வாழ்க்கை பறிக்கப்பட்ட மனிதன்!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
மனித வாழ்க்கை ஓர் அற்புதமான அருள். உலகில் வாழும் எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத ஆன்மா, உள்ளம், பகுத்தறிவு, உடலமைப்பு, தோற்றம், ஆளுமை, இரத்த பாசம், சமூக உணர்வு, மனித நேயம் என்பவற்றைப் பெற்று வாழ்கின்ற ஓர் அற்புதமான ஜீவனே மனிதன். அவன் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். அதாவது, அவனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு, ஆன்மா, உள்ளம், ஆளுமை என்பவற்றை விருத்திசெய்து அவற்றால் அவன் பெற முடியுமான இம்மை மறுமைப் பயன்கள் அனைத்தையும் அனுபவித்து வாழ்வதே அவனுக்குப் பொருத்த மான வாழ்வாகும்.
இந்த வாழ்வை ஒவ்வொரு மனிதனும் சுயமாக தேடிக் கொள்ளவும் வேண்டும். மனித வாழ்க்கையை வழிநடத் தும், நிர்வகிக்கும் பொறுப்புவாய்ந்தவர்கள் இத்தகைய தொரு மனித வாழ்வை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்கவும் வேண்டு
மனிதன் அறிவோடு வாழும் பிறவி
மனிதனுக்கு எத்தகைய அறிவைக் கொடுத்தால் அவன் மனிதனாக வாழ்வான் என்பது இங்கு நோக்கத்தக்கது. மனிதனுக்கு அறிவைக் கொடுக்கும் நிறுவனங்களுக்கோ மனிதர்களுக்கோ இது பற்றிச் சிந்திக்கும் கடமைப்பாடுண்டு. தாய், தந்தையர் சில வகையான அறிவைக் கொடுக்கிறார்கள். பாடசாலை சில வகையான அறிவுப் பின்னணியைக் கொடுக்கிறது. நண்பர்கள் வேறு சில வகையான அறிவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சூழல் மற்றொரு வகையான அறிவைத் தருகிறது. ஊடகங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் முதலானவை வேறு சில அறிவை வழங்குகின்றன. மதங்கள், மத ஸ்தாபனங்கள் சில வகையான அறிவைப் புகட்டுகின்றன.
இறுதியில், இந்த அறிவுகளின் கூட்டுக் கலவையொன்று மனிதனுக்குக் கிடைக்கின்றது. அவன் அவற்றை வடிகட்டி தனது வாழ்க்கை உயர்வடைவதற்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை விட்டுவிடுவானா? அல்லது கிடைத்த அறிவு அப்படியே அவனது சிந்தனையில் ஊறித் திளைத்துவிடுமா? இந்த வினாவுக்கான விடை சிலபோது அவனுக்குத் தெரியாதிருக்கும் அவனை உருவாக்கும் சமூகத்திற்கும் தெரியாதிருக்கும். அவ்வாறானதொரு சூழலில் ஒரு மனிதன் தடம்புரண்டு வாழும் ஒரு நெருக்கடியான வாழ்க்கைக்குள் சிக்கிவிடுகிறான். அப்போது அவன் விரும்பியோ வெறுத்தோ அநீதியிழைக்கப்பட்டவனாக மாறுகிறான். அவனது வாழ்க்கை அவனிடமிருந்து பறிக்கப்படுகிறது.
மனிதன் உள்ளத்தோடு வாழும் பிறவி
அறிவைப்போல் மனிதனது வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மற்றொன்றுதான் அவனது உள்ளமாகும். உள்ளம் மாசடைந்தால் அல்லது சீர்கெட்டால் அதுவும் மனித வாழ்க்கையை மோசமாக பாதிப்படையச் செய் கிறது. ஒரு மனிதனது உள்ளத்திலிருக்கும் ஆசைகள், இலட்சியங்கள், கனவுகள், எதிர்பார்ப்புக்கள் ஒரு பக்கம் மனிதன் பாதிப்படையும்போது உள்ளத்திலிருந்து வெளிப்படும் சோகங்கள், கவலைகள், விரக்திகள், உணர்வலைகள் மற்றொரு பக்கம் மனிதர்களோடு பழகும்போது உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற அன்பு, பணிவு, தாராள மனம் போன்ற நல்ல குணங்கள் அல்லது வெறுப்பு, குரோதம், பொறாமை, பெருமை போன்ற தீய குணங்கள் இன்னுமொரு பக்கம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் சாதிப்பதற்கும் முற்படும்போது வருகின்ற நம்பிக்கை, உற்சாகம், மனோபலம் அல்லது வாழ்க்கையை பின்னோக்கி இழுக்கும் கவனயீனம், மறதி, சோம்பேறித்தனம், விளையாட்டு மனப்பான்மை போன்றவை வேறு ஒரு பக்கம்.
இவ்வாறு ஒரு மனிதனது உள்ளத்தில் காணப்படும் பல்வேறு சாதக, பாதக நிலைமைகள் அவனது வாழ்வில் சீர்மையையோ, சீர்கேட்டையோ தோற்றுவிக்கின்றன. ஒரு மனிதனது வாழ்வில் இத்தகைய மன நிலைகளை உருவாக்குவதன் மூலம் மனிதனை சீராக்கும் அல்லது சீரழிக்கும் வேலையை யாரோ செய்துவிடுகிறார்கள்.
அவர்கள் யாராயினும் சரி, ஒரு மனித உள்ளம் நல்லதொரு வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்பட்டால் அவனது வாழ்க்கை வெற்றியடைகிறது. உள்ளத்திலிருக்கும் அசிங்கங்களைத் தூண்டி அவை வளர்ந்து அவற்றால் ஒரு மனிதனது வாழ்வு சீரழிக்கப்பட்டால் அவனது வாழ்வு பாதிப்படைகிறது.
மனித உள்ளத்தை சரியான திசையில் வழிநடத்தி அவனது வாழ்வை இன்புறச் செய்பவர்கள் இன்றைய சூழலில் அதிகமா அல்லது பிழையான திசையில் அவனது உள்ளத்தை திசை திருப்பி சீரழிப்பவர்கள் அதிகமா என்று சிந்திப்பது எமது கடப்பாடுகளில் முக்கியமானதாகும்.
இன்றைய சூழல் மனித உள்ளங்களில் விபரீதமான ஆசைகளை வளர்க்கிறது. அதேபோன்று இன்றைய சூழல் பகை, குரோதம், பொறாமை, இனவாதம், மதவாதம் போன்ற அசிங்கங்களால் மனித உள்ளத்தை மாசுபடுத்துகின்றது. மனித உள்ளங்களை உன்னதமாக்கி அவற்றுக்கு இன்புறும் வாழ்க்கையை வழங்க வேண்டியவர்களே அவற்றை மாசுபடுத்துகின்ற அவலம் இன்றைய சூழலில் வெளிப்படையாக அரங்கேற்றப்படுகிறது. உண்மையில் தமது உள்ளங்களைத் தெளிவாகவும் சரியாகவும் வைத்துக் கொள்ளத் தெரியாத பலர், இந்த ஆக்கிரமிப்புக்குத் தங்களது உள்ளங்களைப் பலிகொடுத்து விடுகின்றனர். அதன் மூலமாக அவர்களது சுதந்திரத்தையும் அவர்கள் ஒரே ஒரு தடவை இந்த மண்ணில் வாழ்வதற்குப் பெற்ற பாக்கியத்தையும் இழக்கிறார்கள். அவர்களது அற்புதமான வாழ்வும் பறிக்கப்படுகிறது. அவ்வாறு பறிக்கப்பட்ட வாழ்வை அவர்களுக்கு மீண்டும் வழங்க யாரால் முடியும்!?
மனிதன் ஆன்மாவோடு வாழும் பிறவி
மனிதன் உலகில் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் அவனது உள்ளத்தில் ஒரு வெறுமை இருக்கின்றது. அது அவனது வாழ்வின் அடிப்படையான பிரச்சினைகளுள் ஒன்றாகும். அந்த வெறுமையைப் போக்குவதற்கு அவன் பல்வேறு உத்திகளையும் உபாயங்களையும் கையாளுகின்றான். பொழுதுபோக்குகள், உல்லாசங்கள், நண்பர்களுடனான சகவாசம் போன்றன அவற்றுள் சிலவாகும். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தமது உள்ளத்திலிருக்கின்ற வெறுமையைப் போக்குவதற்கு மது, மாது, சூது போன்றவற்றையும் நாடுகின்றனர். மற்றும் சிலர் அந்த வெறுமையை நிரப்புவதற்கு இன, மத,வெறிகளையும் பயன்படுத்துகின்றனர். இறுதியில் இத்தகைய உபாயங்கள் அனைத்தும் மனிதனுக்கு சிரமத்தையும் அசௌகரியத்தையும் ஆரோக்கியமற்ற வாழ்வையுமே வழங்குகின்றன. ஆன்மிக வெறுமை இந்த உபாயங்களால் குறைவதில்லை. அதிகரித்தே செல் கிறது.
மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவின் தேவைகள் நிறைவேற்றப்படாதபோதே இந்த வெறுமை ஏற்படுகிறது. எனினும், ஆன்மாவின் தேவைகளை நிறைவேற்றுமளவு இன்றைய சூழல் ஆன்மாவுக்கு உறுதுணையானதாக இல்லை. ஆன்மாவின் தேவைகளைப் புறக்கணிக்கும் வகையில் பொழுதுபோக்குகளும் பாவங்களும் துவேஷங்களும் நிறைந்ததாக இன்றைய சூழல் மாசடைந்திருக்கின்றது.
ஆன்மா நல்ல சிந்தனைகளால் ஊட்டம் பெறுகிறது. நல்லெண்ணங்கள், உன்னதமான மனப்பாங்குகள், இறை சிந்தனை ஒவ்வொரு செயலிலும் தீய நோக்கங்கள் கலந்து விடாமல் பாதுகாத்தல், நற்செயல்களின் பெறுமதியை உணர்தல் போன்றவற்றால் ஆன்மா இன்புறுகிறது. உதவி மனப்பான்மை, உடன்பாடான போக்கு, நல்லிணக்க சிந்தனை, பிறர் நலம், நன்மைக்கு ஒத்துழைத்தல், தீமைகளுக்கு எதிர்ப்பு போன்றன ஆன்மாவைப் புடம்போடு கின்றன.
எனினும், இன்றைய மனிதன் தனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, அதனை வலுவூட்டிப் பாதுகாத்து அதன் சுகந்தத்தை தனது வாழ்க்கையில் அனுபவிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளான். அவனது சூழலும் சூழலி லுள்ள மனிதர்களும், ஏன் ஆன்மாவைப் பாதுகாக்கவென்றே தங்களைப் பயிற்றுவித்து வளர்த்துக் கொண்டவர்களும் கூட ஆன்மாவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதானது மனிதனின் வாழ்க்கையைப் பறிப்பதற்கான ஒரு சதி என்றே கூற வேண்டும். இந்த சதியில் சிக்கி எத்தனை அப்பாவிகள் தங்களது வாழ்க்கையைப் பறிகொடுத்திருக்கிறார்கள் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்த வையகத்தில் வாழக்கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தை பயனற்ற விதமாகப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டுகின்றவர்கள் எத்துணை கொடியவர்கள்! அவர்கள் தங்களது ஆன்மாக்களை மட்டுமா, உலகில் வாழும் எத்தனை ஆன்மாக்களை நாசம் செய்து மனித வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர்!
மனிதன் ஒரு சமூகப் பிறவி
மனிதன் சமூக உணர்வோடு வாழும் ஒரு பிறவியாக இருக்கிறான். அவனிடம் அன்பு, பாசம், சகோதரத்துவம், மனித நேயம் என்பன இருக்கின்றன. இந்த சமூக உணர்வுகள் காரணமாக அவனது ஆளுமை பெருமளவு விருத்தியடை கிறது. இந்த சமூக உணர்வால் சிலபோது ஒரு மனிதனின் ஆயுள் அவன் வாழும் காலத்தைவிட பன்மடங்கு நீண்டதாக மாறிவிடுகின்றது. உலகம் கண்ட மகத்தான மனிதர்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும். அத்தகையவர்கள் பல ஆயிரம் வரு டங்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்து போயிருப்பார்கள். எனினும், இன்றும் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள். இன்று உயிர் வாழ்பவர்களைவிடவும் அதிகமாக அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். அதற்கு அடிப்படையாக இருக்கும் காரணி என்ன? மனித சமூகத்துக்கு முன்னால் அத்தகையவர்கள் வெளிப்படுத்திய சமூக உணர்வுதான் அது. அவர்களது அன்பு, பாசம், மனித நேயம், சகோதரத்துவம் என்பன மனித சமூகத்திற்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுத்துள்ளன. மனித வரலாறுகள் அவர்களால் திசை திரும்பியிருக்கின்றன. அவர்களால் விளைந்த பயன்கள் ஓர் இனத்தோடு, சமூகத்தோடு மட்டுப்படுத்தப்படவில்லை. அவை உலகம் முழுவதற்கும் கிடைத்திருக்கின்றன.
இன்னும் சிலர் வரலாற்று மனிதர்களாக கருதப்பட்டாலும், அவர்கள் கண்ணியத்தோடு நினைவுகூரப்படுவதில்லை வரலாற்றின் ஒரு காலப்பகுதியில் அவர்கள் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைத் தவிர. ஹிட்லர், முசோலினி, ஜங்கிஸ்கான் போன்றோரை இந்த வரிசையில் குறிப்பிடலாம். அவர்கள் செய்த அக்கிரமங்களும் அவர்களது வரலாற்றோடு எப்போதும் இணைந்தே இருக்கும்.
இவ்வாறு இரு துருவங்களாக இருக்கும் நல்லவர்கள், கெட்டவர்கள் தவிர உலகில் வாழும் அநேகர் சாரசரி மனிதர்களாகவே காணப்படுகின்றனர். எனினும், இந்த சராசரி மனிதர்கள் கூட சமூக உணர்வு உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அவர்களது சமூக, உணர்வுகளை சரியான வழியில் தூண்டினால் அவர்களும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து உலகமும் அவர்களால் நல்வாழ்வு பெறும் நிலை ஏற்படும். அவர்களது சமூக உணர்வுகளைப் பிழையான திசையில் வழிநடத்தினால் அவர்களும் கெட்டு பிறரையும் அவர்கள் நாசப்படுத்தி விடுவார்கள்.
மனிதன் தன்னிடமுள்ள இந்த சமூக உணர்வுகளைப் பயன்படுத்தி ஒரு பெருவாழ்வு வாழ வேண்டும். அது அவனது வாழ்வுரிமை. அதனைப் பறித்து அவனுக்கு மோசடி செய்யலாகாது. அவனது சமூக உணர்வுகளை குறுகிய இன உணர்வுகளாகவோ, குறுகிய மத உணர்வுகளாகவோ மாற்றுவது அவனது பெருவாழ்விற்கு இழைக்கும் துரோகமும் அவனது வாழ்வைப் பறிக்கும் ஒரு முயற்சியுமாகும்.
இந்தக் கோணத்தில் பார்த்தால், இன்று எத்தனை பேருடைய வாழ்வு பறிக்கப்பட்டிருக்கிறது? எத்தனை பேர் தங்களது சமூக உணர்வுகளை இன உணர்வுகளாக குறுகிய மத உணர்வுகளாக கட்சி உணர்வுகளாக… இயக்க உணர்வுகளாக மாற்றிக் கொண்டு வெறிபிடித்தலையும் அரவங்களைப் போன்று ஆகியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் வாழ்கின்றவர்களா? அல்லது வாழ்வு பறிக்கப்பட்டவர்களா?
போராட்ட உணர்வும் சமூக உணர்வுதான் ஆனால்…
மனிதன் சமூக உணர்வுகள் கொண்ட ஒரு சமூகப் பிறவி என்பதனால் அவன் எப்போதும் அன்பு, பாசம், சகோதரத்துவம், மனித நேயம் என்பவற்டுதான் வாழ வேண்டுமா தனக்கு எதிராக எழுந்து வரும் சவால்களை முறியடிக்க அவன் தயாராகக் கூடாதா? என்றொரு வினா இந்த இடத்தில் எழுகின்றது. உண்மையில் தன்னை எதிர் நோக்கி வரும் சவால்களை முறியடிக்க அவன் கண்டிப்பாகத் தயாராக வேண்டும். அதுவும் அவனது வாழ்வுரிமையே. அன்பு, பாசம், சகோதரத்துவம், மனித நேயம் போன்ற சமூக உணர்வுகள் போலவே எந்த வகையிலும் குறைவில்லாத மற்றொரு சமூக உணர்வுதான் தீமைகளுக் கும் அநீதிகளுக்கும் எதிராகப் போராடி மனித சமூகத்தை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதாகும். சமூக உணர்வென்பது இந்தப் போராட்ட உணர்வு இருந்தாலன்றி பூர்த்தியாக மாட்டாது.
எனினும், தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிரான இந்தப் போராட்ட உணர்வுகளுக்கு வரையறைகள் இருக்கின்றன. அந்த வரையறைக்குள் இந்தப் பேராட்ட உணர்வு இருக்குமாயின் அது உச்ச பயன்பாட்டைத் தந்து இந்த உலகை ஒரு மினி சுவனமாக மாற்றிவிடும்.
முதல் வரையறை
இந்தப் போராட்ட உணர்வு அன்பு, பாசம், மனித நேயம் என்பவற்றுக்கு எதிரானதல்ல அவற்றுக்கு உறுதுணையானதாகும். அதாவது, மனித சமூகத்தின்பால் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் இருக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் மனித நேயத்தையும் இல்லாமல் செய்ய முயலுகின்ற சக்திகளுக் கெதிராக இந்தப் போராட்ட உணர்வு எழுந்திட வேண்டும். இந்தப் போராட்ட உணர்வு உண்மையில் அன்பையும் பாசத்தையும் மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாப்பதற்கானதேயன்றி அவற்றை ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கல்ல.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசு வெளிப்படுத் திய போராட்ட உணர்வு இந்த வகையைச் சார்ந்ததே. எனினும், அமெரிக்கா ஈராக்குக்கு எதிராக வெளிப்படுத்திய போராட்ட உணர்வு ஈவிரக்கமின்றி மனித நேயத்தை உயிரோடு புதைத்துவிட்ட கொடுமையின் ஒரு வெளிப்பாடாகும்.
இரண்டாவது வரையறை
இந்தப் போராட்ட உணர்வு ஒருபோதும் விதியாக இருக்கமாட்டாது என்பதாகும். இது விதிவிலக்கானது.
ஓர் உடலில் இருக்கின்ற, உடலுக்குத் தீங்குபயக்கின்ற கட்டியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி போன்றதே இதுவாகும். மனிதனை நேசிப்பதனால் அவனது உடலில் வளர்ந்த கட்டியாயிற்றே என்று கட்டியையும் நேசிக்க முடியாது. அதனை ஈவிரக்கமின்றி அறுத்து விடுவதே உண்மையில் மனிதன் மீது கொண்ட அன்பின் பிரதிபலிப்பாகும். எனினும், உடலின் எல்லாப் பகுதிகளையும் கீறிக் கிழித்து கட்டியைத் தேடும் படலத்தைத் துவங்குவதில்லை. கட்டியில் கத்தியை வைப்பதற்கு முன்னால் கட்டி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது முதல் கட்டியின் வகை, கட்டியகற்றும் முறை போன்ற எத்தனையோ ஆய்வுகள் இடம்பெறுகின்றன.
தீமைக்கு எதிரான போராட்டம் என்பது கத்தியை கையில் எடுத்துக் கொண்டு உடலை கீறிக் கிழிப்பதல்ல. வரையறுக்கப்பட்ட ஓர் இடத்தில் கத்தியைப் பயன்படுத்தி உயிரைப் பாதுகாப்பதுதான் தீமைக்கெதிரான போராட்ட மாகும். தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிரான போராட் டம் இந்த வரையறைக்கு உட்பட்டதாக இருந்தால் அது சமூக உணர்வின் உன்னதமான வெளிப்பாடு எனலாம். இல்லாவிட்டால் அது சமூக உணர்வல்ல. சமூகத்தின் குரல்வளையை நசுக்கும் உணர்வாகும்.
தீமைக்கெதிரான போராட்டம் என்று கூறி தீமைகளை வளர்க்கும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது. அத்தகைய அழைப்புகளுக்கு எத்தனை பேர் பகடைக்காய்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்றைய சூழலில் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதாகும். அவ்வாறு பிழையான சமூக உணர்வுகளால் தூண்டப்பட்டு தங்களது காலத்தையும் நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் சிலபோது உயிரையும் அர்ப்பணிப்பவர்கள் எத்துணை பெறுமதியான வாழ்க்கையைப் பறிகொடுக்கின்றார்கள்! அவர்களது வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதற்கு யாரால் முடியும்? விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து போராடி உயிரை இழந்தவர்களும் சரி, அவர்களால் உயிர் வாங்கப்பட்டவர்களும் சரி என்ன பாவம் செய்ததற்காக தங்களது ஒரே வாழ்க்கையை… ஒரு முறை மட்டும் வாழக்கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க வேண்டும். சமூக உணர்வு பிழையாக தூண்டப்பட்டதால் வந்த வினை என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் கூற முடியாது.
உயிரை விடலாம் மனித சமூகத்தை ஒரு பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பதற்காக. மனித சமூகத்தையே ஆபத்தில் சிக்கவைப்பதற்காக உயிரை விடுவதன் அர்த்தம் என்ன? அதற்காக உழைத்து நேரம் செலவிடுவதன் அர்த்தம்தான் என்ன?
இன்றைய நாட்டு நடப்புகள் எழுப்பும் கேள்விகள் தாம் இவை.
அதிகமான மனிதர்களின் வாழ்க்கை பல நூறு காரணங்களால் ஏற்கனவே தடம்புரண்டு சென்று கொண்டி ருக்கிறது. தாங்க முடியாத வாழ்க்கைச் சுமை, விலையேற் றம், கடன், வரிச்சுமை, நீர், மின்சாரக் கட்டணங்கள், எரி வாயு, பெற்றோல் போன்றவற்றின் விலையேற்றங்கள்…
அதிகரித்துச் செல்லும் நோய்கள், விபத்துக்கள், கொலைகள், தற்கொலைகள், பாலியல் சீர்கேடுகள், தொழிநுட்ப வளர்ச்சியினால் விளைந்துள்ள சீர்கேடுகள், குடும்பக் கட்டமைப்பு சிதைந்து வருதல்…
30 வருடங்கள் பாதிப்படைந்திருந்த இனங்களுக் கிடையிலான நல்லிணக்க சூழல், அதனைப் பயன்படுத்தி எமது நாட்டின் மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு அழுத்தங்கள், உலகின் பல சக்திமையங்களின் கைகளிடையே வீசப்படும் பந்தாக எமது தேசம் மாறியிருக்கும் அவலநிலை போன்ற எண்ணற்ற பிரச்சினைகளால் வாழ்க்கை பறிக்கப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்ப்பது மக்களின் நன்மைக்காகவா? அல்லது இதனால் நன்மையடையப்போகும் சக்திகள் திரைமறைவில் வேறு இருக்கின்றனவா?
நாடு, கடந்து சென்று கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்குரிய சூழலில் மனிதர்களை வாழ்வாங்கு வாழவைப்பதற்கு எத்தகைய அறிவு அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும் அவர்களது உளவியல் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் மனிதர்களின் ஆன்மாக்கள் வெறுமையடையாது பாதுகாக்கும் வழிகள் எவை சமூக உணர்வுகள் எத்திசையில் வழிநடத்தப்படல் வேண்டும் போன்ற உன்னதமான வேலைத் திட்டங்களையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு மீண்டும் இனவாதம், மதவாதம். என்பவற்றால்தான் மனிதத்தை வாழ வைக்கப் போகிறோம் என்று கூறுவதில் இலகுவாக விளங்கிக் கொள்வதற்கு எந்த தர்க்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.
வெறுப்பு, குரோதம், பகை, அச்சம், சந்தேகம், தப்பெண்ணம், இனவாதம், மதவாதம் என்பவற்றோடு மக்கள் எப்போதும் வாழ்வதுதான் ஆரோக்கியமான வாழ்வு என்று முடிவு செய்திருப்பவர்கள் உண்மையில் மனிதர்களுக்கு வாழ்வளிக்க வந்தவர்களல்லர். அவர்கள் மனிதனுக்குக் கிடைத்த அளவிட முடியாத வாழ்க்கைப் பாக்கியத்தைப் பறிக்க வந்தவர்கள். இவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருபோதும் நன்மை விளைவதில்லை.
இந்தக் கருத்தை துரையப்பா கொலை செய்யப்பட்ட போது தமிழ் சமூகம் உணர்ந்திருந்தால் தமிழ் மக்களின் அழிவைத் தடுத்திருக்கலாம். அதுபோன்று இன்று இந்தக் கருத்தை உணராதவர்கள் இன்னும் 30 வருடங்களில்தானா இதன் விபரீதங்களை உணரப் போகிறார்கள்?
இன்று வாழுகின்ற நேற்று வாழ்ந்து மறைந்த எண்ணற்றவர்களின் வாழ்க்கையைப் பறித்துவிட்டதன் பின் இந்தப் பேருண்மையை விளங்குவதில் எந்தப் பயனுமில்லை.
மாறாக, நல்லறிவை ஊட்டி, நல்லுள்ளங்களை உருவாக்கி, ஆன்மாவின் ராகங்களை அனுபவித்து, உன்னதமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் சமூக உணர்வுகளின்பால் மனிதர்களை வழிநடத்தினால் ஒவ்வொரு மனிதனும் உன்னதமான வாழ்வைப் பெறுவான் நாடு நலம் பெறும்.
source: http://usthazhajjulakbar.org/