மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் (2)
34 ஆண்டு காலமே வாழ்ந்த முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனித குலத்திற்கு வழங்கிய நல்லுரைகளும் அறிவுரைகளும் இதோ:
என் சகாக்களே!
பிற்கால குழப்பங்களில் இருந்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். அக்காலத்தில் செல்வம் பெருகும். திருமறை குர் ஆனை நம்பிக்கையாளர்களும், நயவஞ்சகர்க்ளும் ஓதக் கூடிய காலம் அது! குர் ஆனை கற்றவர்கள் எல்லாம் தம்மை மக்கள் வழிகாட்டியாக ஏற்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், மமதையில் பல புதிய வழி முறைக்ளை கடைப்பிடிப்பார்கள்.
அறிஞர்கள் வழிகெடுப்பவர்களாக மாறித்திரிவார்கள் (-இப்போதைய நிலைப்பாடு அது இன்றைய காலம்தானோ என்று எண்ண வைக்கிறது. -adm.) இவர்கள் உருவத்தில் ஷைத்தான் நடமாடுவான். எனவே, நல்வழியை, உண்மை நெறியை யார் காட்டினாலும் அதைப் பின்பற்ற தயாராகுங்கள். நல்லறிவையும், நிறைவான விசுவாசத்தையும் தவற விட்டு விடாதீர்கள்.
என் சகாக்களே!
அல்லாஹ்தான் நீதியாளன், புகழ்பெற்ற, நிலையான நாமத்தை கொண்டவன் அவன் ஒருவனே! அவனது நிலைத்த உயர்விலோ, நீதியிலோ சந்தேகம் கொண்டுவிடாதீர்கள். இறைநம்பிக்கையற்றவர்களே நாசமடைவார்கள்.
என் சகாக்களே!
தேவையற்ற பேச்சுக்களையும் வீண் பேச்சுக்களையும் உருவாக்குகின்ற சபைகளை புறக்கணியுங்கள். இறைவனது நினைவுகளை உருவாக்குகின்ற சபைகளை பற்றிக்கொள்ளுங்கள்.
என் சகாக்களே!
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதியாவேண். அறிந்து கொள்ளுங்கள், நாம் யாவரும் நிச்சயமாக அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல இருக்கின்றோம். இறுதியில் சுவனம் செல்வோமா? நரகம் செல்வோமா? அதைப்பற்றி திட்டவட்டாம்ன ஞானம் நமக்கு இருக்கிறதா? ஒருவேளை அங்கு தப்பிச் செல்லத்தான் முடியுமா? நம் உடல்தான் அழிந்து விடுமா? அங்கே மரணத்தை சுவைக்கத்தான் முடியுமா?
என் சகாக்களே!
இறுதித் தீர்ப்பு நாளில் ஒவ்வொருவரும் இறைவன் முன் நின்றாக வேண்டும். அப்பொழுது இறைவன் நான்கு கேள்விகளைக் கேட்பான். அவற்றிற்கு பதில் கூறிய பின்புதான் நாம் அந்த இடத்தை விட்டு நகர முடியும்.
1. உனது உடலை எதற்கு பயன்படுத்தினாய்?
2. உன் வாழ்நாட்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு செலவிட்டாய்?
3. செல்வங்களை எவ்வழியில் திரட்டினாய்? எவ்வழியில் செலவழித்தாய்?
4. உன் கல்வியை எதற்குப் பயன்படுத்தினாய்?
கல்வியின் மேன்மையைப்பற்றி…
என் சகாக்களே!
கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். அது உங்களை இறையச்சம் உடையவராக ஆக்கக்கூடும்.
கற்பதும் ஒரு வணக்கம்தான். கல்வி பற்றி உரையாடலும் ஒரு இறைத்துதிதான்.
கற்பதில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வதும் ஒரு அறப்போர்தான். இதுவும் ஒரு தர்மம்தான்.
அல்லாஹ் தடுத்தவை எவை? ஏற்பவை எவை? என்பதைப் பற்றிய விளக்கங்களை கல்வி மூலமாகத்தான் நாம் அறிய முடியும்.
நாம் கற்ற கல்வி சொர்க்கம் செல்ல நமக்கு வழி வகுக்கும்.
நாம் இக்கட்டான சூழலில் தவிக்கும் பொழுது, இந்த கல்விதான் நமக்கு நண்பன்.
செழிப்பிலும் – வறுமையிலும், துக்கத்திலும் – மகிழ்ச்சியிலும் இக் கல்விதான் நமக்கு சிறந்த வழிகாட்டியாகும்.
பகைவர்களை தோல்வியடையச் செய்யும் ஆயுதமும் கல்விதான்.
அல்லாஹ் கல்விமான்களை அந்தஸ்துகளில் உயர்த்துகிறான். அவர்களுடன் நட்பு கொள்வதற்காக மலக்குமார்கள் போட்டி போடுவார்கள். தம் இறக்கைகளால் எப்பொழுதும் அவர்களைத் தடவிக் கொடுப்பார்கள்.
கல்விமான்களுக்காக இப்பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் பாவமன்னிப்பு கோருகின்றன.
கல்வி அறியாமையை விரட்டி அநீதங்களில் இருந்து காக்கும் கேடயமாகும்.
கல்விக்காக நேரங்களை ஒதுக்கி – அதற்காகவே நேரங்களை செலவிடுபவர்கள் அந்நேரத்தை இறைவணக்கத்திலும் செலவிட்டதாகவே கருதப்படுவார்கள்.
கல்விதான் நமது உறவுகளை பலப்படுத்தும். கல்வியை நல்லோர்கள் பெற்றே தீருவர். அதைப் பெறாதவர்கள் துர்பாக்கியசாலிகளே ஆவர்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு வழங்கிய அரிய உபதேசத் தொகுப்புகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை…
1. நீங்கள் துண்டுத்துண்டாக வெட்டிக் கோறமாக கொலை செய்யப்பட்டாலும் (அல்லது) உயிருடன் எரித்து பொசுக்கப்பட்டாலும் சரியே, அல்லாஹ்வுக்கு எந்த சூழ்நிலையிலும் இணை கற்பித்து விடாதீர்கள்.
2. உங்களது பெற்றோருக்கு மாறு செய்து விடாதீர்கள். அவர்கள் உங்களிடம் உங்களின் செல்வங்களையும், குடும்பத்தையும் உதறிவிடுமாறு பணித்த போதும் கூட, நீங்கள் அவர்களௌக்கு எதிரான நடவரிக்கைகளில் ஈடாதீர்கள்.
3. வேண்டுமென்றே எந்த தொழுகையையும் விட்டு விடாதீர்கள். அவ்வாறு விட்டு விட்டால் அல்லாஹ்வின் பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியேறி விடுவீர்கள்.
4. உங்களின் சுயநினைவை இழந்து விடச் செய்யும் மதுவை எந்த சூழ்நிலையிலும் அருந்தி விடாதீர்கள்.
5. பாவத்தை விட்டு விலகி இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது அல்லாஹ்வின் கோபத்தை கொப்பளிக்கச் செய்கிறது.
6. உங்களது செல்வங்களிலிருந்து உங்களது குடும்பத்தாருக்கு நீங்கள் தாராளமாக செலவு செய்யுங்கள்.
7. நல்வழி படுத்துகின்ற எண்ணத்தில் உங்கள் குடும்பத்தினரை கண்டிக்கத் தவறாதீர்கள். உங்களது குடும்பத்தினருக்கு அல்லாஹ்வுடைய அச்சத்தை ஊட்டி வாருங்கள்.
இரண்டு மனைவியரையும் சமமாக நடத்திய நீதம் :
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு பெண்களை மணமுடித்து இரண்டு மனைவியரையும் சமமாக நடத்தினார்கள். மனைவியரின் இல்லங்களில் தங்குவதிலே முறை வைத்து நீதமாக தங்கினார்கள். எப்படியென்றால், ஒரு மனைவியின் வீட்டில் தங்கியிருக்கையில் – இன்னொரு மனைவியின் வீட்டில் தண்ணீர் குடிப்பதையும் உளூச் செய்வதையும் கூட தவிர்த்து வந்தார்கள்.
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலராவால் பாதிக்கப்பட்ட அவ்வேளையிலே அவர்களின் இரு அன்பு மனைவிகளும் அதற்கு சிக்குண்டு கணவருக்கு முன்பாக வே வீர மரணம் எய்தினார்கள். சோகமான இவ்வேளைய்ல் இரு மனைவியரையும் ஒரே குழியில் அடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மண்ணறையிலே யாரை முதலில் வைப்பது என்ற எண்ணம் எழ, நீதம் தவறாத முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சீட்டு குலுக்கி விட்டு முடிவை தேர்ந்தெடுத்தார்கள்.
மறுமை அச்சம் கொண்ட இந்த கல்விமானின் இச்செயல் நம் அனைவரும் எச்சூழலிலும் படிப்பினயாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்த ஒவ்வொரு யுத்தத்திலும் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பங்கு கொண்டார்கள். குறிப்பாக “பத்ர்” போர்க்களத்தில் பங்கேற்கும் பொழுது அவர்களுக்கு வயது 21 தான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் தேசத்தின் ஆளுனராக அனுப்பி வைக்கும்பொழுது பின்வருமாறு ”துஆ”ச் செய்தார்கள்.
“அல்லாஹ் உங்களை உங்களுக்கு முன்னால் இருந்தும், பின்னால் இருந்தும், வலப் புறத்திலிருந்தும், இடப் புறத்திலிருந்தும் பாதுகாப்பானாக! மனிதர்கள் மற்றும் ஜின்களின் கேடுகளிலிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக!”
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப்பற்றி உமர் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்.
“‘முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்ற ஒரு பிள்ளையை பெண்கள் பெற்றெடுக்க முடியாது. இந்த முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் இல்லையென்றால் நானே நாசமாகி இருப்பேன்.
ஹிஜ்ரீ 17 அல்லது 18 ஆம் ஆண்டு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு சிரியாவில் பரவிய காலராவுக்கு பலியானார்கள். அப்போது அவர்களுக்கு வயது 34 மட்டுமே.
இந்த குருகிய காலமே வாழ்ந்த அவர்கள் அடைந்த நற்பேற்றை எண்ணும் எவருக்கும் அவர்கள் மீது பொறாமை ஏற்படவே செய்யும். அல்லாஹ் பொருந்திக்கொண்ட “பத்ர்” ஸஹாபாக்களில் ஒருவரான அவர்களை மறுமையில் சந்திக்கும் வாய்ப்பினை அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்குவானாக.
நூலின் விபரம் :
நூல்: முஆத் இப்னு ஜபல் (ரளி)
ஆசிரியர்: ஹாமிதுல்லாஹ் ஸித்தீக்கி
பக்கங்கள் 56
விலை: ரூபாய் 30 மட்டுமே
வெளியீடு: திண்ணைத்தோழர்கள்
24, நேரு வீதி, குமராநந்தபுரம்,
திருப்பூர் 641602
தமிழ்நாடு.
கிடைக்குமிடம்:
Islamic Book Center,
No. 81, Angappan Street,
Chennai 600 001
Cell: 9952635343
மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் பயனுள்ள இந்நூலை
வாங்கி படிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் சுற்றத்தார்களுக்கும் பரிசளியுங்கள்.
அல்லாஹ் நல்லருள் புரிவானாக