விஸ்வரூபத்தின் பின்னணியில் காங்கிரஸ்!
கடந்த பல மாதமாக இழுத்துக்கொண்டிருந்த விஸ்வரூபம் படப்பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வரப்போகிறது.(!!!) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்தப்பிறகு படம் வெளியாகப்போகிறது.(!!!)
இரண்டு நாட்களாக நடக்கும் கூத்துகளைப் பார்க்கும் போது ரஜினி உட்பட அனைவரும் கமலின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
ஒரே ஒரு நடிகர் கூட, கமல் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய அவதூறுகளை கண்டிக்கத் தயாராக இல்லை!
இந்நிலையில் நம் பிரபல இயக்குனர் நண்பர் ஒருவருடன் இன்று உரையாடினேன். தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார்.
கமல் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றிப் படம் எடுப்பதால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது? என்று நான் கேட்டதற்கு…
“இதில் நன்மை தீமை எல்லாம் கிடையாது .இது ஒரு வியாபாரம். அதுவும் முஸ்லிம் எனும் போது அது உலகளாவிய வியாபாரமாக மாறி விட்டது” என்றார்.
தாகம் : ஆக உங்கள் நோக்கம் பணம்தான்.
இயக்குனர் : என் நோக்கம் அல்ல கமல் நோக்கம்!
தாகம் : அவர் ஒரு திறமையான நடிகர். அவர் நினைத்தால் வேறு படங்களை எடுத்து சம்பாதிக்கலாமே ?
இயக்குனர் : யார் பார்ப்பது? தசாவதாரம் படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தவிர எவராலும் வெளியிட முடியாது. அதற்குப் பிறகு அவர் படமே எடுப்பதில்லையே? ஆளவந்தான் படத்திற்கு பிறகு தாணு எழுந்து நிற்க எத்தனை காலம் ஆனது? விஸ்வரூபத்தையும் ரவி தலையில் கட்ட கமல் எவ்வளவோ முயன்றார் .ஆனால், அவர் எமாறத் தயாரில்லை! இன்றைக்கு கமல் போன்ற பெரிய நடிகர் படம் எல்லாம் வெறும் கதையை நம்பி ஓடாது. குறைந்தப்பட்சம் 100 கோடி இல்லாமல் அவரை வைத்துப்படம் எடுக்க முடியாது. அவரும் அதை விரும்பமாட்டார். இன்று தமிழ் சினிமா எனபது பெரிய நடிகர்களை பொருத்தவரை அது சர்வதேச வியாபாரம்! அதை கமல், ரஜினி போன்றவர்கள் அறுவடை செய்யவே விரும்புகின்றனர்!
தாகம் : உலகளாவிய வியாபாரம் என்றால் இஸ்லாமிய தீவிரவாதம் தானா? வேறு கதையே இல்லையா?
இயக்குனர் : பரப்பரப்பு, பாதுகாப்பு அதில்தான் உள்ளது!
தாகம் : பாதுகாப்பா?
இயக்குனர் : ஆமாம். நான் முஸ்லிம் தீவிரவாதத்தை விடுத்து ஈழப் பிரச்சனைப் பற்றியோ, காவிரி சிக்கல் பற்றியோ படம் எடுத்தால் யார் முதலீடு செய்வது? அப்படியே எடுத்தாலும் தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்கள் மட்டும் தானே பார்ப்பார்கள்! அவர்களைப் பார்க்க மத்திய அரசு விட்டுவிடுமா ? தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடுமா ?
தாகம் : ஏன் மணிரத்தினம் எடுக்கவில்லையா ?
இயக்குனர் : அந்தப் படம் யாருக்கும் ஆதரவானதோ எதிரானதோ இல்லை. அது செய்த வியாபாரம் தான் என்ன ? கமலால் அப்படியெல்லாம் வியாபாரம் செய்ய முடியாது!
தாகம்- இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிப் படம் எடுத்தால் தணிக்கை சான்றிதழை இந்திய அரசு கொடுத்துவிடும் .முள்ளிவாய்க்கால் படுகொலைப் பற்றிப் படம் எடுத்தால் சான்றிதழ் கிடைக்காது என்கிறீர்கள் .
இயக்குனர் : நீங்களே பதிலை சொல்லிவிட்டீர்களே! நேற்று மத்திய அரசு மாநில அரசுக்கு, விஸ்வரூபத்திற்காக வைத்தக் கோரிக்கையை நீங்கள் படிக்கவில்லையா? காங்கிரசுக்கு இந்தப் படம் வெளிவருவதில் அத்தனை ஆர்வம்! சோனியா, தன் மகனுக்கு மகுடம் சூட்டிய பிறகு இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி தானே பேசினார்! பா.ஜ.க கேட்கவே வேண்டாம்! இந்த அழகில் இதே காங்கிரஸ் அரசால் தன் குற்றப்பத்திரிகை படம் தணிக்கை செய்யப்பட்டும் வெளியிட முடியாமல் போன இயக்குனர் செல்வமணி, கமலுக்கு ஆதரவாக முழங்குகிறார்! பாவம் இதில் பலிகடா ஆக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்!
கருத்து சுதந்திரம் எனபது அனைத்து தீவிரவாதம் பற்றி பேசுவது …இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி மட்டும் பேசுவது அல்ல !!! கலைஞானி எப்போது இதை உணரப்போகிறார்? விஸ்வரூபம் வெளியாவதால் இன்னொரு பிரச்னையும் உள்ளது. இதைக் காரணம் காட்டியே dam 999 வெளியாகப்போகிறது!’