வழுவாது வாழும் தமிழர் கலாச்சாரம்!
தமிழர் உடை, உணவு, கலாச்சாரம் மாற்றமடைந்து அடியோடு புரண்டுவிட்டது போன்றதொரு பிம்பம் தெரியும். அது உண்மை நிலையல்ல. மாயை. சென்னையிலுள்ள மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளங்களில் காணப்படும் தமிழ் மக்கள் வேற்று கலாச்சாரப் பிடியில் அகப்பட்டுக் கொண்டது போன்று காட்சிகள் மூடுபனியாக மூளைக்குள் படரும். மேலோட்டப் பார்வையை விலக்கி கூர்மையுடன் நோக்கினால் நுண்மையுணரலாம்.
தமிழகம் தம் உடை, உணவு, கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. வழுவாது பிடித்திருக்கிறது. ஒரு கோடிப் பேர் வாழும் சென்னையில் 10 சதத்திற்கும் குறைவானோரே சீலை அல்லாத உடை அணிகின்றனர். அவர்களிலும் தமிழினத்தை பிரித்தெடுத்தால் 3 சதம் தேறுவர்.
சென்னை பூக்கடை குடவுன் தெரு, பழைய வண்ணை எம்.ஜி.ரோடு, இராயபுரம் ஜி.ஏ.ரோடு சேலை வியாபார மொத்தக் கடைகளைக் கணக்கெடுத்தால், மாநகர மக்களனைவரையும் தன்னகத்தே ஈர்த்துக் கொள்வதில் வெற்றிகண்ட தி.நகர் புடவைக் கடைகளைக் கணக்கில் கொண்டால் தமிழகப் பெண்கள் புடவை அணிவதிலிருந்து மாறவில்லை. மாற்றிக் கொள்ளவில்லை உணரலாம்.
ஆசிரியைகள், ஆசிரியப் பயிற்சி மாணவிகள் சீலைதான் அணிய வேண்டும் நிறுவன விதிமுறை. விமானப் பணிப்பெண்கள் சீலைதான் அணிகின்றனர். கல்லூரிகள் பலவற்றில் முந்தானையல்லாத உடையணிந்து வரக்கூடாதென்ற தடையிருக்கிறது. இதனையும் கருத்தில் கொண்டால் பாரம்பரிய உடைபேணுதல் புரியும். முஸ்லிம் சேரிகள். ஹிந்து சேரிகளில் நோக்கினால் முழுக்கவும் சீலை அணிதலைக்காணலாம்.
ஆணின் உடையெனக் கூறப்படும் வேஷ்டி சொல் தமிழ்ச் சொல் அல்ல. அகராதிகளில் இல்லை. வேட்டி என்றிருக்கிறது. இதன் பொருள் சோமன். சோமன் என்பதன் பொருள் பன்னிரெண்டு முழமுள்ள புடவை. சீலை என்பதாகும். ஆண் அங்க அவயவங்களை மறைத்துச் சுற்ற ஒரு துணி. அது வேட்டியாகவும். வண்ணத்தில் நெய்து தையலில் மூட்டி கைலி, சாரம் எனவும் அழைக்கப் பெற்றன. கைலி தமிழ்ச் சொல் அல்ல.
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்கள். 206 தாலூக்காக்கள். 16,300 ரெவின்யூ கிராமங்களில் வாழும் தமிழின ஆண்கள் நான்கு கோடிப் பேருக்கு வேட்டி விருப்பமான உடையா? அணிகின்றார்களா? அறிய ஆதாரம், தொலைக்காட்சி விளம்பரங்களே சாட்சியம். புதுப்புது பெயரில் வேட்டி தயாரிப்பு நிறுவனங்கள் திரைப்படப் பெரும் நடிகர்களை வேட்டி அணிந்து தோன்றச் செய்து விளம்பரப்படுத்துகின்றன. நுகர்தலும், தேவையும் அதிகமிருப்பதை மேலும் மேலும் வரும் புதிய நிறுவனங்கள் வெளிப்படுத்துகின்றன. உணர்த்துகின்றன. தமிழர் பாரம்பர்யத்தை அரசும் கட்டிக்காக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் உடை சாட்சி.
உணவு முறையில் இட்லி, தோசை மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நடைபாதைக் கடைகளில் கற்றோர், பாமரர் பாகுபாடின்றி இட்லி, தோசை உண்ணுதல் காணலாம். உடுப்பி உணவகங்களில் இரவு எட்டு மணிக்குள் இட்லி விற்று விடுகிறது. வீதிகள் தோறும் விற்கப்படும் முன் தயாரிப்பு மாவுகள் இட்லி, தோசை மவுசை சிறிதளவும் குறைக்காமையைக் காட்டுகின்றது.
கிராமங்களில் வாழும் தமிழர் உணவு இன்றும் கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகுப் புட்டு. குழிப்பணியாரம், பதநீர்க் கொழுக்கட்டை. அரிசிபுட்டு, அரிசி உப்புமா. கருவாட்டுக் குழம்பு. வெந்தயக் குழம்பு. புளிக்குழம்பு. கருவாடு பொறியல். இரசம். உப்புக் கண்டக்கறி உணவாகவிருக்கிறது. தலைமுறை கடந்தும் வெளியகங்களிலுள்ளோருக்கு கடல் கடந்தும் தாய், தந்தையால் பார்சலாக அனுப்பி வைக்கப்படுகிறது. பழைய கஞ்சி, மோர் மிளகாய் இன்றளவும் தமிழரின் விருப்ப உணவு. தமிழரின் உடை, உணவுக் கலாச்சாரம் எவராலும் மாற்றவியலாதது.
-சோதுகுடியான், முஸ்லிம் முரசு ஜனவரி 2013