இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது
[ இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை…
இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது.
பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.
இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும்.
தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.
முஸ்லிம் சகோதரர்களே…! ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.]
முஸ்லிம்களும் மனிதர்கள் தான்…
வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது என கேட்டார்..? உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர். சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது.. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே…. என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.
உண்மைதான்..! அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று!
முஸ்லிம் என்ற ஒற்றை சொல் தொடர்புடைய எந்த செயலாக இருப்பீனும் அச்செயலின் முடிவில் இன்று இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. பொதுவெளியில் இந்த சமூகத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்களென மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய் பிரச்சாரமே இதற்கு தலையாய காரணமென்றால் அது மிகையில்லை. அதனை வெற்றிக்கரமாக இச்மூகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இன்று ஓசாமாவும், தாலிபான்களும் இஸ்லாத்தின் அடையாளமாக வைத்து விமர்சிக்கப்படுவதோடு தாடிகளும், தொப்பிகளும் தீவிரவாதத்தின் அடையாளமாக்கப்படுகிறது.
இந்த கரும்பலகை உதாரண புரிதல் இன்று தமிழத்திலும் ஊடுருவி விட்டது என எண்ணும் போது இந்த கட்டுரைக்கு அவசியமே ஏற்பட்டது. சரி இனி கட்டுரை உள்ளே பயணிப்போம்.
இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை… இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது. பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதாய் சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால், முஸ்லிம் பெயர் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் பக்கம் கையே நீட்டி தம் சான்றை நிறுவ பார்க்கிறார்கள். இதுவா ஒன்றை உண்மைப்படுத்த எடுக்கும் அளவுகோல்…?
இஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்… இவை மட்டும் தான் இஸ்லாம். குர்-ஆனோ அல்லது நபிகளாரோ (அப்பாவி) மனிதர்களை கொல்லுங்கள் என்று கட்டளையிட்டிருந்தால் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு முடிச்சிடுவதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை குற்றப்படுத்துவது நூற்றுக்கு நூறு உண்மையானதும் கூட எனலாம். ஆனால்…
வீணாய் ஒருவனை கொல்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது. (5:32 ) என தனி மனித உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்து சொல்லியிருக்கும் போது இஸ்லாம் சொன்னதால் தான் அப்பாவி மக்களை கொலை செய்கிறோம் என ஒருவனோ / ஒரு குழுவோ சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்…? குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா…? சிந்திக்க வேண்டும் சகோஸ்…
இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும். தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.
தீவிரவாதத்தை செய்வதினால் தான் தாலிபான்களை எதிர்க்கிறோம் என பக்கத்திற்கு பக்கம், வரிக்கு வரி மனிதம் பேசும் மனித பிறவிகள் எவரும், அதே தீவிரவாதத்தை வெவேறு பெயர்களில், வெவ்வேறு போலி காரணத்திற்காக ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் அரங்கேற்றி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் பொதுவெளியில் எதிர்க்கவில்லை, நடுநிலை முக்காடு போட்டிருக்கும் ஊடகங்கள் கூட இவற்றிற்கு எதிராய் செயல்பட்டதில்லையே அது ஏன்..? புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்களும் மனிதர்கள் தான்…
(9/11 நிகழ்வின் அடிப்படையில் தாலிபான்களை எதிர்ப்பதாக சொன்னால் அந்த நிகழ்வும் அமெரிக்காவின் உள்ளரங்க சதி என்பது நாடறிந்த உண்மை)
இஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பதிலும் அதே முரண்பாடுதான். சவுதி உட்பட எந்த நாடும் தங்களை இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் அவற்றின் சட்ட முறைமைகள் மீறப்படும் போது இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது.
குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் போது இரு தரப்பையும் நன்கு விசாரித்த பிறகே நடுநிலையாய் தீர்ப்பை வழங்க சொல்கிறது இஸ்லாம். அது தம்மை சார்ந்தவர்களுக்கு பாதகமாக அமைந்தாலும் (6:152 ) நீதி செலுத்த சொல்கிறது. ஆக இங்கே குறை இஸ்லாமிய சட்ட முறைமைகளில் இல்லை. மாறாக அதை அமுல்படுத்துவோரிடம் பிரச்சனை இருந்தால் இதற்கு எப்படி மார்க்கம் காரணமாகும்..?
இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால், அண்ணலாரின் ஆட்சியிலிருந்தோ அல்லது அதற்கடுத்து வந்த கலிஃபாக்களின் ஆட்சியிலிருந்தோ விமர்சனங்களை பதிய வேண்டும். ஏனெனில் அவை தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்டவை.. ஆனால் இன்று சவுதி ஆட்சியாளர்களுக்கு எதிராக கூப்பாடும் போடும் எவரும் மேற்கண்ட ஆட்சியமைப்பு பற்றி வாய் திறப்பதில்லை…
உண்மையாக இஸ்லாம் என்ன சொன்னது என்பதை அறிய அதை செயல்படுத்தியவர்களிடம் மட்டும் தான் ஒப்பு நோக்க வேண்டும். தன் தந்தையாராலே ஓட்டகைகள் மேய்ப்பதற்கு கூட தகுதியில்லையென ஒதுக்கப்பட்ட உமர் (ரலி), பிற்காலத்தில் சுமார் 22 ண லட்சம் சதுரமைல்களை எந்த வித முறைகேடுகளும் இன்றி திறமையான நிர்வாக திறன் கொண்டு நீதமான ஆட்சியை சுமார் 10 ஆண்டு காலம் செய்ய முடிந்தது என்றால் அதற்கு பெயர் தான் இஸ்லாமிய ஆட்சி. அதை செய்ய வைத்தது தான் இஸ்லாம்! இவர்களது ஆட்சியை விமர்சிக்க வாருங்கள் தாரளமாய் …
இன்னும் பாருங்கள், சமீபத்தில் இஸ்லாமிய விரோத போக்குக்கொண்ட ஒரு படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இறங்கியதை சேனல் நியுஸ்களிலும், இணையத்தில் எழுத்துக்கள் வாயிலாகவும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயலாக கண்டித்த இதே ஊடகங்கள், இதற்கு முன்னர் இதே முஸ்லிம் அமைப்புகள் இரத்த தான முகாம்கள் பல நடத்திய போதும், வரதட்சணைக்கு எதிராக பல மேடைகள் போட்ட போதும், சுனாமி எனும் பேரிடர் ஏற்பட்ட தருணத்தில் மத சார்பற்று களப்பணியாற்றிய போதும் ஓரிரு வார்த்தைகள் கூட அவர்கள் குறித்து செய்திகள் வெளியிடவில்லையே ஏன்…?
பொதுவெளியில் முஸ்லிம்கள் என்றாலே பிரச்சனைக்குரியவர்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுத்த கூடியவர்கள் என்ற பிம்பம் மட்டுமே நிலை பெற வேண்டும் சுய நல சிந்தனைக்கு என்ன காரணம்…?
இன்று தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அரேபியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அல்லர். மாறாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உங்கள் பார்வைகளுக்கு மத்தியிலே சுப்பனாகவோ, குப்பனாகவோ அல்லது தலித், கிறித்துவ, நாடார்.. இப்படி ஏதாவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களாகவோ தான் இருந்திருப்போம். சாதியெனும் அடைமொழி தொலைக்கவே எங்களின் இஸ்லாமிய தழுவல். ஆரம்பத்தில் இல்லாமல் இன்று உங்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி இருக்கிறதென்றால் அதற்கு யார் காரணம்..? அன்னியப்படுத்தப்பட்டு நிற்பது நாங்கள் மாத்திரமல்ல, உண்மைகளும் தான்.!
இஸ்லாம் சொன்ன ஒரே காரணத்திற்காகவே சிகரெட் பிடிக்காமல், மது அருந்தாமல், விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல், வட்டி வாங்காமல், மதுக்கடைகள் நடத்தாமல், ஹராமான தொழில் செய்யாமல் இன்று உங்களின் மத்தியில் எத்தனையோ முஸ்லிம்கள் நாள்தோறும் வலம் வருகிறார்களே அவர்களை ஏன் இஸ்லாத்தின் அடையாளமாக கருத மறுக்கிறீர்கள்…?
நல்ல தமிழர்களாக வாழ்ந்துக்கொண்டே எங்களால் நல்ல முஸ்லிம்களாகவும் வாழ முடியும் என்கிறோம். அதை செயல்படுத்தி காட்ட உள்ளூர் சகோதரத்துவத்தை உலக அளவில் பேச முற்பட்டால் அது தவறா..? சிந்திக்க கடமைப்பட்டிருக்றீர்கள் சகோஸ்..
முஸ்லிம் சகோதரர்களே…! இத்தருணத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்யும் போது சிறியதாகினும், பெரியதாகினும் அது இச்சமுகத்தில் எந்த கோணத்தில் பார்க்க படுகிறது என்பதை தான் தற்கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.
ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.
உங்கள் சகோதரன்
குலாம் source:http://www.naanmuslim.com/2013/02/blog-post.html