உடல் நலம் விசாரிப்போம்
மௌலவி, K.S.M. இப்ராஹீம் மதனீ
இஸ்லாம் வெறும் ஆன்மீகத்தை மட்டும் கூறக்கூடிய மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் முழு வாழ்க்கைத் திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கமாகும்.
மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் நோயாளியை உடல் நலம் விசாரித்தல் பற்றி இஸ்லாம் கூறும் ஒழுக்கங்களையும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.
நோயுற்ற ஒரு முஸ்லிம் சகோதரரின் உடல் நலம் விசாரித்தல் கடமையாகும்
ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும்.
வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும்.
இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது.
நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
உடல் நலம் விசாரித்தல் பற்றிய நபிமொழிகள்
1) நோயாளியை உடல் நலம் விசாரித்தல்,
2) ஜனாஸாவை (நல்லடக்கம் செய்ய) பின் தொடர்ந்து செல்லுதல்,
3) தும்மியவருக்கு (யர்ரஹ்முகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல்,
4) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை (அது நன்மையானதாக இருந்தால் அதனை) நிறை வேற்றி வைத்தல்.
5) அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்தல்,
6) அழைப்புக் கொடுத்தவருக்கு (விருந்துக்கு) பதிலளித்தல்
7) ஸலாமை (மக்களிடையே) பரப்புதல் ஆகிய (ஏழு) விஷயங்களை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு ஏவினார்கள். (அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமிடம் ஐந்து உரிமைகள் உள்ளன.
1) ஸலாமுக்கு பதிலளித்தல்
2) நோயாளியை உடல் நலம் விசாரித்தல்
3) ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல்,
4) அழைப்புக்கு (விருந்துக்கு) பதில் அளித்தல்,
5) தும்மியவருக்கு (யர்ரஹ்முகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) ‘ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?’ என கேட்பான். அப்பொழுது அடியான், ‘என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!’ என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் ‘என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான்.
‘ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் ‘என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!’ என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ‘என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?’ என்று கூறுவான். ‘
ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை’ என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். ‘என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்’ என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், ‘என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?’ என்று கூறுவான். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம்)
முஸ்லிம் அல்லாதவரையும் நோய் விசாரிக்கச் செல்லுதல்
யூத மதத்திலுள்ள ஒரு சிறுவன் நோயுற்றிருந்தான். அவனை நோய் விசாரிப்பதற்கு சென்றிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பையனின் தலைப்பக்கமாக உட்கார்ந்து அப்பையனிடம் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் எனக் கூறினார்கள். அப்பையனின் தலைப்பக்கம் நின்று கொண்டிருந்த தன் தந்தையை அப்பையன் பார்த்தான். அபுல்காசிமுக்கு கட்டுப்படு என அப்பையனின் தந்தை கூறினார். அப்பையன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். என் மூலம் அப்பையனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என கூறியவாறு எழுந்து சென்றார்கள். (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : அபூதாவூத்)
நோய் விசாரிக்கச் செல்வதில் கிடைக்கும் நன்மைகள்
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நோயாளிகளை உடல் நலம் வினவுங்கள்! பசியாளிக்கு உணவளியுங்கள்! கைதியை (உரிய ஈட்டுத்தொகை வழங்கி) விடுதலை செய்யுங்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி)
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை உடல் நலம் விசாரித்தால், அவரிடமிருந்து அவர் திரும்பும் வரை ‘குர்பத்துல் ஜன்னா’வில் ஆகிடுவார். அல்லாஹ்வின் தூதரே ‘குர்பத்துல் ஜன்னா’ என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அது சுவர்க்கத்தில் பறிக்கப்பட்ட கனிகள் ஆகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் : தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம்)
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். (அறிவிப்பாளர் : அலி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதி)
நோயாளி தன் நோய் பற்றி மற்றவர்களிடம் கூறுவதில் தவறில்லை
நோயாளி தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றி பிறரிடம் கூறுவதில் ஏதும் தவறில்லை. ஆனால் அல்லாஹ்வின் விதியை மறுக்கும் முகமாகவும் அந்த அல்லாஹ்வின் சோதனையை வெறுத்து பேசுவதும் தவறாகும்.
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காய்ச்சலாக இருந்தபொழுது நான் அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்களைத் தொட்டுப் பார்த்தேன். பிறகு நான் தாங்கள் கடினமான காய்ச்சலால் கஷ்டப்படுகிறீர்கள் என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ உங்களில் இரண்டு பேருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்படுகிறது எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
2. நான் கடினமாக நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்து என் உடல் நலத்தை விசாரித்தார்கள். அப்பொழுது (அல்லாஹ்வின் திருத்தூதரே) தாங்கள் பார்க்கும் கடினமான நோய் என்னை அடைந்துவிட்டது. நான் ஏராளமான செல்வங்களை உடையவன். எனக்கு என் மகனைத் தவிர வேறு எந்த வாரிசும் கிடையாதுஸ இவ்வாறாக தொடர்ந்து மீதியுள்ள ஹதீஸையும் அறிவித்தார்கள். (அறிவிப்பாளர் : ஸஃது பின் அபீ வக்காஸ்ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
3. ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் (தங்கள் நோயின் கடுமையால்) வா ரஃஸா! (என் தலைக்கு வந்த கேடே!) எனக் கூறினார்கள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பல் அன வா ரஃஸா! என் தலைக்கும் வந்த கேடே! எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் : காசிம் பின் முஹம்மது (‘அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு’ அவர்களின் பேரன்) ஆதாரம் : புகாரி)
நோயாளிக்கு கூறும் மன ஆறுதல் வார்த்தை
ஒரு காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் சென்றால், லாபஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் (பரவாயில்லை) ‘அல்லாஹ் நாடினால், குணமாகும்’ எனக் கூறுவார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி)
நோயாளிக்காக ஓத வேண்டிய துஆக்கள்
நோயாளியை சந்திக்கச் செல்பவர் அந்த நோயாளிக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த துஆக்களையும் ஓதுவது சிறந்ததாகும். இந்த துஆக்களை குறிப்பிட்ட ஒருவர்தான் ஓத வேண்டுமென்றில்லை, யார் வேண்டுமாலும் ஓதலாம், நோயாளி தனக்குத் தானே ஓதி ஊதிக் கொள்ளலாம். அந்த துஆக்கள் பின் வருமாறு.
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யாராவதொருவர், தம் நோயைப் பற்றியோ, தம் புண்ணைப் பற்றியோ, காயத்தைப் பற்றியோ முறையிட்டால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் நடுவிரலை பூமியில் வைத்து பின்னர் உயர்த்தி ‘பிஸ்மில்லாஹ் துர்பத்தி அர்ளினா, பிரீகதி பஃளினா யுஷ்பா பிஹி ஸகீமுனா பிஇத்னீ ரப்பினா’
பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால், (இது) எங்கள் பூமியின் மண், எங்களில் சிலரின் எச்சியுடன் கலந்துள்ளது. எங்கள் இரட்சகனின் கட்டளையால், இதனைக் கொண்டு எங்களின் நோயாளி குணமடைவார் என கூறுவார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்கள் குடும்பத்தினரில் சிலரின் உடல் நலத்தை விசாரிப்பார்கள். அப்பொழுது தங்கள் வலது கரத்தை அந்நோயாளியின் மீது தடவி. அல்லாஹும்ம ரப்பன்னாஸ், அத்ஹிபில் பஃஸ இஷ்பி அன்தஷ் ஷாஃபீ லா ஷியா இல்லா ஷிபாவுக் ஷிபா அன் லாயுஹாதிரு ஸக்மா’ பொருள்: இறைவா! மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கி வைப்பாயாக! நோயைவிட்டு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. அது எந்த நோயையும் விட்டு வைக்காது என்று கூறுவார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
3. நான் நபித் தோழர் தாபித் ரளியல்லாஹு அன்ஹு என்பவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிப்பார்த்ததைக் கொண்டு நான் உமக்கு ஓதிப்பார்க்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம்’ என்று கூறினார். அதன்படி ‘அல்லாஹும்ம ரப்பன்னாஸ் முத்ஹிபில் பஃஸ் இஷ்பி அன்தஷ் ஷாஃபீ லா ஷாஃபிய இல்ல அந்த ஷிபாஅன் லாயுஹாதிரு ஸக்மா’
பொருள்: இறைவா! மனிதர்களின் இரட்சகனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு யாரும் கிடையாது. உன் குணமளித்தல் எந்த நோயையும் விட்டு வைக்காது எனக் கூறி ஓதிப்பார்த்தார்கள். (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி. முஸ்லிம்)
4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை உடல் நலம் விசாரித்தார்கள். அப்பொழுது “அல்லாஹும்மஷ்பி ஸஃதன் அல்லாஹும் மஷ்பிஸஃதன் அல்லாஹும்மஷ்பி ஸஃதன்’
பொருள்: இறைவா! ஸஃதுக்கு குணமளிப்பாயாக! இறைவா! ஸஃதுக்கு குணமளிப்பாயாக! இறைவா! ஸஃதுக்கு குணமளிப்பாயாக! என மும்முறை துஆச் செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஸஃது பின் அபீவகாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)
5. நான் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!’ மேலும் “அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு’
பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை கூறுவீராக! (அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, அதாரம் : முஸ்லிம்)
source: http://www.suvanam.com/portal/?p=2431#more-2431