தலைவர்களின் வழிகாட்டுதல்களும், தொண்டர்களின் கட்டுக்கோப்பும்!
ஐவேளை தொழுகையை கற்றுத் தந்த இஸ்லாம்,
நோன்பு நோற்க சொன்ன இஸ்லாம்,
இன்ன பிற கடமைகளை நிறைவேற்ற சொன்ன இஸ்லாம்
மக்களிடையே நடந்து கொள்ளும் முறையையும்,
கையாளக்கூடிய விதத்தையும் சொல்லாமல் விட்டிருக்குமா?
இஸ்லாம் சிறு சிறு விஷயங்களைக் கூட சொல்லாமல் விட்டுவிடவில்லை.
சிரிப்பதும் சிந்திப்பதும், உண்ணுவதும், உறங்குவதும் என்று வாழ்க்கையினுடைய எல்லா அம்சங்களிலும் வழிகாட்டுகிறது.
ஹஜ்ஜத்துல் விதா என்று சொல்லக் கூடிய இறுதி ஹஜ்ஜின் பேருரையின் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து,
“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.
நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். அத்தருணத்தில் தான் பின்வரும் குர்ஆனின் இறுதி வசனம் இறங்கியது.
“இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்.” (அல்குர்ஆன் 5:3)
எனவே இஸ்லாம் ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தலைவனுடைய பண்பும் எடுத்தாளும் முறையும், தொண்டர்களுடைய நிலையும் அவர்களது எல்லையும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்கள். ஒரு தொண்டனுடைய கடமையும் எல்லையும் எதுவரை என்றுச் சொன்னால், ஒரு தவறான செய்தியோ, வேறு ஏதேனும் பிரச்சினையோ கண்டாலோ கேட்டாலோ அதை இஸ்லாத்திட்குட்பட்டு, தானே இறங்கி செய்ய முடியும் என்றால்
அதை செய்யலாம். ஆனால் அது ஒரு சமுதாய பிரச்னை என்றிருந்தால் அதை தன்னுடைய தலைமைக்கு, தலைவருக்கு அதைக் குறித்த விஷயத்தை தெளிவாக எடுத்துரைப்பதோடு அவரது கடமை முடிவடைந்துவிடுகிறது. தலைமையினால் தனக்கு கட்டளையிடப்பட்டால் மட்டுமின்றி அந்த பொறுப்பு அவருக்கு முடிவடையாது.
அதைப் போல் தலைவரும் சமூகத்தில் எழுகின்ற பிரச்சினையை கையாளும் விதம், எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுகின்ற செயலாகவும், தொண்டர்களின் கோபத்தை அதிகரிக்க வைக்கக் கூடியதாகவும் இருந்துவிடக் கூடாது. தொண்டர்கள் கோபமடையத்தான் செய்வார்கள். அதனால் தானே அவர்கள் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஆனால் கோபம் வருகின்றபோது
விஷயத்தை புரிந்துகொண்டு விவேகத்துடனும் பக்குவமுடனும் தூரநோக்கு சிந்தனையோடும் அந்த விஷயத்தை தலைவர்கள் அணுகவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் போது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போரிடுதல் பொறுத்தமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்.)
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து, ‘(அல்லாஹவின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும்) இல்லையா (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?’ என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அப்படியிருக்க, நாம் நம்முடைய மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வின் தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்’ என்று கூறினார்கள்.
(முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்களின் மீது) உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, ‘அபூ பக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?’ என்று (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டது போன்றே) கேட்டார்கள்.
அதற்கு அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘கத்தாபின் புதல்வரே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்’ என்று கூறினார்கள்.
எதிர் தரப்பிலிருந்து சொல்லும் அத்தனை விஷயங்களுமே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருந்ததால் உமர் ரலி அவர்களை அதிக கோபமடையச் செய்தது. அப்படியிருந்தும் கூட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு பொறுமையோடு இருந்தார்கள் என்பதை நாம் காண முடிகிறது.
ஒரு நீண்ட ஹதீஸின் சாராம்சத்தை மட்டும் இங்கே பதிவு செய்யலாம் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுடன் இருக்கும் நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே ஒரு தோழர்,
”யா ரசூலுல்லாஹ் எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்” என்று கூறினார்.
அந்த தருணத்தை சற்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். கூடியிருந்த அனைத்து தோழர்களும் கோபம் கொண்டு கொதித்து எழுந்தார்கள். அன்னலாரிடமே வந்து இவ்விஷயத்தை கேட்ட நபர் மீது தாக்குவதற்கு முற்பட்டனர்.
இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டியான இறுதித் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பக்குவமாக பொறுமையோடு தோழர்களை அமைதிகாக்கும்படி கூறி, அந்த தோழருக்கு அதனுடைய விபரீதத்தை எடுத்துக் கூறினார். இறுதியில் அவர் அன்னலாரிடம் மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்விடம் தனக்காக பிரார்த்திக்குமாறு வேண்டினார்.
கண்டீர்களா அண்ணலாரின் அழகிய வழிமுறையை..?
ஆனால் பொறுமையாக சில விஷயங்களை நாம் கவனத்துடன் ஈடுபட்டு கோபத்தை அடக்கினால், சில அறியாமையர்களால் நமக்கு கிடைக்கும் பட்டம் கோழைகள் என்று… ஆனால்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’
”மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.”
ஒரு எல்லைக்குள் ஒருவருக்கொருவர் எதிரியாக கருதி வீழ்த்துவதற்கு தயாராகி அதனால் தமக்கு கிடைக்கும் பட்டம் வீரன் என்று கருதுகிறான் மனிதன். ஆனால் இது மனிதனும் மனிதனும் மோதுகின்ற செயல். மனிதனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக கோபம் ஷைத்தானால் ஏற்படுகிறது. அவன் தான் நமக்கும் அனைவருக்கும் எதிரி. அந்த ஷைத்தானை வீழ்த்துபவன் தான், தன்னுடைய கோபத்தை தானே அடக்குவது தான் உண்மையான வீரம் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.
இந்த பண்பு சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காது. கோபம் எல்லோருக்கும் பொதுவானது. கோபப்படுவது மனிதனின் பண்பு. அதை அடக்குவது தான் புனிதனின் பண்பு. கோபம் கொண்டு பிறரை ஏசி, தாக்க எவராலும் முடியும். சகித்துக் கொண்டு பொறுமைக் காக்க ஒரு சிலரால் தான் முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)
-Shahir Kovai
source: idealvision.info