நுண்ணறிவு இல்லாத நூல்கள் (2)
இதெல்லாம் சரிங்க, சிறந்த நூல்களை தேர்ந்தெடுக்க வழி என்ன என்கிறீர்களா?
நூலை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், அந்நூல் சொந்தமாக எழுதப்பட்டதா அல்லது பல நூல்களில் இருந்து திருடப்பட்டதா என்பதை சரி பார்க்க வேண்டும். இதில் மேற்கோள் காட்டுவதற்காக சொல்லப்படும் சங்கதிகள் ஒருபோதும் திருட்டில் அடங்காது என்பதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனை சரிபார்ப்பது மிகமிக எளிது. அந்நூலின் இறுதி பக்கத்திற்கு சென்றால், இந்நூலை எழுத உதவிய நூல்கள் என குறைந்தது பத்து, பதினைந்து நூல்களின் பட்டியல் இடப்பட்டிருக்கும். அப்படி இருந்தால், எடுத்த எடுப்பிலேயே இது பல்வேறு நூல்களில் இருந்து திருடி எழுதப்பட்டது என்பதை புரிந்து கொண்டு, வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும்.
இதுபோன்ற பட்டியலிடப்பட்ட நூல்கள் பெரும்பாலும், கூடங்குளம் அணு உலை, ராமர் பாலம் போன்ற, பொதுமக்களால் எது உண்மையென எளிதில் உணர முடியாத சர்ச்சைக்கு உரிய சங்கதிகளில்தாம் இருக்கும். ஆதலால், ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு தரப்புக்குமே லாபம்தான்.
இவ்வளவு வெளிப்படையாகவே பட்டியல் போடுகிறார்கள் என்றால், ”எளிதில் கண்டு பிடித்து விடுவோம் என்பது தெரியாமலா போடுகிறார்கள்” என நீங்கள் நினைத்தால், பலருக்கும் இதுபற்றி தெரியாது என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் அந்நூலால் பிரச்சினை ஏதும் எழுந்தால் அல்லது யாராவது கேள்விகள் கேட்டால், பட்டியலிடப்பட்டுள்ள நூலில் இருந்ததைத்தான் நான் சொன்னேனே தவிர, ‘நானாக எதுவும் சொல்லவில்லையே’ என தப்பிக்கவும் வழியுண்டுதானே?
திருடி எழுதப்பட்ட ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்களில், உதவிய நூல்கள் பட்டியலை ஒருபோதும் பார்க்கவே முடியாது. காரணம், இதெல்லாம் நான் உணர்ந்து எழுதியது என்றும், உங்களுக்கு அந்த ஞானம் வரும் போது இது புரியும் என்று ஒரேயடியாக புளுகி விடுவார்கள்.
இப்படி எத்தனையோ வகையான புத்தகங்கள் வெளி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இப்போது இணையத்தில் எதைப்பற்றி தட்டினாலும், அது தொடர்பான பல்வேறு விபரங்களை எவ்வித அலைச்சலும் இன்றி, எளிதாக எடுத்து விட முடிகிறது என்பதால் திருட்டு எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இவைகள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக உங்களுக்கு சொல்ல இயலாது என்பதால் நீங்கள்தாம் எச்சரிக்கையோடு நூல்களை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
எனது விழிப்பறிவுணர்வுகள் எல்லாம் திருட்டு எழுத்தாளர்களில் உலகமகா திருடர்களாக முன்னிலை வகிப்பவர்கள், அறிவு வறுமையிலும் பெருமை தேடும் வக்கீல்களும்; நிதிபதிகளைப் பற்றியதுமே ஆகும்! பதிப்பகங்களுக்கு இவர்களே சட்ட ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், நீங்கள் இந்நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
சமுதாய நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு மொழிகளில் கொண்டு வரப்படும் மக்களுக்கான சட்டங்களை, அப்படியே காப்பியடித்தும், தத்தமது தாய்மொழிகளில் அப்படியே மொழி பெயர்த்து எழுதுவார்கள். கூடவே, தேவைப்படும் இடங்களில் தங்களுக்கு தெரிந்த, நிதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளின் சுருக்கத்தை குறிப்பிட்டு விடுவார்கள்.
அதாவது, ”ஐ அம் ரீடிங் தி புக்ஸ் நீதியைத்தேடி… ஆர்த்தர் ஆப் வாரண்ட் பாலா!” என்று ஆங்கிலத்தில் ஒரு சட்ட வாக்கியம் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் இதனை, ”நான், வாரண்ட் பாலா எழுதிய நீதியைத்தேடி… நூல்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்!” என்றுதானே மொழி பெயர்க்க வேண்டும்.
ஆனால் இவர்களோ, ‘நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், நீதியைத்தேடி… நூல்களை, வாரண்ட் பாலா எழுதியது என்றோ அல்லது நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், வாரண்ட் பாலா எழுதியுள்ள நீதியைத்தேடி… நூல்களை’ என்றோ அவர்களுக்கே புரியாமலும், அப்படியே புரிந்தாலும் கூட, வாசகர்கள் யாருக்கும் எளிதாக புரிந்து, சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடே எழுதுவார்கள்.
இதுபற்றி விளக்கம் கேட்டால், சட்டத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல் இருக்குங்க… அதெல்லாம் உங்களுக்கு புரியாது… சட்டத்தில் போட வேண்டிய இடத்தில் முற்றுப்புள்ளி, கமா போன்றவைகளை போடாமல், மாற்றி போட்டு விட்டால் அர்த்தம் அடியோடு மாறி விடும் எனவும், என்னமோ இவர்களே இம்மியும் பிறழாது சட்டத்தை மதித்து நடப்பது போலவும், காப்பது போலவும் அங்கலாய்ப்பார்கள்.
சட்ட நூலே இப்படியென்றால், நிதிபதிகள் வழங்கும் செல்லாத தீர்ப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மொழி பெயர்ப்பில் தவறு நேர்ந்து விட்டால், நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என பயங்கர பீலாவெல்லாம் விடுவார்கள். பீலாவிட இவர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? அதெல்லாம் ரத்தத்திலேயே ஊ(நா)றிப்போன ஒன்றுதானே!
ஒரு வக்கீல் பிறமொழிகளில் இருந்து தமது தாய்மொழியில் மொழி பெயர்த்து எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே மொழியில் வேறு ஒருவரும் எழுதினால், முதல் திருடரிடம் இருந்து முற்றிலும் திருடப்பட்டதுதாம் இது என்பது தெரியாமல் இருக்க, ”ஒருவர் ‘சென்றான்’ என்று எழுதியிருக்கும் இடங்களில் எல்லாம் மற்றவர், ‘போனான்’ என்று எழுதுவார்”. அவ்வளவே. இது ஒரு உதாரணத்துக்கு தான்.
இப்படிப்பட்ட கூத்துகள் பெரும்பாலும் சட்டத்தை வரச் செய்யும் வக்கீல்களின் வரைவுக் குழுவில் ஆரம்பித்து, தீர்ப்பு வரை தொடர்வதால்தாம், சட்டம் அவர்கள் உட்பட எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதெல்லாம் எனக்கு எப்படி புரிகிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.
அரசு இயற்றிய சட்டத்திற்கும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், அதை அப்படியே அல்லது மொழி பெயர்ப்பை நூலாக எழுதியவர்கள் அல்லது வெளியிடுபவர்கள் எப்படி காப்புரிமை கொண்டாட முடியும். ஆனாலும், நம்மை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில் காப்புரிமை தங்களுக்கே என போட்டுக் கொள்கிறார்கள், பொய்யர்கள்.
சரி, இனி சட்ட நூல்களை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.
சட்டம் குறித்த நூல்கள் அல்லது மொழி பெயர்ப்பு நூல்கள் என்றால், ஒன்று முதல் பிரிவுகள் வரிசையாக இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சோதித்து அறிந்த பின்னரே, வாங்க வேண்டும். ஏனெனில், சட்ட நூல்களை எழுதும் வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களுக்கு பாதகமான, குறிப்பாக தாங்கள் வாதாட தடை விதிக்கப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளை எழுதாமல் மறைத்து விடுகிறார்கள்.
உண்மையானதொரு உதாரணமாக சொல்லப் போனால், என்னைப் போன்ற சட்டப்படிப்பு படிக்காத, பார் கவுண்சிலில் பொய்யராக பதிவு செய்து கொள்ளாத, ஆனால் சட்டத்தில் புலமையுள்ள நபர்களை மற்றவர்களுக்காக வாதாட அனுமதிக்க வேண்டும் என்கிற வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் பிரிவு 32 ஆனதும் பொய்யர்களால் எழுதப்படும் நூல்களில் இருக்காது.
தொழிற்தகறாறு சட்டம் 1947 இன் பிரிவு 36 இல் நான்கு உட்பிரிவுகள் உண்டு. இதில் மூன்றாவது உட்பிரிவு, ”வக்கீல்கள் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் வாதாட தடை விதிக்கிறது. நான்காவது உட்பிரிவின்படி, வழக்கு தொடுக்கும் தொழிலாளி, எதிர்தரப்பில் வக்கீல் ஆஜராக ஆட்சேபனை செய்யாவிட்டால், நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்று உள்ளது”. இதனை எனது தொழிற்தகறாறு வழக்கொன்றில் நிலைநிறுத்தினேன்.
ஆனால், பொய்யை மூலதனமாகவும், திருட்டை தொழிலாகவும் செய்யும் வக்கீல்களும் நீதிபதிகளும் இவைகளை நூல்களில் எழுதாமல் மறைத்து விடுகிறார்கள். தொழிலாளிகளின் முதலாளிகளான தொழிற்சங்க பிரதிநிதிகளும் கூட கண்டு கொள்வதில்லை. நீங்கள் விழிப்பறிவுணர்வோடு இருந்தால்தாம். இல்லையென்றால் எல்லோருமே கூட்டு களவானித்தனம்தான் செய்கிறார்கள்.
இதேபோல, குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி, ”கணவன் மற்றும் மனைவி இருவருமே வக்கீல் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. விதிவிலக்காக நீதியின் நலனை முன்னிட்டு, நிதிபதி தனது உதவிக்காக தேவைப்பட்டால் ஒரு வக்கீலை அமர்த்திக் கொள்ளலாம்”.
இதுவும் அந்நீதிமன்றத்திற்கு வருகின்ற அத்துனை வழக்குகளிலும், ”கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே வக்கீலைத்தான் நியமிக்க முடியுமே தவிர, தனித்தனியாக நியமிக்க முடியாது. இப்படி நியமிக்கப்படும் வக்கீலுக்கு மாநில அரசே கூலி வழங்க வேண்டும்” என சட்டப்பிரிவு 23(2)(ஈ) இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், குடும்ப நீதிமன்றங்களில் துக்கத்திற்காக கூடும், காக்காய்கள் போல வக்கீல்கள் கூட்டத்தை காலையில் பார்க்கிறோம். ஆனால், காக்கா கூட்டத்தில் கல் எறிந்தது போல, இந்த காக்காய்கள் நீதிமன்றம் ஆரம்பித்த அரை மணி நேரத்திற்கெல்லாம் வாய்தா வாங்கி கொண்டு கலைந்து விடுகின்றன என்பதையும் பார்க்கிறோம்.
எனது சட்ட ஆராய்ச்சியில், வக்கீல்கள் எந்தவொரு வழக்கிலுமே சட்டப்படி வாதாட முடியாத அளவிற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தடையிருக்கிறது. ஆனால், ”பொதுமக்களிடம் போதுமான சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், வக்கீல்களின்பாடு படுகொண்டாட்டம் ஆகவும், சமுதாயத்தின்பாடு படுதிண்டாட்டம் ஆகவுமாக, நெடுங்காலமாக இருந்து வருகிறது”.
இதனை என்னால் முடிந்த அளவு சீர்த்திருத்த முயன்றுள்ளேன். ஆனால், இச்சீர்த் திருத்தங்கள் எல்லாம் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்கிற பழமொழி போல, வக்கீல்களும் நிதிபதிகளும் நவீன திருடர்களாக மாறி வருகின்றனர். குடும்ப நீதிமன்றங்களில் இது கண்கூடாகவே தெரிகிறது.
இதுவும், நமக்கு கிடைத்த வெற்றியே! ஆராய்ச்சியின் வெற்றி மைல் கல்லே!! என்றாலும், வக்கீல் படிப்பை ஒழித்துகட்டும் வரை சமுதாயத்திற்கு ஓய்வு கிடையாது. வெற்றியாகவும் கருதக்கூடாது.
ஏனெனில், வக்கீல்கள் எப்படி தங்களின் பிழைப்புக்கு தக்கவாறு சட்ட விதிகளை மறைத்து எழுதும் அவலம் நடக்கிறதோ, அதுபோலவே இந்திய அரசும், தங்களின் பிழைப்புக்காக இந்திய அரசமைப்பில் சேர்த்து எழுதும் அவலமும் அறங்கேற்றப்பட்டது. அது என்ன, என்ன ஆனது என்பதுபற்றியும் சமூகம் இனியும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் கஷ்டப்பட போவது, நாம் மட்டுமல்ல; முச்சந்தியில் நிற்கப்போவது நமது சந்ததிகளும்தாம் என்பது பற்றி, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்…? என்கிற தலைப்பில் கட்டுரை விரைவில் வெளிவரும்.
சட்டப்பிரிவுகள் வரிசையாக சொல்லப்பட வேண்டும் என்பது ஒருபோதும் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களுக்கு நிச்சயம் பொருந்தாது.
ஏனெனில், இது சட்டத்தின் அம்சங்களைப் பற்றி சிறப்பான முறையில், நன்றாக புரியும்படி தத்தமது பாணியில், மேற்சொன்ன தொழிலாளர் மற்றும் குடும்ப நீதிமன்றத்தில் வக்கீல்களின் பங்கு பற்றி சொல்லியுள்ளது போல, சட்டத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்து நிறைகுறைகளை ஆதரித்தும், விமர்சித்தும் எடுத்துரைப்பதாகுமே தவிர, சட்டத்தை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக எழுதுவது கிடையாது.
மேலும், ஒன்றுக்கும் உதவாத உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களில் மேற்குறிப்பாக காட்டியிருக்க கூடாது. ஏனெனில், விதிவிலக்கான ஓரிரு சமயங்கள் தவிர மற்றபடி, சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்லப்படுகிறதே தவிர, தீர்ப்பின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப் படுவதில்லை.
ஆனால், நியாயம்தான் சட்டம் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க அமலில் இருக்கும் சட்டத்துக்கு புறம்பாக, நீதிமன்றங்களால் தீர்ப்புரைக்கப்பட்டால், அதுபற்றி அவசியம் விளக்க வேண்டும். அப்போதுதான் நிதிபதிகளின் அநீதிகள் வாசகர்களுக்கு நன்கு புரியும்.
இறுதியாக சரிங்க, உங்களைப் போல இத்தவறுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்து, விலைக்கு வாங்க எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டுமே… இதெல்லாம் சாத்தியமா…
ஆதலால், இது போன்ற முறைகேடுகளை தடுக்க சட்டப்படி என்ன செய்யலாம் என்று கேள்வி உங்களுக்கு எழுந்தால், நாம் வாங்கும் பொருட்கள் எப்படி தரம் குறைவானதாகவோ அல்லது குறைபாடு உள்ளதாகவோ இருக்கும் போது, அதனை திருப்பித் தந்து பணத்தை பெறுகிறோமோ அல்லது வேறு மாற்றிக் கொள்கிறோமோ அதுபோல நூல்களையும் செய்யும் நிலை வரவேண்டும். பதிப்பாளர்கள் ஏற்காத போது, சேவை குறைபாடு என வழக்கு தொடக்க வேண்டும்.
ஆனால், இவ்விரண்டு நிலைகளும் இதுவரை வந்தாக தெரியவில்லை. இரண்டாவது நிலை வரும் போது, நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் கருப்பு அங்கி (கோட்டு) சாதியினரான பொய்யர்களையும், கொள்ளையர்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆக, போகப்போக சட்டத்தை தெரிந்து கொள்வதில் இருந்து நீங்கள் தப்பவே முடியாது. தவறினால், நீங்களே தவறி விட்ட (உயிரோடு இருந்தும் இல்லாத) நிலைதாம்!
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com
source: www.inneram.com