‘விஸ்வரூபம்’ – காயத்தை ரத்தத்தால் கழுவும் கதை (1)
கருத்துச் சுதந்திரம் பாகம் 1
‘விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன ‘திரைக் காவியத்தைக்’ காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.
விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.
அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.
இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.
கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு ‘தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி.
கருத்துச் சுதந்திரம் பாகம் 2
முல்லா ஒமர் மதுரையிலும், கோவையிலும் தங்கியிருந்ததாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஏதாவது ஒரு முஸ்லீமின் ரேஷன் கார்டையும் சேர்த்து காண்பித்திருக்கலாம். நோக்கம் இனிதே நிறைவேறியிருக்கும். அகில உலகமெங்கும் உளவுத்துறை வலைப்பின்னலை வைத்திருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளை விஞ்சிய அகில உலகநாயகனாக நீங்கள் ரெண்டு சண்டை போடுவதற்கும், நாலு பாட்டும் பாடுவதற்கும் முஸ்லீம்கள் பலிகடாக்களா? தசாவதாரத்தில் அதிபர் ‘புஷ்’ வேடமே போட்டாச்சு அப்பறம் ஏன் கமல் சார் தேவையில்லாம இப்படியொரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.
நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விட நேராக அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். கமலஹாசனில் ‘ஹாசன்’ என்ற வார்த்தைக்காக தங்களை ஜட்டியைக் கழற்றி சோதனை போட்ட நல்ல நாடான அமெரிக்காவிற்கு தாங்கள் போய் வாருங்கள்; நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஜார்ஜ் பெர்னாண்டஸை.. ஷாரூக்கானை.. அப்துல் கலாமை அதேபோல் சோதனை நடத்திய அமெரிக்கா, தங்களுக்குப் பிடித்த நாடு. இப்படி எந்த அரபுநாடும் நம்நாட்டின் பிரபலங்களை இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அரபுநாடுகளின் மீது உங்களுக்கு என்ன கோபமோ?
கருத்துச் சுதந்திரம் பாகம் – 3
ஓர் இந்திய உளவு அதிகாரி நம்ம கமல். உளவுப்பணிக்காக தனது துணைவியாரையே தாரை வார்த்து அவர் உளவு பார்க்கிறார். அந்த நாயகி ஆன்ட்ரியாவை அபூர்வ சகோதரன் படத்தில் வரும் ஏட்டு போல ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று கமல் சொல்லாத குறையாக, கூடவே சொட்டர போட்டுக்கிட்டு அலையவிடுகிறார். அரவாணியாக இருக்கும் நாயகன் கமலை மணந்தவள் மற்றொருவரை விரும்புவதை வில்லத்தனமாகக் காட்டுகிறார். ‘அமெரிக்காவில் மழை பெய்யாதா போயிட்டுப் போது’ என்று நாயகி கலக வசனம் பேசினாலும் மொத்தத்தில் அவளை வில்லியாக்கி விடுகிறார். நல்ல பெண்ணுரிமைவாதி நீங்கள்.
ஆண் அடையாளத்தைத் துறந்து, தாம்பத்தியத்தைத் துறந்து, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் தியாகி நம்ம கமல். அமெரிக்காவைக் காப்பாற்ற இந்திய அரசு வெட்டியாக சம்பளம் கொடுக்கிறது. முல்லா ஒமர் ‘தமிழ் பேசும் ஜிகாதி வான்டட்’ என்று கேட்டதால் கமல் சென்று இறங்கிவிட்டார். உயிரையே பணயம் வைத்து முல்லா ஒமரை நெருங்கிவிட்டார்.
அமெரிக்க ராணுவம் தமது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற ஒரு நியாயமான காரணம் இருப்பதாலேயே ஆப்கனில் ஒரு கிராமத்தைத் தாக்குகிறது. காரணமில்லாமல் தாக்க மாட்டார்களாம்! ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்காக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்! கடைசி ஆபரேசனில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் நிற்கும்போது முஸ்லீம் அதிகாரியாகிய கமல் தொழுவதை வாஞ்சையுடன் ஒரு அமெரிக்க அதிகாரி சக அதிகாரிக்கு விளக்குகிறார்! ஏனென்றால் நேர்மையான முஸ்லீம் அதிகாரிகளை அவர்கள் மதிப்பார்களாம்!
ஆமாம் கமல், இந்த குவான்டனாமோ சிறைச்சாலை தெரியுமா? அதில் முஸ்லீம் சிறைவாசிகளை கழுத்தறுத்து வீடியோவில் காட்டுவது; ஒருவரின் உடல் முழுவதும் மலத்தைப் பூசி அவரது முகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது ஜட்டியால் மூடுவது; நிர்வாணமாக நிற்கும் ஒருவரின் மீது நாய்களை விட்டுக் குதறவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் வெளியானதைத் தாங்கள் அறிவீர்கள் தானே.. இன்னும் வர்ணிக்க முடியாத கொடூரங்களை நிகழ்த்தியதன் காரணமாக அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் அந்த சிறை மூடப்பட்டதையும் அறிவீர்களா?
கருத்துச் சுதந்திரம் பாகம் – 4
சி.என்.என், ஐ.பி.என்., பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்களும் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஊடகங்களும் செப் – 11, 2011க்குப் பிறகு அடித்துத் துவைத்த ஒரு கருத்தைத்தான் இப்போது கமல் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார். அதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. ஆனால் அமெரிக்க பயங்கரவாதத்தைப் பற்றி சொல்லத்தான் ஒரு ஊடகத்தைக் கூட காணோம்! அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்தது. அதன் அலுவலகத்தை அமெரிக்கா குண்டுவீசி அழித்தது. கருத்துச் சுதந்திரத்தை இப்படி குண்டு போட்டு அழிக்கலாமா என்று அமெரிக்காவுக்கு பாடம் சொல்லி கமல் ஒரு படம் எடுப்பாரா?
அமெரிக்காவுக்கு கைவந்த கலை, திரைப்படங்களில் அரசியல் செய்வது. ஜப்பானைக் அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு ‘பியர்ல் ஹார்பா’ என்று ஜப்பானையே வில்லனாக்கி ஒரு படம் எடுத்தார்கள். வெளியிட்ட திரையரங்கில் எல்லாம் நம்ம தமிழன் அதை வெற்றிப்படம் ஆக்கினான்.
இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்.
நம்ம கமல் அமெரிக்க லட்சியப் படங்களை தமிழ் மண்ணில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இனி அமெரிக்க தூதரகத்தைத் தாக்க வந்த தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றி நிறைய படம் வந்தாலும் வரும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ“கிளிக்” செய்யவும்
.