இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்!
அந்த ஏக நாயனான அல்லாஹ்வை அவனது தகுதியிற்கு ஏற்றாற்போல் கண்ணியப்படுத்தாதவர்களும் மறுமை நாளின் கடும் வேதனைக்கு உள்ளாவார்கள். இவர்கள் இரு சாரார்கள்
1) படைப்பினங்களை அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தியவர்கள்.
2) அல்லாஹ்வின் கண்ணியத்தை அவனது படைப்பினங்களின் அளவிற்கு குறைத்தவர்கள்.
இருவரும் குற்றவாளிகளே…..
அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 39:67)
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற் குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட் களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)
எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு’ என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 19:35)
சத்தியம் தம்மிடம் வந்தபின் தர்க்கம் புறிந்து அதை ஏற்க மறுப்பவர்கள்
உண்மையான சத்தியம் தம்மிடம் வந்த பின் அதை ஏற்க மறுத்து, அகம்பாவம் கொண்டு தாம் உள்ள அசத்தியிலேயே தொடரும் பாவிகள் நிச்சயம் கடும் வேதனையை சுமந்தவர்களாக மறுமையில் நரகம் புகுவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)
தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம். (அல்குர்ஆன் 32:22)
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவ ருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். (அல்குர்ஆன் 43:36)
இட்டுக்கட்டிய பாவிகள்
அல்லாஹ் கூறாததை அவன் மீது இட்டுக்கட்டி அற்பக்கிரயத்திற்காக இந்த தூய மார்க்கத்தை வியாபாரமாக்கி வயிறு வளர்க்கும் பாவிகள் மறுமை நாளின் கடும் வேதனைக்கு சொந்தக்காரர்கள். அல்லாஹ் சொல்லாததை அவன் மீது இட்டுக்கட்டியதே இதன் காரணம். இவர்களே பாவிகள், குற்றவாளிகள்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:17)
‘அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்’ என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?. ‘அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:68-69)