உறியில் தயிர்வைத்து ஊருக்குள் வெண்ணெய் தேடுவோரே!
”மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவர்
வெங்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவர்
நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று ஓடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே?”
உரை : கிராமப்புறத்தில் உபயோகப் படுத்தும் மண் பானை, சட்டி உடைந்து போனால் தூக்கியெறிந்து விடாது அதன் வாய்ப்பகுதியை மட்டும் உடைத்தெடுத்து பானை சட்டிகளுக்கு அடியில் முட்டுக் கொடுத்து உட்கார வைக்கும் மனையாகப் பயன்படுத்துவர்.
வெங்கலம் செம்புப் பானை ஓட்டையாகி ஒழுதாலும், அதன் உள்ளே ஊறும் களிம்பு சாயம் மற்றவற்றின் மீது படிந்தாலும் விடுவதில்லை அறைக்குள் பத்திரமாய்ப் பூட்டிப் பாதுகாப்பர்.
உயிர் போனபின் மனித உடல் மண்பானை போன்று கூட மதிப்பப்படுவதில்லை. அதிக நாள், நேரம் வீட்டுக்குள் வைத்திருந்தால் நாறிப்போகும் என உறவுகள் எடுத்தோடுவர். இதனை அறிந்திருந்தும் உன்னைப் பொருட்டாகக் கருதாமல் இந்த உடலை வைத்து மனிதர் செய்யும் வஞ்சகத்தனமும், பசப்புத் தனமும் என்னே என் இறைவனே! கேட்கிறார் சித்தர்.
”உருவம் அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும் வாசல் சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே?”
உரை : உருவமுள்ளதும் அல்ல. ஒன்று மற்றதும் அல்ல. வேறு எந்த ஒன்றும் அதற்குச் சமமானதும் அல்ல. எவரும் அதனை எளிதாக நெருங்கிவிடவும் முடியாது. அதன் தன்மைக்குரியது ஏனையது எதுவுமேயில்லை. இளமையானதும் அல்ல. முதுமையானதும் அல்ல. ஊமையும் அல்ல. அளவிட இயலா மதிப்பு மிகுந்த அவ்விறையின் இரகசியம் அறியும் ஆற்றலுடையவர் இங்கு எவர் உள்ளார்?
”அறிவே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணெய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுமாறது எங்ஙனே?”
உரை : போதனையால் பாதுகாத்த, தரும நூல்கள் ஓதுகின்றீர். சன்மார்க்கத்திலே கலந்து விடும் சீர்திருத்தம் ஒன்றை அறியவில்லை. வீட்டு மேல்க் கூரையில் தொங்கும் கயிற்றுக் கிடையிலிருக்கும் சட்டியில் தயிர் இருக்கிறது. ஊருக்குள் போய் வெண்ணெய் தேடுகின்றீர். உங்களிடம் இருக்கும் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் எடுக்கலாம். இறைவனை உங்களிடையே தேடாமல், வெளியில் தேடிக்கொண்டு அலைகின்றீர். இது குறித்து கூறி எடுத்துரைத்தாலும் சிந்தனையில் ஏற்காத ஞானமில்லாத மனிதரிடம் நெருக்கமாகிப் பழகுவதும், அவர் செல்லும் தடத்திலிருந்து வழிமாற்றி மறுபுறம் செலுத்துவதும் எவ்வாறு நடக்கும்?”
சொற்பொருள் :
கவிழ்தல் – உடைதல்.
எண் – மதிப்பு.
மாயம் – வஞ்சகம்,
பாசாங்கு. ஈசன் – இறைவன்.
ஒன்றை மேவி நின்றதல்ல – ஒன்றுக்கும் சமமானதல்ல.
மருவும் வாசல் – நெருங்கும் வழி.
சொந்தமல்ல – உரியதல்ல.
பெரியதல்ல சிறியதல்ல – இளமையல்ல. முதுமையல்ல.
பேசலானதானும் அல்ல – ஊமையும் அல்ல.
அரிய – மதிப்புடைய.
நேர்மை – நுண்மை, இரகசியம்.
வல்லர் – ஆற்றலுடையவர்.
அறிவிலே – போதனையாலே.
புறந்திருந்த – பாதுகாத்த.
ஆகமங்கள் – தரும நூல்கள்.
நெறி – நீதி, ஒழுங்கு, சன்மார்க்கம்.
மயங்கு – கலக்கு.
நேர்மை & செவ்வை – செப்பம், சீர்திருத்தம்.
அறிவிலாத – ஞானமில்லாத.
மாந்தர் – மனிதர்.
அணுகுமாறது – நெருங்கி மறுபுறமாக்குதல்.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சித்தர் புரட்சிக்காரராகக் கருதப்படுபவர். ஒரே இறைவன். அவன் உருவமற்றவன். இணை துணையற்றவன். ஈடற்றவன் என்கிறார். ஓரிறையை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதில் தான் தோல்வி கண்டதையும், மக்கள் மனமாற்றம் நிகழாததையும் பாடலாக்கியிருக்கிறார். மக்களுக்கு உலக வாழ்வின் நிஜம் உணர்த்த மண்பானை. பிரியாணி சமைக்கும் செம்புச் சட்டியை மனித உடலுக்கு உவமானமாக்கியிருக்கிறார். சீர்திருத்தக் கருத்துக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே பாடியுள்ளார்.
-சோதுகுடியான்
முஸ்லிம் முரசு டிசம்பர் 2012