இஸ்லாமிய கலாச்சாரம் – பொருள் விளக்கமும் அதன் நவீன உபயோகமும்
நமது கலாச்சாரம் குறித்தும், நமது கலாச்சாரம் என்று எதனை நாம் கூறுகிறோம்? என்பது குறித்தும் பேசுவதற்கு முன்பு கலாச்சாரம் என்ற சொல்லின் பொருளை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய நவீன அரபி மொழியில் புதிய பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன. பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் அச்சொற்களில் அதிகமானவை இலக்கிய ரீதியான பொருள் எதுவும் இல்லாதவையே! ஆனாலும் கலாச்சாரம் எனும் சொல் நவீன வார்த்ததையாக இருப்பினும் இலக்கிய ரீதியாக பொருள் கொண்டதே.
கலாச்சாரம் என்பதற்கு அரபி மொழியில் ‘ சகாஃபத்’ எனும் சொல் ஆளப்படுகிறது.
அல்-முஃஜமுல் வஸீத் எனும் அரபி மொழி அகராதியில் அதற்கு கல்வி, அறிவு, கலைகள் என மூன்று அர்த்தங்கள் உள்ளதாகக் கூறிய பிறகு கடைசியில் இது நவீன அரபிச் சொல் என்ற குறிப்பும் காணப்படுகிறது.
சகாஃபத் என்பது சகஃப எனும் அடிச்சொல்லில் இருந்து வந்ததாகும். அரபி மொழி இலக்கிய நூல்களில் சகஃப என்பதற்கு இரு பொருள்கள் காணப்படுகின்றன.
ஓன்று : அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம்.
ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபி மொழியியல் வல்லுனர் பேரறிஞர் இப்னுஸ் ஸிக்கீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதனைக் கூறியுள்ளார்கள். வரலாறு பதிவு செய்துள்ள ஒரு நிகழ்வும் இதற்கு இன்னொரு ஆதாரம். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையுடன் இரட்டையராகப் பிறந்த உம்மு ஹகீம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். அந்நிகழ்ச்சியில் உம்மு ஹகீம் ஒரு விஷயத்தில் அபூலஹபின் மனைவி உம்மு ஜமீலுக்கு இவ்வாறு பதிலளிப்பார்கள். “நிச்சயமாக நான் கற்புப் பரிசுத்தமானவள் என் மீது யாரும் அவதூறு கூற கூற முடியாது. நான் புத்திசாலித்தனமானவள் எனக்கு யாரும் புத்திமதி கூற வேண்டியதில்லை.”
இதில் அச்சொல் புத்திசாலித்தனம் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.
இன்னொரு பொருள் : சரிப்படுத்துதல், நேராக்குதல் எனும் பொருளாகும். இதனடிப்படையில்தான் வில், அம்பு போன்றவை வளைந்திருப்பின் அவற்றைத் தட்டி நேராக்கும் இரும்புக் கருவிக்கு சிகாஃப் என்று கூறப்படுகிறது. இது சகஃப எனும் அடிச்சொல்லில் இருந்து வந்ததே. காமூஸ் எனும் அரபி அகராதியின் விரிவுரையாளர் அச்சொல்லுக்கு நெறிப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளதாகக் கூறுகிறார்.
பின்வரும் பழமொழித் தொடர் அவருக்கு ஆதாரம். நீ மட்டும் என்னை நெறிப்படுத்தாதிருப்பின் நான் ஒன்றுமில்லாமல் போயிருப்பேன். உனது கரங்களில்தானே நான் நெறிப்படுத்தப்பட்டேன். இப்பழமொழித் தொடரில் இடம் பெற்ற சகஃப எனும் சொல்லே நெறிப்படுத்துதல் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. மேலே நாம் குறிப்பிட்டவற்றில் புத்திசாலித்தனம் நெறிப்படுத்துதல் ஆகிய இரு பொருட்களையும் உள்ளடக்கிடும் வகையில்தான் நவீன அரபி மொழியியல் வல்லுனர்கள் சகாஃபத் எனும் சொல்லுக்கு கலாச்சாரம் என்ற பொருளைத் தந்துள்ளார்கள்.
இவ்வாறு உருவான கலாச்சாரம் எனும் சொல் இப்பொழுது பல வகையில் விரிவடைந்துள்ளது. கலாச்சார நெருக்கடி, கலாச்சாரப் பாரம்பரியம், கலாச்சார யுத்தம் ,கலாச்சார ஆதிக்கம் எனஅதனுடன் இணைக்கபட்ட பல புதிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன. நவீன உலகில் கலாச்சாரம் தொடர்பான பல அமைப்புகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. முஸ்லிம் நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கலாச்சரத்திற்கென தனி அமைச்சகங்களும் உள்ளன.
கலாச்சாரம் என்று எதனைக் கூறுவது?
‘சகாஃபத்’ எனும் சொல் நவீன அரபி மொழியில் கலாச்சாரம் என்ற பொருளில் புழங்கப் படுவது குறித்து முன்னர் விளக்கினோம்.
இப்போது கலாச்சாரம் என்று எதனைக் கூறுவது? என்பது குறித்துப் பேசவுள்ளோம்.
கலாச்சாரம் எது என்று வரையறை செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகளை அதிகம் காணமுடிகிறது. எனினும் அவற்றில் இரண்டைப் பற்றி இங்கே நாம் பாப்போம்.
ஒன்று : இது கலாச்சாரம் என்பதை அறிவுத்துறையுடன் சுருக்கிக் கொண்டோரின் கருத்தாகும். கல்வி, சிந்தனை, இலக்கியம், அறிவியல், கலைகள் என அறிவுத்துறை தொடர்பானவற்றை மட்டும் இப்பிரிவினர் ‘கலாச்சாரம்’ என்று கூறுகிறார்கள். நாம் முன்னர் குறிப்பிட்ட அல் – முஃஜமுல் வஸீத் அரபி மொழி அகராதியிலுள்ள பொருளுக்கு இவர்களின் கருத்து ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொன்று : அறிவுத்துறையையும் தாண்டி, ஆத்மா தொடர்பான மார்க்கம், வணக்க வழிபாடுகள், பண்புகள் (அக்லாக்) சம்பாத்தியங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ‘கலாச்சாரம்’ என்று கூறுவோரின் கருத்தாகும். இவர்களின் கருத்துப்படி கல்வி, கலைகள், கொள்கைகள், பண்பாடுகள், வணக்கவழிபாடுகள், தொழில்கள் ஆகியவற்றின் கூட்டுக்கலவையே கலாச்சாரம் என்று அதன் பொருள் விரிவடையும்.
கேள்வி – பதில் நிகழ்ச்சி ஒன்றில் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் சாப்பிடுவதில் கலாச்சாரம் எதுவும் இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
நான் சொன்னேன் கடித்தல், மெல்லுதல், விழுங்குதல் ஆகியவை மட்டுமே உண்பதின் நோக்கமாக இருந்ததெனில் அதில் கலாச்சாரம் எதுவும் இல்லைதான். ஏனெனில் இம்மூன்றையும் மிருகங்களும் செய்யத்தான் செய்கின்றன. இன்னும் ஆழமாகப் பார்ப்பின் இது விஷயத்தில் அவை மனிதனை விட ஒரு படி மேலாகவே உள்ளன. அவை மனிதனைவிட பெரிய வயிறு கொண்டவை மட்டுமல்லஸ.. மனிதனைவிட அதிகம் சாப்பிடுபவையும் கூட!
அதேநேரத்தில் சாப்பிடும் விஷயத்தில் மனிதனைப் பார்த்து இவ்வாறு கூறப்படுகிறது என வைத்துக்கொள்வோம்.
அல்லாஹ்வின் பெயரைக் கூறி சாப்பிடு!
உனது வலது கையினால் சாப்பிடு!
(பல பேருடன் ஒரே தட்டில் சாப்பிடும் சமயத்தில்) உனது அருகில் இருப்பவற்றைச் சாப்பிடு. (நூல் : புகாரி முஸ்லிம்)
ஹலாலானதை சாப்பிடு அல்லாஹ் ஹராமாக்கியவற்றைச் சாப்பிடாதே!
அனுமதிக்கப்பட்ட ஆகுமான பாத்திரங்களில் சாப்பிடு! தங்கம், வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிக்காதே!
பசித்தால் சாப்பிடு! வீண்விரயம் செய்யாதே! மனிதன் நிரப்பும் பைகளில் வயிற்றை விட தீங்கானது எதுவும் இல்லை.
சாப்பிட்டு முடித்த பின்பு அல்ஹம்துலில்லாஹ். (அல்லாஹ்வுக்கே புகழ்அனைத்தும்) என்று கூறு!.
ஆக இவ்வாறெல்லாம் ஒருவனுக்கு கூறப்பட்டதெனில் சாப்பிடுவதும் நிச்சயமாக கலாச்சாரமாக ஆகிவிடும். ஏனெனில் இவற்றை மிருகங்களினால் செய்ய இயலாது அல்லவா!
நடப்பதும் சாப்பிடுவது போன்றுதான். மனிதனும் நடக்கின்றான், மிருகங்களும் நடக்கின்றன.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ் எல்லாப் பிராணிகளையும் தண்ணீரில் இருந்தே படைத்துள்ளான். அவற்றில் சில வயிற்றால் ஊர்ந்து நடப்பவை. இன்னும் சில இரு கால்களால் நடப்பவை. இன்னும் சில நான்கின் மீது நடப்பவை. (அல்குர்ஆன் – 24.45)
ஆக பொதுவாக நடப்பது என்பதில் கலாச்சாரம் எதுவும் இல்லைதான். ஆனால் ஒருவனை நோக்கி இவ்வாறு கூறப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
உனது நடையில் நடுநிலையை கடைப்பிடி. (அல்குர்ஆன் – 31.19
அறிவீனர்களைப் போன்று அதிவேகமாகவும், இறந்தவர்களைப் போன்று மிக மெதுவாகவும் நடக்காதே.
பூமியின் மீது அவர்கள் பணிவாக நடப்பார்கள் (அல்குர்ஆன்-25:63) எனும் வசனத்தை கவனத்தில் கொண்டு நீ பணிவாக நட.
பெருமையாகவும், ஆணவமாகவும் நீ நடக்காதே ! அல்லாஹ் கூறுகிறான் “பூமியில் நீர் பெருமையாக நடக்காதீர். நிச்சயமாக (உமது கர்வமான நடையால்) பூமியை உம்மால் பிளக்கவும் முடியாது. மலையின் உச்சியை அடையவும் இயலாது.” (அல்குர்ஆன் – 17:37)
ஆக இவ்வாறெல்லாம் கூறப்படும் பொழுது நடப்பதும் கலாச்சாரமாக ஆகிவிடும்.
இவ்வாறே பணத்தை மையமாகக் கொண்ட (தொழில்கள், வேலைகள், வியாபாரங்கள் உட்பட) எல்லாக் காரியங்களிலும் ஒழுக்க நெறிகள், உன்னதமான இலட்சியங்கள், முன்னேற்றத்தைத் தரும் மதிப்பீடுகள் போன்றவை அவற்றுடன் சேர்ந்து இருந்ததெனில் அவையும் கலாச்சாரமாகக் கருதப்படும். அவற்றைப் பேணும் சமயத்தில் எதனையும் பேணாத மிருங்களின் செயல்பாட்டில் இருந்து விலகி மனிதன் தனித்துவம் பெறுகிறான் என்பதே அதற்குக் காரணம். ஆக ஒவ்வொரு செயலிலும் கலாச்சாரம் உள்ளது என்பதைக் கேள்வி கேட்ட அந்த நண்பருக்குப் புரிய வைத்தேன்.
source: http://www.samooganeethi.org/?p=1257