அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்கு நியாயம் தானா?
அஜ்மல் கசாபிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய பின்னர் பாசிச சங்பரிவார தீவிரவாதிகளின் அடுத்த இலக்காக அப்சல் குரு இருந்தார்.
அதனையும் பாசிச சக்திகளுக்கு காவடி எடுக்கும் கையாலாகாத காங்கிரஸ் அரசு நிறைவேற்றிவிட்டது.
அப்சலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் 204 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார், “அப்சல் குரு எந்த ஒரு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை, பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த வித முகாந்திரமும் ஆதாரமும் இல்லை, ஆனால் இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கபடுகிறது” என தீர்பளித்தார்.
இந்தியாவின் கூட்டு மனசாட்சி யார்? அப்சல் குருவை தூக்கில் இடுவதால் அத்வானி, நரேந்திர மோடியை விட திருப்தி அடையக்கூடியவர்கள் யாராக இருக்க முடியும்?
முதலில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயம் தானா என சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத்தையே இடித்து அழிப்பதற்குத் துணிந்தவர்களை உயிரோடு விடலாமா என்று கேட்கிறார்கள் பாசிச ஹிந்துத்துவ சக்திகள். இவர்களாவது இடிப்பதற்கு வந்தவர்கள் தான். ஆனால் பாராளுமன்றத்தை இடிக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையே இடித்து சுக்குநூறாக்கிவிட்டு, நாட்டில் எந்தத் தண்டனையும் பெறாமல் பதவி சுகம் அனுபவித்து கொண்டிருக்கிற ஒரு கூட்டம், இப்படிக் கோருவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
அப்சல் குரு மீதான குற்றச்சாட்டின் மீது விசாரணை நியாயமாக நடத்தப்பட்டதா?
அவர் மீதான வழக்கை நடத்தியவர்களும் நீதி வழங்கியவர்களும் நியாயவான்களா?
என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
1990- ஆம் ஆண்டுகளில் ஒரு போராளிக் குழுவில் இருந்த அப்சல் குரு தனது தவறை உணர்ந்து, காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைந்தார். அது முதல் எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் இருந்தார். காஷ்மீரில் போராடும் போராளி குழுக்கள் பற்றிய பல ரகசிய தகவல்களை ராணுவத்தின் உளவுத் துறைக்கு தந்து வந்தார்.
அது போல் தான் 2001 ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரி அவரிடம் ஒரு நபரை அறிமுகம் செய்து டெல்லியில் அவரை விட்டுவிட்டு அவருக்கு தேவையான உதவிகள் செய்யுமாறு உத்தரவிடுகிறார். அதை மறுக்காமல் செய்யும் அப்சல்குரு அதை முடித்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது பேருந்து நிலையத்தில் கைது செய்யப்படுகிறார்.
அவர் அழைத்துச் சென்ற நபர் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்பட்ட குழுவில் உள்ளவர். அந்தப் தாக்குதலில் ஈடுபட்டவர் அப்சல் குருவின் மொபைல் போனில் இரண்டு தடவைகள் பேசினார் என்பதுதான் காவல் துறையினர் முன் வைத்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட ஒரே ஆதாரம். இதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த முறை தாக்குதலுக்கு வரும் தீவிரவாதிகள் அவர்கள் மொபைல் போனிலிருந்து அத்வானிக்கும், நரபலி மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் மிஸ்டு கால் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்படுமா?
மேலும் நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த காலத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மொபைல் போன் வசதிகளே இல்லை.. ஆனால் அங்கிருந்து கொண்டு மொபைல் போனில் பேசியதாக வழக்குக்கான முக்கிய சாட்சியங்கள் முன் வைக்கப்படுவதை, நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொண்டது?
அப்சல் குருவின் இந்த உண்மையான வாக்குமூலத்தை மறைத்த காவல் துறையினர் அவரை சித்திரவதை செய்து தங்களுக்கேற்ற வகையில் வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது. இதற்காகத்தான் அருந்ததிராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர்.
காவல்துறை சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. எனினும், மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் இந்திய சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும் என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது பாசிச சக்திகளின் கையில் அகப்பட்டிருந்த உச்சநீதிமன்றம்..
அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி பல வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட அவரைத் தூக்கிலிடும் நீதிபதி என்று சில பத்திரிக்கைகள் பட்ட பெயரோடு அழைப்பதுண்டு. இந்த வழக்கை விசாரணை நடத்திய காவல்துறை உதவி ஆணையர் ராஜ்பீர் சிங், இவர் பல வழக்குகளின் விசாரணையில் செய்த முறைகேடுகளை முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், ராம் ஜெத்மலானி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்திலேயே கண்டித்தார்கள்.
வழக்கு விசாரணையில் ராஜ்பீர் சிங் நடத்திய முறைகேடுகளுக்காக அவரை இ.பி.கோ. 194, 195 பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வாதாடினார்கள். முஸ்லீம்கள் என்றால், அவர்கள், தீர்த்துக் கட்டப்பட வேண்டியவர்கள் என்பதையே கொள்கையாகக் ராஜ்பீர் சிங் பல முஸ்லீம் அப்பாவிகள் மீது பொய் வழக்கு போட்டவர். டெல்லியில் அன்சால் பிளாசா என்னுமிடத்தில், இரண்டு அப்பாவி முஸ்லீம்களை என்கவுண்டரில் சுட்டு வீழ்த்திய கொடூரன்.
காந்தியின் கொலையில் அந்த சதியின் முழு விவரத்தை அறிந்தவர் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட கோபால் கோட்சேயை நீதிமன்றம் தூக்கிலிடவில்லை. இவரது சகோதரர் நாதுராம் கோட்சேயைத்தான் தூக்கிலிட்டது. கோபால் கோட்சேவுக்கு கிடைத்தது ஆயுள் தண்டனைதான். சந்தேகத்தின் அடிப்படையில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், இப்போது அப்சலும், கோபால் கோட்சே நிலையில் தான் இருக்கிறார். ஆனால் அப்சலுக்கு இன்று தூக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
பறந்து விரிந்த பாரத தேசத்தின் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியை கொன்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய விடுதலை புலிகள் தீவிரவாதிகளின் தூக்குக்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. எந்த அரசியல் கட்சியினராவது இதற்க்கு எதிராக வாய் திறந்தார்களா? ஆனால் இது போன்று அப்சலின் தூக்குக்கு எதிராக காஷ்மீர் சட்ட மன்றத்திலே தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா? தீர்மானம் நிறைவேற்ற முற்பட்ட போதே காஷ்மீர் சட்டமன்றத்தை கலவர பூமியாக்கினர் பிஜேபி.
நாம் வாழக்கூடிய இந்திய தேசத்திலே, நம்மை ஆளுகின்ற அரசாங்கம், தன்னுடைய அரசியல் சாசன விதிகளில் தன்னை பற்றி எப்படி எழுதி வைத்து இருக்கிறது என்றால், இந்த தேசம் ஒரு மதசார்பற்ற, சமதர்ம, ஜனநாயக நாடு என்று தன்னை பற்றி எழுதி வைத்து இருக்கிறது, ஆனால், முஸ்லிம்கள் விஷயத்தில் மத சார்பின்மை கடைபிடிக்கபடுகிறதா? சமதர்மம் கடைபிடிக்கபடுகிறதா? மற்ற எல்லோருக்கும் கடைபிடிக்கபடுகிற சமதர்மம் முஸ்லிம் என்று வந்து விட்டால் புறக்கணிக்கபடுகிறது. இந்த போக்கை மத்திய மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளாவிட்டால், வரக்கூடிய தேர்தல்களில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.