தறிகெட்ட காதலும் தடுமாறும் குடும்பங்களும்
ஓடிப்போவதற்கான முக்கியக் காரணங்கள்:
தாயோடும், குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு இல்லாமை.
டீன் ஏஜ் அறியாமை.
மார்க்கத்தை சொல்லி வளர்க்காதது.
இந்த வயதுக்கே உரிய அதிகப்படியான எதிர்பார்ப்பு.
தான் எடுக்கும் முடிவு சரிதான் என்று தன் மேல் தனக்கிருக்கும் அதிகப்படியான நம்பிக்கை.
சில நாட்கள் அனுபவம் காலம் முழுவதும் வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை.
உலகில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட எதுவுமே நிரந்தரமில்லாத போது பிறர் தன் மீது செலுத்துகின்ற அன்புதான் நமக்கு நிரந்தரமான சந்தோசத்தை தரும் என்ற தவறான நம்பிக்கை.
காதலர்களாக இருக்கும் வரைதான் இந்த சந்தோசம் கல்யாணம் முடிந்து விட்டால் அவர்களும் சராசரி கணவன் மனைவியே இது காதல் வாழ்க்கை அல்ல! குடும்ப வாழ்க்கை இதில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணராத டீன் ஏஜ் மனநிலை.
நாம் செய்ய வேண்டிய கடமைகள்:
மூன்று வயதிலிருந்து உலகக்கல்வியை கற்றுக்கொள்ளும் அறிவு வந்து விட்டதென்று ஸ்கூலுக்கு அனுப்புகிறோமே! அதே வயதிலிருந்தே ஒவ்வொரு குழந்தைக்கும் அல்லாஹ்விற்கு பயந்து வாழ வேண்டும் என்பதையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் காட்டித்தந்த வழிமுறைகளையும், குடும்பம் என்றால் என்ன அதில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் உணர வைக்க வேண்டாமா?
குழந்தைகள் நமக்கு முக்கியமானவர்கள். அவர்களிடமிருந்து நாம் என்ன எதிர் பார்க்கிறோம் என்பதைப் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேச வேண்டும். சாப்பிடும் போதும், ஓய்வின் போதும் டிவி பார்ப்பதை குறைத்துவிட்டு இப்படிப்பட்ட நல்ல விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் வருடத்திற்கு ஒரு முறையாவது எத்தனை வேலைகள் இருந்தாலும் நேரம் ஒதுக்கி குடும்பத்தோடு சுற்றுலா போக வேண்டும் நம்மை விட்டுப்பிரிய மனமில்லாத குழந்தைகளாக, அன்பைக் கொட்டி வளர்க்கவேண்டும்.
குழந்தைகளிடம் நீ ஆசை ஆசையாக உருவாக்கிய ஒரு தோட்டத்தில் அழகாக வளர்ந்து வந்த செடிகள் பருவ வயதை அடைந்து பூ பூத்து காய் காய்க்கும் தருணத்தில் வேரோடு செடிகளை பிடுங்கிக் கொண்டு போனால் உன் மன நிலை எப்படியிருக்கும் என்று அந்த பிள்ளையிடமே கேள்வியாக கேட்க வேண்டும். அப்படித்தான் பெற்றோர்களை விட்டும் பிள்ளைகள் பிரிக்கப்படும் போதும் இருக்கும் என்பதைப் புரியவைக்க வேண்டும்.
இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான அறிவை வளர்த்துக்கொள்ள எத்தனையோ விசயங்களை கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் முக்கியமாக கற்பிக்கவேண்டிய விசயம் அல்லாஹ்வின் மார்கத்தையும் பின்பு மனிதர்களின் குணநலன்களையும் பற்றித்தான். இதை நாம் எப்போது புரிந்துகொள்கின்றோம் என்றால் நம் அனுபவத்தால் 40, 50 வயதில்தான். அதற்குப்பின் தெரிந்து என்ன பயன்? நம் வாழ்வில் கிட்டதட்ட எல்லாமே முடிந்திருக்கும். இந்த நிலை மாற வேண்டும். மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும், அவர்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யாருடைய பகட்டு வார்த்தையிலும் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். என்பதை புரிய வைக்க வேண்டும்.
பொதுவாக தற்போது ஆண்கள் பெண்களிடமும் பெண்கள் ஆண்களிடமும் உருவாகும் தவறான உணர்ச்சிகளின் தூண்டுதலினால் தான் ஓடிப்போகிறார்கள். மிகப்பெரிய ஒரு கற்பனை வாழ்க்கையை கனவில் கொண்டு அந்த அன்பு நிலையானதென்றும் நம்பி காதலினால் கிடைத்த சந்தோஷம் வாழ்க்கைக்காலம் முழுவதும் கிடைக்கும் என்றும் நம்பி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் ஏமாந்து போகிறார்கள்.
அல்லாஹ்வின் விருப்பத்தை மட்டும் நம்பி தெளிவான மனநிலையோடு வளரும் குழந்தைகளை டிவியோ, இன்டர்நெட்டோ, புத்தகங்களோ ஒருநாளும் கெடுத்து விட முடியாது. ஷைத்தானின் தூண்டுதலினால் சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றினாலும் இறை நம்பிக்கையும், கற்றுக்கொண்ட நல்ல விசயங்கலும் அவர்களைத் தடுக்கும். எனவே எந்தத் தவறான விசயமும் நம்மை அணுகாமல் இருக்க நம்மை சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும். அதுதான் அல்லாஹ்வின் மீதான பயம், மார்க்க சிந்தனை, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு காட்டித்தந்த வழிமுறைகள் இதையெல்லாம் அடிப்படையிலேயே அறிந்து வளரும் பிள்ளைகளால் நிச்சயமாக மனதைப் பக்குவமாக வைத்துக்கொள்ள முடியும். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
மேலும் வரும் காலங்களில் ஓவ்வொரு பள்ளியிலும் சைக்காலஜி ஒரு கட்டாயப் பாடமாக இருக்கவேண்டும். அறிவியல் கற்றுக்கொடுக்கிறோம். கணக்குக் கற்றுக்கொடுக்கிறோம். இன்னும் எத்தனையோ விசயங்களை கற்றுக்கொடுக்கிறோம்.மனிதர்களின் மனநிலையைப் பற்றியும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது வாழ்க்கைக் கல்வி. ஒவ்வொரு குழந்தையும் கட்டாயமாக கற்று வளர வேண்டிய பாடம். இதற்கு பெற்றோர்களுடைய ஒத்துழைப்பும் வேண்டும்
அல்லாஹ் மாசற்ற தூய்மையான மனதோடு தான் குழந்தைகளை நமக்கு கொடுத்திருக்கிறான். அதை தங்கமாக்குவதும் தகரமாக்குவதும் பெற்றோர்களின் வளர்ப்பில் இருக்கிறது.
(இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ்வின் உதவியோடு நாம் முதலில் பெற்றோர்களுக்கு அவர்களின் கடமையை புரிய வைக்க வேண்டும். பிள்ளைகளை தவறு செய்ய விட்டுவிட்டு திருத்துவதைவிட தவறு செய்யாமல் இருக்க நாம் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு புத்தி சொல்லும் குழந்தைகளாக என் குழந்தைகளை நான் உருவாக்குவேன் என்று மனதில் சபதம் எடுக்க வேண்டும் இது நம் கடமை. நம் அனைவரின் ஒத்துழைப்போடு இனிவரும் சமுதாயம் ஒரு நல்ல சமுதாயமாக உருவாக எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.
– நாகப்பட்டிணத்தில் இருந்து உங்கள் சகோதரி.
source: http://www.samooganeethi.org/?p=1272