தாய்ப்பால் வங்கி!
தென்னிந்தியாவில் முதல் முதலாகக் கோவையில் தாய்ப்பால் வங்கி (15.12.2012) தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ எடைக்குக் குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் இல்லாத பெண்களின் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியில் இருந்து பால் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பாலூட்டியவர் ஹலீமா அஸ்ஸஅதிய்யா ரளியல்லாஹு அன்ஹு எனும் செவிலித்தாய்தான். செவிலித்தாயர் மூலம் குழந்தைகளுக்குப் பாலூட்டும் பழக்கம் அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை இருந்துவருகிறது. ஆனால் அக்காலச் செயல்பாடுகளுக்கும் இக்காலச் செயல்பாடுகளுக்கும் இடையே அறிவியல் வளர்ச்சிதான் வித்தியாசத்தைக் காட்டுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குருதி குத்தி எடுத்தல் எனும் மருத்துவ முறையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதாவது குருதியைக் குத்தி எடுப்பவர், அதைக் குத்தி எடுத்துக் கீழே துப்பிவிடுவார். அல்லது ஒன்றாகச் சேர்த்து ஓரிடத்தில் புதைத்துவிடுவார். அது அறிவியல் வளர்ச்சி இல்லாத காலம். ஆனால் இன்றைக்கு அதேசெயல் குருதிக்கொடை எனும் பெயரில் வழங்கப்படுகிறது.
தாமாக முன்வந்து குருதியைத் தானம் செய்வோரிடமிருந்து குருதியைப் பெற்று, அந்தக் குருதி முறைப்படி சேமிக்கப்பட்டு, அறிவியல் முறைப்படி பாதுகாக்கப்படுகிறது. தேவைப்படும்போது அது பிற மனிதர்களின் உயிர்களைக் காக்க உதவுகிறது.
இவ்வாறு அன்றைய செயல்பாடுகளுக்கும் இன்றைய செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் மனிதர்களின் செயல்பாடுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து மக்களுக்குத் தெளிவைக் கொடுப்பது இஸ்லாமிய அறிஞர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். அந்த வகையில் தற்காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதுதான் தாய்ப்பால் வங்கி. அவசர யுகத்தில் செவிலித்தாயர்களைத் தேடி அலைவதும் அவர்களிடம் தம் குழந்தைக்கு அமுதூட்டுமாறு கேட்பதும் சிரமம். அதனால் தாய்ப்பால் மிகுந்த பெண்களிடமிருந்து உபரியான தாய்ப்பாலைப் பெற்று அதை முறையாகப் பதப்படுத்தி வைத்து, தாய்ப்பால் தேவைப்படும் பிற குழந்தைகளுக்கு ஊட்டுவது எனும் புதுமுயற்சிதான் தாய்ப்பால் வங்கியாகும்.
இத்தகைய தருணத்தில் ஒரு முஸ்லிம் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாக்குறை காரணமாக இந்தத் தாய்ப்பால் வங்கியை அணுகி அங்கிருந்து பாலூட்ட முற்பட்டால் அவள் கவனிக்க வேண்டிய இஸ்லாமியச் சட்ட நுணுக்கங்கள் சில இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பவே அவள் தன் குழந்தைக்கு அங்கிருந்து தாய்ப்பாலூட்ட முடிவு செய்ய வேண்டும்.
1. அந்தத் தாய்ப்பால் ஒரு முஸ்லிம் பெண்மணி உடையதா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருவனின் இறைநம்பிக்கை தாய்ப்பாலிலிருந்துதான் தொடங்குகிறது. தாய்ப்பால் ஊட்டும்போதே அதனுள் இறைநம்பிக்கையும் இணைத்தே ஊட்டப்படுகிறது.
2. அந்தப் பால் எந்தப் பெண்மணி உடையது என்று தெரிந்துகொள்வது முற்றிலும் அவசியம். ஏனெனில் அக்குழந்தைக்கு எந்தப் பெண்ணுடைய பால் ஊட்டப்படுகிறதோ அந்தப் பெண் அக்குழந்தையின் செவிலித்தாய் ஆவாள். அந்தத் தாயின் பிள்ளைகள் அக்குழந்தையின் சகோதர சகோதரிகள் ஆவர். மேலும் அப்பெண்மணியின் இரத்த உறவுகள் அக்குழந்தையின் உறவினர்கள் ஆவர். எனவே அக்குழந்தை வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆகிவிட்டால் அவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.
அது தவிர தன் சொந்த உறவினரோடு என்னென்ன சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமோ அவை அனைத்தும் இந்தக் குழந்தைக்கும் அந்தக் குடும்பத்தினருக்கும் இடையே பேணப்பட வேண்டும்.
அடுத்து, ஒரு செவிலித்தாய்க்கு இஸ்லாம் என்னென்ன சட்டம் சொல்கிறதோ அதுவே தாய்ப்பால் வங்கிக்குத் தன் உபரியான தாய்ப்பாலைத் வழங்குகின்ற ஒரு முஸ்லிம் பெண்மணிக்கும் பொருந்தும். ஒரு செவிலித்தாய் தான் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கு அமுதூட்டியபின்னரே மற்றொருத்தி பெற்றெடுத்த பிள்ளைக்கு அமுதூட்ட வேண்டும். அதேபோல் தற்காலத்தில், தன் பிள்ளைக்கு ஊட்டியதுபோக உபரியாக ஊறிவருகின்ற பாலைப் பீய்ச்சிக் கீழே ஊற்றாமல் பிற குழந்தைகளுக்குப் பயன்படட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதைத் தாய்ப்பால் வங்கிக்கு வழங்குவது குற்றமாகாது.
குருதிக்கொடை வழங்கும்போது யாரும் அதற்காகப் பணம் பெறுவதில்லை. அதனால்தான் அது குருதிக்கொடை என்று வழங்கப்பெறுகிறது. அதேபோன்ற விதியே தாய்ப்பால் வழங்குவதிலும் பின்பற்றப்பட வேண்டும். அமுதக்கொடையாக வழங்கப்பட வேண்டுமேயன்றி அதை விற்பனை செய்யக்கூடாது.
தற்காலத்தில் அலுவலகப் பணிகளுக்குச் செல்கின்ற பெண்கள் தம் அலுவலக நேரத்திலிருந்து மாலை வரை தாம் ஈன்ற சிசுக்களுக்குத் தாய்ப்பால் ஊட்ட முடிவதில்லை. அந்த நேரத்தில் ஊறுகின்ற தாய்ப்பாலைச் சேகரித்து மாலையில் வீடு திரும்பியதும் தம் சிசுக்களுக்கு ஊட்டுகின்ற விதத்தில் சேமித்து வைக்கத்தக்க சாதனங்கள் இன்று விற்பனையில் உள்ளன. அவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படி, அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாற்றமடைந்து வருகின்ற செயல்பாடுகளில் இஸ்லாமியச் சட்டங்களை எவ்வாறு பின்பற்றுவது என்றும் அதற்கான இஸ்லாமிய நடைமுறை என்ன என்றும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மக்கள் தம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லா நவீனச் செயல்பாடுகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தீர்வு உள்ளது.
source:http://www.hadi-baquavi.blogspot.in/