அல்லாஹ் ‘தவ்பா’ என்ற வாசலை திறந்து வைத்திருக்கிறான்
பாவங்களை ஏற்றுக்கொள்ளல்
அல்லாஹ்வும், அவனது இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களும் ஏவிய பிரகாரமே மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியவனாகின்றான். இருந்தபோதிலும் மனிதன் என்ற வகையில் அவனது இயல்பு அவனைப் பாவம் செய்யத்தூண்டுகின்றது. அதன் பிரகாரம் அவன் பாவத்தில் விழுந்துவிடுகின்றான்.
அல்-குர்ஆனும், அஸ்-ஸுன்னாவும் போதிக்கும் விடயங்கள் பால் செல்லவேண்டியவன் ஷைத்தானின் வழிகாட்டுதலின் பின்னால் சென்றுவிடுகின்றான். இவ்வாறு அல்லாஹ்வைவிட்டு வெகுதூரம் சென்ற மனிதனை மீண்டும் அவன் பால் திருப்பும் முகமாகவே அல்லாஹ் அவனுக்கான ‘தவ்பா’ என்ற வாசலைத் திறந்து வைத்திருக்கின்றான்.
அந்த வகையில் பாவம் செய்த ஒரு மனிதன், தான் செய்த தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்புத் தேடவேண்டுமாயின் முதலாவதாக, தான் செய்த பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாற்றமாக, தான் செய்த தீங்குகள், அட்டூழியங்கள், அனாச்சாரங்கள் போன்றவற்றை அவன் ஏற்றுக்கொள்ளாதபோது அவனது தவ்பாவிற்கு எத்தகைய பெறுமானமும் இருக்காது. அத் ‘தவ்பா’ ஆனது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகவே அமையும்.
மனிதன் என்பவன் பாவம் செய்யவேமாட்டான் என ஒருபோதும் எம்மால் கூறமுடியாது. ஏனெனில்; பாவம் செய்யும் இயல்பைக் கொண்டவனாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்கு மிகத்தெளிவாக எடுத்துச்சொல்கின்றது.
‘நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருப்பின் அல்லாஹ் உங்களை அழித்துவிட்டு இன்னுமோர் படைப்பைப் படைப்பான். அவர்கள் பாவம் செய்வார்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோருவார்கள், அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்’ (முஸ்லிம்: 6965)
அன்றைய ஸஹாபா சமுகத்திலும் பாவங்கள், தீங்குகள் இழைக்கப்பட்டன. இன்று எமது சமுகத்திலும் பாவங்கள், தீங்குகள் இழைக்கப்படுகின்றன. இவை இரண்டிற்குமிடையிலான பாரிய வித்தியாசம், அன்றைய சமுகம், தான் செய்தது தவறு, பாவம் என்பதை அக்குற்றத்தை இழைத்த பின்னர் உணர்ந்தது, ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்றைய சமுகம் தான் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும், குற்றத்திற்கும், நியாயமும், ஆதாரமும் காட்டும் திறனை வளர்த்துக்கொண்டுள்ளது. எனவே இந்நிலையிலிருந்து நாம் மீளவேண்டுமென்பதே நான் இக்கட்டுரையை எழுதுவதற்குப் பிரதான காரணமாகும். அந்த வகையில் பாவங்கள் செய்து அதற்காகப் பச்சாதாபப்பட்டு, செய்த தீங்குகளை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளுக்கான உதாரணங்களை குர்ஆன், ஸுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் நோக்குவோம்.
மனித இனத்தின் ஆரம்பமே ஆதம்-ஹவ்வா தம்பதியினரே. அவர்கள் சுவர்க்கத்திலே சுவண்டிகளை அனுபவிப்பதற்காக அல்லாஹ்வினால் அமர்த்தப்பட்டார்கள்.
ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வினால் நெருங்கக்கூடாது என கட்டளையிடப்பட்டிருந்த மரத்தை நெருங்கினார்கள். அவர்களது மறைவிடங்கள் வெளி;தெரியலாயின. அதன் பின் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இது நாம் குர்ஆன் மூலம் அறிந்த உண்மைச் செய்தி, ஆனால் நாம் இக்கட்டுரையில் நோக்குவதானது, iஷத்தானின் தூண்டுதலால் அல்லாஹ் விதித்த கட்டளையை மீறிய அவர்கள் தாங்கள் செய்த செயலானது பெரும் குற்றம் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். மாற்றமாக அப்பாவத்தைச் செய்யத் தூண்டிய காரணிகள் பற்றி அவர்கள் விவாதிக்கவில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரிப் பிரார்த்தித்ததை குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.’எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அநீதமிழைத்துக்கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள்புரியாவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ;டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம், என்று அவ்விருவரும் கூறினர்’ (அல்குர்ஆன்: 7:23)
அவ்வாறே,
’99 கொலைகளைச் செய்த ஒரு மனிதன் தான் இழைத்தது பாரிய ஒரு கொடூரம் என்பதை உணர்ந்து தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா? என்பது பற்றி ஒரு துறவியிடம் கேட்க, அவர் இல்லை என மறுக்க, அவரையும் சேர்த்து மொத்தமாக 100 பேரைக் கொலை செய்துவிட்டு ஒரு அறிஞனிடம் சென்று தனக்கு பாவமன்னிப்பு உண்டா? என வினவுகிறான். அவனுக்கான பாவமன்னிப்பு உண்டு எனவும், அல்லாஹ்வை வணங்கும் மக்கள் உள்ள ஓர் இடத்தை நோக்கிச் செல்லும்படியும் அம்மனிதனை அவ்வறிஞர் கேட்டுக்கொள்கின்றார். அவனும் அவ்வாறே அவ்வூரை நாடிச் செல்கின்றான். செல்லும் வழியில் மரணம் அவனை அடைகின்றது. இறுதியில் அவனது முடிவு சுவனமாக அமைகின்றது.’ (ஹதீஸ் சுருக்கம் புகாரி: 3470, 7007)
இந்த ஹதீஸானது எம்மனைவருக்கும் பரீட்சயமானதும், தெரிந்ததுமாகும். இவ் ஹதீஸில் குறிப்பிடப்படும் நபர் தான் 99 கொலைகளைச் செய்துவிட்ட பின்னர்தான் தான் செய்தது மகா தவறு என்பதை உணர்கின்றான். உடனே அதை ஏற்றுக்கொண்டு அதற்கான பரிகாரத்தை தேடிச்செல்கின்றானே ஒழிய தான் செய்த ஒவ்வொரு கொலைக்குமான காரணங்கள், நியாயங்களை அவன் முன்வைக்கவில்லை. இதன் விளைவு அவன் சுவர்க்கத்தில் நுழைவதாகக் காணப்படுகின்றது. இஸ்லாத்தில் பெரும்பாவங்களில் ஒன்றாகக் கருதப்படும் செயலான ‘நியாயமின்றி ஓர் உயிரைக் கொல்லல்’ என்ற அம்சத்தைச் செய்த இம்மனிதன் தான் இழைத்த குற்றத்திற்குச் செய்த ஒரே பரிகாரம், தான் செய்தது தவறு, தான் செய்தது குற்றம் என்பதை உணர்ந்து அதனை அல்லாஹ்வுக்குப் பயந்து ஏற்றுக்கொண்டது மட்டுமேயாகும்.
அது போன்று,
‘நபியவர்கள் காலப்பகுதியில் காமிதிய்யா என்ற கோத்திரத்தைச் சென்ற ஒரு பெண்மணி விபச்சாரக் குற்றத்தில் ஈடுபட்டுவிடுகிறாள். தான் கர்ப்பிணியான நிலையில் தனக்கான தண்டனையை நிறைவேற்றும்படி கோரியவளாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் வருகின்றாள். நபியவர்கள் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு வரும்படி அப்பெண்ணைத் திருப்பி அனுப்பிவிடுகின்றார்கள். குழந்தையை ஈன்றெடுத்தவுடனேயே தனக்கான தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்ற உறுதியுடன் மீண்டும் நபிகளாரிடத்தில் அப்பெண்மணி வருகிறாள். குழந்தைக்கு பால் மறக்கடிக்கச் செய்துவிட்டு வரும்படி அப்பெண்ணை நபியவர்கள் பணிக்கின்றார்கள். அவ்வாறே, குழந்தைக்குப் பால் மறக்கடிக்கச் செய்துவிட்டு அப்பெண் மீண்டும் வருகிறாள். இறுதியில் அப்பெண்ணைக் கல்லெறிந்து கொல்லும்படி ரஸுலுல்லாஹ் கட்டளையிடுகின்றார்கள். அவளுக்கான ஜனாஸாத் தொழுகையையும் தானே நிறைவேற்றுகிறார்கள். (முஸ்லிம்: 1695)
மேற்படி சம்பவமானது எம்மால் பல தடவைகள் கூர்ந்து நோக்கத்தக்கதாகும். விபச்சாரக்குற்றத்தில் ஈடுபட்ட அப்பெண்மணியை யாரும் காணவில்லை அது சம்பந்தமாக அவள் மீது எவரும் குற்றஞ்சுமத்தவுமில்லை. இருந்தபோதிலும் தான் இழைத்த குற்றத்திற்கு அல்லாஹ்விடம் மறுமையில் தப்பமுடியாது இவ்வுலகிலேயே அதற்கான தண்டனையைப் பெற்றுவிட வேண்டும் என அப்பெண்மணி தானாகவே முன்வருகின்றாள். தண்டனையை ஏற்றுக்கொள்கின்றாள்.
இப்போது எமது பார்வையை கல்லெறிந்து ஒருவரைக் கொல்லும் நிகழ்வை நோக்கித் திருப்புவோம். அந்நிகழ்வு எவ்வளவு கொடூரமானது! ஒரு மனிதனை ஒரு புதைகுழியில் புதைத்துவிட்டு அவரைச் சூழ பலர் நின்றுகொண்டு குறித்த நபரை நோக்கி கற்களால் வீசுவதை எண்ணிப்பார்க்கும் போதே உடல் மயிர்கள் எல்லாம் சிலிர்த்துவிடுகின்றன. ஆனால், அப்பெண்மணியோ தனது குற்றத்திற்கான தண்டனை அவ்வாறானது என்பதை நன்கறிந்துகொண்டே அதனை ஏற்க முன்வந்தாள்;.
இது போன்ற பல உதாரணங்களை நபியவர்களின் வாழ்க்கைக்கட்டத்திலே நாம் அவதானிக்கின்றோம்.
‘ஒரு முறை ‘ஹன்ழளா’ என்ற நபித்தோழர் அழுதுகொண்டு தான் முனாபிக்காக மாறிவிட்டதாகக் கூறிக்கொண்டு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கடந்து செல்கின்றார். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுகைக்கான காரணத்தை வினவுகிறார்கள், அதற்கு ‘ரஸுலுல்லாஹ்வுடைய சபையிலே அவருடன் இருக்கும்போது அவர்கள் சுவர்க்கம், நரகம் பற்றி ஞாபகப்படுத்துகின்றார்கள், அவற்றைக் கண்களால் காண்பது போன்றிருக்கின்றது. ஆனால் வீட்டிற்குச் சென்று மனைவி மக்களுடன் சேர்ந்து வாழும்போது அவற்றை மறந்துவிடுகின்றோம்’ எனக் கூறினார்கள். இதனைக்கேட்ட அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தானும் அவ்வாறானதொரு நிலையையே உணருவதாகக் கூறி இருவரும் ரஸுலுல்லாஹ்விடம் செல்கின்றார்கள்… (முஸ்லிம்: 6966)
இச்சம்பவத்திலிருந்து நாம் விளங்குவதானது, அன்றைய ஸஹாபா சமூகம் பாவங்களைச் செய்யாவிட்டாலும் கூட, அல்லாஹ்வுடைய ஞாபகம் இல்லாமல் போவதானது நயவஞ்சகத்தின் அறிகுறி எனக்கருதி, அதற்காக அழுது, அவ்வாறான நிலையிலிருந்து மீள்வதற்கான தீர்வை நபியவர்களிடம் கேட்டுச்செல்கின்றது என்றால், நாள்தோறும் பாவங்களுக்கு மத்தியிலே வாழ்க்கையை ஓட்டிச்செல்லும் நாம், எந்தளவிற்கு செய்கின்ற பாவங்களை உணர்ந்து, அவற்றை மனதார ஏற்று அவற்றிலிருந்து நீங்கி வாழவேண்டிய கடப்பாட்டிற்குள் இருக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அது போன்ற ஒரு நிகழ்வுதான் சூறதுல் ஹுஜுராத்தின் ஆரம்ப வசனங்கள் இறங்கிய பின்னர் ஏற்பட்டது.
‘விசுவாசிகளே! நபியுடைய சப்தத்திற்குமேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள், மேலும் உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரத்துப்பேசுவதைப் போன்று அவரிடம் பேசுவதில் நீங்கள் உரக்கப்பேசாதீர்கள் (ஏனெனில்) நீங்கள் உணர்ந்துகொள்ளமுடியாத நிலையில் உங்களுடைய செயல்கள் அழிந்துவிடும்’ (அல்குர்ஆன் 49:02)
‘இவ்வசனம் இறங்கிய பின் வழமையாக ரஸுலுல்லாஹ்வுடைய மஜ்லிஸுக்கு வந்துசெல்லும் ‘ஸாபித் பின் கைஸ்’ என்ற ஸஹாபியை மஜ்லிஸிலே காணவில்லை. நபியவர்கள் அந்த ஸஹாபியை தேடியபோது அவர் சம்பந்தமான தகவலை தான் வழங்குவதாகக் கூறிக்கொண்டு ஒரு ஸஹாபி அவரைத் தேடிச்செல்கின்றார். தேடிச் சென்றபோது வீட்டிலே தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தனக்குக் கேடு ஏற்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டு ‘ஸாபித் பின் கைஸ்’ இருப்பதைக் கண்டார். ஏனெனனில் நபியவர்களுடன் பேசுகின்றபோது சப்தத்தை உயர்த்திப்பேசுபவராக அவர் இருந்தார். எனவே, இவ்வசனத்தைப் பார்க்கும்போது தனது செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தான் நரகத்திற்குரியவனாகிவிட்டேன் என்பதே இவரது இந்நிலைக்குக் காரணமாகும். அதன் பின்னர் தேடிச்சென்ற ஸஹாபி விடயத்தை ரஸுலுல்லாஹ்வுக்கு தெளிவுபடுத்தியபோது, ‘ஸாபித் பின் கைஸ்’ நரகவாதி அல்ல, அவர் சுவர்க்கத்திற்குரியவர் என்ற சுபசோபனத்தை கூறும்படி நபியவர்கள் கூறுகிறார்கள்.’ (புகாரி: 4846)
யார் சம்பந்தமாகவோ இறங்கிய அல்குர்ஆன் வசனம் நாடுகின்ற கருத்து தனக்குப் பொருத்தமாக இருப்பதாக உணர்ந்ததன் விளைவே ‘ஸாபித் பின் கைஸ்’ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்நிலைக்கு உள்ளானதற்குக் காரணமாகும். இந்நிகழ்வைப் பார்க்கும்போது எந்த அளவிற்கு அன்றைய ஸஹாபா சமுகம் பாவங்களை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் மிகக்கவனமாக இருந்திருக்கின்றது என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
நான் மேற்கூறிய உதாரணங்களைப் போன்று எத்தனையோ உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் கட்டுரையின் விரிவை அஞ்சி நான் அவற்றைத் தவிர்த்திருக்கின்றேன். எது எவ்வாறாயிருந்தபோதிலும் அவ்வுதாரணங்கள், சம்பவங்கள் அனைத்தையும் இன்றைய எமது சமுக நிலையோடு ஒப்பீடு செய்துபார்க்கவேண்டிய அவசியப்பாடு எமக்கிருக்கின்றது. பாவங்கள் விடயத்திலே அன்றைய ஸஹாபா சமுகத்திற்கும் இன்றைய எமது சமுகத்திற்குமிடையிலான பிரதான வேறுபாடுதான், அவர்கள் தாங்கள் செய்த பாவங்களை, தவறுகளை மனமுறுகி ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இக்காலத்தவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும், குற்றத்திற்கும் நியாயம் கற்பிக்கக்கூடியவர்களாகவும், அதனை சரிகாண்பவர்களாகவும் இருக்கின்றமையாகும்.
வட்டித் தொழிலில் ஈடுபடுகின்ற ஒருவனிடத்தில் வட்டி இஸ்லாத்தில் ஹராம் எனக்கூறப்பட்டால், நவீன பொருளாதாரத்தில் வங்கிகளுடனேர் வட்டியுடனோ தொடர்புபடாமல் வியாபாரம் செய்யமுடியாதென்கின்றான். கொள்ளைக்காரணிடம் திருடுவது மறுமையில் சாபக்கேட்டைக் கொண்டுவரும் எனப்பட்டால் நிர்ப்பந்தம் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும் என்ற கோட்பாட்டைப் பேசுகின்றான். நோன்பு நோற்காதவனிடம் நோன்பின் சிறப்புக்களையும் மாண்புகளையும் எடுத்துக் கூறினால் நோன்பு பிடித்துக்கொண்டு குடும்பத்திற்குரிய கடமைகள் உரிமைகளைச் செய்யமுடியாதென்கின்றான். குடிப்பவனிடம் மது ஹராம் எனப்பட்டால் இஸ்லாத்தில் சாராயம் மட்டும்தான் தடுக்கப்பட்டது, பியரோ, பிஸ்கியோ ஹராம் இல்லை என்கின்றான். புகைப்பவனிடம் அது கூடாதென்றால் மனநிம்மதிக்கு அதைவிட்டு வழியில்லை என்கின்றான்.
இவ்வாறு உலக வாழ்வில் தான் செய்கின்ற மார்க்கத்திற்கு முரணான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஏதோ ஒரு நியாயத்தை, காரணத்தை முன்வைக்கும் மனிதனை சீர்படுத்தும் நோக்கில் ஓர் ஆன்மீக அமர்விற்காக அவனை அழைத்து ஒரு உபதேசம் செய்யும்போதுகூட, சொல்லப்படுகின்ற விடயங்கள் தனக்குப் பொருந்துமா? இல்லையா? என தன்னைத்தானே சுயவிசாரனை செய்யவேண்டியவன், சொல்லப்படும் உபதேசங்கள் பிறருக்கு எந்த அளவிற்குப் பொருந்தும் என்கின்ற ஒப்பீட்டு வேலையிலையே அவன் ஈடுபடுகின்றான்.
எனவே, இவ்வாறான நிலையிலிருந்து நாம் மாறவேண்டும். எமது எண்ணங்கள் மாறவேண்டும். அன்றைய ஸஹாபாக்களின் மனப்பாங்குகள் எம்மிலே தாக்கம் செலுத்த வேண்டும். அந்த வகையில் பாவத்தில் மூழ்கிப்போயிருக்கும் நாம், எமது தவ்பாவின் ஆரம்ப கட்டமாக நாங்கள் செய்த பாவங்களை மனதார ஏற்றுக்கொள்வோம். அவற்றிற்காக வருந்துவோம். நாளை மறுமையில் உயர்ந்த சுவர்க்கத்தை அடைவோம் இன்ஷா அல்லாஹ்.
தொகுப்பு: SLM. ஹஸ்ஸான்
துணை நின்றவை:
01- அத்தவ்பா இலல்லாஹ்.
02- தப்ஸீர் இப்னு கதீர்.
03- ரியாளுஸ் ஸாலிஹீன்.
source: http://aalamulislam.webs.com/articles.htm