நுண்ணறிவு இல்லாத நூல்கள் (1)
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
[ படித்த அறிவு வறுமைவாதிகள் கொண்டு வந்த திட்டமே, ”ஆங்கிலத்தில் டாக்டரேட் என்று சொல்லப்படும் முனைவர் பட்டம்”. இப்போது இப்பட்டமானது பல்கலைக் கழகங்களால் கூவி கூவி விற்கப்படுவதால், பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள், அதனை வாங்கவும் அலைமேதுகிறார்கள்.
திருடி எழுதப்பட்ட ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்களில், உதவிய நூல்கள் பட்டியலை ஒருபோதும் பார்க்கவே முடியாது. காரணம், இதெல்லாம் நான் உணர்ந்து எழுதியது என்றும், உங்களுக்கு அந்த ஞானம் வரும் போது இது புரியும் என்று ஒரேயடியாக புளுகி விடுவார்கள்.]
புத்தகங்களே நம்மோடு சண்டைப் போடாத நண்பர்கள். வாசிக்கும் பழக்கமே அறிவை (அபி)விருத்தி செய்யும் என்பன போன்ற அறிவார்த்த எழுத்தாளர்களின் தத்துவங்களை மனதில் கொண்டு, புத்தகங்களை வாங்கி குவிப்போர் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், ஒவ்வொரு வருடமும் இவ்வளவு நூல்களை விற்க வேண்டும் என பதிப்பகங்களால் இலக்கு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட வெற்றியும் பெறப்படுகின்றது. இதற்காகவே பல்வேறு புத்தகங்களை, புத்தக கண்காட்சிகளின் போது வெளிக் கொண்டு வருவார்கள்.
நாம் புத்தகம் எழுதினால், அதற்காக மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்பதற்காக நூல்களை எழுதாத பேரறிஞர்கள் பலர் வாழ்ந்த காலம் மலையேறிப் போய், இப்போது அறிவு வறிஞர்கள் பலரும் கூட, நூல்கள் எழுதுவதை தொழிலாக வைத்திருக்கின்றனர்.
பணபலம் படைத்த வறிஞர்கள், பணத்தால் வறுமையாகவும் அறிவால் அறிஞராகவும் உள்ளவர்களை மடக்கி விலை கொடுத்து வாங்கி தன் பெயரில் நூலாக போட்டுக் கொள்வார்கள். அப்படி போடும் அளவிற்கு தகுதியில்லாதவர்கள் பதிப்பாசிரியர் என்று உள்ளே நுழைந்து விடுவார்கள்.
இப்பணபலம் படைத்த வறிஞர்களிடம் பல மகான்கள் கூட ஏமாந்து போய், தங்களின் கொள்கைகளுக்கு, அவர்களே சமாதி கட்டிவிட்டு சென்று உள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியாது.
ஆனால், உண்மை இதுதான். இதுபற்றி மகான்களின் மகிமையும்; மடத்தனமும் என்று நீதியைத்தேடி… வரிசையில் ஐந்தாவது நூலான சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற நூலில் எழுதியுள்ளேன்.
இம்மகான்களின் வரிசையில் கடைசியாக சிக்கியவர், சுமார் பத்து லட்சம் அன்பர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்து மெய்ஞான கருத்துக்களை போதித்தும், ஒரு மகான் எப்படி அமைதியாக சாமாதி நிலையை அடைய வேண்டுமோ அதற்கு நேர் மாறாக, தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக சாகடிக்கப்பட்ட அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியே! சிக்க வைத்தவர் ஈரோட்டைச் சேர்ந்த மயிலானந்தம் என்கிற பிரபல தமிழ் பிசினஸ் கொள்ளையரே!
எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், “ஒருவரோ இருக்க கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்” என்றார்.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால், இதையெல்லாம் நான் ஆதரித்து எழுத முடியாது என்று சொல்லி விட்டேன். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் வருமானம் வந்திருக்கும்; சமுதாயத்திற்கு பயன்படும் அந்நூல்களில் எனது பெயரும் வந்திருக்கும்; கூடவே சமுதாயத்திற்கு பொய்யான தகவலும், முழுமையில்லாத தகவலும் வந்திருக்கும். தவறான செயல்களுக்கு நாம் காரணமாக இருக்க கூடாது என்பதாலேயே விலகி கொண்டேன். கடந்த 15-08-2012 அன்றே வெளிவந்திருக்க வேண்டிய அவ்விரண்டு நூல்களும் இன்னும் வெளிவரவில்லை; இனியும் வருமா என்பது சந்தேகம்தாம்.
ஏதோ ஒரு விதத்தில் புகழ்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர, மற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் வறுமையில் வாடுபவர்கள்தாம். பேச்சாளர்களாவது, சமயத்துக்கு தக்கவாறு பேசும் சமயப் பேச்சாளராக மாறி வறுமையின் கோரப் பிடியில் இருந்து தப்பித்து விடலாம்.
ஆனால் எழுத்தாளர்களால், அவ்வளவு சீக்கிரம் மாறி விட முடியாது. அதனால், வறுமையில்தாம் வாடுவார்கள். இவ்வகை எழுத்தாளர்களே கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்கள். இதனால் தற்கொலை செய்து கொண்ட கவரிமான் எழுத்தாளர்களும் உண்டு. இவர்களது எண்ணங்கள் எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட்டு விடுவதால்தாம், சமுதாயத்தில் எழுத்தாளர்களுக்கு என்றென்றும் மதிப்பு இருக்கிறது.
ஆனால், கொள்கைப்பிடிப்பு இல்லாத பேச்சாளர்கள், தமது பேச்சில் இருந்து பல்டி அடித்து விடுவார்கள் என்பதற்கு நாட்டில் ஏராளமான பேச்சாள தலைவர்களை பார்த்து இருப்பீர்கள். இனியும் பார்ப்பீர்கள்.
ஒரு நூலை எழுதி விட்டாலே நூலாசிரியர், ஆண்டுக்கு ஓரிரு இதழ்களை வெளியிட்டாலே பத்திரிகையாளர் என்கிற சிறப்பு அந்தஸ்து வந்து விடுவதாகவும் கற்பனையில் பலபேர் இத்துறைக்கு வருகிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கையெழுத்து பத்திரிகையை நம்மவர்கள் நடத்தினார்கள். அதாவது ஒரு பத்திரிகை கார்பன் பேப்பர்களின் மூலம் ஐந்து முதல் பத்து வரையில் தயாரித்து, அதை முக்கியஸ்தர்களிடம் கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் அவ்வூர் மக்களைக் ஓரிடத்தில் கூட்டிப் படிக்கச் சொல்லி, ஆங்காங்கே விடுதலை உணர்வை ஊட்டினார்கள். ஆனால், இக்கணினி யுகத்தில் இதழை தட்டச்சு செய்து அதிகபட்சம் நூறு நகல்களை எடுத்து பத்திரிகை நடத்துவதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
உணவுப் பொருட்களை விளைவிப்பவனுக்கும், அதனை சந்தையில் வாங்குபவனுக்கும் இடையில் எப்படி தரகர்கள், முதலாளிகள் பெறும் பங்கு பணத்தை இரண்டு பக்கங்களில் இருந்தும் சுரண்டுகிறார்களோ, இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கேட்கும் வழக்கு தரப்பினர்களிடம் இருந்து வக்கீல்களும், நிதிபதிகளும் எப்படி நிதியை தி(ரு)(ரட்)டுகிறார்களோ, அதுபோலவே ஒரு புத்தகத்தை எழுதுபவருக்கும், வாங்கும் வாசகர்களுக்கும் இடையில் பதிப்பக முதலாளிகள்தாம் அதிகமாக கொள்ளையடிக்கிறார்கள்.
இதனை உணர்ந்து கொண்ட வெகு சில எழுத்தாளர்கள், தாங்களே புதிதாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து தாங்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு, தெரிந்தவர்கள் மூலம் விற்றுக் கொள்கிறார்கள்.
பதிப்பாளர்கள் தங்களை சமுதாயத்தில் போட்டிப் போட்டு நிலை நிறுத்திக் கொள்ள, மறைமுகமாக என்னென்ன வேலைகளை செய்கிறார்கள் என்பது, உங்களுக்கு நன்றாக தெரிந்தால், அவர்கள் மீது எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே, உங்களுக்கும் வெளிப்படும்.
எனக்கு தெரிந்த வரையில் நூல் எழுதுவதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அடிப்படை கல்விக்கான நூல். மற்றொன்று வாழ்க்கை கல்விக்கான நூல். இவ்விரண்டுக்கும் படிப்புக்கும், அனுபவத்திற்கும் உள்ள நேர்ரெதிர் தன்மை உண்டு. இதனை விளங்கிக் கொள்வது எப்படி என்பதற்கு, எனது தொழில் பாணியில் ஒரு சிறு விளக்கம்.
கல்வி கற்று தேர்ந்துள்ள ஒருவரிடம், நான்கு மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பியை ஒரு மீட்டர் நீளமுள்ள துண்டுகளாக, மிகச் சரியாக வெட்டினால் எத்தனை கிடைக்கும் என்றால் நான்கு கிடைக்கும் என்பார். இதையே கல்வி கற்காத ஆனால், அவ்வேலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கேட்டால் மூன்றுதாம் கிடைக்கும் என்பார்.
உடனே நாம், என்ன இருந்தாலும் படிச்சவன், படிச்சவன்தான்! என்னதான் படிக்கவில்லை என்றாலும், இந்த சிறு விபரமே தெரியாதவர் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவார் என்றே நினைப்போம். ஆனால் உண்மை என்ன?
படித்தவர் போட்டது கல்விக் கூடத்தில் போட்ட மனக் கணக்கு. படிக்காதவர் போட்டது, தன் வாழ்வில் நடைமுறைப்படுத்திய அனுபவ கணக்கு. அதாவது இரும்பு கம்பியை உட்ட ஏதாவது ஒரு உபகரணத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் அல்லவா?
இதில் சிறந்த உபகரணம் என்று ஹாக்சா பிளேடை எடுத்துக் கொண்டால் கூட, அதன் கனம் ஒரு மில்லி மீட்டர் என்று கொண்டால், மூன்று முறை அறுத்தால், குறைந்தது மூன்று மில்லிமீட்டர் காணாமல் போய் விடும். இதுமட்டுமல்லாமல், மேலும் சில விசயங்கள் உண்டு என்பதை இதற்கு மேல் நீங்களே புரிந்து கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட வேறுபாட்டை களையும் ஒரு முயற்சியாக படித்த அறிவு வறுமைவாதிகள் கொண்டு வந்த திட்டமே, ”ஆங்கிலத்தில் டாக்டரேட் என்று சொல்லப்படும் முனைவர் பட்டம்”. இப்போது இப்பட்டமானது பல்கலைக் கழகங்களால் கூவி கூவி விற்கப்படுவதால், பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள், அதனை வாங்கவும் அலைமேதுகிறார்கள்.
இவர்கள் மேற்கொள்ளும் சுய(நல)க்கள ஆய்வு மற்றும் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் எல்லாம் கூட, நான் முன்னர் சொன்ன எழுத்தாளர்களைப் போன்றதே என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கல்விக்கான நூல் என்பது ஆரம்ப நிலை என்பதால் எளிதான விசயங்களாகவே இருக்கும். ஆனால், வாழ்க்கைக்கான நூல் என்பது கரடுமுரடாண பாதைகளை கடந்து சென்று, வெற்றியை நிலை நாட்டுவதற்கான நூல் என்பதால், அதில் கரடுமுரடாண சங்கதிகள் கூட கனகட்சிதமாக சொல்லப்பட வேண்டும். இதற்கு சொந்த அனுபவமே பெரிதும் உதவும்.
ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வி நூல்களும், வாழ்க்கைக் கல்வி நூல்களும் ஒன்றையொன்று காப்பியடித்து எழுதப்படுகிறது. இதுவும் எதைப் பார்த்து எழுதப்படுகிறது என்றால், காப்பியடித்து எழுதப்படும் ஆராய்ச்சி நூல்களைப் பார்த்து, காப்பிடியடித்து எழுதப்படுகிறது. இக்காப்பித் திருட்டுக்கான உரிமை ஆசிரியருக்கே அல்லது பதிப்பகத்தாருக்கே என்பது அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொள்ளும் முத்திரை.
ஆனால், காப்பியடிக்கவில்லை; சொந்த அனுபவத்தில் எழுவது போன்ற ஒரு மாயை, திருட்டில் திறமையான அவ்வெழுத்தாளரால், அவரது முன்னுரையில் அல்லது என்னுரையில் மட்டுமல்லாத அதற்காக புகழ் மிக்கவர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கப்படும் அத்துனை உரைகளிலும் இருக்கும். ஏனெனில், இவைகளைப் பார்த்துதானே, நாம் நூல்களை வாங்குகிறோம்.
ஆம்! ஒரு நூலுக்கான அணிந்துரையை, ”அந்நூலின் ஆசிரியர் அல்லது பதிப்பாளர் தனக்கு நன்கு பரிச்சயமான அன்பர்கள் அல்லது நண்பர்கள் மற்றும் பிரபலங்களிடம்தாம், வாங்குவார்கள்”.
ஆதலால், அவ்வன்பர்கள் மற்றும் நண்பர்கள், தனது நண்பரின் நூலைப்பற்றி, ஏதாவதொரு பெயரில், வெகுவாக பாராட்டித்தாம் உரையை அளிக்க முடியும் என்கிற கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், இதில் உள்ள சில வெற்றுச் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் இங்கு விவரிக்க முடியாத அளவிற்கு அசிங்கமானவை என்பதை மேற்கோள் சங்கதிகள் மூலம் நீங்களே புரிந்து கொள்ள முயல வேண்டும்.
எத்தனை நூல்கள் வாங்கினீர்கள், அதன் மூலம் என்னென்ன அறிவை வளர்த்துக் கொண்டீர்கள், அதனை பயன்படுத்தி என்ன சாதித்தீர்கள் என சிந்தித்தால், நான் சொல்லும் இந்த உண்மைகள் எல்லாம் புரியும் என்பதை விட, உங்களின் இயல்பான சிந்தனை திறன் கூட மழுங்கியிருக்கிறது என்பதும் உங்களுக்கு புரிய வரும். எப்படி மழுங்காமல் இருக்கும் என்பது நான் கூடுதலாக உங்களுக்கு தொடுக்கும் கேள்வியும் ஆகும்.
இக்கேள்விக்கான பதிலை விளக்க பதிப்பாளர்களின் கொள்கையில்லா கொள்ளையை, புத்தக கண்காட்சிகளில் நீங்களே கண்கூடாக பார்க்கும் விசயத்தை முன்னிருத்திச் சொன்னாலே போதும் என நினைக்கிறேன்.
புத்தக கண்காட்சிகளின் முக்கிய நோக்கம், அறிவுத் தேடல் இருப்பவர்களை, அலைய விடாமல் ஒரே இடத்தில் அவர்களின் தேடலுக்கு விடை கிடைக்கச் செய்யத்தானே! இத்தேடல் எந்த நூலில் வேண்டுமானாலும் கிடைக்கலாம் அல்லவா?
ஆனால், புத்தக கண்காட்சியை நடத்தும் வெளியீட்டாளர்கள், தங்களின் பண பலத்தால், காவல்துறையை சரி கட்டி, அப்புத்தக கண்காட்சி நடத்தும் இடத்திற்கு வெளியே விற்கப்படும் பழைய நூல் விற்பனையாளர்களை எல்லாம், தங்களின் விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி விரட்டியடித்து விடுகிறார்கள்.
இதுபோன்ற செயல்பாடுகளில் இறக்கும் பதிப்பாளர்களுக்கும், காவல்துறைக்கும் வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அடிப்படை அறிவே இல்லை என்று சொல்லுவது மிகவும் சாலப் பொருத்தமாக இருக்கும்.
பதிப்பாளர்களின் உண்மையான நோக்கம் உங்களின் அறிவுக்கான தேடலே; மாறாக, அவர்களுக்கான பணத்தேடலே அல்ல என்றால், அவர்கள் பழைய புத்தகங்களை விற்பவர்களுக்குதானே முன்னுரிமை தர வேண்டும்?
ஆம்! பழைய நூல்கள் எல்லாம் யாருடையது?
நிச்சயமாக அதனை விற்பனை செய்யும், அவ்வியாபாரிகளுடையது அல்லவே!
மாறாக, இதே பதிப்பாளர்களால் முன்னர் அச்சடிக்கப்பட்டு, விற்கப்பட்டு பணம் பண்ணப்பட்டதும், பார்க்கப்பட்டதும், படிக்கப்பட்டதும் வேண்டாம் என தூக்கியெறியப் பட்டது தானே?
இப்படி, ஏற்கனவே அச்சிட்ட விற்ற அந்நூல்களே குப்பையில் கிடக்க மேன்மேலும் அதே நூல்களை அல்லது அவைகளில் இருந்து காப்பியடிக்கப்பட்ட நூல்களை அல்லது புதிது புதிதாக நூல்களை வெளியிட வேண்டிய வெளியிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
இந்நூல்கள் உபயோகமற்றது என்கிற நிலையில், நீங்கள் தூக்கிப் போடும் அல்லது எடைக்கு போடும் நூல்களை, கொஞ்சமாவது பணம் சம்பாதிக்க வேண்டும் சுயநலம் கலந்த பொதுநல அக்கறையில், அவைகளை தூசு தட்டி, கிழிசல்களை ஒட்டி, பல மாதங்கள், வருடங்கள் பாதுகாத்தும், சுமந்தும் விற்பனை செய்து, எழுத்தாளர்களின் / பதிப்பாளர்களின் படைப்புகளுக்கு மறு உயிரோட்டம் கொடுப்பதை தடுக்க பதிப்பகத்தார்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது என்பதை அந்நூல்களின் வாசகர்களாகிய நீங்களே நினைத்துப் பார்க்க வேண்டும்.
இப்பழைய புத்தக விற்பனையில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம், கனிசமான மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டு, இயற்கையும், சுற்றுப்புறச் சூழலும், உயிரினங்களின் ஆரோக்கியம் சிறிதாவது காக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
இவைகளை எல்லாம் சிந்திக்காத இப்பதிப்பாள மடையர்கள் வெளியிடும் நூல்கள் எப்படி உங்களின் அறிவை வளர்க்க உதவும். மாறாக, அவர்களுக்கு மழுங்கியிருப்பதைப் போன்றே மழுங்கத்தானே செய்யும்?
நான் மரம் நடுகிறேன் பாருங்கள் என்று யாரோ வெட்டிய குழியில், வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, யாரோ வளர்த்து கொடுத்த செடியை நோவாமல் நட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்.
நாம் நடுவது மரமல்ல; பிற்காலத்தில் மரமாக வளர்வதற்கான செடியே என்பது கூட தெரியாமல், அதனை மரம் நடுவிழா என்கிறார்கள். இதேபோன்றே நீங்களும் ஆளுக்கொரு மரம் வளருங்கள் என்று பிரச்சாரம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அதில் பிரபல எழுத்தாளர்களின் பங்கும், அச்சு ஊடகங்களின் பங்கும் மிகமிக அதிகமாக இருக்கும்.
ஏனெனில், நீங்கள் நட்டு வளர்த்தால்தான், அவர்கள் அதனை வெட்டிச் செய்யும் வெட்டி வேளையில் கூட, உங்களிடம் இருந்தும் சுரண்ட முடியும். ஆனால், இந்த சூட்சம ரகசியம் புரியாமல் பலரும், இதற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். அந்தோ பாவம்!
தனது எழுத்துக்கள் மூலம் சமூதாயத்தை சீர்த்திருத்த வேண்டிய, மிக முக்கியப் பங்கில் உள்ள கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்கள் தங்களின் ராயல்டி மற்றும் இன்ன பிற காரண காரியங்களுக்காக இதுபோன்ற சமுதாய அவலக் கூத்துக்களை கண்டும், காணாமல் இருப்பது எப்படி நியாயமாகும். இவர்கள் எப்படி சமூக சீர்த்திருத்தவாதிகள் ஆவார்கள் என்கிற கேள்விகள் தான் இயல்பாக எழுகின்றது.
இறுதியாக, பதிப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட இயற்கை வளம் மற்றும் உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, மறு கொள்ளைக்கான மூலதன முயற்சியே அவ்வப்போதும், ஆண்டுதோறும், ஆரம்பரமாகவும் நடத்தப்படும் புத்தக கண்காட்சிகள்.
இது ஒருபோதும் உண்மையாகாது என்றால், இவர்களின் ஆரம்பர அரங்குகளுக்கு முன்பாகவே, இவர்களின் புத்தகங்களை பாதுகாக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்கென்று தனியாக அரங்கம் அமைத்து கொடுக்கட்டும். இங்கு கிடைக்காத புத்தகங்களை, இவர்களின் புது அரங்குகளில் மக்கள் வாங்கி கொள்ளட்டுமே! இதை யார் தடுக்க முடியும்?
எவ்வளவுக்கு எவ்வளவு பழைய நூல்களை தேடிப்பிடித்து படிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அந்நூலின் மற்றும் உங்களது தேடலின் அசல் கருத்துக்களை படிக்கிறீர்கள் என்பது, நுட்பமான வாசகர்களுக்கு மட்டுமே புரியும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.