உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
மௌலவி சய்யிது ஷம்சுத்தீன் சாதிக் ஃபாழில் மன்பஈ
உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா? அவ்வாறு வருமாயின் அதற்கு பதில், நிச்சயமாக இல்லை என்பதுதான்!
உபதேசம் என்பது இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல.
உபதேசம் செய்வது மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும் தவறு.மார்க்க அறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்து விட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு எத்திவைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகிவிடுகிறது.குறிப்பாக நம் மனைவி நம் பிள்ளைகள் நம் உறவினர் அனைவருக்கும் எத்திவைக்க வேண்டும். இப்படி தான் மார்க்கம் வளர்ந்தது.
மார்க்கமே உபதேசம்தான். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். அல்லாஹ்வின் தூதரே யாருக்காக(உபதேசம் செய்யவேண்டும்?) என நாங்கள் வினவினோம். அல்லாஹ்விற்காக மேலும்அவனின் வேதத்திற்காக மேலும் அவனின் தூதருக்காக மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்காக மேலும் அனைவருக்காகவும்.என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூருகைய்யா, நூல்: முஸ்லிம்)
“என்னைப் பற்றி ஒரு வசனமாக இருந்தாலும் (பிறருக்கு) எத்திவைத்து விடுங்கள்” என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (புகாரி)
குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் அடிப்படைக் கடமைகளைக் கூட கல்லாமலிருப்பது இம்மார்க்கத்தையே தகர்ப்பதற்குச் சமம். எனவே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் பொன்மொழியையும் அனைத்து முஸ்லிம்களும் கற்றுப் பிற முஸ்லிம்களுக்கும் கற்பிக்க வேண்டியது கட்டாயக் கடமை.
கற்றதையும் செவியுற்றதையும் பிறருக்குக் கூறும்முன் :
படித்தவை மற்றும் செவிமடுத்தவை இவற்றின் நம்பகத் தன்மையை முதலில் நன்கு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மாற்றப்பட்ட சட்டங்கள் சில உண்டு. அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முதலில் ஒன்றையும் பிறகு ஒன்றையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியுள்ளார்கள்.
மேலும் செய்து காண்பித்துள்ளார்கள். ஆதலால் (மாறியவை, மாற்றியவை) இரண்டையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.மேலும் தம்மை அதற்குத் தகுதியுடையவராக முதலில் தயாராக்கிக்கொள்ள வேண்டும். தன் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உபதேசம் செய்யும்முன் தம் வாழ்வில் முதலில் அதை அமல் செய்ய உறுதி ஏற்க வேண்டும். தான் செய்யாததை பிறருக்கு உபதேசிப்பது நம்மை நரகில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. இவ்வாறு செய்வது பனூ இஸ்ராயீல்களின் தன்மையாகும்.
நீங்களோ வேதத்தைப் படிப்பவர்களாக இருக்கும் நிலையில் உங்களை மறந்துவிட்டு மக்களுக்கு மட்டும் நல்லவற்றைக் கொண்டு ஏவுகின்றீர்களா? நீங்கள் விளங்கமாட்டீர்களா? (அல்பகரா 44)
என பனூ இஸ்ராயீல்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்தான். அவர்கள் அதை பொற்படுத்தவில்லை. எனவே பேரழிவிற்கு ஆளானார்கள்.
இன்று நம் சமுதாயத்திலும் பலர் தாங்கள் செய்யாமல் பிறருக்கு மட்டும் ஏவுகின்ற நிலையைக் காண்கின்றோம். அல்லாஹ் ஏவியவற்றையும் தடுத்தவற்றையும் புட்டு புட்டு வைப்பார்கள். பல மேடைகளில் சாதனை உரை நிகழ்த்துவார்கள். ஆனால் பெண்வீட்டாரிடம் கைக்கூலியைக் கமுக்கமாக வாங்கியிருப்பார்கள். ஊருக்கே உபதேசம் செய்வார்கள். ஆனால் சுப்ஹு நேரத்தில் பள்ளிவாசல் பக்கம்கூட தலை காட்டமாட்டார்கள். ஐவேளை தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள், அடுத்தவருக்கு உபதேசம் செய்தால் அதில் எல்லளவும் பயனிருக்காது.
மூமின்களே! நீங்கள் செய்யாதவற்றை (செய்பவரைப்போல பிறருக்கு) ஏன் சொல்கிறீர்கள்? அல்லாஹ்விடம் பாவங்களில் பெரியது நீங்கள் செய்யாததை (செய்பவரைப்போல பிறருக்குச்)சொல்வதுதான். (அல்சஃப் 2,3)
தெளிவான பின்பே உபதேசம்
மார்க்கத்தின் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறாமல் மற்றவர்களுக்கு உபதேசம் வழங்கக்கூடாது. நம்முடைய சிற்றறிவுக்கு சரியெனத் தெறிந்த எத்தனையோ விஷயங்கள் அறிஞப் பெருமக்களால்தவறு என் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் தவறு என எண்ணும் எத்தனையோ விஷயங்கள் சரியானவை தான் என, இன்றளவும் நமது சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எனவே மார்க்கத்தைப் பொருத்தமட்டில் நாம் நமது சுய அறிவைக்காட்டிலும் மார்க்க வல்லுனர்களின் ஆய்வுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் கற்றவர்கள் நாம் முறையாக கல்லாதவர்கள்.
”நபியே நீங்கள் சொல்லுங்கள் கற்றவரும் கல்லாதவரும் சமமாவார்களா?” (அல் ஜும்ர் 9)
நாம் படித்த வரை இதுதான் சரி எனப்பட்டால் நாம் இன்னும் படிக்க வேண்டியுள்ளது என்றுதான் எண்ணவேண்டும். மாறாக இதுதான் மார்க்கம் இப்படித்தான் ஹதீஸ் உள்ளது என முந்திக்கொண்டு தீர்ப்பு வழங்கக்கூடாது. குர்ஆனில் சில வசனங்கள்தான் நமக்கு மனதில் இருக்கும். அதையே தஜ்வீத் முறைப்படி நமக்கு ஓத வராது. இந்நிலையில், குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களையும் மனனம் செய்த இமாம்களின் ஆய்வை தவறு என நொடிப்பொழுதில் கூறிவிடக் கூடாது. எது சரி எது தவறு எனத் துள்ளியமாகக் கூற நாம் மார்க்கம் கற்றவர் அல்ல என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது.
”உங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்.” (அல்நஹ்ல் 43)
காதில் கேட்டதையும் ஈமெயில்களில் படித்ததையும் வைத்து தீர்ப்புக்கூறும் சகோதரர்கள் இப்போது பெருகிக் கொண்டே போகிறார்கள். அவ்வாறு செய்வது சில நேரங்களில் அவதூறைப் பரப்பிய குற்றத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும்.
”உங்களுடைய நாவு எதைப் பொய்யாக வர்ணணை செய்கிறதோ அதைக்கொண்டு இது ஹலால் இது ஹராம் என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.” (அல்நஹ்ல் 116)
எனவே நன்மையை ஏவக்கூடியவர்களாகவும் தீமையை தடுக்கக் கூடியவர்களாகவும் நாம் அனைவரும் மாற அல்லாஹ் அருள்பொழிவானாக. ஆமீன்.