ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும் (2)
பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிட வேண்டும்
1. கீழாடை
2. முகத்தை மூடுவதற்கு முந்தானை
3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை
4. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.
மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிதான் .
ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூதாவூத் ஹதீஸ் கிதாபில் காண முடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால் மஃமூம்கள் இமாமுக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம். ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையை உயர்த்த வேண்டியதில்லை.
முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா) ஓதிக் கொள்ளவேண்டும்.
இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்; (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் என்று சொன்னால்கூட போதுமானதாகும்.
மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும். (அல்லாஹும் மக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு வ ஆஃபிஹி வஃபு அன்ஹு வநக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்) என்று ஓதிக்கொள்ள வேண்டும் இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்
நான்காம் தக்பீருக்கு பின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். (ஹதீஸ்: ஹாக்கிம்)
ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறி விட்டதை பூர்த்தி செய்யவேண்டும் ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது இருக்கிறார்கள். (புஹாரி முஸ்லிம்)
நான்கு மாதம் பூர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: அபூ தாவூத்)
ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத்தக்ககதாகும். வழிப்பபறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ஊர் முக்கியஸ்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)
ஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.
ஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்
ஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ) ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள். தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது
மூன்று நேரங்களில் தொழக்கூடாது
மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்றும், எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்.
அந்நேரங்கள்….
1. சூரியன் உதிக்கும் போது.
2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.
3. சூரியன் மறையும் போது.
என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ். (முஸ்லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.
பெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான்மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வார்கள். இதற்கு (ஷக்கு) என்று சொல்லப்படும். இப்படிச் செய்யக்கூடாது. இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் “ம் மற்றவர்களுக்கு ‘ ஷக்கு கு’ம் என்று கூறினார்கள் (அபூதாவூத்)
குறிப்பு: இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும். துர்நாற்றம் வெளியில் வராமலும். கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல் இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும். மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோ அல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.
மைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர் (பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி) என்று சொல்லிக் கொள்ளவேண்டும் இப்படிதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் (அபூதாவூத்) மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (பைஹகீ)
(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல், மண் போன்ற எதையும் வைப்பது கூடாது. இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும் அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருன் இருந்தததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)
கப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது, பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது, மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)
ஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டி அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தை அடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில் சிறிதளவு தடுப்பை ஏற்படுத்த வேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள். இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.
ஜஃபர் பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்கு உணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்). எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம் சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரியின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)
ஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது (ஜியாரத் செய்வது) சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)
பெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்” கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள் “” (திர்மிதி, அபூதாவூத், நஸஈ இப்னுமாஜா, அஹ்மத்)
பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற பலகீனமானவர் இழப்புகளை தாங்கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹராமாக்கப்பட்டிருக்கலாம். (இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்) அடுத்து கப்ரை தரிசிப்பவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும்லாஹிகூன்” என்று செல செல்லவேண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள். (முஸ்லிம்)
இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும் எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க் என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்கு ஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்
ஆறுதல் கூறுதல்
இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும். (இன்ன லில்லாஹி மா அகத வலஹு மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹு பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்)
பொருள்: நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக்குரியதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்று ஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புகாரி, முஸ்லிம்)
இன்னும் (பிவழி அஃழமல்லாஹு அஜ்ரக ரக்) இந்த) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹு அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும் என்றும் ஆறுதல் சொல்லலாம்.
ஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப்படாமல் அழலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதார்கள். ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புகாரி, முஸ்லிம்) ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில் வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந்தவர் செய்ததையும் பேசியதையும் சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்க முடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக ஆடைகளைக் கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டை போட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)
இறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம் செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம் அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் ” இத்தா “” என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால் இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.
இன்னும் இதுபோன்ற பித்அத்துகளில் ஒன்றுதான் ஜனாஸாவைத் தூக்குவதற்க்கு பயன்படுத்தும் ஜனாஸாப் பெட்டி(சந்தூக்)யின் மீது பச்சைத்துணி விரிப்பது, தூக்கி செல்கிறபோது ஷஹாதா கலிமாவை சப்தமிட்டுக் கொண்டு செல்வது, ஜனாஸா தொழுகை முடிந்தவுடன் இமாம் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமின் கூறுவது அடக்கி முடிந்த பின்னர் கப்ரின் தலைமாட்டில் இருந்து கொண்டு தல்கீன் என்ற பெயரில் பலருக்கும் புரியாத மட்டு மின்றி அதை ஓதுபவர்களில் கூட பலருக்கு அது என்ன என்று தெரியாத சில அரபி வார்த்தைகள் கூறுவது போன்ற ஏராளமான பித்அத்கள் நடைபெறுகின்றன.
இறந்தவர் வீட்டில் நட நடக்கும் அனாச்க்சாரங்களை ஒரு புத்தகமாகூட வெளியிடலாம். எனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்து தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்.
தொகுத்தவர் :
M.A.லியாக்கத் அலி மிஸ்பாஹி