அரசியல் கட்சிகளின் இஸ்லாமிய பாராமுகமும்! – இஸ்லாமிய பொது அரசியல் கட்சியின் அவசர தேவையும்!
விஸ்வருபம் திரைப்படம் சர்ச்சை மூலம் நாம் மறந்து போன, மறக்கடிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இந்து மத போர்வை போர்த்தி நம்மிடையே குண்டு வைத்து அதனை இஸ்லாமிய மக்கள் மீது வேண்டும் மென்றே திணித்ததை, உள்துறைமூலம் வெளிக்கொணரப்பட்டு அதனால் அமைச்சர் மட்டும் இல்லை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமும் சங்கடபட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருந்தது. காங்கிரஸ் நடிக்கின்றதா? அல்லது வெளிவேஷம் போட்டுகொண்டு இருக்கின்றதா? என்று தெரியவில்லை.
ஆனால் அதே சமயம் இறைவன் அவர்கள் வாயாலேயே உண்மையினை வெளிகொணர்ந்து விட்டான். ஆனால் இந்த சமயம் விஸ்வரூபம் என்ற திரைப்பட சைத்தானால் இந்த விஷயங்கள் மறக்கடிக்கப்படுகின்றது, சமயம் கடந்து வாழும் நம் நாட்டு மக்களிடையே மத உணர்வினை புகுத்தி இன்று சிரமபட்டு வெளிகொணர்ந்த அந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவங்கள் இன்று பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மூலம் மிக அழகாக மறந்து போக மறக்கடிக்க படுகின்றது என்பதை மக்கள் அறியவேண்டும்.
கொடூர குண்டுவெடிப்பு நிகழ்த்திய அந்த தீவிரவாத கும்பல் இன்று மத சாயம் பூசி இதனை சாதனையாக கருதி அவர்கள் வாயாலேயே இந்த பாத செயலை செய்தோம் என்று கூறியும் கூட அரசு மற்றும் அரசு இயந்திரத்தினை சாராத நடுநிலை அதிகாரிகள் கூட பொது நல வழக்கு அல்லது அதற்கான எதிர்ப்பு குரல் கூட கொடுக்காமல் இருப்பது அதிர்ச்சியினை அளிக்கின்றது.
அன்றைய கால கட்டத்தில் கூட வாயில் நுழையா முடியாத இஸ்லாமிய பெயர்கொண்ட இயக்கங்களின் மீது பழிபோட்ட அந்த பிராந்திய அரசுகள் கூட அதற்க்கு மறுத்து தவறுதலாக நடந்து போன சம்வத்திற்க்கும், எற்பட்ட களங்கத்திற்க்கும் வருத்தம் தெரிவித்த்தாக தகவல்கள் கிடையாது. ஏன் இந்த இரட்டை வேடங்கள்? ஓட்டு வங்கியாகவே இஸ்லாமிய மக்களை நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக தூய்மையான தலைமையினை வழங்க, உறங்கும் இந்திய இஸ்லாமிய இயக்கங்கள் துணிந்து வரவேண்டும்.
இன்று எற்பட்டு இருக்கும் இந்த திரைப்பட சர்ச்சையினை முழூமையாக பயன்படுத்தி இணைந்த இந்த இஸ்லாமிய இயக்கங்கள் ஏன் தங்களுக்கு என்று ஒரு தனிஅரசியல் கட்சியாக உருவாகக்கூடாது. இந்த சர்ச்சைமூலம் இணைந்த அந்த அந்த பிராந்திய சமூக தலைவர்களையே பிரதிநிதிகளாக அறிவித்து ஒரு மத சார்பற்ற பொது அரசியல் கட்சியினை ஏன் உருவாக்கக் கூடாது. பின்பு அதன் மூலம் கட்சியின் பொதுக் குழுவினை அறிவித்து அதன் மூலம் கட்சி நிர்வாக இயக்குனர் குழுவினை உருவாக்கலாமே ? கொள்கை நோக்கமே இல்லாமல் இன்று கட்சி தொடங்கி எதிரணியாக உட்கார்ந்து இருக்கும் நபரை உருவாக்கிய வகையில் இஸ்லாமிய தலைவர்கள் பலரின் பங்கு இருக்கையில் ஏன் நமக்கென்று ஒரு தலைமையினை உருவாக்க முடியாதா?
முதலில் அதனை தடுக்க அணை போடுவதில் முன்னணியில் வரும் இரண்டு பெரிய பாரிய சக்தியாக தங்களை நினைக்கும் கட்சியின் தலைமையின் கயமைத்தனமான வாய்பேச்சுக்களை ஒப்புவிக்கும் நம் சமூக தலைமை அதை மாற்றி யோசிக்கவேண்டும். வெறும் வார்த்தையால் மட்டும் “எங்கள் இயக்கத்தின் தூணாக இருக்கும் இஸ்லாமிய மக்களே” என்று கூறும் அந்த கயமைத்தனத்திற்க்கு அடிக்கும் முதல் பலமான அடி அடிக்ககூடியவர்களாக நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கபட வேண்டும்.
இன்று இருக்கும் சூல்நிலையில் ஏதேனும் இஸ்லாமிய ஆதரவு சம்பவங்கள், இஸ்லாமிய இயக்கங்களினால் ஆர்பாட்டமோ அல்லது எதிர்ப்பு குரலோ கொடுக்கப்பட்டால் அது பத்திரிக்கை அல்லது ஊடங்களில் வெளியானால் அதற்க்கு எதிர்ப்பு கொடுக்கும் கூட்டம் கூடி வருவதும், துவேஷமான கருத்து பதிவுகள் கூடிவருவது நல்ல சூழ்நிலையினை உருவாக்கும் என்று நினைக்க முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு மக்கள் மனதில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு ஊட்டபட்டுள்ளது, காரணம் சிறுபான்மையினர் என்று சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என்று, அப்படி என்ன சலுகையினை முழுமையாக இஸ்லாமியர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று அறியமுடியவில்லை. அவர்கள் ஓட்டு பெறுவதற்க்காக கொடுப்பதாக கூறும் சலுகைகளை பெறுவதற்க்குள் அந்த சலுகைகளே வேண்டாம் என்ற அளவுக்கு எதிர்ப்புகள் உள்ளது என்பதையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
இன்று இருக்கும் அரசியல் கட்சியில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் குறைந்து வருகின்றது. தங்களுடைய நாற்காலி சண்டையில் சமூகத்தின் பெயர் கொண்ட கருங்காலிகள் கூடியதால் எத்தனையோ நல்ல பிரதிநிதிகளாக உருவாக வேண்டியவர்கள் இன்று வாய்பேச முடியாமலும் இஸ்லாமிய சமூகத்தின் பேர் சிலரால் கலங்கடிக்கபட கூடாது என்ற எண்ணங்களினாலும் கடந்த 20 ஆண்டுகளாக நல்ல இஸ்லாமிய மக்கள் பிரதிநிதிகள் குறைந்தள்ளது என்பது தெள்ள தெளிவாகின்றது. பெட்டிகளுக்கும், கட்டி இருக்கும் கட்சி வேஷ்டிகளுக்கும் குந்தகம் வந்து விட கூடாது என்பதற்க்காவே இன்று பிராந்தியங்களில் மற்ற பிரதிநிதிகள் உருவாகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்தும்மாக அந்த கட்சிகளினால் வளர்க்கபடுகின்றனர். வளர்ந்தும் வருகின்றனர்.
முதலில் அந்த போக்கு மாறவேண்டும், பிராந்திய மக்கள் கட்சிகளுக்கு தங்கள் சார்பாக செல்லும் பிரதிநிதிகளிடம் அந்த கட்சி தலைமையின் நடவடிக்கைகள் குறித்து விவாதம் செய்ய வேண்டும். அது பிராந்திய வளர்ச்சி சம்மந்தமாக மட்டும் இல்லாமல் முழு இஸ்லாமிய மக்களுக்கும் பயனுள்ளாதாக இருக்கின்றதா என்பதை அறியவேண்டும்.
வேலூரில் மற்றும் அதிக முஸ்லீம்கள் உள்ள பகுதிகளில் மட்டும்தான் இஸ்லாமியர்கள் இருப்பது போன்று அந்த தேர்தல் நேரத்தில் கூட அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய மக்களை பிரித்தாளும் வகையில் ஆளுக்கு ஒரு கட்சி ஆளாளுக்கு கட்சி சார்பாக நிறுத்தி அதனுள்ளும் பகைமை பாராட்ட வைக்கின்றது. இஸ்லாமிய மக்கள் ஒரு குடும்பம் போலதான் அந்த அந்த பிராந்தியத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் கூட தேர்தல் முடிந்து வருடங்கள் ஆனால் கூட தேர்தல் நேரத்தில் எதிர் எதிர் அணியில் இருந்த குடும்பங்கள் பகைமை பாராட்டி பிரிவு வருவது தடுக்க முடியாதாகிறது. நம்மை அழிக்க நம்மை கொண்டே கொடுங்கோல் புரிந்து வருவதை இஸ்லாமிய மக்கள் உணர வேண்டும்.
நம் நாட்டில் நமக்கென்று நம்முடைய சந்ததிகளுக்கு இன்றைய அரசியல் அமைப்பினையினையும் அரசு இயந்திரத்தில் மட்டும் இல்லாது எதிர்காலத்தில் அரசியல் அமைப்பில் இணைவதால் மட்டுமே நம்முடைய வாழ் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதில் உறுதியாக எடுத்து கூறப்படவேண்டும். அரசியல் கட்சியாக இஸ்லாமிய அமைப்புகள் உருவாகினால் மட்டுமே இன்று இருக்கும் இஸ்லாமிய ஊர் தலைமை குடும்பங்களை அரசியல் பக்கம் இழுக்க வைக்கபட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதில் இஸ்லாமிய கருத்துவேறுபாடு களைந்து ஒருங்கிணைந்தால் மட்டுமே முடியும்.
பிரச்சினைகள் உருவாகும் போது மட்டும் தங்களை ஹீரோவாக்கி கொள்ள ஆசைப்படும் தலைமைகள் மற்ற நேரங்களில் தங்களின் செயல்பாடுகளை வெளிகாட்டுவதும் இல்லை தங்களை வெளிபடுத்துவதும் இல்லை. எனவே இறை அச்சம் என்ற கயிற்றினை பற்றி ஒருங்கிணைவோம்! ஒன்றுபட்ட இஸ்லாமிய பொது அரசியல் கட்சி உருவாக பாடுபடுவோம்!
ஜமால் முகம்மது, சீசல்ஸ்.
நன்றி – தூது ஆன்லைன்