Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாலியல் வன்முறையின் விசாரணை – பெண்ணின் கண்ணியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்

Posted on February 18, 2013 by admin

பாலியல் வன்முறையின் விசாரணை – பெண்ணின் கண்ணியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்

பாலியல் வன்முறையின் தன்மையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் தன்னாட்சி நிலைக்கெதிராக ஒரு ஆண் உறவு கொள்கிறானோ அங்கே அந்தச் சம்பவம் நிகழ்கிறது. அங்கே பெண்ணின சமத்துவ உரிமை, அவளுடைய சுயமதிப்பு தாக்கப்படுகிறது.

கற்புடமை, கன்னித்தூய்மை போன்ற கருத்துப் படிவங்கள் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே எப்பொழுதெல்லாம் அவள் மேல் ஆண் பாலியல் அதிகாரம் செய்ய முனைந்தானோ அங்கே அந்தக் குற்றம் நடைபெற்றது.

ஆணாதிக்க சமூகத்தில் இந்தக் குற்றத்தை குடும்ப கெளரவம், மானம் என்ற சாயமும், புனிதம், தூய்மை என்ற வர்ணமும் பூசப்பட்டு அந்த வன்முறையின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெறும்பொழுது ஒரு கொடுங்குற்றம் நடைபெறுகிறது, இதற்கு அவள் பொறுப்பல்ல, அதற்கும் கெற்ரவத்திற்கும் இணைப்பும் இல்லை. அவள் எவ்விதத்திலும் களங்கப்படவுமில்லை. இதை முதலில் நாம் புரிந்து கொண்டால் தான் பெண்ணுக்கு நீதி கிடைக்கும், அவள் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்த உரிமைப் பறிப்பு அவளுடைய மனப்பக்குவத்தின் வளர்ச்சியையோ, எனது உடல் என்ற புலனுணர்வையோ சார்ந்ததில்லை. அவளுடைய சம்மதமின்றி நடக்கிறது. அவள் வாய் திறந்து வேண்டாம் என்று சொல்லாமல் மெற்னமாக இருந்தால் அது சம்மதமாகாது. அவள் அச்சத்தால் ஆற்றலிழந்து போயிருக்கலாம், பலவந்தத்தால் அவள் கைகள் செயலற்றுப் போயிருக்கலாம், இந்தச் செயலின் தாக்கத்தை மனதளவில் புரிந்துகொள்ள முடியாத சிறுமியாக இருக்கலாம், மாற்றுத்திறனாளியாக இருக்கலாம், மனவளர்ச்சியடையாதவராக இருக்கலாம். எவ்வாராயினும் அது அப்பெண்ணின் மீது ஏற்பட்ட அதிகாரத்தாக்குதலே.

இப்பொழுது நம் தலைநகரில் நடந்த சம்பவம் இந்த வன்முறையின் அதிஉக்கிரமான வெளிப்பாடு. நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் ஏழைப்பெண்கள், தலித்பெண்கள், மலைவாழ்பெண்கள், வயதானவர்கள், பெண்குழந்தைகள், சிறுபான்மையினர், வெளிநாட்டவர்கள் என்று பாகுபாடில்லாமல் பெண்களுக்கெதிராக நடக்கும் அநீதி. அந்த ஆண் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததினால் நடந்த ஒன்றல்ல, அவன் தெரிந்தே பெண்ணைக் கட்டுப்படுத்தத் தொடுக்கும் வன்செயல்.

இந்த அதிகாரத் தாக்குதலை ஒரு பெண் எவ்வாறு விளக்குவாள்? பண்பாட்டுக் கூச்சத்தில் வாய் மெற்னம் பேசும். கலக்கத்திற்குரிய பாலியல் வன்முறையை நினைவுகூர்வது எளிதில்லை. அவளுக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் புறக்காட்சியாகத் தீட்ட முடியாது; கோர்வையாகக் கதை சொல்வதுபோல யாராலும் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது.

ஆனால், அந்தச் சம்பவத்தைப்பற்றி நேர்காணல் உரைபோல அந்தப்பெண் சொல்ல வேண்டும் என்று காவல்துறையும், நீதித்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பாலியல் வன்முறையின் தாக்கம் என்ன, அதன் விளைவுகள் என்ன, அதன் பின்புலம் என்ன, அந்த வழக்குகளை எப்படி அணுக வேண்டுமென்று பயிற்சி ஒன்று நடக்கும்.

முதலில் நீதித்துறை அதிகாரிகளைக் கண்களை மூடிக்கொள்ளச் சொல்லுவோம். அவர்களின் முதல் காதலனுபவத்தை, மனதுக்கினிய மற்றொருவருடன் உறவுகொண்டதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்லுவோம். ஐந்து நிமிடங்கள் சென்றபின் கண்களைத் திறக்கச் சொல்வோம். பின் ஒவ்வொருவரும் தன் அருகிலிருக்கும் நண்பரிடம் சன்னக்குரலில் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளச் சொல்வோம்.

அனைவரும் அதிர்ச்சியும் கூச்சமும் நிறைந்த குரலில் அதெப்படி முடியும் என்பார்கள். அப்பொழுது கேட்போம் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வை அந்தரங்கம் காரணமாக உங்களுக்குத் தெரிந்த நண்பருடன் பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிறீர்கள்.

முன்பின் தெரியாத நபர்கள் அடங்கிய கோர்ட் ஹாலில் பாலியல் வன்முறைக்கு ஆளான அந்தப் பெண் வழக்குரைஞர்களுடைய மிரட்டும் குறுக்கு விசாரணைக் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பாள் என்று. உண்மை நிலை அப்பொழுதுதான் அவர்கள் முகங்களில் அதிர்ச்சியாய் உறையும்.

வன்முறை நிகழ்ந்தது ஒருமுறை என்றால், அதை திரும்பத்திரும்ப காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் அவள் கூறவேண்டியக் கட்டாயம் அவளை வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாக்குகிறது. வன்முறைக் குற்றம் அவளுடலை மட்டும் பாதிப்பதில்லை. அவள் உணர்வுகளைப் பாதிக்கிறது. அவள் உளவியல் துன்பங்களுக்கு ஆளாகிறாள்.

உளவதிர்ச்சிக் கோளாறுகளால் அவளது மூளையில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இது எனக்கு நடக்கவில்லை, எனக்கு நடக்கவில்லை என்று தனக்குள்ளே மறுப்பு மாயையை ஏற்படுத்திக்கொள்கிறாள். அழுகிறாள், கதறுகிறாள். கடிகாரம் பின்னோக்கிச் சென்று அந்த நிகழ்விற்கு முன்னிருந்த காலத்திற்கு போய்விட மாட்டோமா என்று பரிதவிக்கிறாள். மேலே கூறியுள்ளது அவள் உண்மை நிலையின் முழுமை பெறாத சித்தரிப்பே.

இதில் குடும்பத்தாருடைய ஆதரவும் எல்லாப் பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால் நம் சமூகம் குற்றம் செய்யாத அந்தப் பெண் மீது குற்ற உணர்வையும் அவமானத்தின் சுமையையும் ஏற்றுகிறது.

எத்தனை எத்தனை பெண்கள், தினசரி தாக்கப்படுகிறார்கள். நாமும் தினமும் படிக்கிறோம். தாக்கியவர்கள் தெரிந்தவர்களாக இருக்கலாம், அதிகாரத்திலிருப்பவர்களாக இருக்கலாம், பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கலாம். எவ்வளவு வன்முறைக்கொடூரங்கள்? ஏன் இப்பொழுது பெண்களும், ஆண்களும் நம் தலைநகரில் கடுங்குளிரில், லத்தியடியை வாங்கிக்கொண்டு, பெண்கள் மேல் வன்முறை ஒழிய வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடுந்தவம் புரிந்தார்கள்?

இது ஒரு தனி நிகழ்விற்கு எதிரான போராட்டம் இல்லை, பல்லாண்டுகளாக சமூகத்தில் ஆட்சிபுரியும் நியாயப்படுத்த முடியாத கொடூரத்தை எதிர்த்து முதிர்ந்த பல்லாயிர உணர்ச்சிக் குவியல்களின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சிகளின் பிரதிநிதிகளாக பலர் சென்று நீதியரசர் ஜே.எஸ்.வர்மா குழுவிற்கு முன்னால் தங்களுடைய வாக்குமூலங்களை அளித்தார்கள். அமைதியாக, முறையாக, அழுத்தமாக உண்மைகளை விளக்கினார்கள்.

அந்த சிறப்புக்குழுவும் பல அரிய பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளில் ஆதார சுருதியென்னவென்றால் பெண்ணின் சமத்துவ உரிமை, தன்னாட்சி நிலை, கண்ணியம் இவைகளை யாரும் பறிக்க முடியாது, ஏன் கணவனே கூட, என்பதுதான்.

நாம் பெண்ணைப் பார்க்கும் கண்ணோட்டமே மாற வேண்டும், அவளை ஒரு இரண்டாந்தர பிரஜையாக நடத்தக் கூடாது என்று பல்வேறு கோணங்களில் அரிய பரிந்துரைகளை முன் வைத்துள்ளது இந்தக் குழு. இவற்றை எவ்வளவு சீக்கிரமாக அரசு செயல்படுத்துகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்தப் பாலியல் வன்முறைக் குற்றத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், குற்றம் செய்தவன் தலைநிமிர்ந்து நடக்கிறான். தாக்குதலுக்கு ஆளானவளுக்கு வருகிறது சேதமும் அவப்பெயரும்!

சமூகநிலை மாறினால்தான் பெண்கள் குற்றங்கள் நடைபெறும்பொழுது தைரியமாக புகார் செய்ய வருவார்கள். அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதான, தைரியம் ஊட்டுவதான சமூகநிலை வரவேண்டும்.

அந்தப் பெண் கேட்பதென்ன? “”என் குறையை, என் கண்ணியம் பாதிக்கப்படாமல் கேளுங்கள். தீர விசாரியுங்கள், கோர்ட்டிலும் என் கண்ணியம் பாதிக்கப்படாமல் வழக்கை நடத்த வேண்டும், எனக்கு நீதி வேண்டும், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்” இவ்வளவு தான்.

இது அவளுடைய அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்டத்தான் அவளே நூறாக, அவளே ஆயிரமாக அங்கே அந்தக் கடுங்குளிரில் மெழுகுவர்த்தியுடன் நின்றாள்.

போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போதுதான் பெண்மை வெகுண்டெழுந்து தன் உரிமையை நிலைநாட்ட, தர்மயுத்தத்தைத் தொடங்கி இருக்கிறது. சட்டம் பிறப்பிக்கப்படுவது மட்டுமே தீர்வாகிவிடாது. சமூக நிலை மாற வேண்டும். சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டும். அதுவரை, வீறு கொண்டெழுந்திருக்கும் பெண்ணுரிமைக்கான போராட்டம் தொடரும்!

நன்றி : தினமணி (தினமணியில் வெளியான “தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறது!” தலைப்பில் நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன் எழுதிய ஆக்கம்.)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

30 − 26 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb