யார் விளம்பரப் பிரியர்?!
“மலிவான அரசியல் விளம்பரம் தேட விரும்பவில்லை!!!”
“விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் மற்ற முஸ்லிம் அமைப்புகளைப் போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலிவான அரசியல் விளம்பரம் தேட முற்படவில்லை” என அக்கட்சியின் வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாக பத்திரிகை செய்திக்குறிப்பை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
சமீபகால முஸ்லிம் லீக்கின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அக்கட்சி தி.மு.க.வின் பினாமி கட்சியாகவே செயல்பட்டு வந்துள்ளது என்பது பெரும்பாலானவர்கள் அறிந்ததே. அதற்காக முஸ்லிம்களையோ இஸ்லாத்தையோ காவு கொடுக்கக்கூட அவர்கள் தயங்கியதில்லை.
முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு ஒவ்வொரு முறையும் கருணாநிதியின் ஏவலாளாகத்தான் முஸ்லிம் லீக் செயல்பட்டு வந்திருக்கிறது. அதில் ஒரு நிகழ்வுதான் இப்போதைய முஸ்லிம் லீக் எம்.பி.யின் குற்றச்சாட்டும் என்பதை உண்மையான முஸ்லிம்கள் அறிவர்.
உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் இப்பிரச்சனையில் கூட கருணாநிதியின் நிலைப்பாடு ஒட்டுமொத்த முஸ்லிம் அமைப்புகளின் (இதில் முஸ்லிம் லீக் தானாகவே தூர நிற்பதிலிருந்து அதன் உண்மை முகத்தை புரிந்து கொள்ளலாம்) எண்ணங்களுக்கு மாற்றமாக இருந்த காரணத்தால் கூட இவர்கள் அதில் சேராமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.
அனைத்து முஸ்லிம் குரூப்பும் ஒன்றுபட்டு ஒரு காரியத்தில் களமிறங்கி போராடும்போது ஒளிந்துகொண்டுவிட்டு இப்போது “மலிவான அரசியல் விளம்பரம் தேட விரும்பவில்லை” என்று சகோதரர் எம்.அப்துர் ரஹ்மான் சொல்வது; அவர்தான் தற்போது (பிரச்சனைக்கு மற்றவர்கள் ஒற்றுமையுடன் தீர்வு கண்ட பிறகு) தனி ட்ராக்கில் இதுபோன்ற காமெடி வசனத்தையெல்லாம் பரப்பி விளம்பரம் தேட முயல்கின்றார் என்று எண்ணத்தோன்றுகிறது.
இதுவே கருணாநிதியின் ஆட்சியாக இருந்திருந்தால் இந்த முஸ்லிம் குரூப்புகளை முஸ்லிம் லீக்கை வைத்தே பிளக்கச்சொல்லி குளிர்காய்ந்திருப்பார்; பலபிரிவுகளாகப் பிரிக்க வைத்து நமது ஒற்றுமையை குலைத்து நம்மை பலகீனப்படுத்தியிருப்பார்.
தற்போதைய அ.தி.மு.க.ஆட்சியில் அதை செய்ய முடியவில்லையே எனும் வருத்தமோ என்னவோ நமது முஸ்லிம் எம்.பி. அவர்கள், மிகவும் தாமதமாக சீனெல்லாம் முடியும் தருவாயில் தலை காண்பித்து “நானும் இருக்கிறேனப்பா… என்னை மறந்துடாதீங்க…” என்று சொல்வதுபோலத்தான் இருக்கிறது அவரது அறிக்கை.
முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிதான் இது. ஒரு விஷயத்தை சொல்வதாக இருந்தால் இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்லவேண்டும் என்பார்கள். மெத்த படித்தவராக விளங்கும் எம்.பி. அவர்களுக்கு இதுகூட விளங்காமல் போனது ஆச்சரியம்தான்.
இவர் மலிவான அரசியல் விளம்பரம் தேடும் விஷயம் ஒருபுறமிருக்கட்டும் அவர் விடுத்திருக்கும் செய்தியில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எவ்வளவு ஆபத்தானைவை, தன்னுடைய இனத்தையே காட்டிக்கொடுக்கும் மோசமான செயல் என்பதைக்கூட வசதியாக மறந்துவிட்ட காரணம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை! அப்படி என்ன சொன்னார் என்கிறீர்களா…? இதோ…
“இப்பிரச்சனையில் இவ்வளவு காட்டமாக சமூகநல்லிணக்கத்தை பாதித்துவிடுமோ(!!!) (-எங்கே பாதித்தது…?!!) என்ற அச்சம் மேலோங்கும் வகையில் முஸ்லிம் கூட்டமைப்பினர் செயல்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களை காயப்படுத்தி(!!!) மிரட்டி(!!!) பணிய வைப்பது போன்ற தோற்றத்தை(!!!!!!) உருவாக்கி ஒரு மலிவான அரசியல் விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சி…” என்று குற்றம் சாட்டுகிறார்.
உண்மையில் இது எவ்வளவு அபாண்டமான, அருவருப்பான குற்றச்சாட்டு.
ஒட்டுமொத்த (உண்மையான)முஸ்லிம் உம்மாவையும் காயப்படுத்தி காழ்ப்புணர்ர்சியுடன் ஒருவர் படம் எடுத்துள்ளதை கண்டிக்க வக்கில்லை… அவாள்களின் மனதை காயப்படுத்திவிட்டார்களாம் கூட்டமைப்பினர்!!!
ஸுப்ஹானல்லாஹ், இவர் யார் பக்கம் இருக்கிறார் என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!
-எம்.ஏ.முஹம்மது அலீ