அந்தரங்கம் – எப்படி ஹலாலானாள்?
அவள் பெயர் சாஹினா. செஞ்சிவப்பு குங்குமத்தை, சந்தனத்தில் கலந்தது போல, நல்ல அழகி! தாய் பெயர் ரமீசா. கூட பிறந்தவள் ஒரே ஒரு சகோதரி! அவளும் அக்கா மாதிரியே! தந்தை வட நாட்டு பக்கம் எண்டர்பிரைசஸில் வேலை!
ஏழ்மையான குடும்பம். தாய் வீட்டு வேலை பார்த்து மூத்த மகளை கட்டிக் கொடுக்க, சின்னவளுக்கு அவள் அழகுக்காகவே, உறவில் மாப்பிள்ளை வந்து வலிய திருமணம் முடித்து கொண்டார்கள்.
பதினேழு வயதில் சாஹினாவின் திருமணம். புருஷனுக்கு ஐஸ் வண்டி தள்ளி விற்கும் வேலை. திருமணம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அதோடு, அவள் வாழ்வும் மகிழ்ச்சியாக இல்லை. காரணம், கணவனின் ஆண்மை குறைவு, அதோடு, பயிருக்கு வேலியாக இருக்க வேண்டிய மாமனாரே, வெள்ளாடாக இருந்ததால், மனம் கசந்து, ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல், வீட்டை விட்டு பக்கத்து வீட்டுகாரனோடு வெளியேறி விட்டாள்.
நாலைந்து வருடம் கழித்து, தன் தாயை சந்திக்க வந்த போது, கையில் ஒரு ஆண்பிள்ளை; வயிற்றில் அடுத்த குழந்தை! நிக்காஹ் செய்யாமலே, இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்தி இருக்கிறார்கள். தானே ஒரு கருகமணி கழுத்தில் கட்டிக் கொண்டாள். அவன் நல்லவன், ஆனால் முஸ்லிமல்ல. ஆனாலும், தன் மகனுக்கு முஸ்லிம் பெயர் தான் வைத்திருந்தான்.
இப்போ, இந்த முறையற்ற திருமணத்தையும் முறையற்று பிறந்த குழந்தையையும் எப்படி முறையாக்குவது என்று ஜமாத்தில் கேட்டார்கள். அவன், தான் முஸ்லிமாக மாறிவிட விருப்பம் தெரிவித்தான். ஜமாத்தாரோ, சாஹினாவின் முதல் கணவனிடம் விவாகரத்து வாங்கி, பின், கரு அறியும் காலமான மூன்று மாதங்கள் கழிந்த பின் இவரை நிக்காஹ் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.
முதல் கணவன், இருக்கும் இடம் தெரியவில்லை. ரமீசா, ரொம்ப கஷ்டப்பட்டு தேடி தேடி சலித்து போய் விட்டாள். அவன் ஊர் விட்டு எங்கோ போய் விட்டான். வேறு வழியின்றி, பலரின் ஆலோசனைகள் பேரில் ஒரு மத்ரஸாவுக்கு விரிவாக கடிதம் அனுப்பி, இதற்கான வழி கேட்டாள்.
மதரஸாவில் இருந்து பதில் வந்தது. அதாவது, பத்வா மூலமாக அவர்களை பிரித்து விட்டதாகவும், இனி அவள் மூன்று மாதவிடாய் காலங்கள், அல்லது கர்ப்பிணியாக இருந்தால், பிள்ளை பெறும் வரையிலும் அந்நிய ஆண்களிடம் இருந்து விலகி இத்தா இருக்க வேண்டும், அதன் பின், மீண்டும் நிக்காஹ் முடிக்க வேண்டும்.
இவன், இஸ்லாத்தில் இணைந்து, தன் பெயரை சாதிக் என்று மாற்றிக் கொண்டான். அவர்கள் சொன்ன எல்லா விஷயத்துக்கும் உடன்படுவதாக சொல்லி, பொன்னானி என்னும் ஊர் சென்று, ஒரு மாதம் வரை தங்கி, இஸ்லாமிய கல்வி பெற்று, பின் கத்னா என்னும் விருத்தசேதனமும் செய்து வந்தான்.
அப்போது அவள், ஏழு மாத கர்ப்பிணி! யாருடைய பிள்ளையை வயிற்றில் சுமக்கிறாளோ, அவருக்கே, அவள் இப்போது அந்நியம். அதனால், அவர் முன் செல்லவோ, பார்க்கவோ, பேசவோ கூடாது. இருவரும் மனமுவந்து அதற்கு கட்டுப்பட்டார்கள்.
ஆனாலும், தாய் ரமீசா, இரவும் பகலும், சாஹினாவும் சாதிக்கும் சந்தித்து விடாமல், காவல் காத்து வந்தது வேடிக்கை!
ஒன்பதாம் மாதம் அழகான பெண் குழந்தை; சுமையா என்று பெயரிட்டார்கள். அத்துடன் அவளுடைய இத்தாவும் கழிந்தது. இப்போ ஜமாத்தார் முன்னிலையில், இவர் மஹர் கொடுத்து, மனைவியை முறைப்படி மணம் முடித்து ஹலாலாக்கிக் கொண்டார்!
தாய் தகப்பன் திருமணத்தில், சிறு பெண் குழந்தையும் நாலு வயது ஆண்பிள்ளையும் கலந்து கொண்டது தான் விசித்திரம்!
இப்போது இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
(இது போன்ற விசித்திர கதைகள் அவ்வப்போது, அந்தரங்கம் என்ற பகுதியில் எழுதுகிறேன்)
-சுமஜ்லா
source: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_8521.html