குற்றங்களைப் பதியம் இடும் ஆணி வேர்களை அறுக்காமல் ஆடும் விழுதுகளை நறுக்கி என்ன பலன்?
[வயதுக்கு வந்துவிட்டால் உடன்பிறந்த சகோதரியைக் கூடத் தொட்டுப் பேச அனுமதிக்காத குடும்பப் பாங்கு இன்று மங்கிற்று. ஐரோப்பியக் கல்வியோடு, கலவியையும் இறக்குமதி செய்து மரத்துப் போனோம். சுயநலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஆடவர்களை மிரட்டி வாழும் சின்னத்திரை ரசிகைகளால் கலாசாரம் உயருமோ?
காப்பி குடிப்பது முதல் கக்கூஸ் கழுவுவது வரை அனைத்து விளம்பரங்களிலும் மகளிர் அணியைக் காட்டுகிறார்கள்.
நவீன நாயகியரோ உள்நாட்டைக் குட்டைப் புழுதி ஆக்கி ஆயிற்று. வெளிநாட்டு தமிழர்களையும் விட்டால்தானே. உலகு உவப்ப எங்கும் உள்ளாடை தெரிய, புறம் காட்டி ஆடுகிறார்களே. அந்த நடன சிகாமணிகளின் நிஜக்கால் குதிரை ஆட்டத்தை மகளிர் உரிமைக் குழுக்களும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
பாலியல் வன்முறையாளர்கள் பலரும் அரசியல் திமிர் பிடித்தவர்கள். சம்பந்தப்பட்ட பெண் இறந்தால் “ஆழ்ந்த இரங்கல்’ தெரிவிக்கும் இயந்திரங்கள் அல்லவா?]
குற்றங்களைப் பதியம் இடும் ஆணி வேர்களை அறுக்காமல் ஆடும் விழுதுகளை நறுக்கி என்ன பலன்?
இன்றைய ஆட்சியாளர்களில் 260 உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளனவாம். மரபணு சோதனை வழி அவை நிரூபிக்கப்படும் வரை அந்த மகாத்மாக்களுக்கு மலர்க்கொத்து மரியாதை செய்யலாம். அவர்களில் ஆளும் கட்சியும் (26) பிரதான எதிர்க்கட்சியும் (24) முன்னணியில் இருக்கின்றன. அதிலும் இரண்டு முக்கிய சமாஜ் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு 18 மற்றும் 16 வீதம் கற்பழிப்பு ஆசாமிகளை வேட்பாளர்கள் ஆக்கி வேட்கை தணித்துக்கொண்டன.
மாநிலம் வாரியாகக் கவனித்தால் மகாராஷ்டிரத்துக்குப் பாலியல் வீம்பில் முதல் இடம். அந்த காம வேட்பாளர்கள் 41 பேர். பலாத்கார வழக்குகளின் வில்லன்கள். உத்தரப் பிரதேசமும் (37), மேற்கு வங்கமும் (22) அவரவர் தகுதிக்கு ஏற்ப இரண்டாம், மூன்றாம் இடங்கள் வகிக்கின்றன.
எப்படியோ, பாலியல் வன்முறையாளர்கள் பலரும் அரசியல் திமிர் பிடித்தவர்கள். சம்பந்தப்பட்ட பெண் இறந்தால் “ஆழ்ந்த இரங்கல்’ தெரிவிக்கும் இயந்திரங்கள் அல்லவா?
“ஜன லோக் பாலு’க்குப் போராடிக் களைத்தோம். இனி “பெண் பால்’ ஜனங்களுக்கு வழக்கம்போலப் போராடுவோம்.
இதற்குக் காவல் துறையைச் சொல்லியும் குற்றம் இல்லை. காவலர்கள் அரசியலாரின் ஏவலர்கள்தாம். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் காவல் துறைப் பணியாளர்கள் எண்ணிக்கை நாட்டிலேயே மிக உச்சம். ஏறத்தாழ 1,63,181 பேர். அதிலும் மும்பையில் மட்டும் ஏறத்தாழ 47,000 பேர். அவர்களில் 5,000 பேர் பெரும்பாலும் விடுப்பில்தானாம். மிச்சம் இருப்பவர்களில் 30,000 பேர் ஆட்சியாளர்களைக் கைது ஆகாமல் பாதுகாக்கும் அருஞ்சேவகர்கள். எஞ்சிய வெறும் 12,000 பேர் மட்டுமே மக்களின் காவல் தெய்வங்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
சொல்லப்போனால், மும்பை மாநகரில் மொத்தம் 2,250 அரசியல்வாதிகள். ஒருவருக்கு சராசரியாக 12 பாதுகாவலர்கள். சாதாரணக் குடிமக்களில் 1,200 பேருக்கு ஒரு காவல் பணியாளர். இது இந்திய அளவில் சராசரி 780 பேருக்கு ஒரு போலீஸ் என்ற கணக்கிலும் பாதி தான். இந்த வகையில், தனி ஒருவனைவிட அரசியல்வாதி உயிர் 15,000 மடங்கு உசத்தி என்று ஆகிறது. நாம் எவ்வளவு கேவலம் ஆனவர்கள் பாருங்கள்! பிறகு என்ன, இவர்களுக்கு “சர்வதேச இரும்பு மனிதர்’ பட்டம் தகும். இதயமும் அல்லவா இரும்பு?
தேர்தல்தோறும் தலைக்கு 500 ரூபாய் வாக்காளர் கட்டணம் செலுத்தி, மக்கள் தலையிலேயே அரியணை மஞ்சம் போடுவது சாமர்த்தியமா, சாணக்கியமா?
ஆட்சிமன்ற அங்கத்தினர் ஒருவரோ, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரை விமர்சிக்கிறார். “நெளிசல் தட்டிப் பெயிண்ட் அடித்த’ மேனி மினுக்கிகளாம். “இவர் தந்தை என் நோற்றான் கொல்’ என்கிறீர்களா? இந்த அருமந்த புத்திரரின் தகப்பனாரைத் தானே “முதல் குடிமகனார்’ ஆக்கித் துதிக்கிறோம். அதுவும் மறந்து போயிற்றா?
பெண் தலைமை ஆட்சியில், முன்னாள் முதல் குடிமகளோ, பாலியல் தீவிரவாதிகள் மீது இரக்கப்பட்டு 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாராமே, அவர்தம் கருணையே கருணை!
பஞ்சாபில் பாலியல் கொடுமை என்றால், “அது பெண்கள் தாங்களே தேடிச்சென்று கற்பை இழக்கிறார்கள்’ என்கிறார் இன்னொரு அரசியல் விவேகி.
“யூ ட்யூப்” இணையத்தின் திரையில் சல்லாப அசிங்கமாக நின்றவர், ஆறு மாத காலம் தலைமறைவான “மொழுக்கைத் தலைவருக்கு’ 23 வயதுப் பெண் பாலியல் வன்மரணம் பற்றிப் பேச என்ன அருகதையோ? கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், சின்னத்திரையில் தோன்றி வாதாடுகிறார்.
அறிவியல் விபத்துகளில் தியாகம் செய்த வீராங்கனைகள் இருக்கட்டும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாலியல் பலாத்கார வழக்குகள் பன்மடங்காக உயர்ந்துள்ளன. வலுவான சட்டங்களும்தாம் என்ன செய்யும்? அவையும் பழுதாகிவிட்டனவே.
தமிழகத்தில் 1992-ஆம் ஆண்டு தர்மபுரியில் தினவெடுத்த 269 பேரில் தலித் பாஞ்சாலிகளைத் துகில் உரித்த திருதராஷ்டிர புத்திரர்கள் 17 பேர். பலரும் வனத் துறை உத்தமர்கள், காவல்துறை அண்ணல்கள், வருவாய் ஆய்வாளர் பெருமக்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது என்னவோ வாஸ்தவம். அவர்களில் சிறை செல்ல வேண்டிய 54 பேரைக் காணோம். சிதையில் அஸ்தியாகிப் போனவர்களைக் காற்றில்தான் தேட வேண்டும்.
வயதுக்கு வந்துவிட்டால் உடன்பிறந்த சகோதரியைக் கூடத் தொட்டுப் பேச அனுமதிக்காத குடும்பப் பாங்கு இன்று மங்கிற்று. ஐரோப்பியக் கல்வியோடு, கலவியையும் இறக்குமதி செய்து மரத்துப் போனோம்.
சுயநலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஆடவர்களை மிரட்டி வாழும் சின்னத்திரை ரசிகைகளால் கலாசாரம் உயருமோ?
காப்பி குடிப்பது முதல் கக்கூஸ் கழுவுவது வரை அனைத்து விளம்பரங்களிலும் மகளிர் அணியைக் காட்டுகிறார்கள்.
குற்றம் செய்தவனோடு, குற்றம் செய்யத் தூண்டியவருக்கும் தண்டனை என்கிற அச்சம் பரவ வேண்டும். இந்திய நற்சிந்தனைகள் மேனாட்டார் போற்றும் வகை செய்தல் வேண்டும். அன்றி, அன்னியர் தொழில்நுட்பத்தில் அவர்களைப் போலவே நடித்து, அடித்து உதைப்பதை அவர்களுக்கே திருப்பிப் போட்டு “விஸ்வரூபம்’ காட்டுவதால் என்ன உலகப் புகழோ?
நவீன நாயகியரோ உள்நாட்டைக் குட்டைப் புழுதி ஆக்கி ஆயிற்று. வெளிநாட்டு தமிழர்களையும் விட்டால்தானே. உலகு உவப்ப எங்கும் உள்ளாடை தெரிய, புறம் காட்டி ஆடுகிறார்களே. அந்த நடன சிகாமணிகளின் நிஜக்கால் குதிரை ஆட்டத்தை மகளிர் உரிமைக் குழுக்களும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அத்தகைய திரைப்படங்களின் இயக்குநர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர், தணிக்கைச் சான்றில் கையெழுத்து இட்ட “கலைத் தொண்டர்கள்’ அனைவர்தம் வீடுகளின் முன் மெழுகுவர்த்தி தர்ணா எந்நாளோ? அவர்களில் பலரையும் பாலியல் வன்தூண்டல் குற்றத்திற்கு உடந்தை என்றேனும் தண்டிக்கலாம்.
சமுதாயத்தில் குற்றங்களைப் பதியம் இடும் ஆணி வேர்களை அறுக்காமல் ஆடும் விழுதுகளை நறுக்கி என்ன பலன்?
(”பெண்மை வாழ்கவென்று கூத்திடுவது எப்போது?” கட்டுரையிலிருந்து…)
-நெல்லை சு. முத்து
நன்றி: தினமணி