நன்மை பயக்கும் நபிமொழி – 82
o பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும்
“ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஈர்வலி சீப்பு ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்” என்று கூறி விட்டு, “(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4358)
o சப்தமிட்டு திக்ர் செய்யாதீர்கள்
“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்றும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூசா அல்-அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2992)
o எந்த உணவையும் ஒரு போதும் குறை சொல்லாதீர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டு விடுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5409)
o வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “உங்களுக்கு முன்னிருந்த(சமுதாயத் த)வர்கள் தங்களுடைய நபிமார்கள், நற்குணங்கொண்டோரின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்துவிட வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறியதை நான் செவியுற்றேன். (அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 827)
o சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட…
‘உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு, “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயீ 148)
o மக்களின் மானத்துடன் விளையாடியவர்களுக்கு நரகம்
“நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது (மிஃராஜ்) ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும் நெஞ்சுகளிலும் கீறிக் கொண்டனர். ஜிப்ரீலே இவர்கள் யார்?” எனக் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “இவர்கள் தான் (புறம் பேசி) மக்களின் இறைச்சியை உண்டவர்கள், மேலும் மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத் 4878)
o பொய்யான செய்தியைக் கூறுகிறவனுக்குக் கேடு தான்
“எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 2237)
o கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதினால்..
“கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 9585)
o அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறவரை அல்லாஹ்வும் சந்திக்க விரும்புகிறான்
“யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5207)
o (மார்க்க) விவகாரத்தில் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்
“நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2697)
o மறுமையில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் பேசுவான்
“உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7443)
o ஜோதிடன் கூறுபவற்றை நம்புகின்றவன் இறைமறுப்பாளனே
“ஒருவன் குறி கூறுபவனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்வதாக கூறுபவனிடம் (ஜோதிடன்) சென்று அவன் கூறுபவற்றை நம்பினால், நிச்சயமாக அவன் முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட (குர்ஆன் என்னும் வேதத்)தை நிராகரித்தவன் ஆவான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 9171)
o நபியைக்கூட அளவுக்கு மீறி அதிகமாக புகழவேண்டாம்
‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3445)