ஷைத்தானின் ஆற்றல் – குர்ஆன் கூறும் அளவுகோல் என்ன?
o குர்ஆன் கூறும் அளவுகோல் என்ன?
o மனித உருவில் ஷைத்தான் வருவானா?
o நபிமார்களை ஷைத்தானால் தீண்ட முடியாது
o சூனியம் என்பது ஷைத்தானின் தீண்டலா?
ஷைத்தான் மனிதனின் உள்ளங்களில் தீய எண்ணங்களை விதைத்து அவனை வழிக்கெடுப்பான் என்கிற நம்பிக்கையை தாண்டி, ஷைத்தான் மனித உருவில் வருவான் என்றும், மனிதரின் கை கால்களை முடமாக்கும் சக்தி அவனுக்கு இருப்பதாகவும், மனிதனை பைத்தியமாக ஆக்க கூடிய சக்தி கூட அவனுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சூனியம் என்பது கூட ஷைத்தானின் அத்தகைய ஆற்றலின் வெளிப்பாடு என்று தான் நம்ப வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இது பற்றி நாம் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும்.
ஷைத்தானின் ஆற்றல் – குர்ஆன் கூறும் அளவுகோல் என்ன?
ஷைத்தானின் ஆற்றலாக குர்ஆன் எதை எல்லாம் சொல்கிறது என்பதை நாம் முதலில் பார்ப்போம்.
அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் ‘ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழி கெடுத்து விட்டீர்கள்’ (என்று கூறுவான்). 6:128
எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத் தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள். 41:29
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 114:4
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். ”உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென் றெடுப்பேன்; அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; 4:118
நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று கூறினான். 7:16
என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்’ என்று கூறினான். 15:39,40
அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான். 2:169
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். 6:43
அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். 16:63
மேற்கண்ட வசனங்களிலும், இன்னும் ஏராளமான வசனங்களிலும், ஷைத்தானின் நோக்கம் என்பது மனிதர்களின் மனதில் ஆசை வார்த்தைகளை இட்டும், தீய எண்ணங்களை இட்டும் அவர்களை வழிக்கெடுப்பது தான் என்று கூறப்படுகிறது.
மனிதர்களை நரகத்தின் பால் அழைத்து செல்வதும் கூட அவனது நோக்கம் என்று 35:6 வசனம் தெளிவாக்குகிறது.
ஆதாமின் வழி தோன்றல்கள் இருக்கும் காலமெல்லாம் நான் அவர்களை வழிக்கெடுப்பேன் என்று ஷைத்தான் சபதம் எடுத்துக்கொண்டதாக அஹமத் 10814 ஹதீஸ் நமக்கு சொல்கிறது.
ஆக, குர்ஆன் கூறும் அளவுகோல் படி ஷைத்தானின் ஒரே நோக்கம் மனிதர்களை நரகத்திற்கு இழுத்து செல்வது தான் எனவும், அதற்கு அவன் எடுக்கும் ஆயுதம், உள்ளங்களை வென்றெதுப்பது தான் எனவும் தெரிய முடிகிறது.
இதற்கு முரணாக, மனிதர்களை நரகத்தை விட்டும் விலக்கும் வேலையை ஷைத்தான் செய்வான் என்றோ, உள்ளங்களை வழிகெடுப்பதை தாண்டி உடல் ரீதியான கெடுதல்களை அவன் செய்வான் என்றோ ஹதீஸ்களில் சொல்லப்படுமேயானால் அத்தகைய ஹதீஸ்கல் மேற்கண்ட குர் ஆன் வசனங்களுக்கு முரணாக இருக்கிறது என்று நாம் கருத வேண்டும்.
அதே சமயம், அந்த ஹதீஸின் கருத்தை வேறு விதமாக புரிய இடம் இருக்கும் பட்சத்தில், அந்த ஹதீஸை முழுவதுமாக மறுக்காமல், மேலே உள இறை வசனங்களுக்கு ஒத்துப்போக கூடிய விதங்களில் பொருள் செய்ய வேண்டும்.
மனித உருவில் ஷைத்தான் வருவானா?
ஷைத்தான் மனித உருவில் வருவான் என்பதற்கு புஹாரி 2311 இல் வரக்கூடிய ஹதீஸை சான்றாக சிலர் எடுத்து வைக்கிறார்கள். அதில் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திருட வந்த ஷைத்தானை பார்த்ததாகவும், அவனை பிடித்து கட்டி வைத்ததாகவும் அவன் தப்பி ஓட முயன்றதாகவும் வருகிறது.
இதில் திருட வந்தவன் மனிதனாக வந்தாலும் அவன் ஷைத்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல வகைகளில் வந்தவன் ஜின் இனத்தை சேர்ந்த ஷைத்தான் என்று புரிவதற்கு தடையாக இருக்கிறது.
முதல் விஷயமாக, அல்லாஹ் திருமறையில் மனிதர்களால் ஜின்னை பார்க்கவே முடியாது என்று 7:27 வசனத்தில் தெளிவாக சொல்கிறான்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள் என்றால் அது அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தத்தன் அடிப்படையில் பார்த்தார்கள். அப்போது கூட அவர்களுடன் இருந்த ஸஹாபாக்களால் காண முடியவில்லை என்று ஹதீஸ்களில் உள்ளது.
அந்த வகையில் மேற்கண்ட ஹதீஸில் ஷைத்தானை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்த்ததாக சொல்லப்படுவது குர்ஆனின் கூற்றுக்கு முரணாக உள்ளது.
மேலும், ஷைத்தானின் உணவு மனிதர்கள் உண்ணும் உணவல்ல, அவனது உணவு மனித கழிவும், எலும்புகளும் தான் எனும் போது இங்கு மனித உணவை திருடுவதற்காக அவன் வர வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், அப்படியே மனித உணவை எடுக்க தான் வந்தான் என்று வைத்துக்கொண்டால் கூட, அதை அவன் திருட வேண்டியதில்லை, ஷைத்தான் மனித கண்களுக்கு தென்படாமல் நடமாடும் ஆற்றலை பெற்றவன் தான் எனும் போது அவ்வாறே வந்து யார் கண்களுக்கும் தென்படாமல் அவனால் திருடியிருக்க முடியும்.
மேற்கண்ட அளவுகோலில் நாம் சிந்திக்கும் போது இந்த ஹதீஸ் ஜின் இனத்தை சேர்ந்த ஷைத்தானை பற்றி சொல்லவில்லை, மாறாக, கெட்ட மனிதர்களை தான் சொல்கிறது. இது தான் குர் ஆனுக்கு முறனில்லாத புரிதலாக உள்ளது.
கெட்ட மனிதர்களை ஷைத்தான் என்று சொல்லும் வழக்கம் உள்ளதா?
இது போன்று கெட்ட மனிதர்களையும் தீய காரியங்களையும் ஷைத்தானுடன் ஒப்பீடு செய்யும் வழமையை பல குர் ஆன் ஹதீஸ்களில் நாம் காணலாம்.
உதாரணமாக, நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது ‘நம்பிக்கை கொண்டுள்ளோம்’ எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது ‘நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே’ எனக் கூறுகின்றனர். 2:14
மேற்கண்ட வசனத்தில் மனித கூட்டத்தை தான் ஷைத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். 5:90
என்று அல்லாஹ் சொல்கிற இந்த வசனத்திலும் மனிதனின் தீய காரியங்களை ஷைத்தானுடன் ஒப்பிடுகிறான்.
மாலையில் குழந்தைகளை வெளியே அனுமதிக்காதீர்கள், அது ஷைத்தான் நடமாடும் நேரம் என்று வருகிற ஹதீஸில் நிஜ ஷைத்தான் என்று பொருள் கொள்ள முடியாது. நச்சு பிராணிகளை தான் ஷைத்தான் என்று இந்த இடத்தில் நபி அவர்கள் சொல்கிறார்கள்.
தொழுது கொண்டிருக்கும் போது இடை மறிக்கும் வகையில் ஒருவர் கடந்து சென்றால் அவர் ஷைத்தான் என்று நபி சொல்வதாக புஹாரி 3275 சொல்கிறது. இதிலும் மனிதனை தான் ஷைத்தான் என்று நபி சொல்கிறார்கள்.
ஆக, ஷைத்தான் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதாலேயே அங்கே நிஜ ஷைத்தான் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்கிற இவர்களது வாதம் தவறு என்று ஆகிறது.
ஷைத்தான் என்று வந்தாலும், அந்த இடத்தில் நிஜ ஷைத்தானா அல்லது தீய மனிதர்களையோ தீய செயல்களையோ ஒப்பீடு செய்வதற்காக ஷைத்தான் என்று அங்கே சொல்லப்பட்டதா?. என்பதை ஆய்வு செய்து அதன் பிறகு தான் நாம் பொருள் செய்ய வேண்டும்.
ஷைத்தான் தீண்டியது போல பைத்தியமாக எழுவார்கள் என்பதற்கு என்ன பொருள்?
2:275 வசனத்தில் சிலர் ஷைத்தான் தீண்டியது போல பைத்தியமாக மறுமையில் எழுவார்கள் என்று அல்லாஹ் சொல்வதை வைத்து, ஷைத்தானால் மனிதர்களை பைத்தியமாக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
இதுவும் மேலே விளக்கப்பட்டது போன்ற புரிதலில் எழும் தவறு தான்.
ஷைத்தானின் நோக்கமே மனிதர்களை கெட்ட வழியில் செலுத்துவதும் அதன் மூலம் அவர்களை நரகத்திற்கு அழைத்து செல்வதும் தான் என்று குர் ஆன் சொல்கிற போது (பார்க்க 35:6) இதற்கு முரணாக, மனிதர்களை ஷைத்தான் பைத்தியமாக்குவான் என்று நம்புவது குர்ஆனுக்கு முரணானது. காரணம், மனிதனை பைத்தியமாக்கி விட்டால் அவனால் அந்த மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்ல முடியாது. பைத்தியம் தெளிகிற வரை மனிதர்களுக்கு எந்த பாவமும் எழுதப்படாது என்று ஹதீஸ்கள் சொல்லும் போது, இங்கே ஷைத்தானின் நோக்கமாக குர் ஆன் கூறுவது பொய்ப்பிக்கப்படுகிறது.
மேலும், 14:22 வசனத்தில் ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் சொல்லும் போது, தனது அழைப்பிற்கு இசைய செய்வது தான் மனிதர்கள் மீது அவனுக்கு இருக்கும் ஆற்றல் என்றும் அதை தாண்டி தமக்கு வேறெந்த ஆற்றலும் இல்லை என்றும் சொல்கிறான்.
மேலும்,
எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை’ (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன் என்று 17:65 வசனத்திலும், 34:21 வசனத்திலும் அல்லாஹ் தெளிவாக சொல்கிறான்.
உள்ளங்களில் தீய எண்ணங்களை இடுவதை தாண்டி வேறெந்த கெடுதலும் அவனுக்கு இல்லை, வேறெந்த அதிகாரமும் அவனுக்கில்லை.
மாறாக, மனிதர்கள் மீது உள்ள அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது என்று அல்லாஹ் சொல்கிறான்.
உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?’ என்று கேட்பீராக! 48:11
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா? 5:76
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! 10:106
ஆகிய வசனங்களில், மனிதனுக்கு கெடுதலோ நன்மையோ செய்கிற அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது என்று சொல்கிறான். உள்ளங்களை வழிக்கெடுக்கும் ஆற்றலை ஷைத்தானுக்கு வழங்கி விட்டதாக அல்லாவே சொல்லி விட்டதால், இந்த வசனங்களில் தமது அதிகாரமாக அல்லாஹ் சொல்வது உடல் உபாதைகள் செய்வதை தான் குறிக்கும்.
அயூப் நபிக்கு நோய் உருவாக்கியது ஷைத்தானா?
38:41 வசனத்தில் தமக்கு ஷைததான் நோய் தந்து விட்டதாக ஆயூப் நாபி சொல்வதாக வருகிறது. இதை வைத்துக்கொண்டு, சிலர் ஷைத்தான் உடலில் நோயை வழங்கும் ஆற்றல் கொண்டவன் என்று வாதிடுகின்றனர்.
இத்தகைய நம்பிக்கையும் குர் ஆனுக்கு முரணான நம்பிக்கையாகவே உள்ளது
எப்படி பைத்தியம் ஆக்குவது ஒரு மனிதனை நரகத்தை விட்டும் தூரமாக தான் ஆக்குமோ அது போல ஒருவனுக்கு நோய் கொடுப்பதும் அவனை நரகத்தை விட்டும் தூரமாக தான் ஆக்கும்.
நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நோய், கஷ்டங்களும் நமது பாவங்களை மன்னிக்க உதவுகின்றன, அதன் மூலம் நமது சிறு சிறு பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று ஹதீஸ்கள் சொல்கிற போது இத்தகைய நன்மையான காரியத்தை செய்வது ஷைத்தானின் நோக்த்திற்கு எதிரானதாகும்.
அவன் மனிதனை வழிக்கெடுத்து நரகத்திற்கு கொண்டு செல்லத்தான் உலகில் இருக்கிறானே தவிர மனிதர்களின் பாவங்களை மன்னிக்க உதவி செய்வதற்காக அல்ல.
அந்த வகையில், அயூப் நபிக்கு வந்த நோய் கூட, அது ஒரு தீங்கு, தொந்தரவு என்கிற வகையில் ஷைத்தானுடன் தொடர்பு படுத்தி சொல்கிறார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
நபிமார்களை ஷைத்தானால் தீண்ட முடியாது
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. 16:99
அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்’ என்று கூறினான். 15:40
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். 26:221,222
மேற்கண்ட வசனங்கள் நமக்கு உணர்த்தும் செய்தியானது, ஷைத்தான் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்களை எந்த வகையிலும் தீண்டவே மாட்டான் என்பதாகும்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களில் முதலிதத்தில் இருப்பவர்கள் நபிமார்கள் தான் என்கிற வகையில், யாரை தீண்டினாலும் நபிமார்களை அவனால் ஒருகாலும் தீண்ட முடியாது. ஒரு சில வசனங்களில், நபிமார்களையும் ஷைத்தான் வழி கெடுப்பான் என்று அல்லாஹ் சொல்வது கூட, நபிமார்களிடமும் ஷைததான் வருவான், ஆனால் அவனது முயற்சி எடுப்படாது என்பதை விளக்குவதற்கு தான்.
இதை புரிகிற போது, அயூப் நபிக்கு நோய் கொடுத்தது ஜீன் இனத்தின் ஷைத்தானல்ல, மாறாக தீய காரியத்தை ஷைத்தானுடன் பொருத்தி சொல்கிற வழமையின் வெளிப்பாடு தான் அது என்று அறியலாம்.
சூனியம் என்பது ஷைத்தானின் தீண்டலா?
ஷைத்தானால் உள்ளங்களை கெடுப்பதை தவிர வேறு உடல் உபாதைகள் எதையும் செய்ய முடியாது என்பதையும், அப்படியே செய்யலாம் என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் கூட நபிமார்களுக்கு செய்ய முடியாது எனவும் அறிந்தோம்.
அதே சமயம், சூனியம் என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் என்னவென்று பார்க்கையில், அது அற்புத செயல் என்றோ, வித்தை என்றோ நம்பாமல் ஷைத்தானின் செயல் என்று நம்ப வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எந்த நபிமார்களுக்கும் ஷைத்தானால் உடல் உபாதையோ, பைத்தியமோ உண்டாக்க முடியாது என்பது போல் சூனியமும் செய்ய முடியாது.
இதற்கு 17:101, 25:8, 26:153, 26:185 போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன.
.இவற்றில் நபிமார்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக காபிர்கள் கூறி அதன் மூலம் வழி கேட்டுக்கு போனதை பற்றி அல்லாஹ் விவரிக்கிறான்.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, ஒரு வாதத்திற்கு மற்ற நபிமார்களுக்கு சூனியம் செய்யலாம் என்று சொன்னால் கூட, முஹமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யவே முடியாது.
காரணம், இந்த நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக யார் நம்புகிறாரோ அவர் வழி கெட்டவர் என்று அல்லாஹ் சொல்வதோடு, முஹமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்தியமாக்கப்படவில்லை என்றும் கூறுகிறான். (பார்க்க : 68:5, 17:47,48)
மேலும், முஸ்லிமில் பதிவாகியுள்ள 5421 ஹதீஸில், ஷைதததான் தமக்கு எந்த தீமையும் செய்ய மாட்டான் என்றும், அல்லாஹ் அவனை விட்டும் தம்மை பாதுகாத்து விடுவான் எனவும், அவன் தமக்கு நல்லதையே சொல்வான் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே சொல்வதாக பதிவாகியுள்ளது.
இதை வைத்து சிந்திக்கையிலும், முஹமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக நம்புவது குர் ஆனுக்கும் ஏனைய ஹதீஸ்களுக்கும் முரணாக தான் உள்ளது.
ஆக எந்த வகையிலும் சூனியம் என்பது அற்புத காரியம் என்றோ, ஷைத்தானின் தீண்டல் என்றோ நம்புவது நம்மை இணை வைக்கும் மாபாததக நிலைக்கு தான் தள்ளும் என்பதை சிந்திக்கும் அதே நேரம், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை நம்ப வேண்டும் என்று சொல்பவர்களின் முரண்பாடுகளையும் நாம் சிந்தித்தால் இதிலிருந்து எளிதில் விடுபட்டு விடலாம்.
சூனியம் என்பது அற்புதம் என்கிற பொருளில் குர் ஆன் நெடுகிலும் சொல்லப்படவில்லை.
அது ஒரு அற்புத காரியமாக, நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஹதீஸில் தான் சொல்லப்படுகிறது.
இது குர்ஆணுக்கு முரணாக உள்ளதே என்று கேட்கிற போது, இங்கே அற்புதம் என்று புரியக்கூடாது என்று சொல்கிற அவர்கள், அதை ஷைத்தானின் தீண்டல் என்று புரிய வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், நபியை ஷைத்தானால் தீண்ட முடியாது என்கிற செய்திக்கும், நபிக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்கிற வசனத்திற்க்கும், நபி பைத்தியமாக்கப்படவில்லை என்கிற இறை வசனத்திற்க்கும் இந்த வாதம் நேர் முரணாக இருப்பதை அவர்கள் புரியவில்லை
source: http://nashidahmed.blogspot.in/