பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை!
“நான் நினைத்திருந்தால் விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்” முதல்வர் ஜெயலலிதா
“24 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பை சிறிய குழு என்று கூறுகிறார்கள். அது எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும். தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஏழரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் சிறிய குழுவா…?” என்று கேட்டார் ஜெயலலிதா.]
சென்னை: செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் நினைத்திருந்தால் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசின் சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1995ன் கீழ் நிரந்தரமாக தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கு எந்தவிதமான பகைமை உணர்வும் இல்லை என்பதால்தான் சிஆர்பிசி 144 சட்டத்தின் கீழ் தடை செய்தேன். என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 என்று ஒன்று உள்ளது. அச்சட்டத்தின் 7வது பிரிவி்ன் கீழ் மாநில அரசுக்கு ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் முழு அதிகாரமும் உள்ளது. அந்த சட்டப் பிரிவின் கீழ்தான் டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது.
எனது அரசு நினைத்திருந்தால், நான் நினைத்திருந்தால், விஸ்வரூபம் படத்தை நான் நேரடியாக அந்த சட்டப் பிரிவின் கீழ் தடை செய்திருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. சிஆர்பிசி 144 சட்டப் பிரிவின் கீழ்தான் தடை செய்தேன்.
அதுவும் கூட 15 நாட்களுக்குத்தான். இதன் மூலம் நான் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நான் செயல்படவில்லை என்பதை உணர முடியும். இந்தப் படத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நானோ, எனது அரசோ செயல்படவில்லை என்பதையும் உணர முடியும் என்றார் ஜெயலலிதா.பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை.
விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
விஸ்வரூபம் படம் தொடர்பாக 24 முஸ்லீம் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளரிடம் புகார்களைக் கூறி மனு அளித்தனர். இதையடுத்து அதை உள்துறைச் செயலாளருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிவைத்தார்.
படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் பேசியுள்ளோம், உங்களது ஆட்சபனைகளைப் பரிசீலித்து தேவையானதைச் செய்யுமாறு கூறியுள்ளோம் என்று அரசுத் தரப்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதே அதைக் கமல்ஹாசன் கவனித்து சரி செய்ய முன்வந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வந்திருக்காது.
ஆனால் கமல்ஹாசன் என்ன செய்தார்… தன்னை சந்தித்த முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் படம் போட்டுக்காட்ட ஒரு தேதி சொன்னார். அன்று அவர்கள் போனபோது பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வேறு தேதியில் படம் காட்டுவதாக கூறினார்கள். ஆனால் கூறியபடி படம் காட்டப்படவில்லை. இப்படியே ஒரு மாதம் போய்விட்டது.
இந்த நிலையில் டிடிஎச்சில் படம் திரையிடுவது தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக படம் ஜனவரி 25ம் தேதிக்கு ரிலீஸாவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதிதான் இஸ்லாமிய பிரதிநிதிகளுக்குப் படத்தைப் போட்டுக் காட்டினார்
கமல்ஹாசன். அதன் பின்னர் 22ம் தேதி இஸ்லாமியப் பிரதிநிதிகள் அமர்ந்து படம் குறித்துப் பேசினர்.இறுதியில் படத்தைத் தடை செய்யக் கோருவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து 23ம் தேதி உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பல்வேறு தொடர் போராட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து 23ம்தேதி அரசு உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும், முற்றுகை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து அரசு சாதக, பாதக நிலையை அலசிப் பார்த்தது.
ஒரு வேளை போராட்டம் நடந்து, வன்முறை மூண்டால் அதைக்கலைக்க, ஒடுக்க தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என்று போக நேரிடும். அப்படி நடந்தால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும், மீடியாக்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே, படத்தைத் தடை செய்வது என்ற முடிவை அரசு எடுத்தது. மேலும் கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை. எனவேதான் அரசு நடவடிக்கை எடுக்க நேரிட்டது. இந்தத் தடையும் கூட 15 நாட்களுக்கு மட்டும்தான் விதிக்கப்பட்டது.
மேலும் இந்தத் தடையை நீக்க உடனடியாக கமல்ஹாசன் எங்களை அணுகியிருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அப்படி வந்திருந்தால், முயன்றிருந்தால் அன்றே பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசுக்கு எதிராக அவர் கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகு நடந்தது உங்களுக்கேத் தெரியும்.
இந்தத் தடைக்கு நான்தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது. சிங்கப்பூரில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. கத்தாரில், ஐக்கியஅரபு எமிரேட்ஸில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்தான் காரணமா… கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. மைசூரில் தியேட்டர் தாக்கப்பட்டது. ஆந்திராவில், கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் நான்தான் காரணமா…
மேலும் 24 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பை சிறிய குழு என்று கூறுகிறார்கள்.
அது எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும்?
தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஏழரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் சிறிய குழுவா…? என்று கேட்டார் ஜெயலலிதா.
கமல்ஹாசனை நேற்று சந்தித்த இஸ்லாமிய பிரதிநிதிகளிடம், படத்தில் சில காட்சிகளை தான் வெட்ட தயாராக இருப்பதாக தங்களிடம் கமல் கூறியதாகவும், அது தங்களுக்கு ஏற்புடையதே என்றும் என்னிடம் தெரிவித்துள்ளனர். எனவே கமல்ஹாசனும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் உட்கார்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண முன்வந்தால் அதை அரசு வரவேற்று, சுமூகத் தீர்வு ஏற்பட உதவத் தயாராக உள்ளது.
விஸ்வரூபம் படப் பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் பிரச்சினை அல்ல. இது முற்றிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான் இது. இதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இங்கு யாருடைய கருத்துச் சுதந்திரமும் முடக்கப்படவில்லை.
மணீஷ் தீவாரிக்கு பதிலளிக்க விரும்பவில்லை இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி பேசியிருப்பதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை. அவருக்கு தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 குறித்துத் தெரியவில்லை. டேம் 999 படம் எப்படித் தடை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. அதுகுறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்தும் தெரியவில்லை. எனவே அவருக்குப் பதிலளிக்க முடியாது என்றார் ஜெயலலிதா.
இந்தப் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கமல் எங்களுடன் பேசவில்லை, மீடியாவில் தான் பேசினார் – ஜவாஹிருல்லா
விஸ்வரூபம் விவகாரத்தில் கமல்ஹாசனுடன் பேச்சு நடத்த அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கமல்-இஸ்லாமிய கூட்டமைப்பு- அரசு என்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் 24 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் கமலும் இஸ்லாமியக் கூட்டமைப்பினரும் சேர்ந்து பேசி பிரச்சனைத் தீர்க்க முயன்றால், அதற்கு அரசு உதவும் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது.
அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா எம்எல்ஏ, இந்தப் பிரச்சனையில் முதல்வர் இன்று தெரிவித்த கருத்துக்களை வரவேற்கிறோம். இதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி கமலுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம். இதில் அரசுத் தரப்பும் பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறோம்.
இது முத்தரப்புப் பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது இந்தக் கருத்தை அரசிடம் தெரிவிப்போம். அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இதை அரசியலாக்க முயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கமல் எங்களுடன் பேசவில்லை, மீடியாவில் தான் பேசினார் என்றார் ஜவாஹிருல்லா.