மவ்லூது ஓதி பொருளீட்டுவது ஹராமானதில்லையா?!! (1)
மக்கள் ஆதரவு இல்லாதபோதும் வருவாய்க்காக மவ்லூது ஓதும் வழக்கத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு வரும் ஆலிம்களே!
உங்கள் மனசாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள்…! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பிரியம் கொள்வதற்கு இதுதானா உண்மையான வழி? ஏழு வருடமோ அதற்கு மேலோ ஓதிவட்டு வரும் உங்களிடம் உண்மை உயிர்பெறவேண்டுமென்ற சமுதாய மக்களின் எதிர்பார்ப்பை எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்? புரிந்து கொண்டாலும் புரியாததுபோல் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நடித்துக்கொண்டே இருப்பீர்கள்?
அல்லாஹ்வின் பெயரைமட்டுமே உச்சரிக்கவேண்டிய (அதாவது படைத்த ரப்புல் ஆலமீனை மட்டுமே புகழ வேண்டிய) பள்ளிவாசலில் இரண்டு மூன்று பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு மைக்கை ஓங்கி ஒலிக்கச்செய்து ஏதோ எல்லோரும் இதைக்கேட்பது போன்ற ஒரு போலியான நாடகத்துக்கு எப்போது முழுமையாக மூடுவிழா நடத்தப் போகிறீர்கள்?
வருவாய் எனும் ஒரே காரணத்தைத்தவிர வேறு எதற்காகவும் இது உங்களால் தொடரப்படவில்லை என்பது பலரும் அறிந்த விஷயமே! பொருளீட்டுவதற்கு இதுபோன்ற ஹராமான வழியை கொஞ்சம் கூட சங்கோஜமில்லாமல் எப்படி தொடர்ந்து கொண்டே இருக்கிறீர்கள்?
சில விஷயங்களை அசைபோடும்போது ஆச்சரியமாக இருக்கிறது! எந்த அடிப்படையில், எந்த துணிவில் மக்களுக்கு நீங்களெல்லாம் “பயான்” செய்கிறீர்கள்? வினோதமாக இருக்கிறது சகோதரர்களே!
ஒரு காலத்தில் மக்களுக்கெல்லாம் மவ்லூதின் அர்த்தம் விளங்காமல், புரியாமல் இருந்தது! ஏன் உங்களில் கூட பலரும் அதன் அர்த்தம் புரியாமல் தான் இருந்தீர்கள். ஆனால் அதன் அர்த்தம் விளங்க ஆரம்பித்தவுடன் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மவ்லூது ஓதும் சபையில் உட்காருவதை தவிர்த்தார்கள்.
இன்று சுத்தமாக அதன் அர்த்தம் விளங்காத மக்களைத்தவிர வேறு எவரும் உட்காருவதில்லை என்பதே உண்மை. ஆனால் கற்றறிந்தவர்கள் என்று இனம் காணப்படும் ஆலிம் சமூகம் மட்டும் அதனை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருப்பது வருவாய் ஒன்றைத்தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை என்று பொதுமக்கள் எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
தவறான வழியில் பொருளீட்டுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை ஆலிம்களாகிய உங்களுக்கு அறிவுருத்த வேண்டிய சூழ்நிலையை நீங்களே ஏற்படுத்திவிட்டீர்கள் என்பதே உண்மை.
தயவு செய்து இனி வரும் காலங்களில் மவ்லூது ஓதி பொருளீட்டாதீர்கள். ஹராமான முறையில் பொருளீட்டும் எவரது துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று எவரும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவுக்கு மார்க்க விஷயத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தெளிவாக இருக்க வேண்டிய ஆலிம்களாகிய நீங்களோ தெளிவற்றவர்களாக இருக்கிறீர்கள். அதன் காரணமாகவே இஸ்லாம் சொல்லித்தராத “பித்அத்”துகளை பரப்புவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வாதாரத்துக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அல்லாஹ்விடம் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள் என்று மக்களிடம் போதனை செய்துவிட்டு உங்களுக்கே அல்லாஹ்வின் உதவி மீது சந்தேகமோ என்று கேட்கத்தோன்றுகிறது.
உலகின் தலைசிறந்த தேவ்பந்தி மதரஸா, மற்றும் தமிழகத்திலுள்ள லால்பேட்டை மன்பஉல் அன்வார், திருச்சி அன்வாருல் உலூம் பொண்ற பிரபல மதரஸாக்கள் மவ்லூதில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் தவறானவை என்று ஃபத்வாக்களை அளித்திருக்கும் நிலையில் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பீர்கள் என்று கேட்பதைவிட இன்னும் எத்தனை காலத்திற்கு உங்களையே நீங்கள் ஏமாறிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று கேட்பதே பொருத்தமாகத் தெரிகிறது.
‘நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக எவர் (பொய்) உரைக்கின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று எச்சரித்தார்களே அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்களின் எச்சரிக்கை உங்களுக்கெல்லாம் மறந்து போனது ஏன் என்று விளங்கவில்லை! மவ்லூது கிதாபுகளில் எவ்வளவு பொய்யான கற்பனைகள் இடம்பெற்றுள்ளன என்பதை மக்களைவிட நீங்களே அதிகம் அறிந்தவர்களாக இருக்கும்போது, ஏன் உண்மையின் அத்தாட்சியாக அகிலத்துக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்ட அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையை செவிமடுக்க மறுக்கின்றீர்கள்?
பொய்யும் புரட்டும் மலிந்து கிடக்கும் மவ்லூதை ஓதுவதை இனியும் தொடர்வீர்களானால், ஆலிம் என்றால் அறிந்தவர்கள் என்று மக்கள் மனதில் பதிந்துள்ள எண்ணத்திற்கு மாற்றமாக ஆலிம் என்றால் அறியாமையில் மூழ்கியிருப்பவர்கள் என்று அவர்கள் எண்ணும்படி ஆகிவிடும். ‘பித் அத்’துகளை நீங்கள் விடாப்பிடியாக பிடித்திருக்கும்வரை உங்களது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதை மறவாதீர்கள்.
தயவு செய்து இனியாவது இதுபோன்று தவறான முறையில் பொருளீட்டுவதை நிறுத்துங்கள். ஏனெனில் வழிநடத்தக்கூடியவர்கள் சரியான பாதையில் சென்றால்தான் சமுதாயம் சரியான பாதையில் செல்ல இயலும். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.
-எம்.ஏ.முஹம்மது அலீ, adm. nidur.info
மவ்லிது ஓதுவது இறைவணக்கம் இல்லை
தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது, புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது, யாகுத்பா, நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும், அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வருகின்றன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான். ‘மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது’ என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.
‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243)
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்’ எனவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242)
‘செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1435)
உலகத்தில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் மவ்லிது ஓதும் வழக்கம் இருக்க வேண்டும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.