டீன் ஏஜ் பருவம் – விழித்துக் கொள்வோம்…!
ஒரு மனிதனுக்கு மனம்தான் மிகவும் முக்கியம். இதைத்தான் எண்ணத்தைப் போல வாழ்க்கைன்னு சொல்லியிருக்காங்க. அந்த மனதை எப்படி நன்றாக வைத்துக் கொள்வது? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மனநிலையும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால்தான் பல தவறுகள் நடக்கின்றன. ஒரு தவறு நடந்து விட்டால் தப்பு செய்தவனை மட்டும் குறை கூறவோ பழி போடவோ முடியாது. அதற்கு காரணமானவர்களையும் யோசிக்க வேண்டும்.
தெரு ஓரத்தில் தனித்து வளரும் ஒரு செடிக்கு எப்படி நாம் எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாதோ அப்படித்தான் தனிமைப்படுத்தப்படும் ஒரு குழந்தையும். ஒரு வேளை அல்லாஹ்வின் நாட்டப்படி அது வளர்ந்து மரமாகலாம். அல்லது பலர் கால்பட்டு மிதிபட்டு அழிந்தும் போகலாம். அப்படித்தான் வேலியில்லாத செடியை ஆடு மேய்வது போல் பலரது வாழ்க்கையும் அழிந்து போகிறது. நம் பிள்ளைகளுக்கு நாமே வேலியாக இருக்கவேண்டும்.
டீன் ஏஜ் பருவம், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான பகுதி. உடலிலும் மனதிலும் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் சில குழந்தைகள் பயந்து போவார்கள். சில குழந்தைகள் குழப்பத்தில் இருப்பார்கள். இது வரை எல்லா விசயத்துக்கும் அம்மாவையே கேட்டு செய்திருப்பார்கள்.
இனி தானே முடிவெடுக்கத் தொடங்குவார்கள். ஆடைகள் வாங்குதிலும் சரி, வெளியே போவதிலும் சரி தனியாக அல்லது தோழிகளுடன் போவதையே விரும்புவார்கள். இப்போது பெற்றோர்களின் மனநிலை அப்பாடா பிள்ளை வளர்ந்து விட்டான். அவன் வேலைகளை அவனே செய்து கொள்கிறான். நிம்மதி என்று பெருமையோடு விட்டு விடுவார்கள்.
இப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு விலகல் ஏற்படுகிறது. இந்த விலகல்தான் கடைசியில் ஆபத்தில் வந்து முடிகிறது. இவ்வளவு நாட்களாக குளித்துவிட்டு, தலைவாரிவிட்டு சுத்தமாக வெளியே போன்னு பல முறை சொல்லியும் கேட்காதவன் இப்போ தாய்க்கு முன்பே எழுந்து குளித்து தலைவாரி பளிச்சென்று வந்து நிற்பான்.
அவளுக்கு ஒரே ஆச்சர்யம். இது நம் பிள்ளைதானா? எவ்வளவு திருந்தி விட்டான். பொறுப்பு வந்திருச்சின்னு சந்தோசமா விலகிப்பாங்க. அவங்க வேலையை அவங்க பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்க கவனம் அவனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி விடும். அம்மாவின் கடமை முடிந்துவிட்டது.
இந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அப்பாவின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. இந்த டீன் ஏஜ் பருவம் சிறுவர்களிலும் சேர்க்க முடியாது பெரியவர்களிலும் சேர்க்க முடியாது. ஏனென்றால் ரெண்டுங் கெட்டான் வயது . இந்த வயதில் நிறைய குழந்தைகளின் கேரக்டர்ல வித்தியாசம் தெரியும். அவங்களுக்குள்ளே ஏற்படற மாற்றத்தால பாதிப்பு இருக்கும். சிடு சிடுப்பு, கோபம் ஏதாவது கேட்டா எரிஞ்சி விழுவாங்க. இதைத்தான் நிறைய பேர் வளர வளர திமிர் அதிகமாயிடுச்சிம்பாங்க.
ஆனா இதை சரியா புரிஞ்சிக்கிட்டு, அவங்க இந்த வயதை கடக்கும் வரை அவங்களோட துணையாக இருப்பது நம் கடமை. இந்த வயதில் அப்பா அவனோடு நெருக்கமாகப் பழக வேண்டும். அவனுடைய நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்து, அவனை சந்தோஷப்படுத்தி என் அப்பா என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் நடந்து கொள்கிறார் என்று அவன் மனம் சொல்ல வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட்டு அதை விட அதிகமாக அவனிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அவனுடன் தனிமையில் பேசவேண்டும். முடியவில்லையென்றால் முயற்சி செய்து பத்து நிமிடமாவது பேச வேண்டும். இந்த வயதிலிருந்தே அவனுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அவனுக்கே புரியாமல் அவனிடம் தேவையில்லாத தவறான சிந்தனைகள், எண்ணங்கள் இருந்தால் அதை திருத்தி நல்லதை எடுத்துச் சொல்லி நேர்வழி காட்டவேண்டும்.
அப்பாவின் கடமை உழைத்து சம்பாதித்து, படிக்க வைத்து கல்யாணம் பண்ணிக்கொடுப்பது மட்டுமல்ல, அவன் பெரியவனாகும் வரை அவனுக்கு நிழலாய் இருந்து, பாதை அமைத்துக் கொடுத்து நேர்வழி காட்ட வேண்டும். அவன் நேர்வழியில்தான் செல்கிறானா என்பதை கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். நான் சம்பாதிப்பதே அவனுக்காகத்தான் என்று முழு நேரத்தையும் பணத்துக்காகவே செலவழித்து ஒரு கணிசமான தொகையையும் சேர்த்திருப்போம்.
இப்போது கொஞ்சம் நிதானித்து நம் பையனை திரும்பி பார்த்தால் அவன் நம் வீட்டிலேயே இருந்தாலும் கூட பெயரளவில் மட்டுமே அப்பா என்று அழைக்கக்கூடியவனாக இருப்பான். பாசத்தில் நம்மை விட்டு வெகு தூரம் போயிருப்பான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் மனதைப் பகிர்ந்து கொள்ள ஒரு பெண் அல்லது சில நண்பர்கள் அவன் மனதில் இடம்பிடித்திருப்பார்கள். இப்போது நாம் சொல்லும் வார்த்தை இவனுக்கு கொஞ்சம் கூட நன்றியில்லையே! உனக்காக இரவும் பகலும் உழைத்திருக்கிறேன். உன் அம்மாவும் நானும் உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம். எவ்வளவு பாடுபட்டு உன்னை வளர்த்தோம். உனக்கு புரியவில்லையா? இத்தனை ஆண்டுகள் வளர்த்த எங்களை விட உனக்கு அந்தப் பெண்ணோ அல்லது நண்பர்களோ முக்கியமாகி விட்டார்களா? நமக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கூட புரியாது.
காரணம் அவர்களுக்கு புரியாத வயதில் குழந்தையாக இருக்கும் போது காட்டும் அன்பை அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் புரிந்து கொள்ளக்கூடிய வயதில் நாம் வெளிப்படுத்துவில்லை. அவர்கள் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நாம் அலட்சியமாக இருப்போம். ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. எதுவுமே நம்மோடு இருக்கும் வரை நாம் அலட்சியமாக இருப்போம். நம்மை விட்டுப் போன பின்தான் அதன் வலி தெரியும்.
ஒவ்வொரு குழந்தையும் அவ்வீட்டின் தூண்கள். அந்தத்தூண்கள் சரியில்லையென்றால் அவ்வீடே ஆட்டம் கண்டு விடும். இதை பெற்றோர்களும் உணர வேண்டும். பிள்ளைகளும் உணர வேண்டும். அல்லாஹ்வும் ரசூலும் காட்டித் தந்த வழியில் அன்பும் நேசமும் நிறைந்ததாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.
– சயீதா நஸீரா
source:http://www.samooganeethi.org/?p=1314