கம்பம் கிடைக்காத காக்கை ரூஹு! – முஸ்லிம் இலக்கியம்
”பார்க்கப் பலவிதமாய் பல்கு அண்டம் தன்னை
அடைகாக்கும் திருக்கருணை கண்ணே ரஹ்மானே!”
இவ்வுலகில் கண்களுக்கு முன் நிகழும் காட்சிகள் பல. ஒரு உயிர் ரூஹு மற்றொரு ரூஹ§வை மதிக்காத போக்கு. ரூஹு, ரூஹுகளின் உடல்களைக் கொல்லும் நிலை.
கயமைத்தனம். சுயத்தனம். அடுத்துக் கெடுத்தல். பங்காளித் துரோகம். பாலியல் துரோகம். நயவஞ்சகத்தனம். மோசடித்தனம். மற்ற ரூஹ§களுக்குரியதை தட்டிப் பறித்தல். மனத்துள் ஈரமின்மை. இரக்கமின்மை இவையனைத்தும் ”பார்க்கப் பலவிதமாய்” என்னும் ஒற்றை வரிக்குள் அடக்கி குணங்குடி மஸ்தான் ஆலிம் கூறியிருக்கிறார்.
மனிதர்களுக்கிடையில் நிலவும் இப்போக்கு சிறிதளவும் குறையாது மேலும் பெருகிக் கொண்டேயிருந்தும், தாய்ப் பறவை குஞ்சு பொறிக்க தன் முட்டைகள் மீது அமர்ந்து இறக்கைகளால் அணைத்து பாதுகாப்பது போல் காத்து இரட்சிக்கும் என் இறைவனே! என்னே உன் இரக்கத் தன்மை. உனது கருணைக்கு ஈடாக எவர் உள்ளார்? என் கண்ணே ரஹ்மானே? என்று ஓரிறையிடம் உரையாடுகிறார்.
இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடியிருந்தாலும் இன்றுள்ள மக்களைப் பார்த்து பாடியது போன்றே உயிர்ப்புடன் அமைந்துள்ளன வரிகள்.
”ஈறும் முதலும் அற்றே இயங்குகின்ற முச்சுடராய்
காரணிக்கும் பூரணமே கண்ணே ரஹ்மானே!”
இறைவா! நீ தனித்தவன். முதலும் நீயே! முடிவும் நீயே! உனக்கு ஈடு இணை ஏது? ஞாயிறாக, திங்களாக இயங்குகின்ற மூலமானவனே! முழுமையானவனே! கண்ணே ரஹ்மானே! (கண்ணே என்பதன் பொருள்: ஞானம் உணர்த்துபவன்) தௌஹீது சிந்தனையுடன் இறையை புகழ்கின்றார். ஞானம் தந்தவனே என்று பெருமைப்படுத்துகிறார்.
”பெண்டு பிள்ளை என்றே நித்தம் பிதற்றுதல் பொய்யல்லாமல்
கண்ட பலன் ஒன்றுமேயில்லை கண்ணே ரஹ்மானே!”
தன் மனைவி. தன் மகன், மகள். தன் பெயரன், பேர்த்தி. தன் தாய், தந்தை. இவர்கள் தவிர்த்து எனக்கு வேறு உலகம் இல்லை. இவர்களுக்காக உழைப்பேன். உலகச் செல்வங்களைத் திரட்டுவேன்.
நாழிகை நகரும் தோறும் இவர்களுக்காகவே சிந்திப்பேன். அண்டை வீட்டார் பசித்திருக்க அருஞ்சுவை உணவு உண்கின்றோமே! ”அதனாலென்ன?” தான் விரும்பக்கூடிய ஒன்று எதுவானாலும் தன் சகோதரனுக்கும் தரணுமே! ”ஏன் தரணும்?” இந்தச் சிந்தனையுடன் வாழும் மனிதர்கள் அனைவரும் பிதற்றலாளர்கள் என்றுரைக்கும் குணங்குடியார், இவர்கள் வாழ்வு பொய்யானது. இறைவன் நோக்கத்தை நிறைவேற்றவும், கட்டுப்படவும் மறுப்பவர்கள்.
உலகில் காணக்கிடைக்கும் அனைத்தும் நிலையானவையாகக் கருதி செயல்படுமிவர்கள் வாழ்க்கையில் அடைந்த இறுதிப் பயன், பலன் என்ன? கேள்விக்குட்படுத்துகிறார். புரிதல் இல்லாமலே வாழ்ந்து மரணிக்குகின்றவர்கள் கண்ணே ரஹ்மானே என்று இறைவனிடம் முறையிடுகிறார்.
-ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம், முரசு டிசம்பர் 2012