அரசு தரப்பு மேல்முறையீடு செய்தால் அதனையடுத்து விஸ்வரூபம் படத்தின் மீதான தடை தானாகவே நீடிக்கும்!
சென்னை உயர் நீதி மன்றம் விஸ்வரூபத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த தகவல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்றதுமே.
முதல்வர் ஜெயலலிதா…அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனை தொலை பேசியில் அழைத்து,சென்னை உயர்நீதி மன்ற தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மராவின் வீட்டிற்கு சென்று மேல்முறையீடு குறித்து பேசச் சொல்லியுள்ளார்.
கூடவே முஸ்லிம் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் கூட்டமைப்பின் வழக்கறிஞர் சங்கர சுப்புவையும் உடன் அழைத்து செல்லும் படி சொல்லியுள்ளார்.
தொடர்ந்து சட்டத்துறை அமைச்சரையும் தலைமை நீதிபதியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர்.அதன் படியே தலைமை நீதிபதியின் வீட்டிற்கு சென்ற அவர்களிடம் மேல்முறையீட்டு மனுவை காலையில் தாக்கல் செய்யலாம் என்றும் அதேசமயம் 10.30 மணிவரை விஸ்வரூபத்தை திரையிடக்கூடாது கூடாது என்றும் கூறியுள்ளார் தலைமை நீதிபதி.
இதன் படி அரசு தரப்பு மேல்முறையீடு செய்தால் அதனையடுத்து விஸ்வரூபம் படத்தின் மீதான தடை தானாகவே நீடிக்கும். இந்த வழக்கை இரண்டு நீதிபதிகளை கொண்ட பென்ச் விசாரிக்கும்.
விஸ்வரூபம் – அரசின் மேல்முறையீடு தீர்ப்பு வரும் வரை காத்திருக்க தியேட்டர்கள் முடிவு…
நேற்று விஸ்வரூபம் படத்திற்கு தடையை நீக்கி இடைக்கால உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மேல்முறையீடு செய்யவிருக்கின்றது தமிழக அரசு. இந்த சூழலில், மேல்முறையீட்டு தீர்ப்பு வரும்வரை விஸ்வரூபம் படத்தை திரையிடுவதில்லை என்று தியேட்டர்கள் முடிவெடுத்துள்ளன.
விஸ்வரூபம் படம் வெளியிடுவதை தாமதப்படுத்துமாறு திரையரங்குகளுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் படத்துக்கான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.
நேற்று இரவே, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை, மூத்த அமைச்சர் ஒருவர் தொடர்பு கொண்டாராம். ‘விஸ்வரூபம் விவகாரத்தில் அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை.
சிறுபான்மையினர் உணர்வுகளை மதிக்க வேண்டும். எனவே அரசுக்கு துணை நிற்கும் வகையில், மேல்முறையீட்டு மனு முடிவு தெரியும் வரை படத்தைத் தாமதப் படுத்த முடியுமா?’ என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
அரசுத் தரப்பு கேட்கும்போது, மறுக்க முடியுமா என்ன… உடனடியாக அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் தொலைபேசியில் அழைத்த அந்த நிர்வாகி அரசின் முடிவை தெரிவித்து, அவசரப்பட வேண்டாம், என்று கூறியுள்ளாராம்.
சாதாரண நடிகர்களின் படங்களுக்கே சிறப்புக் காட்சி போட அனுமதிக்கும் அரசு, கமல் படத்துக்கு இன்று அனுமதி மறுத்த போதே விஷயத்தைப் புரிந்து கொண்ட திரையரங்குகள், இப்போது அப்பீல் மனு ரிசல்ட் தெரியும் வரை காத்திருக்க முடிவு செய்திருப்பதன் பின்னணி இதுதான் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.