மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், “எனது சமூகத்திலேயே ஹலால், ஹராம் பற்றிய அதிக விளக்கமுடையவர்களாக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் திகழ்கின்றார்கள்”
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். “மக்களே! சன்மார்க்க சட்ட திட்டங்களைப் பற்றி நீங்கள் எவரேனும் விளக்கம் தேடினால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள்”.
இன்னொரு கட்டத்தில் “மறுமையில் சன்மார்க்க அறிஞர்கள் ஓர் அணியில் திரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் முன்னிலை வகிப்பவராக காட்சி தருவார்கள்” என்று கூறினார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூறும் பொழுது, “எனக்குப் பின்னர் கலீஃபாவாக நான் சுயமாகவே தேர்வு செய்வதாக் இருந்தால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையே அப்பதவிக்குத் தேர்வு செய்வேன். நாளை மறுமையில் அல்லாஹ் தனது விசாரணையின்போது “நீங்கள் எந்த தகுதியை முன்னிறுத்தி கலீஃபாவாக முஆத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்டால், உடனே பின்வரும் பதிலைக் கூறுவேன்.
“இறைவா! உனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை மறுமையில் அறிஞர் பெருமக்கள் உனக்கு முன் அணிதிரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முன்னிலை வகிப்பவராக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களே இருப்பார்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அத்தகைய உயரிய தகுதியை நான் கருத்தில் கொண்டே, முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீஃபாவாக நியமித்தேன் என்ற பதிலை கூறுவேன்”.
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றர்கள். “பெருங்கொண்ட சமூகம் சாதிக்க வேண்டிய காரியங்களை முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி மனிதனாக இருந்து சாதித்துக் காட்டினார்கள். மாபெரும் மகத்துவம் மிக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் எவ்வாறு ஒரு சமுதாயமாக சிலாகித்து கூறுகின்றானோ அதைப் போலவே முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நாங்கள் மதித்து வந்தோம்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்; “‘முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்ற ஒரு பிள்ளையை பெண்கள் பெற்றெடுக்க முடியாது. இந்த முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் இல்லையென்றால் நானே நாசமாகி இருப்பேன்.] ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு
சத்திய இஸ்லாத்தின் மகத்தான வளர்ச்சிக்கு அன்றே வித்தாக விதைக்கப்பட்டதுதான் உத்தம ஸஹாபாக்களின் ஒப்பற்ற தியாகம். அறியாமை காலத்தில் புறையோடிக் கிடந்த மடமைகளை மண்ணோடு மண்ணாக புதைப்பதிலே அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோளோடு தோளாக நின்று போராடியவர்கள் உத்தம நபித்தோழர்களே.
அறியாமை காலத்தில் புறையோடிக் கிடந்த மடமைகள் இன்று மீண்டும் சில மார்க்க அறிஞர்களாலேயே கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது ஈமானை பலப்படுத்த, தீனுல் இஸ்லாத்தின் பேரொளி அகிலமெங்கும் சுடர்விட்டுப் பிரகாசிக்க, அந்த உத்தம தியாகிகளான ஸஹாபாப் பெருமக்களின் வாழ்க்கை வரலாறு நம்மை சீர்படுத்திக்கொள்ள உதவும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அத்தகைய உத்தம நபித்தோழர்களின் பண்பட்ட வாழ்வியல் முறைகளை புரட்டிப் பார்ப்பதன் மூலமாக நாமும் நமது வாழ்வியலை அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பிடித்தமானதாக மாற்றிக் கொள்ள வழி பிறக்கும்.
அந்த வகையில்தான் அன்சாரிய தோழர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானிய வலிமையும், கூரிய ஞானமும், மனஉறுதியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், மற்ற நபித்தோழர்களும் அவர்கள் மீது கொண்டிருந்த கண்ணியமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
கண்ணியமிக்க அந்த உத்தம நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சுவடுகளின் ஊடே நாம் செல்கின்ற பொழுது நமது உள்ளத்தில் சிலிர்ப்பும், உணர்வில் விழிப்பும் உண்டாகும்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூட மதீனாவில் சன்மார்க்கத் தீர்ப்புகளை அள்ளி வழங்குவதில் மாபெரும் நிபுணத்துவம் பெற்றவராகவே திகழ்ந்தார்கள் என்று கஃபு இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வியப்புடன் பகர்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாக்கவை வெற்றிக் கொண்ட பின்னர், ஹுனைன் யுத்தத்திற்காக யுத்த களத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமானபோது மக்காவாசிகளுக்கு திருமறை குர்ஆனை கற்றுக்கொடுப்பதற்காகவும், சன்மார்க்க சட்ட திட்டங்களை கற்றுக்கொடுப்பதற்காகவும் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத்தான் அந்த பொறுப்பில் நியமித்துவிட்டுச் சென்றார்கள்.
“ஜாபியா” என்ற பகுதியில் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை சொற்பொழிவாற்றும் பொழுது மக்களிடம், “மக்களே! சன்மார்க்க சட்ட திட்டங்களைப் பற்றி நீங்கள் எவரேனும் விளக்கம் தேடினால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.
இன்னொரு கட்டத்தில் “மறுமையில் சன்மார்க்க அறிஞர்கள் ஓர் அணியில் திரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் முன்னிலை வகிப்பவராக காட்சி தருவார்கள்” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் தேசத்திற்கு ஆளுனராக நியமித்து அனுப்பி வைக்கும்பொழுது, “முஆத் அவர்களே! மக்களின் பிரச்சனைகளில் தீர்ப்பளிக்கும் நிலை ஏற்படும்பொழுது எதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பீர்கள்?” என வினவினார்கள். அதற்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் அந்த தீர்ர்ப்பை நீங்கள் பெறாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்றார்கள். அதற்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களது பொன்மொழிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்றார்கள். மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனது அறிவுரைகளிலும் நீங்கள் தேடும் தீர்வு உங்களுக்கு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நான் தேடுகின்ற தீர்வு அதிலும் எனக்கு கிடைக்காவிட்டால் மிகவும் கவனத்தோடு ஆய்வு செய்து தீர்ப்பளிப்பேன்” என்றார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இறைவா! உன்னுடைய தூதராகிய நான் திருப்தி கொள்கின்ற வழிமுறையை எனது தோழருக்கும் வழங்கிய உனக்கே எல்லாப் புகழும்” என்று கூறி முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நெஞ்சை தடவிக் கொடுத்தார்கள். இதனை முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் தேசத்திற்கு ஆளுனராக நியமித்து அனுப்பி வைத்த பிறகு யமன் தேசத்தின் மக்களுக்கு கடிதம் அனுப்பினார்கள். அக்கடிதத்தில், “யமன் வாசிகளே! எனது குடும்பத்திலேயே தலைசிறந்த ஒருவரை உங்களுக்கு வழிகாட்டியாக நான் அனுப்பி வைத்துள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே இணைத்துக் கூறுகிறார்கள் எனில், அந் நபித்தோழர் பெற்ற மாபெரும் மகத்துவத்தைப் பற்றிக் கூற வார்த்தைகள் உண்டோ!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதற்கு மணிமகுடமான சில சரித்திர சுருக்கத்தை காண்போம்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்; “ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கரத்தை பற்றிக்கொண்டு, ‘முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களை நேசித்து வருகிறேன். முஆதே! உங்களுக்கு நான் உபதேசம் செய்கின்றேன்” என்று கூறினார்கள். பின்னர் “முஆதே! நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இந்த துஆவை ஓதி வாருங்கள்” என்று கூறி பின்வரும் துஆவை கற்றுக்கொடுத்தார்கள்.
“அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக்க வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாதத்திக்க”
பொருள்: “இறைவா! உன்னை நினைவு கூறவும், உனக்கு நன்றி செலுத்தவும், உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் எனக்கு உதவி செய்வாயாக!” (நூல்: நஸஈ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் தேசத்திற்கு ஆளுனராக நியமித்து, அவர்களை வழியனுப்புகின்ற வேளையில் – முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாகனத்தைப் பிடித்தவாரே வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் வாசகங்களை கூறுகின்றார்கள். இதனை முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படி என்னதான் சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்? இதோ…
“முஆதே! இப்பொழுது நீங்கள் என்னைப் பார்க்கின்றீர்கள். இதுதான் இறுதிப்பார்வையாகும். இனி நீங்கள் என்னைப் பார்ப்பது இயலாத காரியமாகும். முஆதே! நீங்கள் அடுத்த முறை மதீனா வரும்பொழுது எனது மண்ணறையையும், நான் இல்லாத பள்ளியையும் தான் பார்ப்பீர்கள்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதுதான் தாமதம், முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தேம்பித் தேம்பி அழலானார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களை ஆறுதல் படுத்திவிட்டு மதீனாவை நோக்கி நடக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுவடுகளையும், அவர்களையும் திரும்பத் திரும்ப தமது வாகனத்தில் பயணித்தவாறே ஏக்கமுற பார்க்கின்றார்கள் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். இந்த ஏக்கத்தை உணர்ந்துகொண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் வாசகங்களை பொதுவான முறையில் மக்களுக்கு கூறுகின்றார்கள்.
“மனிதர்களிலே எனக்கு மிக நெருக்கமானவர்கள் இறையச்சம் உடையவர்கள் தான். அவர்கள் யாராக இருப்பினும் – எங்கே இருப்பினும் சரியே. அவர்கள்தான் எனக்கும் மிக நெருக்கமானவர்கள்.”
இந்த வார்த்தையை கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்துகிறார்கள்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்ணியத்தையும், சிறப்பையும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உலகிற்கு உணர்த்துகின்ற பாணியில் பின்வருமாறு சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
“எனக்குப் பின்னர் கலீஃபாவாக நான் சுயமாகவே தேர்வு செய்வதாக் இருந்தால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையே அப்பதவிக்குத் தேர்வு செய்வேன். நாளை மறுமையில் அல்லாஹ் தனது விசாரணையின்போது “நீங்கள் எந்த தகுதியை முன்னிறுத்தி கலீஃபாவாக முஆத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்டால், உடனே பின்வரும் பதிலைக் கூறுவேன்.
“இறைவா! உனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை மறுமையில் அறிஞர் பெருமக்கள் உனக்கு முன் அணிதிரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முன்னிலை வகிப்பவராக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களே இருப்பார்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அத்தகைய உயரிய தகுதியை நான் கருத்தில் கொண்டே, முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீஃபாவாக நியமித்தேன் என்ற பதிலை கூறுவேன்”.
தொழுகையில் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை பாராட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதீனா வாழ்வின் துவக்கத்தில் மக்கள் தொழும் முறையை நான் கவனித்து வந்திருக்கிறேன். தொழுகை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையிலே தாமதமாக எவரேனும் வந்தால், அவர் தொழுது கொண்டிருப்பவரிடம், ‘இது எத்தனையாவது ”ரக்அத்” என வினவுவார்ர்’. தொழுதுகொண்டிருப்பவரோ ‘சைகை மூலம் ”ரக்அத்” எண்ணிக்கையை அவருக்கு விளக்குவார். உடனே, தாமதமாக வந்த நபர் விடுபட்ட ”ரக்அத்”களை தனியே நின்று விரைவாக நிறைவேற்றிவிட்டு – ஜமாஅத் தொழுகையில் இணைந்து மீதமுள்ள ”ரக்அத்”களை நிறைவேற்றுவார்.
நான் ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாமத் செய்து, அப்பொழுது மக்கள் ”அத்தஹிய்யாத்” நிலையில் இருந்தார்கள். நானும் உடனே ”அத்தஹிய்யாத்” நிலையிலேயே தொழுகையில் கலந்துவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் கூறி தொழுகையை முடித்த பின்னர் நான் ஸலாம் கூறாமல் எழுந்து தொடர்ச்சியாக விடுபட்ட ”ரக்அத்”களை தொழுதேன்.
இதனை கண்ணுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தோழர்களே! முஆத் அழகிய நடைமுறையை நம்முன்னர் செய்து காட்டியிருக்கிறார். இனி நீங்கள் இந்த நடைமுறையையே பேணி வாருங்கள்” என்று பாராட்டிக்கூறினார்கள்.
ஸுப்ஹானல்லாஹ்! முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்ற பாக்கியம் தான் எவ்வளவு மகத்தானது. இன்று வரை மட்டுமல்ல இனி கியாம நாள் வரும் வரை அந்த நடைமுறையையே தொழுகையாளைகள் அனைவரும் பின்பற்றுவார்க்ள் எனும்பொழுது அந்த உத்தம ஸஹாபாவான முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்வைப்பற்றி சொல்லவும் வேண்டுமா?!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே நான்கு தோழர்கள்தான் குர்ஆனை ஒருசேர திரட்டி வைத்திருந்தார்கள். அந்த நான்கு பேர்கள்: 1. ஸைத் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, 2. உபை இப்னு கஃபு ரளியல்லாஹு அன்ஹு, 3. அபூ ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, 4. முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு.
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றர்கள். “முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) மனித சமுதாயத்திற்கு நன்மைகளை போதிக்கின்ற ஆசானாகவும் – இறையாணைக்கும், இறைத்தூதரின் வழிகாட்டலுக்கும் முற்றிலும் கட்டுப்பட்ட இறையடியாராகவும் விளங்கினார்கள். ஒரு பெருங்கொண்ட சமூகம் சாதிக்க வேண்டிய காரியங்களை முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி மனிதனாக இருந்து சாதித்துக் காட்டினார்கள். இறைத் தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வல்ல இறைவன் ஒரு சமூகத்திற்கு ஒப்பாக பாராட்டுவதைப் போல முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
இறைவன் கூறுகிறான், “நிச்சயமாக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஒரு சமுதாயமாக இருந்தார். இறைவனுக்கு முற்றிலும் பணிந்தவராக அசத்திய வழிகளிலிருந்து திண்ணமாக விலகியவராகவே இருந்தார்.”
மாபெரும் மகத்துவம் மிக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் எவ்வாறு ஒரு சமுதாயமாக சிலாகித்து கூறுகின்றானோ அதைப் போலவே முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நாங்கள் மதித்து வந்தோம்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனுடைய விளக்கங்களைப் பெறுவதிலும் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத மொழிகள் பற்றிய தெளிவிலும் முன்னணி வகித்தார்கள். அதற்குச் சான்றாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பின்வருமாறு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை புகழ்ந்து போற்றூவதைக் காணுங்கள்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், “எனது சமூகத்திலேயே ஹலால், ஹராம் பற்றிய அதிக விளக்கமுடையவர்களாக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் திகழ்கின்றார்கள்”
நபித் தோழர்க்ள் தமக்குள் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும்போது முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அச்சபைக்கு வந்துவிட்டால் அவர்களை மரியாதை கலந்த பார்வையோடு அணுகுஇவார்கள்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நீண்ட தொடர்பு கொண்ட நற்பாக்கியவானாக திகழ்ந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லுபதேசங்களால் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பட்டவர்களாக மிளிர்ந்தார்கள்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.