கல்வி விழிப்புணர்வில் சமுதாயத்தின் தடுமாற்றங்கள்
தமிழக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கல்வி நிலைய நிறுவனங்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி ஆர்வ தனவந்தர்களும் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டில் தங்களை முடிந்தளவு பிணைத்துக்கொண்டு வருவது மிகப்பெரிய மாற்றமே.
ஆனாலும், சாதகமான சூழலுக்கிடையே பாதக விளைவுகளை உண்டுபண்ணும் சில தடுமாற்றங்ளை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் நமது இலக்கினை அடையும் தூரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.அந்த வகையான தடுமாற்றங்களில் சிலஸ
இருட்டில் இருக்கும் இன்றைய தமிழ் இஸ்லாமிய விஞ்ஞானிகள் :
”இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர்.” (நபிமொழி- நூல்: திர்மிதி)
யானை தன் பலம் அறியாது என்று சொல்லுவார்கள்ஸமிகப்பெரும் பலம் கொண்ட யானையை மிகச்சிறிய சங்கிலியால் கட்டி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.
பலம் இல்லாத பால்யவயதில் மனரீதியாக பழக்கப்பட்டு விட்டதால் யானையும் தன் பலத்தை சோதித்துப் பார்ப்தில்லை (மதம் பிடிக்காத வரை). மிகப்பெரும் ஆற்றல் மிகுந்த இந்த சமுதாயமும் இன்றுவரை தன்பலத்தை உணராத நிலையில் தான் உள்ளது.
இந்தியாவில் .இஸ்லாமியர்கள் முன்னேறுவதை மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நமது பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆற்றல்மிகு இஸ்லாமிய அறிஞர்களை அடுத்தவர்கள் அங்கீகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் ஒருசில கல்லூரிகளிலும் தங்களின் அற்புமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல தமிழக முஸ்லீம் விஞ்ஞானிகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது வரை இவர்களை அடையாளம் கண்டிருக்கிறோமா? அல்லது இவர்களின் அறிவியல் சாதனைகளை குறைந்தது நம்மவர்களுக்காகவாவது அறிமுகப்படுத்தி அங்கீகரித்திருக்கிறோமாஸ?
மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். ‘சுல்தான் அஹமது இஸ்மாயில்’ (சென்னை புதுக்கல்லூரி),
பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’ (இளையான்குடி),
புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட ‘அக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி),
நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த ‘தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி),
ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’ (அண்ணாமலை பல்கலைக்கழகம்-)
சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்),
பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்),
மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’ (பாண்டிச்சேரி பல்கலைகழகம்),
மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர் கல்லூரி – பாளையங்கோட்டை)
உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் , இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளனர்.
சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.
சமகாலத்தில்,நம்மிடையேயும் ஆற்றல்மிகு அறிவியல் அறிஞர்கள் உள்ளார்கள் அவர்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நம்மவர்களுக்கும் தெரியவேண்டும். இது நமது சமுதாய இளைஞர்கள் மனதில் புரையோடியிருக்கும் கல்வி சார்ந்த தாழ்வு மனப்பான்மை வேரறுக்கும். யானைக்கு கட்டபட்ட சங்கிலி போன்று நமது சமுதாயத்தின் மீதும் சுற்றப்பட்டிருக்கும் கல்வியற்ற சங்கிலியும் தகர்ந்து போக வாய்ப்புள்ளது.
அமைப்புகளின் தனித்துவ முயற்சி :
பெரும்பாலான ஊர்களில் நடைபெறும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும்பொழுது அந்த ஊரில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்காவிட்டாலும் அங்கு மாணவர்களின் வருகையை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்சிகள் வீரியம் இழந்த நிகழ்ச்சியாக முடிந்து விடுகிறது. காரணம் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் அமைப்புகளின் தனித்துவத்தையும் அந்தந்த இயக்கங்களின் விளம்பரத்தையும் பிரதிபலிக்கவே முயற்சிக்கின்றனர். அத்துடன், கல்விஉதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் அந்தந்த மாணவர்களிடம் தங்களின் இயக்கம் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் மற்ற அமைப்புகளோடு இருக்கும் ஆர்வத்தை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற சூழலும் ஆங்காங்கே நடக்கிறது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், படித்து முடித்து தனது கல்வி அறிவால் சமுதாயத்தை மேம்படுத்த இருக்கும் மாணவர்களின் மனநிலை, நமது சமுதாயத்திற்குள்ளே இருக்கும் பிரிவுகளை இன்னும் வலுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
கல்வியின் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும் என்பதற்காக அல்லது அறிவீனர்களின் வாதம் புரிவதற்காக அல்லது அதன் மூலம் மக்களின் உள்ளங்களைத் தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவர் கல்வியை நாடினால் அவரை அல்லாஹ் நரகில் புகுத்துவான். ( நபிமொழி-திர்மிதி)
• சிதறடிக்கப்படும் பொருளாதாரம்
கல்விக்காக தமிழக அளவில் ஒவ்ஒரு வருடமும் தனவந்தர்களால் செலவு செய்யப்படும் பணத்தின் மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டுகிறது என்கிறது புள்ளி விபரம். கல்விக்காக இஸ்லாமியர்களால் வழங்கப்படும் பெரும்பாலான பொருளாதாரம் முறைப்படுத்தப்படாமல் சிதறடிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவித்தொகையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெரும்பாலான பணம் கல்விக்காக அல்லாமல் பலநூறு மாணவர்களின் பாக்கெட் மணியாக கரைந்து போகிறது என்பதும் நடைமுறை உண்மை.
• கல்வி நிலையங்கள் துவங்காத சமுதாய அமைப்புகள்
இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் சமுதாய இயக்கங்களை தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வு பேசும் எந்த ஒரு சமுதாய இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு ஓரிரு உயர்கல்வி நிலையங்களையாவது உருவாக்குவது பற்றி இது வரை சிந்திக்கவும் இல்லை. இதை சாதிப்பதற்கான திறனும் ஆற்றலும் இருந்தும் சமுதாய இயக்கங்கள் ஒதுங்குவதும் புரியவில்லை.
• பணத்திற்காக படிக்கும் மாணவர்கள்
கல்வி ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும், அரசு மற்றும் சிறுபான்மை பிரிவுகளும், வெளிநாட்டு வாழ் தனவந்தர்களும் கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டும் காலகட்டம் இது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறு எண்ணிக்கையில் பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி உதவி தொகையை பல இடங்களில் பெறுவதில் படிப்பதை காட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஒரு கசப்பான உண்மை. ஒரு பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டு ஆகும் செலவை காட்டிலும் ஐந்து மடங்கு வசூல் செய்யும் அவலமும் மறைமுகமாக நடக்கிறது. இதனை, “படிக்கும் மாணவர்கள் தானே போகட்டும்” என்று ஜீரணித்துக்கொண்டாலும் இந்த மனநிலையில் உள்ள மாணவர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பட்டப்படிப்பையும் சரியாக முடிக்காமல் வெளியேருகின்றனர் என்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவி இது போன்ற முறையற்ற மாணவர்களை வளர்க்க வழி வகுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும். (நபி மொழி)
கல்வி விழிப்புணர்வில் உண்டான பாதகங்களை சாதகமாக்க முடியுமா?
ஓவ்வொரு வருடமும் பெரும்பாலான ஊர்களில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் நம்மிடம் உண்டான இந்த விழிப்புணர்வு நமது கல்விச் சரிவை சரிகட்டும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்பது தான் இன்றைய நிலை. அதற்கு என்ன தான் செய்ய முடியும்?
நமது இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் நின்று கல்வி விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கலாமா…? என்ன…!
நம்ம தமிழக சமுதாய இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்வதா?
ம…..ம்….ம்… அது கனவிலும் நடக்காத ஒன்று…
இறைவன் நினைத்தால் தவிர சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். இருந்தாலும், ஓவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும, அமைப்புகளும், அறக்கட்டளைகளும், வெளிநாட்டு கல்வி ஆர்வலர்களும் தனித்தனி பாதைகளில் சென்றாலும், அவரவர்கள் கல்விப் பணிகளை தடுமாற்றமில்லாமல் செய்வதற்குஸ
தங்களின் சுயவிளம்பரம் தவிர்த்து வீரியம் மிக்க கல்வி விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடரலாம். ஆற்றல் மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு தத்தெடுத்துக் கொள்ளலாம். ஓவ்வொரு அமைப்பும் ஊருக்கு சில மாணவர்களை முழுமையாக தத்தெடுத்துக் கொள்ளலாம். உயர்நிலை கல்வியிலிருந்து உட்சபட்ச கல்வி வரை பொருளாதாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளலாம்.
கல்வி உதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் மாணவர்களுடைய முழு படிப்பு செலவையும் ஏற்கும் பொழுது, ஒரே மாணவர் பலரிடம் கேட்கும் வாய்ப்பு குறைகிறது. தத்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை வெளியிடலாம். வெளியிட விரும்பாவிட்டால், கொடுக்கப்படும் உதவித் தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த முயற்சி செய்யலாம்.
தமிழக அளவில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் அனுபவமிக்க பேராசிரியர்களும், ஆற்றல் மிகுந்த விஞ்ஞானிகளும் வெளி உலகத்தின் கவனத்திற்கு வராமல் அமைதியாக அதே வேளையில் சமுதாய பணி செய்ய சரியான தொடர்பு கிடைக்காமல் ஒரு பெரிய அறிவுஜீவ கூட்டங்களே மறைந்திருக்கிறது. இவர்களை ஒருங்கிணைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாய கல்வி வளர்ச்சிக்கு எளிய வழி காணலாம்.
இஸ்லாமிய கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும். தங்களுடைய பொருளாதாரங்களை கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வர வற்புறுத்தலாம். குறைந்த பொருளாதார வசதி இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை உருவாக்கி கல்வி நிலையங்களை புதிதாக உருவாக்குவதற்கு உகந்த காலகட்டம் இது.
ஓரளவு சேவை நோக்கோடும் அதிக அளவு வியாபார நோக்கோடும் கல்வி நிலையங்கள் தொடங்க இது உகந்த சூழல். காரணம், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்திய அளவில் பல ஆயிரக்கணக்கான புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. அதை நமது இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்றைய சூழலில் பட்டப்படிப்பு முடித்து விட்டாலும் மாத்திரம் அரசு பதவிகளில் அமர்ந்துவிடும் வாய்ப்புகள் சிறிதளவிலும் கிடையாது. காரணம், அரசு பதவிகளுக்கு அந்தந்த துறை சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்று உயர்கல்வியில் காட்டும் ஓரளவு ஆர்வத்தை பல்வேறு துறைகள் சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதிலும் காட்ட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முயற்சிகளில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போட வேண்டும்.
அரசுப்பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமுதாய ஆர்வலர்களை ஒன்றினைப்பதன் மூலம் சமுதாயக் கல்விப்பாதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.
சமுதாயத்தின் மிகப்பெரும் வரப்பிரசாதம் ஜும்மாமேடைகள். இங்கு மார்க்க விசயங்களோடு கல்வி விசயங்களையும் பேச அனைத்து பள்ளிகளிலும் அனுமதித்தால் அது சமுதாய மறுமலர்சிக்கு நிச்சயம் வழிதரும்.
இது போன்று ஒருசில முயற்சிகளில் இந்த சமுதாயம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது தான் நிச்சயமாக இந்த விழிப்புணர்வு பலன் உள்ளதாக இருக்கும். சமீபத்தில் சினிமா கயவர்களால் சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான துப்பாக்கி சத்தம் வெளியேறுவதற்கு முன்பாகவே அதன் தோட்டாக்கள் பிடுங்கப்பட்டது நமக்கு தெரியும். இந்த சினிமா கயவர்களின் சித்தரிப்பு நாடகங்கள் நம்முடைய சமுதாய இயக்கங்கள் ஓரளவு ஒன்று கூடியதனால் முறியடிக்கப்பட்டது.
அறிவைப் பெறுங்கள். அது தன்னை நல்லது இது, தீயது இது எனப் பகுத்தறியச் செய்யும். மேலும் மேலுலகத்திற்கு வழிகாட்டும். காட்டில் தோழனாகவும் ஏகாந்தத்தில் சமூகமாகவும், தோழன் இல்லாத சமயத்தில் தோழனாக இருக்கும். சந்தோசமான வாழ்விற்கு வழிகாட்டும். தோழர்களின் மத்தியில் ஒரு ஆபரணமாகவும் இருக்கும். பகைவர்களிடையே ஒரு ஆயுதமாகவும் இருக்கும். என்ற நபிமொழியின் அடிப்படையில்ஸ
இறைவனின் அருட்பெரும் கொடையான கல்வியை நமது சமுதாயம் பெற்று நம்மையும் நம்முடைய சமுதாயத்தையும் உலகாளச் செய்யும் தகுதியை வளர்ப்பதற்கு கல்வி எனும் இந்த ஒன்றுக்காக வேண்டியாவது நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.
முடிவாக…
உண்மையான மனநிலையில் சரியான இலக்கோடு ஆக்கப்பூர்வமான வழியில் உயர் கல்விக்கான தேடலில் தமிழக இஸ்லாமிய சமுதாயம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது இருக்கும் கானல்நீர் போன்ற விழிப்புணர்வை முழுமையாக நம்பினால் வாழ்நாள் முழுவதும் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும். விடியலை நோக்கிஸ
இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் மிக விரைவில் வெளிச்சத்தில் வைக்க வேண்டும். ஆமீன்… ஆமீன்…
கட்டுரையாளர் மற்றும் கட்டுரை பற்றி :
சகோதரர் ஆபீதீன் ( Dr.Captain. S.ABIDEEN ) இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணி புரிகிறார். (Assistant Professor of Zoolgoy, Dr.Zakir Husain College, Ilayangudi). கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு இஸ்லாமிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், தன்நம்பிக்கை மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் 250 க்கும் மேற்பட்ட நிகழ்சிகள் மூலம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை அல்லாஹ்வின் உதவியால் சந்தித்து கல்வி விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தனது கல்விப் பயணத்தில் அவர் கண்ட அனுபவங்களும் ஆதங்கங்களுமே இந்த கட்டுரை வரிகள்.
முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)
source: http://www.islamiyapenmani.com/2013/02/blog-post_20.html