விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை விதித்தது ஹைகோர்ட் பெஞ்ச்: தனி நீதிபதி தந்த அனுமதி ரத்து!
சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.
முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை (இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தப் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது.
பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 4ம் தேதி) தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம்!
விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல் ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர்.
அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், எனது முஸ்லீம் குடும்ப நண்பர்கள் என்னை அணுகி பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றனர். விஸ்வரூபம் படப் பிரச்சனை குறித்து என்னிடம் பேசினர். இந்த பிரச்சனையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர். படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் அளித்தனர். இதற்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருந்து சில வாசகங்களை படத்தில் நான் பயன்படுத்தியுள்ளது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.
அதனால் இறைமறை வசனங்களை நீக்குவது என்று தீர்மானித்துள்ளேன்.
சில காட்சிகளையும் எடிட் செய்ய உள்ளேன்.
இந்தப் படப் பிரச்சனைகளால் சில விரும்பத்தாக சம்பவங்கள் நடந்து வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. என் சகோதர்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.
கமலின் இந்த அறிவிப்பு குறித்து 24 இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆருண் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால், விஸ்வரூபத்துக்கு இஸ்லாமியர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு அகலலாம்.
ஆனால், அரசின் எதிர்ப்பு அகலுமா என்பது தெரியவில்லை
கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு காரணமாக பரவலாக அடிபடும் செய்தி..
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்… – நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.
இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.
அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்… நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த ‘ப.சிதம்பரம் ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில், உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.
அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்ளீர்கள்! என்றார்.
இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி. கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த ‘கொட்டும்’ அதிமுக தரப்பை மிகவும் எரிச்சலை மூட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.