப் பணியில் எது சுன்னா என்பதை விளங்க முடியாத நிலையே அதற்குக் காரணமாகும்.
அமைதியடைந்த ஒரு சமூகம் எனும்போது அங்கு ஓர் இஸ்லாமியத் தலைமைத்துவம், கட்டுப்படும் சமூகம், இஸ்லாமிய வாழ்வியலைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் எனப் பல அம்சங்கள் அதனுள் வருகின்றன. அவை ஒரு சமூகத்திலோ ஓர் ஊரிலோ வந்துவிட்டால் எமது கதி அதோ கதிதான் என்று கருதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் நிச்சயம் இந்த சுன்னாவை அமுல் நடத்துவதற்குத் தடையாகத்தானே இருக்கும்! எனினும், இந்த சக்திகள் அல்லாஹ்வை எதிர்த்து நிற்பதால் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதில்லை என்பதே வரலாறு.
ஆக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை ஒவ்வொரு விடயத்திலும் நாம் எப்படிப் பின்பற்றுவது என்பதை முதலில் நாம் கற்க வேண்டும். அதன்பின் செய்ததை அப்படியே செய்வதா அல்லது நோக்கமறிந்து இலக்கறிந்து செய்வதா என்ற வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அதிகமாகப் பேசப்படும் இக்காலத்தில் இந்த உண்மைகளை முஸ்லிம்கள் நன்கு விளங்கியிருக்க வேண்டும்.
குறிப்பு: இந்த ஆக்கத்தில் “சுன்னா” என்ற பிரயோகம் அதிகமாக இடம்பெற்றள்ளது. அது பர்ளு, சுன்னத்து என்ற கருத்திலல்ல. பர்ளாக இருக்கலாம். சுன்னத்தாக இருக்கலாம். நபிகளாரின் நடைமுறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில்தான் “சுன்னா” என்ற சொல் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது. இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய கருத்துக்களிலும் இன்னும் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் “சுன்னா” என்ற பதத்தைப் பிரயோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர்- இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/